SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுகதை - தூண்டுகோல்

2022-09-27@ 17:52:34

நன்றி குங்குமம் தோழி
 
நாகை சந்திரா

“அண்ணே! இன்னிக்கு ரேஷன்ல மண்ணெண்ணெய் போடறாங்களா?”“என்ன புள்ள! போடறாங்களான்னு இப்ப போயி கேட்கற? காலையிலேருந்தே குடுத்துகிட்டிருக்காங்க. நம்ம வார்டு ஜனங்கல்லாம் அடிச்சி புடிச்சிகிட்டு வாங்கிட்டு வந்துச்சிங்க.’’“ஐயோ! எனக்குத் தெரியாம போச்சே! சிம்னி விளக்குக்கு ஊத்தக்கூட எண்ணெய் இல்ல. நேத்திக்கு சித்தாள் வேலைக்குப் போயிட்டதுல எனக்குத் தெரியாம போயிடுச்சி.”வேகமாகக் குடிசைக்குள் நுழைந்தவள், தூளியில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு மண்ணெண்ணெய் கேனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையில் குடிசையின் படலை இழுத்து சாத்தி விட்டு இரண்டு தெரு எட்டிப் போட்டாள்.

மேலே எரிந்து கொண்டிருந்த சூரியனுக்குக் கூட அவள் மீது இரக்கமில்லை போலும். மேகக் கூட்டத்துக்குள் இதுவரை தன்னை மறைத்துக் கொண்டிருந்த அவன் இதுவரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததே போதும் என்று நினைத்தானோ என்னவோ அங்கிருந்து வெளிவந்து தன் உக்கிரத்தை வெளிப்படுத்தினான்.கடை அருகில் நெருங்கும் போதே அவளுக்குப் பகீரென்றது. ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் ஆள் அப்போதுதான் கடை ஷட்டரை இழுத்து விட்டுக் கொண்டிருந்தான்.“ஐயோ! ஐயா! கொஞ்சம் இருங்கய்யா. நான் இன்னும் எண்ணெய் வாங்கலியா...”குரல் கொடுத்துக் கொண்டே அலையக் குலைய ஓடி வந்தாள்.

“ஏம்மா! மணி என்னாவுது பாத்தியா? நான் நாள் பூரா உட்கார்ந்து சப்ளை பண்ணிகிட்டிருக்க முடியுமா? மண்ணெண்ணெய் தீர்ந்து போச்சு. நீ முன்னாடியே வர்றதுக்கென்ன? சரி! சரி! அடுத்த மாசம் போடறப்ப வாங்கிக்க.” நாயை விரட்டுவது போல் கடுமையாகப் பேசி விரட்டினான்.“ஐயா! தயவு செஞ்சு ஒரு லிட்டராவது குடுங்கய்யா. ராத்திரி விளக்கெரிக்கக்கூட சுத்தமா இல்லய்யா. கைப்புள்ளயை வச்சுகிட்டிருக்கேன்.

இருட்டுல ஏதாவது பூச்சி, பொட்டு வந்தாக்கூட தெரியாது.”“ஏம்மா! அரசாங்கத்துல குடிசைக் கெல்லாம் ஒரு லைட்டுக்கு கனெக்‌ஷன் குடுத்துருக்காங்க. அப்புறம் ஏன் இருட்டாயிருக்குன்றே!”“ஐயா! பல்பு பீஸ் போயி நாலு நாளா எரிய மாட்டேங்குது. வேற பல்பு மாத்தறதுக்குக் கூட யாரும் கிடைக்கல.”அவனிடம் கெஞ்சினாள். ஒரு லிட்டர் எண்ணெய்க்காக அவன் காலில் விழக்கூட தயாராயிருந்தாள்.

தெருவில் சென்று கொண்டிருந்த சிலர் இருவரின் மீதும் கவனத்தைத் திருப்பினார்கள்.“என்னம்மா! பெரிய தொல்லையாயிருக்கு உங்கிட்ட.. எல்லாத்தையும் சப்ளை பண்ணியாச்சு. காலி டிரம்தான் உள்ள இருக்கு. இவ்வளவு நேரமாத்தான் வந்த எல்லார்கிட்டயும் கத்திக் கத்தி தொண்டத் தண்ணி வத்திப் போச்சி. நீ வேற இப்ப வந்து ஏன் என் உயிரை வாங்கற?”
கை நீட்டி அடிக்காத குறையாக சுள்ளென்று எரிந்து விழுந்தான். அவளால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“ஐயா! என்ன உங்கூடப் பிறந்தவளா நெனச்சி கருணை காட்டுங்க. இந்தப் பச்சப் புள்ள முகத்தைப் பாருங்க. இதுக்கு சுடுதண்ணிக்கூட குடுக்காம இங்க தூக்கிட்டு வந்தேன்.”
“ஏம்மா! அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? முன்னாடியே வராதது உன்னோட தப்பு. லேட்டா வந்துட்டு அண்ணன், தங்கச்சி முறை கொண்டாடினா மட்டும் எண்ணெய் கிடைச்சிடுமா? உன்னைப்  போல நடிக்கற எத்தனை பொம்பளங்கள நான் பாத்திருக்கேன். முன்னால வாங்க வைங்க யாரு கிட்டயாவது அஞ்சி, பத்து கூட குடுத்து வாங்கிக்க.”
அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனது செல்ஃபோன் அவனை அழைத்தது.

“ஐயா நீங்களா? ஆமாமாம். இன்னிக்குத் தான் டிரம் வந்துச்சி, உங்களுக்கு அம்பது தனியா எடுத்து வச்சிட்டுதான் சப்ளையே ஆரம்பிச்சேன். அதெல்லாம் உங்கள மறப்பனா? எப்பவும் வர்ற பையனை உடனே அனுப்பி வைங்க. நல்ல வேளையா நான் கடையை சாத்திட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அதுக்குள்ள இங்க ஒரு சாவு கிராக்கி வந்து என் உயிரை எடுக்குது. அதுவும் ஒரு விதத்துல நல்லதா போச்சி. அது வரலன்னா இவ்வளவு நேரம் நான் வீட்டுக்குப் போயிருப்பேன்.”பேச்சை நிறுத்தி விட்டு ஃபோனை கட் பண்ணினான். அவன் பேசுவதை இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன் கடைசியாகப் பேசியது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

“என்யா! நான் இவ்வளவு நேரமா ஒரு லிட்டர் எண்ணெயாவது குடுன்னு கெஞ்சிகிட்டிருக்கேன். அது கூட இல்ல காலியாயிடுத்துன்னு எங்கிட்ட சொல்லிட்டு வேற எவனுக்கோ அம்பது லிட்டர் தரேன்னு சொல்றியே! இது உனக்கே நியாயமா இருக்கா? நான் என்ன உங்கிட்ட காசு தராம சும்மா குடுன்னா கேட்டேன்? எல்லாரும் குடுக்கற ரூபாலத் தான நானும் தருவேன்.. எனக்கு இல்லன்னு சொன்ன எண்ணெய் இப்ப மட்டும் எங்கிருந்து முளைச்சிது?”“இந்தாம்மா! உனக்கு இல்லேன்னா அதோடு போய்ச்சேரு.

நீ குடுக்கற பத்து ரூபாக் காசுக்கு மேல டபுள் மடங்கா அவர் தருவாரு. உன்னால அது முடியுமா? ஒழுங்கு மரியாதையா போற வேலையப் பாரு. வீணா என் நேரத்தை கெடுத்துகிட்டு ஏன் நிக்கற? உங்கிட்ட பெரிய தொல்லையா போச்சி.”“நியாயமான காசக் குடுத்து கேக்கற நான் உனக்குத் தொல்லையா சாவு கிராக்கியா போயிட்டனா? வாய்யா. யார் கிட்ட வேணா போயி நியாயம் கேட்கலாம். எங்களுக்கு தர வேண்டியத தந்துட்டு மீதிய நீ யாருக்கு எந்த விலைக்கு வேணாலும் வித்துட்டுப்போ.கடை வாசலுக்குக் குறுக்காக குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். இடுப்பில் சொருகியிருந்த புடவை முந்தானையை அவிழ்த்து குழந்தையின் மீது வெயில் படாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டாள்.

அக்கம் பக்கமுள்ள கடைக்காரர்களும், தெருவில் நடந்து சென்றவர்களும் ஒவ்வொருவராக அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்ற ஆவலில் அங்கு குழுமியிருந்தார்களே தவிர அவர்களில் ஒருவருக்குக் கூட அவளுக்கு ஆதரவாகப் பேச தைரியம் வரவில்லை.நாம் ஏதாவது அவளுக்குப் பரிந்து பேசப் போக நாளைக்கு நமக்குக் கிடைக்க வேண்டிய பொருளுக்கும் ஆபத்து வந்து விடும் என்ற பயமே அங்கு வேடிக்கை பார்த்தவர்களுக்கு இருந்தது.

அப்போதுதான் இரண்டு பெரிய கேன்களை தனது சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஒரு பையன் அங்கு வந்தான்.ரேஷன் கடைக்காரரிடம், “சார்! நீங்க வரச் சொன்னதா சார் அனுப்பினார். எப்பவும் போல கூட இருந்தாலும் பரவாயில்ல. ஆனா அம்பதுக்குக் குறையாம வாங்கிட்டு வான்னு சொன்னாருங்க.”தன் சட்டைப் பையிலிருந்து அதற்கான பணத்தை எடுத்துத் தரப்
போனான். அப்போதுதான் அங்கிருந்த எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. அந்தக் கூட்டத்தில் இளைஞனாக இருந்த ஒருவன், “இங்க எவ்வளவு பெரிய அக்கிரமம் நடக்குது? இதப் பாத்துட்டு நாம சும்மா இருந்தோம்னா நாம ஆம்பளையே இல்ல.” சத்தமாகப் பேசியவாறு சைக்கிளில் வந்த பையனிடம் விசாரணையை ஆரம்பித்தான்.

“எண்டா? யார் உன்னை அனுப்பினாங்க?”அரசியல் பிரமுகர் ஒருவரின் பெயரைக் கூறினான் அவன்.“அடப்பாவி! ஊர்ல அவன் அடிக்கற கொள்ளை பத்தாம இப்படி ஏழை பாழைங்க வயத்துலயும் அடிக்க ஆரம்பிச்சிட்டானா? கொண்டா அந்தக் காசு.”வலுக்கட்டாயமாக அவன் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளைப் பிடுங்கி தூள் தூளாகக் கிழித்து எறிந்தான்.
கடைக்காரரைப் பார்த்துக் கத்தினான்.“ஏன்யா! இப்படி காசு காசுன்னு அலையறீங்க? உங்களுக்குத் தான் அரசாங்கம் சம்பளம் குடுக்குது.

அது பத்தலையா உங்களுக்கு? ஏன் பேராசை புடிச்சி அலையறீங்க? அடுத்தவங்க வயித்தெரிச்சலை தேடிக்கறீங்க? நியாயமா. அந்தம்மாவுக்குத் தர வேண்டிய மண்ணெண்ணெய குடுத்துடு.”“யோவ்! என்னப்பா! உனக்கு மனசுக்குள்ள பெரிய தாதானு நெனப்பா? இப்ப நான் குடுக்க மாட்டேன்னு சொன்னா என்னடா பண்ணுவ?”இதுவரை கடைக்காரனுக்கு மரியாதை கொடுத்து பேசிக் கொண்டிருந்த இளைஞனுக்கு அவன் தன்னை ‘டா’ போட்டுப் பேசியது அவனுக்கு கோபத்தைக் கிளப்பி விட்டது.

“ஏண்டா! என்னையே வாடா போடான்னு பேசறியா? உன்னையெல்லாம் சும்மா விடக் கூடாதுடா. இவ்வளவு நாளா வுட்டு வுட்டுதான் உன்னை மாதிரி ஆளுங்க தலக்கனம் புடிச்சி அலையறீங்க.”கடைக்காரரின் சட்டையப் பிடித்து இழுத்து பலம் கொண்ட மட்டும் அவனைப் பளாரென்றரைந்து கீழே தள்ளினான். கீழே விழுந்த போது முகம் தரையில் மோதியதில் அவன் முன் பல் இரண்டும் உடைந்து ரத்தம் கொட்டியது. போலீசை கூப்பிடுவதற்காக சட்டை பாக்கெட்டிலிருந்த செல்ஃபோனை எடுத்தான். அதைப் பிடிங்கிய இளைஞன் ஓங்கி தலைக்கு மேல் வீசியெறிந்தான். அது எங்கோ போய் விழுந்தது.

“அநியாயமாய் பணம் சம்பாதிக்கற உனக்கு செல்ஃபோன் ஒரு கேடா? ஏழைகளை ஏமாத்தி காசு சேத்து அதுல சுகம் கேக்குதா உனக்கு?”கேட்டுக் கொண்டே கீழே விழுந்து கிடந்த கடைக்காரனை தன் பலம் கொண்ட மட்டும் கால்களால் உதைத்தான். இளைஞனை எதிர்க்கும் அளவு கடைக்காரர் பலசாலி அல்ல. சற்று வயதில் மூத்தவரும் கூட. இந்த ரகளையைப் பார்த்த ஒருவர் வேறு ஏதாவது எக்கச் சக்கமாக நடந்து விடப் போகிறதே என்று பயந்து பக்கத்திலிருந்த ஒரு டெலிஃபோன் பூத்திற்குச் சென்று  போலீஸுக்கு ஃபோன் செய்தார்.

பத்தே நிமிடத்தில் போலீஸ் வேன் வந்து விட்டது.இரண்டு பெண் போலீஸ் உட்பட ஏழெட்டுப் போலீஸார் அதிலிருந்து இறங்கினார்கள். அதற்குள் அந்த இளைஞன் கடைக்காரனை நன்கு புரட்டி எடுத்து விட்டான். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எவருமே அவனைத் தடுக்க முன் வரவில்லை. தடுக்கப் போய் தங்கள் மீதும் அடி விழுந்து விடுமோ என்று பயந்தார்கள்.போலீஸார் கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு வந்து அந்த இளைஞனைப் பிடித்தார்கள்.

“ஏண்டா! நடு ரோட்டுல கலாட்டாவா பண்ற? கேக்க யாருமில்லங்கற தைரியமா? ெபரிய ரௌடின்னு நெனப்பா உனக்கு, ஸ்டேஷனுக்கு வா. முட்டிக்கு முட்டி தட்டி உன்னை அடக்கறோம்.”நடந்த எதையும் விசாரிக்காமல் அவனைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு வேனுக்கருகில் சென்றார்கள். இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் அடிப்படையான அஞ்சலி தன் குழந்தையை அப்படியே தரையில் போட்டு விட்டு அவர்கள் பின்னால் ஓடி வந்தாள்.“ஐயோ! ஐயோ! அவரை விட்டுடுங்கய்யா. அவர் எந்தத் தப்பும் பண்ணல.”

“என்னது! எந்த தப்பும் பண்ணலியா? அந்த ஆளை அடிச்சி துவம்சம் பண்ணத கண்ணுக்கு நேரா பாத்தோம். கொலைதான் செய்யல. இன்னும் பத்து நிமிஷம் நாங்க லேட்டா வந்திருந்தா அவனை அடிச்சே கொன்னிருப்பான். நீ என்னன்னா அவனுக்குப் பரிஞ்சிட்டுப் பேசறியே! நீ என்ன அவன் பெண்டாட்டியா, இல்ல வப்பாட்டியா?”“ஐயா! அப்படில்லாம் அபாண்டமா பேசாதீங்கய்யா. அவர் யாரோ நான் யாரோ.

நான் அவரை முன்ன பின்ன கூட பாத்ததில்ல. கடைக்காரரோட அட்டூழியத்த எதிர்த்துக் கேட்டார். அவன் மரியாதையில்லாம அவர் கிட்ட பேசினான். அதனால் தான் அவரு அவனை அடிச்சிட்டாரு. ஐயா! தயவு செஞ்சு அவனா விட்டுடுங்கய்யா. எனக்கு உதவி செய்யப் போய்த் தான்யா அவருக்கு இந்த நிலை வந்துடுச்சி.”
போலீஸ்காரர் ஒருவரிடம் கெஞ்சுவது போலப் பேசினாள்.

“அப்படிப் போடு. அப்ப இதுக்கெல்லாம் நீதான் காரணமா? அப்ப நீயும் ஸ்டேஷனுக்கு வா. அங்க வந்து நடந்ததை சொல்லு.”வந்திருந்த பெண் போலீஸ் அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.“கொஞ்சம் இரும்மா. எங்கைய வுடுங்க. நான் எங்கயும் ஓடிட மாட்டேன். எம்மேல பாவப்பட்டு உதவினவரு இந்தக் கதிக்கு ஆளாயிட்டாரு. நான் என் குழந்தைய தூக்கிட்டு வரேன். நடந்தது என்னன்னு  உண்மைய சொல்லி அவரை எப்படியும் காப்பாத்தணும்மா.”

ஓடிச் சென்று தன் குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த வேனில் ஏறிக் கொண்டாள். கடைக்காரரையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு விரைந்தது வேன். அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் போலிருக்கிறது. நடந்ததையெல்லாம் நிதானமாக கேட்டுக் கொண்டார். அவள் சொன்னதில் உண்மையை
உணர்ந்தார். அவளையும், இளைஞனையும் உட்கார வைத்தார்.

கடைக்காரனை அருகில் அழைத்தார்.“என்டா! அந்தப் பொம்பள சொன்னதெல்லாம் நெசம்தான?”“வந்துங்க ஐயா…” இழுத்தான்.“உன் கதையெல்லாம் அப்புறமா சாவகாசமா கேட்டுக்கறேன். முதல்ல அது சொன்னது உண்மையா, பொய்யான்னு சொல்லு.”அவனுக்கு பயம் வந்து விட்டது. இவரிடம் தனது பருப்பு வேகாது என்பதை உணர்ந்து அவள் சொன்னது உண்மை தான் என்பது போல் தலையாட்டினான்.

“என்னடா! வாயில கொழுக்கட்டையா இருக்கு? வாயத் தொறந்தா என்ன? உன்னை எதுக்காகடா ரேஷன் கடையில் வேலைக்கு வச்சிருக்காங்க? கார்டு காரங்களுக்கு பொருளக் குடுக்கறதுக்கா இல்ல நீ பகல் கொள்ளையடிக்கறதுக்கா? இங்க பாரு. நீ பண்ண தப்பை விலாவாரியா ஒரு பேப்பர்ல எழுதி கையெழுத்து போட்டுக் குடு. மேல் கொண்டு உன் பேர்ல என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அத நாங்க பாத்துக்கறோம். நீ அதுவரைக்கும் லாக்கப்ல இரு.”

லாக்கப் என்று அவர் சொல்லியதைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த அவள் அவசரமாக எழுந்து அவரிடம் வந்தாள்.“ஐயா! ஐயா! அவன லாக்கப்ல போடாதீங்கய்யா...” “என்னம்மா நீ! அவன் எவ்வளவு பெரிய அக்கிரமம் பண்ணியிருக்கான். உன்னைப் போல எத்தனை பேரை ஏமாத்தி காசு சேத்திருக்கான். அவனை உள்ள போட்டு அவன் மேல கேஸ் போட்டு தண்டனை வாங்கிக் குடுத்தாத்தான் அவனுக்கு புத்தி வரும்.“ஐயா! நீங்க எவ்வளவோ படிச்சவங்க. உங்களுக்குத் தெரியாதது இல்ல.

இந்த மோசடி வேலைய இவர் மட்டும் செய்யல. இவன மாதிரி ஆளுங்களுக்கு பண ஆசைய உண்டாக்கி தூண்டி விட்டவங்க வேற யாரோ! உங்களுக்கே தெரியும். ஊர்ல, நாட்டுல உள்ள எல்லா ரேஷன் கடையிலயும் இந்த அக்கிரமம் நடந்துகிட்டுதான் இருக்கு. இன்னிக்கு அந்தத் தம்பி பண்ண காரியத்தால் இந்த ஆளோட தப்பு வெளிச்சத்துக்கு வந்திருக்கு. அங்க வேடிக்கை பாத்துகிட்டிருந்த எல்லோரையும் போல அந்தத் தம்பியும் நமக்கெதுக்கு வம்புன்னு போயிருந்தா இந்த ஆள் கிட்ட நானும், எம்புள்ளையும் நாறிப் போயிருப்போம்.

இவர் ஒருத்தன உள்ள போடறதால பிரச்னை தீரப் போறதில்லை. இவரை ஜெயில்ல போட்டா இவர் குடும்பத்துல உள்ளவங்க வெளிய தலை காட்ட அசிங்கப்பட்டு தற்கொலை வரைக்கும் போயிடுவாங்க.ஐயா! நான் படிக்காதவளே தவிர நாலு இடத்துல கூலி வேலைக்குப் போய் பழக்கப்பட்டவ. அங்கங்க நடக்கற எல்லா அநியாயத்தையும் பாத்திருக்கேன். பேசறதக் கேட்டிருக்கேன். இப்ப ஒண்ணுமில்ல. விபச்சாரம் பண்ற பொம்பளைங்கள கைது பண்றாங்க. விபச்சாரம்னா என்னங்க? ஒரு ஆம்பள தன்னோட வெறியத் தீத்துக்க தொழில் செய்யற பொண்ணுகிட்ட போறான். அப்ப ரெண்டுபேர் மேலயும் தப்புதான்.

ஆனா, இதுல பொம்பள மட்டும்தான் அசிங்கப்படறா. அவளுக்கு பொழைக்க வேற வழி தெரியாம அந்தத் தொழிலுக்குத்தான் வருவா. அவளை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது யாருங்க. ஆம்பளதான. எப்பவாவது இதுக்காக ஆம்பளங்கள புடிச்சிப் போடறீங்களா? மேல் மட்டத்துல இருக்கற நாலு பெரிய மனுஷங்கள இந்தத் தப்புக்காக உள்ள போட்டா இந்தத் தப்பு வளருமாய்யா? ஆண், பொண்ணு ரெண்டு பேருக்கும் தண்டனை குடுங்கய்யா.

தப்பு எங்க தொடங்குதுன்னு கண்டு பிடிச்சி அந்த ஆணிவேரை வெட்டிப் போடுங்கய்யா. அத விட்டுட்டு மரத்தோட கிளைய மட்டும் வெட்டுனா அது திரும்பத் திரும்பத்தான் துளிர்ந்து வரும். இந்த கடைக்காரர் விஷயத்துலயும் இதுதாங்க நடக்குது. இவங்க செய்யற தப்புக்குத் தூண்டு கோலே இவங்க கிட்ட பணத்தைக் காட்டி பொருள்களை வாங்கி வெளியில் அதிக விலைக்கு விக்கறவங்க தாங்க. தயவு செஞ்சு நான் அதிகப் பிரசங்கித்தனமா பேசறேன்னு நெனைக்காதீங்க.

நீங்க அவருடைய குடும்பத்தாரை நெனச்சி அவரை எச்சரிச்சி விட்டுடுங்க. ஒவ்வொரு இடத்திலும் யாரால இந்தத் தப்பு நடக்குதுன்னு கண்டு பிடிச்சி அவங்களுக்கு தண்டனை குடுங்க. இவ்வளவு தூரம் என்னைப் பேச விட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.தவறுக்குத் தண்டனை என்பதை விட, தவறு செய்யத் தூண்டியவர்களைக் கண்டு பிடியுங்கள் என்று சொன்ன அவள் மீது அந்தக் காவல் அதிகாரிக்கு மதிப்பை ஏற்படுத்தியது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்