SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாரி செல்வராஜ் அண்ணா காட்டு பேச்சி னுதான் என்னை கூப்பிடுவார்!

2022-09-20@ 17:42:52

நன்றி குங்குமம் தோழி

சிறுமி பூர்வதாரணி

அடக்குமுறைகளை  எதிர்த்து நாயகன் வெகுண்டெழும்போதெல்லாம் தோன்றும் கிராமத்து தெய்வமான காட்டு பேச்சியாக கர்ணனில் நடித்து சமீபத்தில் ஓ.டி.டி  தளத்தில் வெளியான ‘விக்டிம்’ என்ற ஆன்தாலஜியில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தம்மம்’த்தில்தான் நம்பும் நியாயத்திற்காக துணிந்து பேசி சமயோதிய சுதந்திரமான சிறுமியாக நடித்திருக்கிறார் பூர்வதாரணி. இரண்டு படம் என்றாலும் அசாத்திய நடிப்பால் நம் மனதில் அழகாக ஒட்டிக் கொண்டுள்ளார்.

பூர்வதாரணியும் சினிமாவும்?

எனக்கு சொந்த ஊர் கருளப்பாக்கம். அப்பா ஜீவநாதன், அம்மா பிரிய காந்தி. நான் எங்க ஊரில் உள்ள அரசுப் பள்ளியில 8ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு சினிமா மேல பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது. அப்ப நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். எங்க பக்கத்து வீட்டு அக்கா ‘வானவில் கலை திருவிழா’விற்கு என்னை கூட்டிக்கொண்டு போனாங்க. அந்த நிகழ்ச்சிக்கு முதல் முறையா போறேன். அதில் ஒவ்வொருவருக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்த சொன்னாங்க. அப்போ எனக்கு நடிக்க வரும்னு சொல்லி நடிச்சுக் காட்டுனேன். அந்தக் கலை திருவிழாவிற்கு வந்திருந்த குறும்பட இயக்குநர் ஒருத்தர் அண்ணா நீ நல்லா நடிக்கிறேன்னு சொல்லி அவரோட  குறும்படத்துல நடிக்கிறியானு கேட்டார். நான் சரின்னு சொல்லி அந்த குறும்படத்துல நடிச்சேன். அதுதான் என்னோட முதல் படம்.

கர்ணன் படத்துல காட்டு பேச்சி... தம்மம்ல கேமா... எப்படி நடந்தது இந்த மேஜிக்?

முதல்ல தம்மம்லதான் நடிச்சேன். அந்த படத்தை பார்த்துட்டுதான் கர்ணன் படத்துக்காக மாரி செல்வராஜ் அண்ணா நடிக்க அழைச்சார். எனக்கு ரஞ்சித் பெரியப்பா முறை. ஒரு முறை வீட்டுக்கு வந்தவர், நான் நடிச்ச குறும் படத்த பார்த்தார். நல்லா நடிக்கிறியேன்னு சொன்னவர், கொஞ்ச நாள் கழிச்சு. அவரோட படத்தில் நடிக்கிறியான்னு கேட்டார். எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. ஏன்னா நான் ரஞ்சித்  பெரியப்பா படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். எனக்கு அவரோட படங்கள் எல்லாமே ரொம்ப பிடிக்கும்.

அப்படிப்பட்டவரோட படத்தில நடிக்கப் போறன்னு ரொம்ப சந்தோஷத்துல இருந்தேன். தம்மம் படம் 2 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்த படம். ஆனா, அப்போ ரிலீஸ் ஆகல. அந்த டைம்ல தான் மாரி செல்வராஜ் அண்ணா கர்ணன் படத்துக்கு சின்னப் பொண்ணு வேணும்னு தேடிட்டு இருந்தாரு. அவர் தம்மம் படத்தை பார்த்திட்டு, கர்ணன் படத்துல வர்ற காட்டு பேச்சி கேரக்டருக்கு என்ன தேர்ந்தெடுத்தாரு.

பெரிய இயக்குநர்களோட இரண்டு படங்கள்?

பெரிய இயக்குநர்களின் படம் என்றால் நடிப்பது கஷ்டம்னு சொல்வாங்க. எனக்கு அப்படி எல்லாம் இருந்ததே இல்லை. நான் கதைகூட என்னன்னு கேட்டதில்லை. ரஞ்சித் பெரியப்பாவும், மாரி அண்ணாவும் என்ன வேணும்னு சொல்றாங்களோ அதை அப்படியே நடிச்சு கொடுப்பேன். மாரி செல்வராஜ் அண்ணா என்னை இப்பகூட  காட்டு பேச்சினுதான் கூப்பிடுவாரு. கர்ணன் படத்துல ஒரே ஒரு சீன்தான் நான் பேசுவேன். அதேபோல் முதல் சீன்ல மட்டும்தான் என் முகம் தெரியும். மற்ற நேரத்தில் மாஸ்க் போட்டிருப்பேன். ஆனாலும் காட்டு பேச்சி கேரக்டர் பத்தி நிறைய பேர் பேசினாங்க. என் நண்பர்கள் கூட அந்த சீனுடைய போட்டோவை அனுப்பி நீதானேன்னு ஆச்சரியமா கேட்டாங்க.

உங்களுக்கும் புத்தருக்குமான தொடர்பு?

தம்மம் படத்துல நான் பேசற முதல் வசனமே ‘கடவுளே இல்லன்னு தானே புத்தர் சொல்லியிருக்கிறார்னு’ சொல்லுவேன். எனக்கு புத்தர் ஒரு கடவுள் இல்லன்னுதான் எங்க வீட்லயும் சொல்லியிருக்காங்க. அதனாலதான் புத்தர் மேல ஏறி நில்லு அப்படின்னு ரஞ்சித் பெரியப்பா சொன்னதும் நான் ஏறி நின்னு பறக்கிற மாதிரி நினைப்பேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே அம்பேத்கர் பத்தியும் புத்தர் பத்தியும் வீட்ல நிறைய சொல்லியிருக்காங்க. எங்க வீட்லயும் புத்தரைதான் பின்பற்றுவாங்க. புத்தர் கதைகள்ல வர்ற ஒருத்தரோடு பெயர்தான் பூர்வதாரணி. அதனாலதான் எனக்கு அந்த பெயர் வச்சாங்க.

நீங்க  நடிச்ச படத்தில் உங்களுக்கு பிடித்த சீன்?

ரெண்டு படத்துலயும் ஒரு போர் குணம் மற்றும் நியாயத்துக்காக பேசுகிற பெண் கதாப்பாத்திரம்தான். அதனால எனக்கு பிரிச்சு பார்க்க தெரியல. தம்மம் படத்துல ரெண்டு சீன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்னு வரப்புல நடந்து வரும் போது எதிர்ல ஒரு அண்ணன் வருவாரு. அந்த வரப்பில் ஒரு ஆள் மட்டும்தான் நடக்க முடியும். அப்போ அவர் என்னை கீழ இறங்கி நடன்னு சொல்லுவார். நான்தான்  முன்னாடி வந்தேன் நீங்க கீழ இறங்குங்கன்னு நான் சொல்லுவேன்.

அதே போல் கத்தியை எடுத்து குத்த போகும் போது கை தவறி கத்தி கீழ விழுந்திரும். உடனே நான் எடுத்து வச்சுக்குவேன். ஒரு தைரியமான பொண்ணா நான் அந்த படத்துல இருப்பேன். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். கர்ணன் படத்துல தனுஷ் அண்ணாகிட்ட அவரோட அப்பா கத்திய எடுத்து குடுப்பாரு. அப்போ காட்டு பேச்சி தண்ணியில இருந்து வெளிய வந்து கைதட்டும் சீன். அடங்கி போகாத தைரியமான ஒரு கதாப்பாத்திரம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய படம் மட்டுமில்லாமல் எனக்கு எப்போதும் ரொம்ப பிடிச்ச படம் ‘சார்பட்டா பரம்பரை.’ நிறைய தடவை அந்த படத்தை பார்த்திருக்கேன்.

அடுத்த படம்?

முதல்ல நான் நல்லா படிக்கணும். படிப்புக்கு பிறகு தான் எல்லாம். இடையில் நேரம் கிடைக்கும் போது நடிப்பேன். படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதைப் பொறுத்து மற்றும் நல்ல கதாப்பாத்திரம்னா நடிப்பேன். ஆனால் இப்போதைக்கு நல்லா படிக்கணும் என்ற எண்ணம் மட்டும்தான் மனசுல இருக்கு’’ என்றார் பூர்வதாரணி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்