டெய்லி சமையல்
2022-09-19@ 17:35:21

நன்றி குங்குமம் தோழி
சாம்பார், புளிக்குழம்பு, இட்லி தோசை என ஒரே மாதிரியான சமையல் சாப்பிடுவதால், அன்றாட சமையலிலுமே கொஞ்சம் வெரைட்டி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வித சமையல் மற்றும் சிற்றுண்டி செய்து குடும்பத் தலைவிகள் அசத்துவதற்காகவே சில எளிய மற்றும் அனைவரும் விரும்பும் உணவுகளை பட்டியலிட்டுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி.
தேங்காய் பாயசம்
தேவையானவை :
தேங்காய் - 1,
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - 1 கப் (பொடித்தது),
ஏலம் - 2 சிட்டிகை,
முந்திரி - 5,
உலர்ந்த திராட்சை - 10,
நெய்- 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் தேங்காயை உடைத்து இரு மூடிகளையும் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசியை ஊறவைத்து, தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்துக் ெகாண்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். நன்கு வெந்ததும், வெல்லத்தைச் சேர்த்துக் கிளற வேண்டும். வெல்லம் கரைந்ததும் ஏலப்பொடி சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விட்டு ஒரு கடாயில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரிகளை நெய்யில் வறுத்து சேர்த்தால் தேங்காய் அரிசிப் பாயசம் தயார்.
வெள்ளரி தயிர் பச்சடி
தேவையானவை:
வெள்ளரிக்காய்- 1 கப் துருவியது),
தயிர்- 1 கப் (புளிக்காதது),
பெருங்காய்தூள்- 1 சிட்டிகை,
தாளிக்க:
எண்ணெய்- 1 ஸ்பூன்,
கடுகு- ½ ஸ்பூன்,
பச்சைமிளகாய்- 1.
செய்முறை :
முதலில் வெள்ளரியை நன்கு துருவிக் கொள்ளவும். பிறகு அதில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து தயிரில் போட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாயை கிள்ளிப் போட்டு விட வேண்டும். பரிமாறும் சமயத்தில் உப்பு சேர்த்துப் பரிமாற வேண்டும். இல்லையேல் பச்சடி நீர்த்துப் போய்விடும். செய்வது சுலபம்.
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெயிலுக்கு இதமான ஹெல்த்தி பச்சடி.
வாழைப்பூ பருப்பு உசிலி
தேவையானவை:
துவரம் பருப்பு - 1 கப்,
கடலைப்பருப்பு- ½ கப்,
பாசிப்பருப்பு- 3 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்- 10,
உப்பு - தேவைக்கேற்ப,
வாழைப்பூ நறுக்கியது- 1 கப்,
மஞ்சள் தூள்- 2 சிட்டிகை.
தாளிக்க:
எண்ணெய்- 50 கிராம்,
கடுகு- 2ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை- 1 கொத்து,
பெருங்காயப்பொடி- 4 சிட்டிகை.
செய்முறை:
முதலில் வாழைப் பூவை நன்கு பொடியாக நறுக்கி தயிரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு வேகவைத்துப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பருப்புகளை நன்கு ஊற வைத்து பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக நொர நொரவென்று அரைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்க வேண்டும். நன்கு ஆறவிட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு முதலியவற்றைத் தாளித்து, வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பை அதில் சேர்க்கவும். பிறகு வாழைப் பூவையும் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்க வேண்டும். வாழைப் பூ அதன் துவர்ப்பின்றி சுவையாக இருக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பும் உணவு இது.
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை :
உருளைக்கிழங்கு - 4
தாளிக்க: கடுகு- 1 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு,
பெருங்காய தூள் - தலா 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - 4 இலைகள்.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவிட்டு, தோலை உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளைத் தாளித்து, உப்பு சேர்த்து, உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை அதில் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு ஒரு பிரட்டல் பிரட்டி எடுக்க வேண்டியது தான். தேவைப்பட்டால் தேங்காயினை துருவி சேர்க்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்தும் பரிமாறலாம். காரமில்லாமலிருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பயத்தம்பருப்பு கோசு மல்லி
தேவையானவை :
பயத்தம் பருப்பு - 1 கப்,
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்,
கடுகு - ½ ஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - 4,
தேங்காய்துருவல் - 4 ஸ்பூன்,
பச்சைமிளகாய்- 1.
செய்முறை:
பயத்தம் பருப்பை ஊறவைத்து அரைவேக்காடு அளவுக்கு வேகவைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். அதாவது பயத்தம் பருப்பு ரொம்ப குழைந்துவிடக்கூடாது, கிள்ளு பதத்தில் வேக வைத்தால் போதும். கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க கொடுத்தவைகளைத் தாளித்துப் போட்டு, அதில் வேகவைத்துள்ள பயத்தம் பருப்பையும் சேர்த்து, தேங்காய்த் துருவல் கலந்து பரிமாற வேண்டும். தேவைப்பட்டால், கேரட் கூட துருவி சேர்த்துக் கொள்ளலாம்.
மிளகு குழம்பு
தேவையானவை :
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
மிளகு - 3 ஸ்பூன்,
சீரகம் - 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 ஸ்பூன்,
தனியா - 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - நெல்லிக்காய் அளவு.
தாளிக்க:
கடுகு- 1 ஸ்பூன்,
மணத்தக்காளி வற்றல்- 3 ஸ்பூன்,
நல்லெண்ணெய்- 6 ஸ்பூன்,
நெய்- 2 ஸ்பூன்,
பெருங்காயம்,
மஞ்சள் தூள்- தலா 1 சிட்டிகை.
செய்முறை:
புளியை தண்ணீரில் கரைத்து தனியே வைக்கவும். வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், துவரம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதினை புளிக்கரைசலுடன் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கரைத்து விட்டு குழம்பு பதத்தில் அடுப்பிலேற்றி நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். கொதிக்கும் போதே 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம் நெய்யில் தாளித்துப் போட்டு மீதி நல்லெண்ணெயில் மணத்தக்காளி வற்றலை வறுத்துப் போட வேண்டும். இதுவே மிளகு குழம்பு. சுவை, மணம் நிறைந்தது. உடலுக்கும், குடலுக்கும் நல்லது.
சத்தான கஞ்சி
தேவையானவை :
புழுங்கலரிசி நொய்- 1 கப்,
கருப்பு முழு உளுந்து- ¼ கப்,
பூண்டு- 6 பல்,
சீரகம்- 2 ஸ்பூன்,
வெந்தயம்- ¼ ஸ்பூன்,
உப்பு- கொஞ்சம்,
மோர்- தேவைக்கு.
செய்முறை:
புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 கப் நீர் சேர்த்து, கருப்பு உளுந்து, வெந்தயம், சீரகம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். வெந்ததும் நன்கு குழையவிட்டு பிறகு அதில் உப்பு, மோர் சேர்த்துப் பருகவும்.
தக்காளி தோசை
தேவையானவை :
இட்லி அரிசி - 1 கப்,
தக்காளி நறுக்கியது - ½ கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க:
எண்ணெய் - 2 ஸ்பூன்,
கடுகு,
சீரகம் - தலா 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை - 4 இலைகள்,
பெருங்காயம் - 1 சிட்டிகை.
செய்முறை:
அரிசியை நான்கு மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். பிறகு அரிசியுடன் தக்காளி, சேர்த்து இரண்டையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிக்க கொடுத்துள்ள கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் அனைத்தும் சேர்த்து தாளித்து ஆறியதும் மாவில் சேர்க்கவும். பிறகு உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
ரவை புட்டு
தேவையானவை :
ரவை - ¼ கிலோ,
சீனி - 1 கப்,
தேங்காய் - 1 மூடி,
நெய் - 1 ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை:
ரவையை வாசனை வரும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். ரவை சீக்கிரம் கருகிவிடும் என்பதால், கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு இந்த தண்ணீரை வறுத்து வைத்துள்ள ரவையில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசறிக் கொள்ளவும். கையில் எடுத்த ஒரு பிடி பிடித்தால் பிடிக் கொழுக்கட்டைப் போல் அதனை பிடிக்க வரவேண்டும். அதிக அளவு தண்ணீர் இருந்தாலும் புட்டு சரியாக இருக்காது. அதன் பிறகு புட்டுக்குழாயின் உள்புறம் நெய் தடவி, புட்டு மாவு, சர்க்கரை அல்லது வெல்லம், துருவிய தேங்காய் என தனித்தனி லேயராக வைக்க வேண்டும். இதனை புட்டுக் குழாயில் வைத்து வேகவைக்கவும். ஐந்து நிமிடம் நன்கு ஆவியில் வேக வைக்க வேண்டும். பிறகு குழாயில் இருந்து எடுத்தால் சுவையான ரவை புட்டு தயார். அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்காமலும் வேகவைக்கலாம். இதற்கு கடலை குழம்பு சுவையாக இருக்கும்.
இனிப்பு தோசை
தேவையானவை :
அரிசிமாவு - 1 கப்,
கோதுமை மாவு - ½ கப்,
ராகி மாவு - ½ கப்,
பொடித்த வெல்லம் - ¼ கப்.
செய்முறை:
எல்லா மாவையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு ஒன்றாக கலந்துக் கொள்ளவும். வெல்லத்தை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கரைக்கவும். ஆறியதும், வடிகட்டி அதை மாவில் சேர்க்கவும். நன்கு தோசை மாவு பதத்திற்கு கரைத்த பிறகு தோசையாக தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். இரு புறமும் எண்ணெய் ஊற்றி சிவக்க எடுத்தால் இனிப்பு தோசை ரெடி. இதற்கு காரச்சட்டினி சுவையாக இருக்கும்.
தொகுப்பு: ப்ரியா
Tags:
டெய்லி சமையல்மேலும் செய்திகள்
அசத்தும் கொத்தவரை சமையல்
ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் Ready to Cook அவல்கள்
ஆரோக்கிய சாலட் உணவுகள்
மல்டி பர்பஸ் பவுல்பவுல்
சுவையான செட்டிநாடு சமையல்
கீரைகளை எவ்வாறு தேர்வு செய்யலாம்!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!