SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபூர்வ ராகமான மதுரகீதம் அவர் ஸ்ரீவித்யா

2022-09-19@ 17:26:46

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-105

பா.ஜீவசுந்தரி

ஸ்ரீவித்யாவின் கண்கள் கோடானுகோடி வார்த்தைகளைக் கொள்ளை அழகுடன் பரிமாறிக் கொள்ளும். அந்தக் கண்கள் பேசும் பரிபாஷைகளுக்கு முன்னால் வார்த்தைகள் அனைத்தும் தடுமாறித்தான் போகும். அவ்வளவு உயிரோட்டம் மிக்க பேசும் கண்கள் அவை. ஆனால், அதன் பின் ஒளிந்திருந்த சோகக் கதைகள் ஓராயிரம். முகம் தூய்மையான மலர் போல் மலர்ந்திருந்தாலும் அவரது இதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரணங்கள் ஆயிரமாயிரம்.

தனிமைத் துயரில் அவர் எப்போதும் இருந்தபோதும் சோழிகளைச் சுழற்றிப் போட்டது போன்ற சிரிப்பும் பேச்சும் அவர் நடிப்பில் வெளிப்பட்டாலும் நெஞ்சுக்குழியில் திமிறி எழுந்த அளவிட முடியாத விம்மல்களை அறிந்தவர் யார்...?

தாய் மொழியான தமிழில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத் திரையுலகம் அவரது நடிப்பைப் பயன்படுத்திக் கொண்டது போல், தமிழ்த் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது என்று அழுத்தமாகச் சொல்வதில் பிழையில்லை. எவ்வளவு துயரங்கள் தொடர்ந்தாலும், கேமரா முன் நிற்கும்போது நடிப்பின் வேகத்தில் அத்தனையும் தொலைந்து போகும்.  

எத்தனை எத்தனை வேடங்கள்..? அத்தனையும் முத்துக்கள்...!


1973ல் இயக்குநர் பாலசந்தர், ஸ்ரீவித்யாவுக்கு அளித்த ஓர் அற்புதமான வாய்ப்பு ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ கமலா பாத்திரம். வீட்டை விட்டு அதிகம் வெளியில் வராத, அடுப்பங்கரையே சொர்க்கம் என்று குறும்பு கொப்பளிக்கும் பேச்சுகளினூடே அமைதியையும் விட்டு விடாத மிக அழகானதோர் பாத்திர வார்ப்பு. ‘ஆனந்த விகடன்’ இதழில் பத்திரிகையாளர் மணியன் எழுத்தில் தொடராக வெளிவந்த குறுநாவல் ‘இலவு காத்த கிளியோ’. இதன் திரை வடிவமே இப்படம். உடன் பிறந்த சகோதரிகளான மூன்று இளம் பெண்கள் (சுபா, வித்யா, ஜெயசித்ரா) மத்தியில் உலவும் ஓர் இளைஞனை (சிவகுமார்), மூன்று பெண்களும் மனதாரக் காதலிக்கிறார்கள் மானசீகமாக.

ஆனால், மூவருக்குமே அவனை மணம் முடிக்கும் வாய்ப்பு கைநழுவிப் போகிறது. ஒட்டடையும், கரியும், தூசும் படிந்த அந்த சின்னஞ்சிறு அடுப்பங்கரை சன்னலில் தம்ளரைத் தட்டி, நாயகனைத் தன் பக்கம் ஈர்த்து அவனை அழைத்துப் பேசுவதும், அடுத்து அவனது வீட்டிலேயே குடியேறும்போது தூணைத் தட்டித் தட்டி அழைத்துப் பேசுவதும், நெஞ்சு கொள்ளாத காதலை அவன் மீது வளர்த்துக் கொண்டாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமலே பழகுவதுமாக அப்படியோர் நடிப்பு. வித்யாவுக்கு வசனங்கள் எதற்கு? அவர் கண்களே போதுமே அனைத்தையும் பேச....! இதை நிரூபிக்கும் விதமாக அவரின் நடிப்பும் அனைத்துப் படங்களிலும் வெளிப்பட்டது.

‘வெள்ளிவிழா’ படத்தில் மிகக் குறைந்த நேரமே தோன்றினாலும், வெடுக் வெடுக் என்று பேசும் மருமகளாக, அதிலும் அவ்வப்போது இந்தியில் வேறு பேசி மாமனாரைக் (ஜெமினி கணேசன்) கலங்கடிப்பதுடன், மனோரமாவை, ‘புட்டி தீதி... புட்டி தீதி’ (கிழட்டு அக்கா) என்று அவருக்குப் புரியாத மொழியில் அவரை வசை பாடுவார். ’கார் ஹெட்லைட் மாதிரி ரெண்டு முட்டைக் கண்ணுதான் இந்தப் பொண்ணுக்கு...’ இப்படி ஸ்ரீவித்யா நடிக்க வந்தபோது அவரைப் பார்த்துக் கிண்டலாக வர்ணித்தவர் நடிகர் ஜெமினி கணேசன். ஆனால், அந்தக் கண்களால்தான் அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயித்தார் ஸ்ரீவித்யா என்பது எவ்வளவு உண்மை.

ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளியான ‘உணர்ச்சிகள்’ படத்திலோ பாலியல் தொழிலாளி மரகதம் (ஸ்ரீவித்யா), முத்து (கமலஹாஸன்) இருவர் பாத்திரங்களுமே அந்த வயதில் எந்த ஒரு நடிகரும் ஏற்கத் தயங்கும் வேடங்கள். முத்துவைப் பார்த்து சகோதரனாக நினைத்து, பாசத்துக்கு ஏங்கும் ஒரு சகோதரியாக, அவன் வாழ்க்கையில் தவறு செய்து பால்வினை நோயாளியாக மாறி விட்டான் என்றதும் அவனைக் கண்டிக்கத் தயங்காதவளாக, தன்னால் அவன் கெட்டுப் போனான் என்ற கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என வீட்டை விட்டு வெளியேற்றவும் தயங்காதவளான ஒரு உணர்வுப்பூர்வமான பாத்திரம்.

எம்.எல்.வி.யின் அடுத்த வாரிசு எம்.ஆர்.பி.....!

பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’. எப்போதும் கிளாசிக்கல் வரிசையில் வைத்துப் பேசப்படும் படம். எம்.ஆர்.பைரவியின் (ஸ்ரீவித்யா) வாணி ஜெயராம் குரலில் ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்....?!’ கச்சேரி நிறைவடைந்ததும், ‘எம்.எல்.வி க்கு அடுத்த வாரிசு இந்த எம்.ஆர்.பி. தான்’ என்று கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட்டரி (நாகேஷ்) சிலாகித்துப் பேசுவார். உண்மைதான்... படத்தில் அப்படியான ஒரு பாத்திரமாகத்தான் ஸ்ரீவித்யா எம்.எல்.வி.யின் பேர் சொல்லும் வாரிசு எம்.ஆர்.பி. யாக நடிப்பில் அவ்வளவு பேரையும் கொள்ளை கொண்டார்.

மிக கனமான அவரது வயதுக்கு மீறிய ஒரு பாத்திரமும் கூட. ஒரு டீன் ஏஜ் மகளின் தாயாக, நடுத்தர வயதுப் பெண்ணின் பாத்திரத்தை 22 வயது இளம்பெண் வித்யா ஏற்று நடித்ததென்பதும் கூட வியப்பில் ஆழ்த்தியது. அவரின் மகளாக நடித்த ஜெயசுதாவுக்கும் வித்யாவுக்கும் ஓரிரு வயதுகள் வித்தியாசமே இருக்கும். டைட்டில் கார்டிலும் கூட இருவரின் பெயரும் ஒரே நேர்க்கோட்டில்தான் இடம் பெறும். இளம் அம்மாவாக வேடமேற்றதன் மூலம், தன் வாழ்நாள் முழுதும் பல படங்களில் அம்மா வேடத்தை அவர் ஏற்றாலும் ஒரே மாதிரியான அம்மாவாக அல்லாமல், பல்வேறுபட்ட வித்தியாசமான அம்மா வேடங்களை அவரால் கண் முன் நிறுத்த முடிந்தது. ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மனக்கண்ணில் எழுவதைத் தடுக்கவே முடியாது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் அற்புதமான இசையும் ’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘அதிசய ராகம், ஆனந்த ராகம்’, ‘கேள்வியின் நாயகனே’ போன்ற பாடல்களும் என்றென்றும் மறக்க இயலாதவை. வயதில் மூத்த பைரவியை விரும்பும் பிரசன்னாவாக கமல். இருவருக்கும் இடையிலான அன்பும் நேசமும் அதனூடாக வெளிப்படும் காதலும் என இருவரின் பாத்திரங்களும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டவை. விக்ரமாதித்யனுக்கு வேதாளம் சொன்ன ஒரு கதையின் புதிர் முடிச்சு எவ்வாறு அவிழ்கிறது என்பதில்தான் திரைக்கதையின் வெற்றியும் அமைந்திருந்தது. இப்படத்துக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருது ஸ்ரீவித்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி ஸ்ரீவித்யாவை வேறொரு தளத்துக்கு நகர்த்திச் சென்றது.

இப்படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், இந்த ஒரு படத்தில் மட்டுமே ஸ்ரீவித்யாவின் கணவனாக, இணையாக நடித்தார். அதன் பின் பல படங்களில் நாயகியாக, மிக வித்தியாசமான வேடங்களை எல்லாம் அவர் ஏற்று நடித்தார். அவற்றில் பல படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் கூட, ஸ்ரீவித்யாவின் நடிப்பில் எந்தக் குறையும் காண முடியவில்லை. 70களின் இரண்டாம் நிலை நாயகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ் என அனைவருடனும் இணைந்து நடித்தார்.  

‘காலங்களில் அவள் வசந்தம்’ எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம். கவித்துவமான வரிகளைக் கொண்ட பாடலின் தலைப்பில் எடுக்கப்பட்ட ஓர் படம், கவித்துவமாக அமையவில்லை என்பதுதான் முரண். அடுத்தடுத்து திருமணம் தடைபட்டுப் போகும் அதிர்ச்சியில் மனநலம் பாதிக்கப்படும் பெண் ராஜியாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நாயகி ஸ்ரீவித்யா விழிகளை உருட்டி விழிக்கும்போதும், மருள மருளப் பார்க்கும்போதும் நடிப்பில் பிரமாதப்படுத்தி விடுவார்.

நாயகிகளாக, சகோதரிகளாகப் போட்டி போட்டு நடிகையர் வித்யாவும் சந்திரகலாவும் நடிப்பில் அசத்தினார்கள். ஆனால், க்ளைமாக்ஸில் ரசிகர்களின் மனங்களில் மிக அழுத்தமான முத்திரையைப் பதித்து அமர்ந்து கொள்பவர் ஸ்ரீவித்யா தான். மிக மிகப் பிற்போக்குத்தனமான கதையமைப்பைக் கொண்ட படம். 70களின் பெரும்பாலான படங்கள் இவ்வாறாகத்தான் இருந்தன என்பதும் கசப்பான உண்மை.  

படம் ஓடவில்லையே தவிர, ‘பாடும் வண்டே பார்த்ததுண்டா?’, ‘முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது’, ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’, ‘அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு’ என எம்.எஸ்,விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அத்தனையும் தேன். அதிலும் வாணி ஜெயராம் குரலினிமைக்குக் கேட்க வேண்டுமா என்ன?

கே.பாலசந்தர் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ படத்தில் இரட்டை வேடமேற்ற கமலுக்கு ஒரு ஜோடி ஸ்ரீவித்யா. அதே காலகட்டத்தில் வெளியான ‘பணம் பத்தும் செய்யும்’ படத்தின் நாயகன் கவுண்டமணிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ‘அடியேய் திண்டுக்கல் வெத்தல..’ என்று ஒரு டூயட்டும் அவர்களுக்கு உண்டு. இயக்குநர் கே.பாலசந்தர் இது குறித்து விமர்சித்து வித்யாவிடம் பேசியபோது, ஒரு நடிகை எல்லா வேடங்களையும் ஏற்று நடிக்க வேண்டும் என்பதிலும் வித்யா உறுதியாக இருந்தார். இந்த இரு படங்களுமே 100 நாட்கள் ஓடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாயகர்களையும் மீறி நிலைத்து நின்ற நடிப்பாற்றல்

மகாபாரத குந்தியை நினைவுறுத்தும் அம்மா வேடம் தளபதியில். எப்போதோ இளம் வயதில் பிள்ளையை உயிருடன் பறி கொடுத்த துயரத்தைக் கண்களில் தேக்கி வைத்து வேறு எவராலும் வெளிப்படுத்தவே முடியாத அற்புதமான நடிப்பு.

’அபூர்வ சகோதரர்கள்’ குள்ள அப்புவின் அம்மா. தற்கொலை செய்து கொள்ள முயலும் பிள்ளையை அலறித் துடித்து தடுப்பதுடன், அவனை ஆட்படுத்தவும் தவறாத அம்மாவாக என எத்தனை அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார் தன் நடிப்பால்.  1970களின் இறுதியில் இமயம், நாம் இருவர், நீதியின் நிழல், நாங்கள் என 4 படங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையாகவும் நடித்தார். ரஜினியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவருக்கு, பின்னர் அந்த வாய்ப்பு கிட்டவேயில்லை.

ஆறு புஷ்பங்கள், மனிதன், உழைப்பாளி, மாப்பிள்ளை, தளபதி போன்ற படங்களில் மைத்துனி, அக்காள், மாமியார், அம்மா இப்படியான வாய்ப்புகளே கிடைத்தன. கமல் படங்களில் அவர் இரட்டை வேடம் ஏற்கும் படங்களில் வயதான கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்புதான் கிடைத்தது. பிற படங்களில் அம்மா, அக்கா வேடங்களே. (உ-ம்) புன்னகை மன்னன், இந்திரன் சந்திரன், அபூர்வ சகோதரர்கள், நம்மவர் போன்ற படங்கள். கதாநாயகர்களுக்கு எப்போதும் வயதாவதில்லை. அதனால் இளம் நாயகிகளைத் தேடிப் போய் விடுவார்கள்.

‘மதுரகீதம்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் 1977 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது, கலைமாமணி விருது இரண்டையும் ஒருசேரப் பெற்றார்.

மீளாத் துயரில் தள்ளிய திருமணமும் இழந்து போன சொத்துக்களும்

நடிகர் கமலுடன் ஏற்பட்ட காதல் குறித்து பத்திரிகைகள் ஏராளம் எழுதிக் குவித்து விட்டன. இங்கு அது பற்றி எதுவும் எழுதப் போவதில்லை. கமல் - வாணி கணபதி திருமணத்தை அடுத்து, ஸ்ரீவித்யா, சில மலையாளப் படங்களின் இணை இயக்குநரான ஜார்ஜ் தாமஸ் என்பவரைக் ‘காதலித்து’ மணந்து கொண்டார். ஸ்ரீவித்யாவின் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் அவர் மீது அக்கறை கொண்ட பலரும் தடுத்தும் அவர் அதை ஏற்கவில்லை.

இந்தத் திருமணம் ஸ்ரீவித்யாவை நிம்மதி இழக்கச் செய்தது மட்டுமே நிதர்சனம். அவர் பல ஆண்டுகள் கடும் உழைப்பைச் செலுத்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய இடம், ஸ்ரீவித்யா பெயரிலோ அவருடைய கணவர் ஜார்ஜ் தாமஸ் பெயரிலோ பதிவு செய்யப்படவில்லை; மாறாக, அவருடைய மாமனார் பெயரில் பதிவு செய்யப்பட்டு வீடு கட்டப்பட்டது. அதுவே பின்னர் ஸ்ரீவித்யாவுக்கு வாழ்நாள் துயரமானது. மனம் கசந்து போன வாழ்விலிருந்து விடுபட்டு வீடு உட்பட, தான் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் இழந்து வெளியேறினார்.

இழந்து போனவற்றை மீட்க கடும் சட்டப் போராட்டத்தையும் மேற்கொண்டார். ஏறக்குறைய திவாலாகிப் போன நிலையில் அப்போது அவருக்காகப் பொறுப்பேற்றுக் கை கொடுத்தவர்கள் இயக்குநர் ஆர்.சி.சக்தி மற்றும் நடிகர் செந்தாமரை இருவரும்தான். இக்காலகட்டத்தில்தான் எந்த முக்கியத்துவமும் அற்ற எல்லா வேடங்களையும் பணத்துக்காக ஏற்று நடிக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டார்.

“பல சமயங்களில் நான் என்ன சாப்பிட்டேன் என்பதெல்லாம் கூட எப்போதும் நினைவில் இருந்ததில்லை;” என்னுமளவு ஸ்ரீவித்யாவை மனம் கசந்து வேதனை அடையவும் வைத்த காலமது. ஒரு மாமாங்கம் கால அளவான 12 ஆண்டுகளின் பின்னரே அவருக்கு விவாகரத்து கிடைத்தது மிகப்பெரிய விடுதலை உணர்வை அளித்தது. அதன் பின்னர் 1990களின் இறுதியில் உச்ச நீதிமன்றம் ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தானவை என தீர்ப்பு அளித்தது. அது அவரை மேலும் ஆசுவாசம் அடையச் செய்தது. அதன் பிறகே அவர் தமிழகத்தை விட்டு நீங்கி நிரந்தரமாக கேரளத்தில் குடியேறினார்.

மலையாளத் திரையில் ஸ்ரீவித்யாவின் பங்களிப்பு

தமிழ் உட்பட வேறு எந்த மொழியிலும் கிட்டாத அரிய பாத்திரங்கள், வாய்ப்புகளை மலையாளத் திரையுலகம் அள்ளிக் கொடுத்து அவரை வாரி அணைத்துக்கொண்டது. பெரும்பாலும் குடும்பத்தலைவி வேடங்களே என்றாலும் அவை அனைத்துமே நடிப்பதற்கு வாய்ப்புள்ள வெவ்வேறு மாதிரியான பாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ச்செண்ட’ அவரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்கதோர் படம். கேரளத்தின் கலாசாரம், பண்பாடு, கலைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. பரதம் மட்டுமே அறிந்த ஸ்ரீவித்யா, இதில் மோகினியாட்டக் கலைஞராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஸ்ரீகுமாரன் தம்பி இயக்கத்தில் மட்டும் வேனலில் ஒரு மழ, புதிய வெளிச்சம், அம்பல விளக்கு, ஜீவிதம் ஒரு கானம், ஸ்வந்தமென்ன பாடம், ஆக்ரமனம் என 6 படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் படத்தின் மலையாள வடிவம் ‘வேனலில் ஒரு மழ’. ஃபடாபட் ஜெயலட்சுமியின் வேடமேற்று ஸ்ரீ வித்யா நடித்திருந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையான ‘இடவழியில பூச்சா மிண்டபூச்சா’ படத்தில் ஆங்கிலப் பேராசிரியராக, ‘அன்னா கரீனினா’ பற்றி பாடம் எடுத்து மாணவிகளிடம் மிகவும் மதிப்பு மிக்கவராக வலம் வருபவர், திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு ஒரு உறவைத் தேடிக்கொள்ளும்போது, அதே மாணவிகள் மத்தியில் மதிப்பிழந்தவராக மாறுகிறார். பரிதாபத்துக்குரிய இவ்வேடத்தை வசனங்கள் அதிகமின்றி தன் நடிப்பால் நியாயம் செய்தவர்.  

5 படங்களுக்காக கேரள அரசின் சிறந்த நடிகை விருதைப் பெற்றவர். இவருடன் அதிகம் ஜோடியாக நடித்தவர் நடிகர் மது. தவிர, சத்யன், பிரேம் நசீர், ஜெயன், சோமன், மம்முட்டி, மோகன்லால், திலகன் என அனைவருடனும் இணைந்து நடித்தவர்.  

திரைப்படங்களுக்கு ஈடாக சின்னத்திரையிலும் ஜொலித்தவர்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என வித்யா நடித்த படங்களின் எண்ணிக்கை 800க்கும் மேல். அனைத்து மொழிகளிலும் சொந்தக் குரலிலேயே பேசி நடித்தார். இவை தவிர தமிழிலும் மலையாளத்திலுமாக 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் அருகிப் போன காலத்தில் தொலைக்காட்சித் தொடர்களை அவர் நாடவில்லை. பெரும் புகழுடன் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்தார். இத்தனை ஆண்டு காலத் திரை வாழ்க்கையில் அவருக்குக் கிட்டாத பல நல்ல வேடங்கள் தொடர்களில் நடிக்கக் கிடைத்ததாலேயே அவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தார்.

காலமெல்லாம் போராட்டமாகவே கழிந்த வாழ்க்கை, நிம்மதியாகப் பெருமூச்சு விட முடியாமல் முதுகுத் தண்டு வடத்தில் ஏற்பட்ட புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் இறுதி வரை தொடர்ந்தது. அப்போதும் அவர் ஸ்ரீ குமாரன் தம்பி இயக்கிய ’அம்மா தம்புராட்டி’ தொலைக்காட்சித் தொடரில் தலைமைப் பாத்திரமான லட்சுமிபாய் தம்புராட்டி வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்.

உன்னதமான தாயன்பையும் ஆத்மார்த்தமான அன்பையும் நினைத்து ஏங்கியவருக்கு அது கிட்டாமலே போனது. அழகிய புன்சிரிப்புக்குச் சொந்தக்காரரை புற்றுநோய் பறித்துக் கொண்டு போனது பெரும் துயரம். 2006 அக்டோபர் 19ல் ஸ்ரீ வித்யா தன் 53ஆவது வயதில் காற்றில் கரைந்து போனார்.

மிக அதிக எண்ணிக்கையில் மலையாளத் திரைப்படங்களில் நடித்து, கேரள மக்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்று, கேரளத்தையே தன் நிரந்தர இருப்பிடமாகத் தேர்ந்து கொண்ட வித்யாவுக்கு கேரள அரசு தக்க மரியாதைகளைச் செய்து, 21 குண்டுகள் முழங்க பிரியாவிடை தந்து வழியனுப்பி வைத்தது. அவர் மறைந்தாலும் தான் ஏற்று நடித்த மறக்கவொண்ணா கதாபாத்திரங்கள் வாயிலாக எப்போதும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் ஸ்ரீவித்யா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

படங்கள்:  ஸ்டில்ஸ் ஞானம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்