SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதம் ஒரு முறை டீடாக்ஸ் அவசியம்!

2022-08-23@ 15:33:19

நன்றி குங்குமம் தோழி

‘‘தலைமுடி பராமரிப்பு என்று சொல்வதை விட தலைமுடி ஆரோக்கியம் என்றுதான் நாம் இந்தக் காலக்கட்டத்தில் பார்க்க வேண்டும். தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் சம்பந்தம் உண்டு. நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தலைமுடி, நகம் இவையும் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி உதிர்கிறது மற்றும் உடைகிறது என்றால், நம் உடலில் பிரச்னை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்போது தலைமுடி பராமரிப்பினை எல்லாரும் அழகியலாக பார்க்கிறார்கள்’’ என்கிறார் சஞ்சீவனம் ஆரோக்கிய மையத்தின் தலைவர் டாக்டர் நீத்து.

‘‘இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை எல்லாரும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். தலைமுடி பராமரிப்பினை மூன்றாக பிரிக்கலாம். தலைமுடியின் முக்கிய அங்கம் உச்சந்தலையில் உள்ள சருமம், அதாவது ஸ்கால்ப் பகுதி. இது சருமத்தின் மற்றொரு அங்கம். சிலருக்கு ஸ்கால்ப்பில் அரிப்பு பிரச்னை ஏற்படும். பொடுகு பிரச்னை இருந்தாலும் அரிப்பு இருக்கும். ஒரு சிலருக்கு எரிச்சல் இருக்கும். அல்லது வறண்டு காணப்படும். இவை எல்லாம் ஸ்கால்பில் இருக்கக்கூடிய பிரச்னைகள். அதிக பட்சமாக சொரியாசிஸ் அல்லது டெர்மடைடிஸ் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

தலைமுடியின் இரண்டாவது பிரச்னை என்று பார்த்தால், அதன் வளர்ச்சி மற்றும் அடர்த்தி குறையும். ஒரு சிலர் தலைமுடியினை வெட்டிய பிறகு அதன் வளர்ச்சி குறைந்துவிட்டதாக கூறுவார்கள். இவை மூன்றும் செரிமானப் பிரச்னை இருந்தால் ஏற்படும். அதனால் தலைமுடி உதிர்கிறது என்று அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், முதலில் உங்களின் செரிமானப் பிரச்னைக்கு கவனம் செலுத்த வேண்டும். அசிடிட்டி மற்றும் பி 12 குறைபாடு இருந்தாலும் முடிக் கொட்டும்.

30 வயதிற்கு மேல் என்றால் பல பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும். ஆண்கள் என்றால் அவர்கள் வெளியே வேலைக்கு செல்வதாலும், உணவுப் பழக்கம் சரியாக கடைப்பிடிக்காத காரணத்தாலும் வயிற்றில் பிரச்னை ஏற்படும். விளைவு அஜீரண கோளாறு மற்றும் முடி உதிர்தல். பொதுவாக ஒருவருக்கு செரிமானப் பிரச்னை இருந்தால் நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துக்களை உடல் ஏற்றுக் கொள்ளாது. ஒரு சிலர் மல்டி விட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வார்கள். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் இதை சாப்பிடக்கூடாது. இது எதிர்காலத்தில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரே வழி நம்முடைய உணவு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளை சமச்சீராக எடுத்துக் கொள்வது அவசியம்.

மூன்றாவது தலைமுடியின் தன்மை. முடி கொத்து கொத்தாக கையில் வரும். ஆரோக்கியமற்று இருக்கும். மெல்லிய குச்சி உடைவது போல் முடியும் உடையும். தலைமுடி உயிரற்று
இருக்கும். நிறம் செம்பட்டையாக மாறும். இன்றைய காலக்கட்டத்தில் இந்த பிரச்னை கால்சியம் மற்றும் விட்டமின் குறைபாடு இருந்தால் ஏற்படும். இவை மூன்றுமே நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்னைகள். இதற்கு தீர்வுகளும் உண்டு. அதை நாம் கவனமாக பின்பற்றினால் முடி மட்டுமில்லை நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்றவர் முடியினை ஆரோக்கிய முறையில் பராமரிப்பது குறித்து விவரித்தார்.

‘‘முன்பு நம் முன்னோர்கள் தலைமுடியை நன்கு சீவி எண்ணை வைப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் தலைக்கு எண்ணை வைப்பது குறித்து கவனம் செலுத்துவதில்லை. எந்த தலைமுடியாக இருந்தாலும் தலை மண்டையில் விரல் நுனிகள் கொண்டு எண்ணை வைத்து மசாஜ் செய்யணும். இல்லை என்றால் பஞ்சில் எண்ணையை நனைத்து மண்டையில் படும்படி வைக்க வேண்டும். ஷாம்புவில் உள்ள ரசாயனம் தலைமுடியில் உள்ள எண்ணை தன்மையை நீக்கி வறண்டு போகச் செய்யும்.

மேலும் அதிலுள்ள ஆரோக்கிய பாக்டீரியாவும் அழிந்து போகும் வாய்ப்புள்ளது. அதனால் ph அளவு சரியாக உள்ள ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். இப்ப யாரும் சீயக்காய் அல்லது பச்சைபயறு மாவு கொண்டு தலை குளிப்பதில்லை. ஷாம்பு அவசியம் என்பதால் மைல்ட் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். சில ஷாம்புக்களை பயன்படுத்தும் போதே அதன் தன்மை கடினமாக இருப்பதை உணர்வோம். அதை தவிர்ப்பது அவசியம். எப்போதும் தலைக்கு குளிக்கும் முன் தலைமண்டையில் எண்ணை வைத்து 20 நிமிடம் கழித்து குளிக்கலாம். அல்லது முட்டையின் வெள்ளைக்கரு, செம்பருத்தி, வெந்தயம் இதனையும் தலை குளிக்கும் முன் தடவி பிறகு குளிக்கலாம்.

எந்த ஷாம்பு பயன்படுத்தினாலும், கண்டிஷ்னர் அவசியம். இது முடியினை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும். நம்முடைய சுற்றுப்புறச்சூழல் தலைமுடிக்கு பாதுகாப்பானதா இல்லை. அதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கலாம். எண்ணை வைத்து தலைக்கு குளிக்கும் போது, அது நம் உடலில் உள்ள சூட்டை தணிக்கும், உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்டுவதால், ஃப்ரெஷ்ஷான தோற்றத்தினை அளிக்கும்.

ரிலாக்ஸ் உணர்வினை ஏற்படுத்தும். தலைக்கு குளிக்கும் போது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்... சூடான தண்ணீரில் குளிக்காமல், மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை பயன்படுத்தலாம். அல்லது தலைமுடியினை மட்டும் சாதாரண தண்ணீரில் அலசலாம். எப்போதும் ஷாம்புவை அப்படியே தலையில் பயன்படுத்தக் கூடாது. அதை தண்ணீரில் கலந்து பிறகு தான் பயன்படுத்த வேண்டும்’’ என்றவர் உணவு பழக்கம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

‘‘தலைமுடியினை வெளிப்புறத்தில் மட்டுமே பாதுகாத்தல் போதுமானதல்ல. உணவு மூலமாகவும் அதனை பராமரிக்க வேண்டும். காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் அல்லது ஊறவைத்து தோலுறித்த பாதாம் சாப்பிடலாம். அதன் பிறகு காலை சிற்றுண்டி எடுத்துக் கொள்ளலாம். இதை முறையாக கடைப்பிடித்தாலே பாதி பிரச்னை குறையும். ஆப்பிள், வாழைப்பழம் அல்லது கொய்யா இந்த மூன்று பழங்களில் ஏதாவது ஒன்றினை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அல்லது மூன்றையும் சேர்த்து சாலட்டாகவும் சாப்பிடலாம்.

பழங்களை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். வெயில் காலத்தில் வெள்ளரியும், மழை மற்றும் குளிர் காலத்தில் பேரீச்சை சாப்பிடலாம். அனைத்து காய்கறி மற்றும் கீரை வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் மீன், சிக்கன் எடுத்துக் கொள்ளலாம். தயிர் பித்தத்தை ஏற்படுத்தும் என்பதால் இரவில் தவிர்க்கவும்.

ஆட்டுக்கால் சூப்பில் மிளகு அதிகம் சேர்த்து சாப்பிட்டால், எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தும். பூண்டை தட்டி, மெல்லிய பருத்தி துணியில் கட்டி, அரை டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து அதில் இந்த பூண்டை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். இது உடலில் உள்ள திசுக்களை பலப்படுத்தும். தலைமுடிக்கு இரும்பு மற்றும் சிங்க் அவசியம். இவை பேரீச்சை, கருப்பு உலர்ந்த திராட்சை, நெல்லிக்காயில் உள்ளது. தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட மாதம் ஒரு முறை நம் வீட்டை சுத்தம் செய்வது போல் நம்முடைய உடலையும்  டீடாக்ஸ் செய்வது அவசியம். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மட்டுமல்ல சருமம் மற்றும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் நீத்து.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்