ஆரோக்கியம் மேம்படுத்தும் சூப் மற்றும் ரச வகைகள்!
2022-08-16@ 17:58:51

நன்றி குங்குமம் தோழி
வெயில் குறைந்து இப்போது திடீர் திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று அதிகமாகும் நிலையில் இப்போது மழையும் சேர்ந்து இருப்பதால், வைரல் தொற்று அதிகமாகும் நிலை உள்ளது. இந்த தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தினமும் ஒரு சூப் மற்றும் ரச வகைகளை பற்றி தோழியருக்காக சமையல் குறிப்பு அளித்துள்ளார் சமையல் கலைஞர் வசந்தா.
இஞ்சி ரசம்
தேவையானவை:
இஞ்சி- 10 கிராம்,
புளி- எலுமிச்சை அளவு,
நாட்டு தக்காளி- 1,
உப்பு,
மஞ்சள் தூள்- சிறிது.
இடிப்பதற்கு:
தனியா- 1½ ஸ்பூன்,
சீரகம்- ½ ஸ்பூன்,
மிளகு- 10,
சிவப்பு மிளகாய்- 1,
உரித்த பூண்டு- 5,
தாளிக்க-
எண்ணெய்,
கடுகு.
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். தண்ணீர் விட்டு மஞ்சள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். வெந்ததும் கரைத்த புளி, பிசைந்த தக்காளி, உப்பு சேர்த்து கொதித்த பின் இடித்ததைப் போட்டு கொதி வந்த உடனே எண்ணெயில் கடுகு தாளித்துப் போட்டு சுடச்சுட சாதத்தில் சாப்பிட சளி, இருமல் குறையும்.
தூதுவளை ரசம்
தேவையானவை:
தூதுவளை கீரை - 1 கைப்பிடி,
ஓமவல்லி - 2,
உரித்த பூண்டு- 10,
உரித்த சின்ன வெங்காயம்- 5,
மிளகு- ½ ஸ்பூன்,
சீரகம்- 1 ஸ்பூன்,
தக்காளி- 2,
புளி- எலுமிச்சை அளவு,
சிவப்பு மிளகாய்- 2,
உப்பு,
எண்ணெய்- தேவைக்கு,
எண்ணெய்,
கடுகு,
பெருங்காயத்தூள்- தாளிக்க.
செய்முறை:
தக்காளியைப் பிசைந்து புளிக்கரைசலுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றவும். மிளகு, சீரகம், மிளகாய் இடிக்கவும். பின் அதில் பூண்டு, வெங்காயம், தூதுவளை சேர்த்து இடிக்கவும். (மிக்ஸியிலும் பொடிக்கலாம்). புளிக்கரைசலில் உப்பு சேர்த்து கொதித்ததும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்ததைப் போடவும். கொதி வந்ததும் எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி சுடச்சுட சாதத்தில் சாப்பிட ஜுரம், சளி, இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முட்டைக்கோஸ் சூப்
தேவையானவை:
முட்டைக்கோஸ் நறுக்கியது- 1 கப்,
இஞ்சி- 1 துண்டு,
மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்- சிட்டிகை,
உப்பு- தேவையானது.
செய்முறை:
கோஸுடன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதற்கு மேலே 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இஞ்சி தட்டி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்த பின் உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். இஞ்சித் துண்டை எடுத்து விட்டு சுடச்சுட குடிக்கலாம். வடிகட்டியும் குடிக்கலாம். தூங்கும் முன் குடித்தால் சளி குறையும்.
எலுமிச்சை ரசம்
தேவையானவை:
வேகவைத்த துவரம் பருப்பு - கால் கப்,
சிவப்பு மிளகாய்- 2,
பச்சைமிளகாய்- 2,
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை,
கரகரப்பாக பொடித்த மிளகு,
சீரகம்- 1 டீஸ்பூன்,
உப்பு,
பெருங்காயத் தூள்,
கடுகு- தாளிக்க,
எலுமிச்சம் பழம்- 1,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை:
வெந்த பருப்போடு எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும். பின் கடுகு தாளித்துக் கொட்டி பெருங்காயம் சேர்த்து கொதித்தவுடன் இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். இறக்கியவுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை கிள்ளி போடவும். இதை சூடாக அருந்தலாம். சூடான சாதத்திலும் கலந்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி-சத்து உள்ளது. எதிர்ப்பு சக்தி நிறைந்த ரசம் இது.
சுண்டைக்காய் சூப்
தேவையானவை:
பச்சை சுண்டைக்காய்- கைப்பிடி அளவு,
உரித்த சின்ன வெங்காயம்- 4,
பூண்டு- 2 பல்,
மிளகு- 4,
பயத்தம் பருப்பு- 1½ ஸ்பூன்,
உப்பு,
மஞ்சள் தூள்,
எண்ணெய்- 1 டீஸ்பூன்.
செய்முறை:
சுண்டைக்காயை இடித்து நன்கு கழுவி வடிகட்டவும். அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெயை சூடாக்கி சுண்டைக்காய், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பருப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து அரைத்ததையும் கலந்து குக்கரில் விசில் விட்டு வைக்கவும். பின் நன்கு வெந்ததை மசித்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு சூடாக்கி கிண்ணங்களில் ஊற்றி குடிக்கவும். சூப்பராக இருக்கும்.
காளான் சூப்
தேவையானவை:
காளான்- 1 கப்(பொடியாக நறுக்கியது),
இஞ்சி,
பூண்டு பேஸ்ட்- ¼ டீஸ்பூன்,
புதினா,
மல்லி- 1 டீஸ்பூன்,
சோளமாவு- 1 டீஸ்பூன்,
வெண்ணெய்- உப்பு,
மிளகுத் தூள் தேவையானது.
செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து கொதித்ததும், வடிகட்டவும். வாணலியை சூடாக்கி வெண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி வதக்கி சோளமாவை சேர்த்து கிளறி, மீதி சோளமாவை நீரில் கலந்து கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு வேகவைத்த காளானை சேர்த்து உப்பு, மிளகுத் தூள், புதினா, மல்லி தூவி குடிக்கலாம். காளான் சூப் ரெடி.
காய்கறி சூப்
தேவையானவை:
பீன்ஸ்,
கேரட்,
முட்டைக்கோஸ்- 1 கப்(நறுக்கியது),
தக்காளி- 2,
மிளகுத் தூள்- ¼ டீஸ்பூன்,
உப்பு தேவையானது.
செய்முறை:
கொடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். நறுக்கிய காய்கறிகள், தக்காளி போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். பின் ஆறியதும் தண்ணீர் வடித்து விட்டு காய்கறியை மிக்ஸியில் நைசாக அரைத்து, அரைத்த விழுதுடன் வடித்த தண்ணீரைச் சேர்த்து லேசாக சூடு படுத்தி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூடாக குடிக்கவும். சத்துக்கள் நிறைந்த சூப் இது.
கேரட், இஞ்சி சூப்
தேவையானவை:
கேரட்- 2, இஞ்சி- 1 துண்டு,
கருப்பு மிளகுத்தூள்,
எலுமிச்சை ஜூஸ்- 1 டீஸ்பூன்,
உப்பு,
கொத்தமல்லி- தேவையானது,
பூண்டு- 2 பல்.
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, கேரட் துருவல், இஞ்சி துருவல் போட்டு வதக்கவும். பின் நீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கி இஞ்சியை எடுத்துவிட்டு, மீதி உள்ள கலவையை விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பண்ணி (கொதிக்கக்கூடாது). தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சை ஜூஸ் கலந்து கொத்தமல்லி இலை தூவி குடிக்கவும்.
முருங்கைக்கீரை சூப்
தேவையானவை:
முருங்கை இலை- 2 கப்,
கேரட் துருவல்- அரை கப்,
பெரிய வெங்காயம்- 2,
இஞ்சி துண்டுகள்- 2,
பூண்டு- 2 பல்,
மிளகுத்தூள்- 1 ஸ்பூன்,
சீரகம்- 1 ஸ்பூன்,
மல்லி இலை- 1 டீஸ்பூன்,
நெய்- 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள்- சிறிது.
செய்முறை:
முருங்கை இலையை நறுக்கவும். பெரிய வெங்காயம், இஞ்சியை நறுக்கி, கேரட் துருவல், பூண்டு சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டு முருங்கை இலை, சீரகம் சேர்த்து லேசாக வதக்கி இதனுடன் வேகவைத்த பொருட்களை ஒன்றாக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வடிகட்டிய நீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரை சூப் தயார்.
கருந்துளசி பானம்
தேவையானவை:
கருந்துளசி- கைப்பிடி அளவு,
வெல்லத் துருவல்- 5 டீஸ்பூன்,
இஞ்சி- 1 துண்டு,
எலுமிச்சம்பழம்- 1,
ஏலக்காய்- 2 தட்டியது,
தேன்- 1 டீஸ்பூன்.
செய்முறை:
துளசியுடன் இஞ்சி சேர்த்து அரைக்கவும். வெல்லத் துருவலுடன் தண்ணீர் விட்டு ஏலக்காய்தூள், அரைத்த துளசி சேர்த்து சூடாக்கி நன்கு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு எலுமிச்சை சாறு விட்டு கலந்து சிறிது சிறிதாக குடிக்கவும். வெல்லத்திற்கு பதில் சுக்குக் கருப்பட்டியும் சேர்க்கலாம். குளிர்காலத்திற்கேற்ற பானம்.
பீட்ரூட் சூப்
தேவையானவை:
பீட்ரூட் - அரை கிலோ,
வெங்காயம் -1,
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி,
உருளைக்கிழங்கு - 1,
துருவிய எலுமிச்சம் பழத்தோல்- அரை கரண்டி,
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி,
உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை:
பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ளவும். எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத் தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும். புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
* சூப் குளிர்காலத்திற்கேற்ற வெது வெதுப்பூட்டும். ஆரோக்கியம் தரும்.
* சூப் வயிற்றுக்கு இதம் தரும். சைவம், அசைவம் இரண்டிலுமே தயார் செய்து சாப்பிடலாம்.
* சூப்பில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகமுண்டு.
* சூப் முழுமையான உணவுக்குரிய ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.
* சூப் ஊட்டச்சத்துள்ள உணவுகளில் முதன்மையானது. இதை அருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். சூப் தயாரிக்கும் முறையில் சத்துக்கள் வீணாக்காமல் சேமிக்கப்படுவதால் சூப் மற்ற உணவுகளை விட ஆரோக்கியமான உணவு. எலும்புகள், நரம்புகள் ஆரோக்கியத்துக்கு மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
தொகுப்பு : ப்ரியா
மேலும் செய்திகள்
அசத்தும் கொத்தவரை சமையல்
ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் Ready to Cook அவல்கள்
ஆரோக்கிய சாலட் உணவுகள்
மல்டி பர்பஸ் பவுல்பவுல்
சுவையான செட்டிநாடு சமையல்
கீரைகளை எவ்வாறு தேர்வு செய்யலாம்!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!