SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!

2022-08-16@ 17:55:21

நன்றி குங்குமம் தோழி

தனிநபர் கடன்

எஸ்.விஜயகிருஷ்ணன்


வாழ்க்கைத்தரமும், செல்வநிலையும் உயர்வதற்கு கடன் எந்த அளவிற்கு உதவுகிறது என்று விளக்கமளித்தார் ஒருவர். கடன் பெற்று நாம் வாங்கும் சொத்து கடனைத் திருப்பச் செலுத்தியவுடன் நமக்குச் சொந்தமாகிறது. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்!’ என்னும் மொழியை கடன் பெற்று வாழ்க்கையில் உயர்வதற்குப் பொருத்திப் பார்க்கலாம் என்பர்.  அதாவது கடன் தவணையை சிறுகச் சிறுகச் செலுத்தி கடன் மூலம் பெற்ற சொத்தினை, பயனைக் கொண்டு உயர்ந்து வாழலாம் என்பது பொருள்.

ஒரு வீட்டை சிறுகச் சிறுக இந்த வருடம் ஒரு அறை, அடுத்த வருடம் இன்னொரு அறை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அறை , ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மேல்தளம் அதன்பிறகு மற்றவை என்று சிறுகச் சிறுகக் கட்டினால் எந்தக் காலத்திற்கு வீடுகட்டி முடிப்போம்? கடன் பெற்று விரைவில் வீடுகட்டி கடன் தவணையை சிறுகச் சிறுக வங்கியில் திரும்பக் கட்டுவது என்பது செய்யக்கூடிய செயலாகும்.

ஒருவர் கடன்பெற விண்ணப்பிக்குமுன் அறிந்துகொள்ளவேண்டிய பல செய்திகள் உள்ளன. வங்கி ஏதோ கடன் தருகிறது, பெறுகிறோம் என்பதல்ல. அதன் நுணுக்கமான பல அம்சங்களை நாம் தெரிந்துகொண்டால் நமது பணச்சுமை பெருமளவு குறையும். மேலும் கடன்பெற்று திருப்பிச் செலுத்தும் முறையைத் தெளிவாக அறிந்து அதன்படி செயல்பட்டால் நமது சிபில் (CIBIL) என்னும் கடன்பெறும் தகுதி எண் /குறியீடு நன்றாக இருக்கும். நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்பில் அதன் நற்பெயருக்கு பணமதிப்பு உண்டு. அதுபோல தனிநபருக்கு கடன்பெறும் தகுதி எண் என்பது அவசியமான குறியீடாகும்.

சிறப்புத் திட்டங்கள்

சில வங்கிகளில் தனிநபர் கடன் முன்னரே அங்கீகரித்துவிடுவார். நமது தேவையின்போது கடன்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். அத்தகைய கடன் நமது கணக்கில் மிகைப்பற்றாக வழங்கப்படும். சாதாரணமாக இதற்கென்று ஒரு நடப்புக் கணக்கினைத் துவங்கவேண்டும். உதாரணமாக தனிநபர் கடன்தொகை ரூ.5 லட்சம் நமக்கு வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்.

நடப்புக்கணக்கு நமது பெயரில் தொடங்கப்பட்டு ரூ. 5 லட்சம் என்ற கடன் வரம்பு நிர்ணயிக்கப்படும். நமக்கு உடனடியாக ரூ 3 லட்சம்தான் தேவை என்றால் அந்தத் தொகையை மட்டும் நடப்புக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். பத்து நாட்களுக்குப் பிறகு, அதாவது 11 ஆம் நாள் ரூ.1 லட்சம் தேவையென்றால் அதைமட்டும் பெறலாம்.

ரூ.3 லட்சம் பெற்ற நாளிலிருந்து அதற்கு 10 நாட்களுக்கும், பதினோராம் நாள்முதல் ரூ.4 லட்சத்திற்கும் வட்டி கணக்கிடப்படும். மேலும் இருபதாம் நாள் நாம் ரூ.2.50 லட்சத்தை திருப்பி வங்கியில் செலுத்தி விட்டோமென்றால் செலுத்திய நாளிலிருந்து நிலுவைத்தொகை ரூ.1.50 லட்சத்திற்குத்தான் வட்டி கணக்கிடப்படும். மாத இறுதியில் வட்டி இவ்வாறு ‘நாள்’ கணக்கில் கணக்கிடப்பட்டு நிலுவையிலுள்ள அசலுடன் சேர்க்கப்படும்.. இந்த வகை தனிநபர் கடன் திட்டம் நமது வட்டிச் சுமையை பெருமளவு குறைக்கின்றது.  

வங்கிகள் தனிநபர் கடன் வழங்குதலில் பல சிறப்புத் திட்டங்கள் நமது தேவைக்கேற்ப அமைந்துள்ளன. வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வங்கிகள் தனிநபர் கடன் வழங்குகின்றனர். இந்த திட்டத்தை ஊக்கப்படுத்த இலவச அன்னியச் செலாவணி அட்டையினை கட்டணமில்லாமல் கடன் பெற்று பயணிப்பவருக்கு வழங்குகின்றனர்.

திருமணச் செலவுகள், மருத்துவச் செலவுகள், கல்விக்காகப் பெற்ற கடன் தொகை போதாமல் மேலும் தேவையிருக்க அதற்காகத் தனிநபர் கடன் பெறுபவர்கள் செலவு ரசீதுகளை வங்கிக்கு அனுப்ப வேண்டாம். வீடுகட்ட/ வாங்கக் கடன் பெறுபவர்கள், வணிகம் செய்யக் கடன் பெறுபவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் தொகை போதவில்லை என்றபோது சில நேரங்களில் வங்கி சற்று கூடுதலான வட்டியுடன் தனிநபர் குறுகியகாலக் கடனை அதே கடனாளிக்கு வழங்குகின்றன.

அவரவர் கடனைத் திரும்பிச் செலுத்தும் வரலாறு / முன்பதிவுகள் என்பதைப் பொறுத்து வங்கி மேலும் கடன் வழங்க முடிவு செய்து அனுமதிக்கலாம். பட்டாசுத் தொழிற்சாலை, பண்டிகைக்கால விற்பனையின் உயர்வை எதிர்பார்த்து அதற்கு முன்னர் சில வங்கிகளால் தனிநபர் சிறப்புக் கடன் அத்தகைய உற்பத்தியாளர்களுக்கு, வணிகர்களுக்கு வழங்கப்படுகிறது.

முன்னரே குறிப்பிட்டதுபோல ஓய்வூதியதாரருக்கு 70 வயது வரை ஒவ்வொரு மாதமும் பெறும் ஓய்வூதியத்திலிருந்து மாதத்தவணை செலுத்தும் விதமாக தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. அந்தக் கடனைப்பெற ஓய்வூதியதாரரின் வாரிசுதாரர் அல்லது மூன்றாம் நபர் பொறுப்புறுதி வழங்கவேண்டும்.

கடன் முழுவதும் கட்டி முடிக்கவேண்டிய காலத்திற்குமுன் கடன் நிலுவைத்தொகை முழுவதையும் வங்கியில் செலுத்திவிட்டால் அதற்கான வட்டி செலுத்தவேண்டுமா என்பது மட்டுமில்லாமல், கடன் வழங்கும் நிறுவனத்தின் திட்ட விவரங்களை பெற்று அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து நமக்கு நலம் பயக்கும் திட்டத்தில் கடன் பெறுவது நமது சுமையைக் குறைக்கும். கடனுதவி தேவைப்படுபவர்கள் தனது குடும்பத்தினரின் கணக்குகள் எந்த வங்கியில் உள்ளனவோ அதே வங்கியில் கடன் வசதிகளைப் பெறுவது நல்லது.

ஒருவர் ஏற்கனவே வீடுகட்ட கடனோ, வாகனம் வாங்கக் கடனோ, வணிகம் செய்யக் கடனோ, நகை அடமானக் கடனோ, கல்விக்கடனோ பெற்றிருந்தால் எந்த வங்கியில் கடன் பெற்றிருக்கின்றாரோ அதே வங்கியில் தனிநபர் கடன் பெறுவதுதான் சிறப்பு. நாம் பெற்ற மொத்த கடன்களுக்கான மாத தவணைத்தொகை நமது நிகர வருமானத்தில் 40 % க்குள் இருப்பது நல்லது. அவ்வாறு இருப்பதுதான் நமது வாழ்க்கையில் நிம்மதியான பணப்புழக்கத்திற்கு உதவும். பணமில்லை என்ற மனச்சுமை குறையும்.

தனிநபர் கடன்பெற விண்ணப்பிக்குமுன் ஏற்கனவே பெற்று நிலுவையில் கடன் இருந்து அதில் தவணைகள் தவறி இருந்தால் அவற்றை உடனே செலுத்த வேண்டும். அதன் பிறகு விண்ணப்பித்த நாளிலிருந்து கடன்தொகை எவ்வளவு நாட்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நமக்குத் தேவையான நாளுக்குள் பணம் கிடைக்கவில்லையென்றால் கடன் பெற்றுப் பயனில்லை.

மாத தவணையை குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்போ செலுத்திவிடுவது நல்லது. இல்லையென்றால் வட்டிமேல் வட்டி, தவணை தவறியத்தொகைக்கு அதிக வட்டி என்று நாம் ஈட்டும் பணம் வட்டிக்கட்டியே கரைந்துவிடும். தனிநபர் கடன் பெற்றபின் அதைத்திருப்பிச் செலுத்தும் அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச்சலுகை கிடையாது. அத்தகைய சலுகை வீடு வாங்க கடன்பெற்று அதைத்திருப்பிச் செலுத்தும் தொகைக்கு மட்டும்தான் உண்டு.

கல்விக்கடன்

அறிவாற்றலை ஒழுங்குப்படுத்தி வளர்க்கத்தான் ‘கல்வி’ என்னும் வடிவத்தோன்றல் பூமியில் செயலாக்கம் பெற்றது. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, புதிய, புதிய பாடத்திட்டங்கள் என்று வியக்கத்தக்க முன்னேற்றங்களை பல நூற்றாண்டுகளாக உலகம் அனுபவித்து வருகின்ற வேளையில் இன்றளவில் கல்வியைப் பெறுவதற்கான கட்டணம், செலவு என்பது ஏழை எளியவருக்கும், நடுத்தர வருமானமுள்ளவருக்கும் பெரும் சுமையாக உள்ளது.

உயர்கல்விக்கான கட்டணம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்கிற்குமேல் உயர்ந்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான கட்டணம் இமயமலை என்றால் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் வானுயரம் என்றாகிவிட்டது. உயர்கல்வி கற்பது என்பது இன்று ஒரு அடிப்படைத் தேவையென்றானதால் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி தன் பிள்ளையை படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு குடும்பத்தினரின் திடமான உறுதிமொழியாகிவிட்டது. பொதுவாக நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தினர் தமது வருவாயைவிட மூன்று மடங்கு பணத்தை தமது பிள்ளைகளின் கல்விக்காகச் செலவழிக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பள்ளியிறுதி வகுப்பு படித்து தேர்வு எழுதும்போது தன் பிள்ளை அதிக மதிப்பெண்கள் பெறவேண்டுமே என்ற கவலை. தேர்ச்சிபெற்றபின் விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடத்திட்டத்தில் இடம் கிடைக்கவேண்டுமே என்ற கவலை. இடம் கிடைத்த பிறகு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தவேண்டுமே  என்ற கவலை. அவ்வாறு கவலைப்படும் பெற்றோருக்கு கரம் கொடுப்பது வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் ஆகும்.

கல்லூரி / பல்கலைக்கழகத்தில்  செலுத்த வேண்டிய பணத்தை வங்கியிலிருந்து கடனாக பெற்றோர் மற்றும் மாணவரின் பெயரில் வழங்கப்படும். வேலை கிடைத்து முதல் மாத ஊதியம் வாங்கியதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தவணையை வங்கியின் கல்விக்கடன் கணக்கில் பணம் செலுத்தவேண்டும்.

பெரும்பாலான வங்கிகள் சிறப்பு முகாம்கள் நடத்தி கல்விக்கடன் வழங்குகிறார்கள். கல்விக் கடனுக்கென்று சிறப்பு வட்டிச் சலுகையும், கடன்பெற்று படிக்கும் காலத்தில் கடன் நிலுவைத் தொகைக்கான வட்டியை மட்டும் வங்கியில் செலுத்திவந்தால் போதும் என்றும் படித்து முடித்து வேலை கிடைத்தவுடன் மாத தவணைத் தொகையினை செலுத்தினால் போதும் என்ற வகையில் கல்விக்கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான பிணையம் / பொறுப்புறுதி / காப்பீடு / சொத்து அடமானம் ஆகியவற்றிலும் அரசாங்கம் சலுகைத் திட்டங்களை அறிவித்து கடன் வழங்கும் வங்கிகள் மூலம் செயல்படுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை யூஜிசி யின் (UGC) அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்க கல்விக்கடன் பெறலாம். வெளிநாட்டுப் படிப்பு என்றால் படிக்கத் தேர்வு செய்யும் பல்கலைக்கழகம் அந்தந்த வங்கிகளின் பட்டியல்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும். அரசாங்கம் ‘Vidhya Lakshmi Portal’ என்னும் இணையதளத்தை இயக்கி வருகிறது.

கல்விக்கடன் வேண்டுவோர் அந்த இணையதளத்தில் தன் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அதில் மாணவர்கள் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள ஏதாவது மூன்று வங்கிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து அதே இணையதளத்தின் மூலம் தெரிந்துகொண்டு அதன் வழிகாட்டுதல் படி வங்கியை அணுகலாம்.

நாம் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் வங்கி விண்ணப்பித்த ஒருமாத காலத்திற்குள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை காரணத்துடன் தெரிவிக்கவேண்டும். அனைவருக்கும் மனதில் முதலில் தோன்றும் கேள்வி கல்விக்கடனுக்கு வட்டி மானியம் / வட்டிக்குறைப்பு உள்ளதா என்பதாகும். தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வட்டி மானியம் உண்டு என்று அரசு அறிவித்துள்ளது.

இது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் பொருந்தும். மருத்துவ மாணவர்கள் எனில் படிப்பது இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக இருக்க வேண்டும். அதேபோல சட்டக்கல்வி பயில்பவர்கள் பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக இருக்க வேண்டும்.

ஒருவர் கல்விக்கடன் பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பது குறித்து பல வினாக்கள் உள்ளன

(1)  எந்தெந்த படிப்பிற்குக் கல்விக்கடன் கிடைக்கும்?
(2)  எவ்வளவு கடன் கிடைக்கும்..?
(3)  வட்டி எத்தனை சதவிகிதம்?
(4)  கடன்பெற கட்டணம் உள்ளதா?
(5)  எந்தெந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கு கல்விக்கடன் பெறலாம்?
(6)  மாணவர் தேர்ச்சிபெற்ற மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படுமா?
(7) கல்விக்கடன் பெற பிணையம் (Security) / பொறுப்புறுதி (Guarantee) / சொத்து அடமானம் (Property Mortgage) தேவையா?
(8)  பெற்றோரின் பணி /தொழில் / வருமானம் / இதர கடன்கள் குறித்த விவரம் வேண்டுமா ?
(9)  கடன்தொகை மொத்தமாக அல்லது தவணைமுறையில் கிடைக்குமா?
(10) திருப்பச் செலுத்தவேண்டிய கால அளவு எவ்வளவு?
(11) ஒவ்வொரு மாதமும் கல்விக்கடன் கணக்கில் செலுத்தவேண்டிய தவணைப் பணம் எவ்வளவு?
(12) என்னென்ன ஆவணங்கள் தேவை ?  இந்த ஒரு டஜன் கேள்விகளுக்கான விரிவான விடைகளை அடுத்த இதழில் காண்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

 • noru-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்