SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்க்ரீம் சேலை ஃபேஸ்புக் சேலை என பாரம்பரியத்தில் தனித்துவத்தை புகுத்திய ஐலா

2022-08-11@ 17:52:13

நன்றி குங்குமம் தோழி

பெரும்பாலும் தற்போதைய பெண்கள் சேலை உடுத்துவதையே தவிர்த்து வருகின்றனர். சேலை என்னதான் பல சிறப்பம்சங்களையும் நம் பாரம்பரிய பெருமைகளையும் சுமந்து நின்றாலும், அது பெண்களுக்கான நற்பண்புகள் என்று கூறப்படும் அடக்கம், நாணம் போன்றவற்றோடு தொடர்புப்படுத்தி அதை ஒரு வித அடக்குமுறையாக இந்த சமூகம் கையாளுவதால், பெண்கள் அறிந்தோ அறியாமலோ தங்களுக்கு எதிரான அடுக்குமுறையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சேலையையும் சேர்த்து தவிர்த்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பெண்கள் அதே சேலையை தற்போது பெண் சுதந்திரத்தையும், பெண் முன்னேற்றத்தையும் பறைசாற்றும் விதத்தில் புதுமையுடன் அணிந்து அழகு பார்க்கின்றனர். இது ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாக மாறிவிடாமல், நம் பாரம்பரிய பட்டுச் சேலைகளின் கலைநயத்தையும் கற்பனையையும் பெருமையையும் தாங்கி நிற்கும் விதத்தில் சமீபத்தில் பெண்களின் கவனத்தை ஐலா (Iyla) நிறுவனம் வசியப்படுத்தி வருகிறது. இந்த நவீன பட்டுச் சேலை கடையின் நிறுவனரும் உரிமையாளருமான சுபா சுப்ரமணியத்திடம் பேசினோம்.

சுபா சுப்ரமணியன் காரைக்குடியில் தன் கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர், ஐ.டி நிறுவனத்தில் ஐந்தாண்டுகளும் கத்தார் ஏர்வேஸில் மூன்றாண்டுகளும் பணிபுரிந்துள்ளார். ‘‘கணவருக்கு போட்டோகிராபியில் ஆர்வம் அதிகம். சொந்தமாக போட்டோகிராபி ஸ்டுடியோ ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் நானும் அவரும் கத்தாரில் எங்களுடைய வேலையை துறந்து காரைக்குடிக்கு வந்து செட்டிலாகிட்டோம்.

என் கணவருக்கு போட்டோகிராபி துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு முறை கொரோனா லாக்டவுனில் அவருடைய ஒரு ப்ராஜெக்ட்டுக்கு நான் மாடலாக சேலைக் கட்டி போஸ் கொடுத்தேன். அந்த புகைப்படங்கள் பட்டுச் சேலை விற்பனையாளர்களுக்கு பிடிக்க அவர்கள் என்னை தங்கள் நிறுவனத்தின் மாடலாகும் வாய்ப்பை எனக்கு கொடுத்தனர்.  

சுமார் இரண்டாண்டுகள் மாடலிங் துறையில் தான் இருந்தேன். அதிலும் குறிப்பாக பட்டுச் சேலைக்கான மாடலிங் மட்டுமே செய்து வந்தேன். அந்த காலக்கட்டத்தில் தான் எனக்கு சேலைகள் மீதான விருப்பமும் அதன் சிறப்பம்சங்களும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. இந்த மாடலிங் துறையில் ஈடுபடுவதற்கு முன் வரை எனக்கு புடவை வாங்குவதிலோ, புடவை அணிவதிலோ பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை.

ஆனால் மாடலிங் செய்யும் போதும் விதவிதமான சேலைகள் உடுத்தும் போதும் அதன் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஒவ்வொரு சேலைக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் பெருமையும் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. மற்ற ஃபாஸ்ட் ஃபேஷன் உடைகளைப் போல இல்லாமல் ஒரு பட்டுச் சேலை வழி வழியாக ஒரு குடும்பத்தில் காலத்தை தாண்டியும் அந்த வீட்டு பெண்களுக்கு அழகுச் சேர்த்துக் கொண்டே வரும்.

ஒரு கட்டத்தில்நானே நிறைய சேலைகளை வாங்கி உடுத்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் புதிய டிசைன்களை தேடும் போதெல்லாம் இவ்வளவு அழகான இந்த பட்டுச் சேலைகள் இன்னும் கொஞ்சம் புதுமையான டிசைன்களில் வந்தால் நன்றாக இருக்குமேன்னு தோணும். ஆனால் அப்படி ஒப்பற்ற டிசைன் செய்பவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். பலரும் நடுத்தர வயது பெண்கள் இந்த மாதிரி டிசைன்கள் வண்ணங்களை தான் அணிவார்கள் என்ற முடிவுடன் பழைய வடிவங்களை பின்பற்றுவதாக எனக்கு தோன்றியது.

அதனால் புதிய வண்ணங்கள், டிசைன்களை அடிப்படையாக கொண்ட உயர்ரக பட்டுச் சேலைகளை தயாரிக்கும் பணியில் நானே இறங்க முடிவு செய்தேன். இதற்கு என் கணவரும் குடும்பத்தாரும் முழு ஒத்துழைப்பை கொடுத்தனர். ஆரம்பத்தில் நானும் என் குடும்பத்தினரும் சேர்ந்தே இந்த நவீன பட்டுச் சேலைகள் டிசைன் செய்யும் பணியில் ஈடுபட்டோம். ஒவ்வொருவரும் நின்று கவனிக்கும் சேலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். என் மகளின் பெயரான ஐலாவையே நிறுவனத்திற்கும் வைத்தேன்.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பெண்கள் தங்கள் திருமணத்திற்கான பட்டுச் சேலைகளைக் கூட ஆன்லைனில் வாங்க ஆரம்பித்ததால், ஆன்லைன் மூலமாகவே இந்த பட்டுச்சேலை விற்பனையை தொடங்க முடிவு செய்தோம். பொதுவாக அனைவரும் உடைகள் மூலமாகத்தான் தங்களை வெளிப்படுத்திக்கொள்வர். அப்படி இருக்கும் போது நீங்கள் உடுத்தும் சேலையும் உங்கள் ஒவ்வொருவரின் கதையை சொல்ல வேண்டும் என்பதற்காக இது வரை யாரும் முயற்சி செய்யாத டிசைன்களை கொண்டு வர முடிவு செய்தோம்.

சிறுத்தை தோல் அச்சிடப்பட்ட உடைகளை டி-ஷர்ட்களிலும், கவுன்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அந்த டிசைனை சேலையில் நெய்து உருவாக்கிய போது, அது இளம் பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல பாப்சிகல் ஐஸ்க்ரீம் சேலை, சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் லோகோக்கள் கொண்ட சேலை, கிருஷ்ணன் சின்ன வயதில் வெண்ணெய் திருடி சாப்பிட்டு குறும்பு செய்த கதையைச் சொல்லும் சேலை, யானையும் மரமும் சேர்ந்த சேலை, நியூஸ்பேப்பர் சேலை, சிட்டுக்குருவி சேலை என மிகவும் வித்தியாசமான தனித்துவமான சேலைகளை வடிவமைத்துள்ளோம்.

இளம் பெண்கள் ஏற்கனவே விரும்பி அணியும் டிசைன்களை அப்படியே சேலையிலும் நாங்கள் வடிவமைத்ததால், அதை இளம் தலைமுறையினர் விரும்பி அணிய ஆரம்பித்தனர். எங்களிடம் எப்போதுமே லிமிடெட் கலெக் ஷன்ஸ் தான் இருக்கும். ஒரே டிசைனில் குறைவான சேலைகளை தான் வெளியிடுவோம். ஆனால் ஒவ்வொரு நாளும் புதிய டிசைன்கள் எங்களுடைய பக்கத்தில் வந்துகொண்டே இருக்கும்.

ஐலா ஆரம்பித்த ஆறே மாதத்தில் இதுவரை 250 விதமான தனித்துவம் மிக்க சேலைகளை வெளியிட்டிருக்கிறோம். நீங்கள் எங்களிடம் இருந்து ஒரு சேலை வாங்கினால் அதே சேலையை இன்னொரு பெண் அணிந்து உங்கள் முன் தோன்றுவது மிகவும் அரிது. அந்த சேலை உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற தனித்துவமான உணர்வை தரும். இந்த உணர்வை அனைத்து பெண்களும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் தினமும் ஒரு புதிய டிசைன் சேலையை வடிவமைத்து கொடுக்கிறோம்.

நாங்கள் கஸ்டமைஸ்ட் சேலைகள் செய்வது கிடையாது. ஆனால் சில சமயம் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொதுவான சில வடிவங்களை சேலைகளில் நெய்து கொடுப்போம். ஒரு முறை பெண் ஒருவர் தன்னுடைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒரு வித்தியாசமான சேலையை வடிவமைக்க சொன்னார். அவருடைய மகனுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்பதால், ஐஸ்
க்ரீம் சேலையை உருவாக்கி கொடுத்தோம். இது போல மிகவும் தனிப்பட்ட சேலையாக இல்லாமல் மற்றவர்களுக்கும் பொதுவான சில கஸ்டமைஸ்ட் சேலைகளை செய்து கொடுத்திருக்கிறோம். தாமரை மலர், அல்லி மலர், தாமரை மொட்டு சேலைகள் எங்க கலெக்‌ஷனில் மிகப் பெரிய ஹிட்.

காஞ்சிபுரம் மற்றும் ஆரணியில் இருக்கும் நெசவாளர்கள் ஒவ்வொரு சேலையையும் கையாலேயே நெய்து கொடுக்கிறார்கள். ஒரு சேலையை விற்பதுடன் எங்கள் வேலை முடியாது. நாங்கள் உருவாக்கிய சேலையை பெண்கள் தங்கள் குடும்பத்தில் காலம் காலமாக பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அந்த சேலையை ஒரு காட்டன் பைக்குள் வைத்து அதை ஒரு கப்பா பாக்ஸில் (கார்ட்போர்ட் பாக்ஸ்) பேக் செய்து கொடுக்கிறோம்.

பொதுவாக பெண்கள் அலமாரியில் சேலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மடித்து வைக்கும் போது சேலையின் ஜரி உரசுவதால், அது கருத்து போய்விடும். அதனால் ஒவ்வொரு சேலையையும் இது போல காட்டன் பையில் வைத்து உள்ளே அடுக்கும் போது, பட்டுச்சேலைகளை தலைமுறை தலைமுறையாக பாதுகாக்க முடியும்.

பொதுவாக ஆடம்பர துணி நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் லோகோவை உடைகளில் அச்சிடுவார்கள். ஐலாவின் தனித்துவமான சேலைகளை உடுத்தும் பெண்கள் ஒவ்வொருவருமே செலப்ரிட்டி தான் என்பதால் கேர்ள் பவர்/ஐலா போன்ற வாசகங்கள் அடங்கிய டிசைனர் பின்களையும் சேலையுடன் கொடுக்கிறோம். பெண்கள் அந்த பின்னை சேலையிலும் அணிந்து கொள்ளலாம், அல்லது தங்களுடைய ஹாண்ட் பேக்கில் கூட மாட்டிக்கொள்ளலாம்” என்ற சுபாவின் சேலைகளை அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், கத்தார் என இந்தியாவைத் தாண்டி கண்டம் விட்டு பெண்கள் விரும்பி வாங்குகின்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்