SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்கி!

2022-08-04@ 17:07:10

நன்றி குங்குமம் தோழி

பாலியல் குற்றம் ஒன்றில் கைது செய்யப்பட்ட தன்னுடைய அப்பாவை மீட்க போராடும் மகளின் கதைதான் கார்கி. ரஷ்யாவின் புகழ்பெற்ற நாவல் ‘தாய்’. ஏழ்மையான நிலையில் வாழும் குடும்பத்தில் மகனை தவிர வேறு எதையும் அறியாத தாயும் சமூகத்தை மாற்ற துடிக்கிற மகனும் என விரியும் நாவலில் குற்றம் ஒன்று செய்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனை தனியாளாக நின்று நீதி கேட்டு போராடும் கதை தான் தாய் நாவலின் மையக்கரு. தாய் நாவலின் மையக்கருவும் கார்கி படத்தின் மையக்கருவும் ஒன்று போலவே இருப்பதால்  இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் தாய் நாவலை எழுதிய மாக்சிம் கார்கியின் பெயரை இந்த படத்திற்கும் ‘கார்கி’ என்று வைத்துள்ளார்.

ஒன்பது வயது சிறுமி நான்கு வடமாநில நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அவர்கள் அடையாளம் கண்ட நிலையில் ஐந்தாவதாக ஒரு நபரும் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. அவர் அந்த அப்பார்மென்டின் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் 60 வயதான பிரமானந்தா என்பவர். அவரின் மகள் சாய்பல்லவி. பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைப் பார்த்து வருகிறார். மாலையில் டியூஷனும் எடுக்கிறார்.

அவரின் அம்மா மாவு அரைத்து விற்பனை செய்து வருகிறார். மிகவும் சாதாரண நடுத்தர குடும்பம். அப்பா எப்போதும் பெண்களுக்கு ரோல் மாடல் என்பதால், அவர் மேல் தவறாக பழி சுமத்தியுள்ளனர் என்பதை அறிந்து வழக்கறிஞர் காளி வெங்கட்டின் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகுகிறார். தன் தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாரா? அந்த ஐந்தாவது நபர் யார்? அவருக்கும் தண்டனை வழங்கப்பட்டதா என்பது தான் கதை.

சாய்பல்லவி படத்தை ஒற்றை ஆளாக தூக்கி சுமந்துள்ளார். நடுத்தர குடும்பத்தின் பெண் கதாபத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தி போகிறார். அழுகை, கோபம், மகிழ்ச்சி, துக்கம், விரக்தி, பிடிவாத குணம், என சகல உணர்வுகளிலும் படத்தோடு ஒன்றி போயிருக்கிறார். மகள்களுக்கு முதல் கதாநாயகன் எப்போதுமே தந்தைதான். அந்த தந்தைகளின் வலிகளை நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்கள்  எல்லா விதத்திலும் கார்கி கதாப்பாத்திரத்தோடு பொருத்தி பார்க்க முடியும்.

நடுத்தர குடும்பத்தில் உள்ள பொருளாதார பிரச்னை, அதிலும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிற வீட்டில் எல்லா பொறுப்புகளையும் ஒரு பெண் நிர்வகிக்கும் போது எதையெல்லாம் தியாகம் செய்து ஒவ்வொரு செலவையும் பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறார் என பேசாமல் காட்சிகளாகவும் குறியீடுகளாகவும் காட்டப்பட்டிருக்கிறது. கடுமையான நெருக்கடியில் வாழும் பெண்களின் துணிச்சல் அசாத்தியமானது. தாங்கள் சரி என நம்பும் ஒன்றிற்காக  எந்த ஒரு இடத்திலும்  துணிச்சலாக பேசுபவர்கள், உலகமே எதிர்க்கும் ஒரு விஷயத்திலும் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்து போராடக்கூடியவர்கள் என்பதற்கான உதாரணம் கார்கியின் கதாப்பாத்திரம்.

படத்தில் நீதிபதியாக திருநங்கை டாக்டர் சுதா  என்பவரை அமர்த்தியிருப்பது தமிழ் சினிமாவின் அடுத்தப்படி. சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் திருநங்கைகள் கதாப்பாத்திரங்கள் ‘நாங்க படிச்சிருக்கோம். ஆனா வேலை கிடைக்கல, யாரும் வேலை தரமாட்டேங்கிறாங்க’ என்பது போலான வசனங்களை பேசி திருநங்கைகள் மீது கரிசனத்தை மட்டுமே ஏற்படுத்தி வந்தது. உச்சபட்ச அதிகாரத்தை கொண்டவராக நீதி சொல்லும் நீதிபதியாக உட்கார வைத்திருப்பது சிறப்பு.

அதே சமயம் அவர்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் அவர்களின் அடையாளத்தினால் அவர்கள் மீது எப்படியெல்லாம் தாக்குதல்கள் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த திருநங்கை கதாப்பாத்திரத்தை வடிவமைத்து திருநங்கைகள் மீது சமூகம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை உடைத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன்.

வழக்கறிஞராக வரும் காளி வெங்கட்டின் நடிப்பிற்கு சரியான தீனி இந்தபடம். தனக்கு இருக்கிற குறைபாட்டால் தாழ்வு மனப்பான்மையோடு வாழும் மனிதன் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வரும் துணிச்சலை அனாயசமாக வெளிப்படுத்தி நடித்து இருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் அழுத்தமான இசை படத்தினை மேலும் உயர்த்தியுள்ளது.
அன்றாட பிரச்சனைகளுக்கு அல்லல்படும் பெண், முதல் முறையாக நீதிபதியான  திருநங்கை, பேச்சு தடுமாற்றம் உள்ள ஆண் இவர்கள் மூவரும் தங்களுக்கான உரிமைகளை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேட்கும் போது அவர்களின் அந்த அடையாளம் மற்றும் இயற்கையாக அவர்களிடம்  ஏற்பட்ட குறைபாட்டினை அவர்களை சாதாரண மனிதர்களாக மதிக்காமல் உதாசீனப்படுத்துவதை துணிச்சலோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.  

சிறார் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் நாம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை. பெண்கள் ஏதாவதொரு வகையில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி
கொண்டேயிருக்கிறார்கள். பாலியல் சீண்டல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மோசமாக பார்ப்பதும், இனி இந்த சமூகத்தில் அப்பெண் வாழ முடியாது என்ற நிலை தான் இன்றும் நீடிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை ஒதுக்குவதாலும் சமூகத்தில் சமமாக மதிக்காததும் குற்றம் செய்பவர்கள் தொடந்து குற்றம் செய்யவும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்லாமல் இருப்பதற்கும் காரணமாக அமைகிறது.  அவர்களுக்கு இந்த படம் ஒரு சவுக்கடியினை வழங்கியுள்ளது.

அதே வேளையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சமமாக குற்றம் செய்தவரின் குடும்பத்தினரின் மீதும் வன்முறைகளும் ஒதுக்குதல்களும் நடக்கின்றன. குடும்பத்தினரும் அந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் என்ற எண்ணமே அதற்கு காரணம். ‘இந்த பிரச்சனை வெளியே தெரிவதற்குள் ஊரை விட்டு சென்று விடுங்கள்’ என்று காவல்துறையினர் சொல்வது, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் குற்றம் செய்தவரின் குடும்பத்தை ஒதுக்கி வைப்பது போன்ற செயல்கள் குற்றம் செய்தவரின் குடும்பத்தை எவ்வாறு உளவியலாக பாதிக்கும் என்பதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் செய்தவருக்கு அவரின் குடும்பம் எப்போதும் ஆதரவு தரும் என்பது தான் மக்களின் மனநிலையாக உள்ளது.

யார் செய்யும் குற்றத்தையும் நியாயப்படுத்தி சொல்ல வேண்டியதில்லை. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதே போல் குற்றம் என்பதும் யாரொருவரும் செய்யக்கூடியதே. நம்முடன் நட்பான ரீதியில் பழகும் நபர் மற்றவர்களிடம் அப்படி இருப்பார் என்று நம்புவதுதான் மிகப்பெரிய முட்டாள்தனம். ஏனெனில் இங்கு அனைவரும் குற்றம் செய்பவர்களே. அந்த குற்றத்தை யார் மீது எங்கு நிகழ்த்துகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது அதன் தந்திரம். எல்லோரும் இங்கு சந்தேகப்படக்கூடியவர்களே. அந்த குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் நீதி தேவதைகளாக கார்கிகள் இருப்பார்கள்.       

தொகுப்பு: மா.வினோத்குமார்  

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்