SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுத்த நட்பு

2022-08-04@ 15:03:07

நன்றி குங்குமம் தோழி

எதிர்நீச்சல் ஜனனி மனம் திறக்கிறார்

‘மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப் தான்’... ‘என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்’... ‘ஜிகிரி தோஸ்து...’ இப்படி நட்பிற்கு முக்கியத்துவம் அளித்து பாடல்களை சினிமாக்களில் இடம் பெறச் செய்தாலும். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் என்பவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அம்மா, அப்பா, ஆசான் இவர்களிடம் இல்லாத ஒரு பிணைப்பு நண்பர்களிடம் உண்டு. நாம் சந்தோஷமாக இருக்கும் தருணத்திலும் சரி... துக்கமாக இருக்கும் போதும்.... எந்த நேரத்திலும் நமக்கு தோள் கொடுப்பது தோழமை தான்.

பொதுவாக ஆண்களால் மட்டும் தான் நட்பினை தொடர முடியும். பெண்கள் திருமணம், குடும்பம் என்ற பொறுப்பு வந்த பிறகு பழைய நட்பினை தொடர முடியாது என்று நினைக்கிறார்கள். பெண்களுக்கும் தனிப்பட்ட நட்பு வட்டாரம் இருக்கத்தான் செய்கிறது. அவள் அவளாக இருக்கும் தருணங்கள் நண்பர்களுடன் மட்டும் தான். அப்படிப்பட்ட அருமையான நட்பின் தருணங்களை இனி வரும் இதழ்களில் நம் சன் டிவி புகழ் நட்சத்திர நாயகிகள் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள். இந்த இதழில் ‘எதிர்நீச்சல்’ தொடரின் பெண்களின் செல்லமாக பவனி வரும் ஜனனி என்கிற மதுமிதா தன் நண்பர்களுடன் அடித்த லூட்டிகள், மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் பெங்களூர் பொண்ணு. எனக்கு ஒரு  அக்கா, தங்கை. நான் கொஞ்சம் சுட்டி. அதுவும் நண்பர்களுடன் இணைந்தால் என் சுட்டித்தனத்திற்கு அளவே கிடையாது. அதே சமயம் என் நண்பர்களை நான் ரொம்ப செலக்டிவ்வா தான் தேர்வு செய்வேன். ஒரு சில பெண்கள் எல்லாரிடமும் உடனே பழகிடுவாங்க. நான் கொஞ்சம் ஷை டைப் என்பதால் அவ்வளவு சீக்கிரம் பழக மாட்டேன். ஆனால் அதே சமயம் எனக்கான நண்பர்கள் அமைஞ்சிட்டா சைலன்டாவும் இருக்க மாட்டேன்.

முதன் முதலில் எனக்கு நட்புக்கான அர்த்தம் சொன்னவள் என் ஸ்கூல் தோழி வீணா. விவரம் தெரியாத சின்ன வயசு... எல்.ேக.ஜி படிக்கும் காலத்தில் என் கை விரலை அழகான நட்புடன் கைப்பற்றியவள் அவள். பத்தாம் வகுப்பு வரை நாங்க இருவரும் ஒன்னா தான் படிச்சோம். என்னை ரொம்ப நல்லா பார்த்துப்பா. எங்க வீட்டிலும் சரி நான் படிச்ச பள்ளியும் சரி ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஸ்கூல் முடிஞ்சா டியூஷன் அங்கிருந்து வீடு அப்படித்தான் இருப்பேன். நண்பர்களுடன் வெளியே தனியா வீட்டில் அனுப்ப மாட்டாங்க. எங்க இரண்டு பேரோட அதிக பட்ச சந்தோஷமே எங்க டியூஷன் சென்டர் பக்கத்தில் இருக்கும் சாட், பாஸ்ட்புட் கடைதான்.

அங்க தான் நானும் வீணாவும் டியூஷன் முடிச்சிட்டு அரை மணி நேரம் பானிபூரி, கோபி மஞ்சூரியன் சாப்பிட்டுக் கொண்டே அரட்டை அடிப்போம். அதற்காக தினமும் எல்லாம் போகமாட்டோம். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மட்டும் தான் நாங்க அங்க செல்ல எங்களுக்கு அனுமதி. ஸ்கூல் மற்றும் டியூஷன்ல நடந்த விஷயங்களை பற்றி கிண்டல் செய்து பேசிட்டு இருப்போம். அந்த நாட்கள் இப்பவும் என் மனசில் பசுமையா இருக்கு. பள்ளி படிப்புக்கு பிறகு வீணாவோட பெரிய அளவில் கான்டாக்ட் இல்லை. அவளுடன் ஏற்பட்ட அந்த நட்பு பாதியிலேயே மறைஞ்சிடுச்சுன்னு தான் சொல்லணும். இப்பதான் ஃபேஸ்புக், இன்ஸ்டான்னு எல்லாம் வந்திடுச்சுல்ல... கண்டிப்பா அவளை நான் தேடி கண்டுபிடிப்பேன்.

பள்ளி காலம் முடிந்து கல்லூரியில் கால் பதித்த போது... அந்த மூன்று வருடங்கள் என்னுடைய வாழ்வின் பெஸ்ட் பார்ட். என்னுடைய நண்பர்களை நான் தேடிப் பிடித்தேன்னு தான் சொல்லணும். என்னுடைய கல்லூரியில் நான் படிச்ச வகுப்பில் உள்ள அனைவருமே என் நண்பர்கள் தான் என்றாலும் அதில் லேகா, அஃப்தாப், அஃப்தாப்... இவங்க மூணு பேர் தான் என் பெஸ்ட் பெஸ்ட்டிகள். நாங்க படிக்கும் காலத்தில் அரசு பேருந்து தான் எங்க கல்லூரி வாகனம். என்னதான் தனியாக ஸ்கூட்டியில் பறந்தாலும், அரசு பேருந்தில் நண்பர்களுடன் பயணம் செய்யும் சுகமே தனிதான். எனக்கு இவங்க மூணு பேரின் அறிமுகமும் அங்கு தான் கிடைச்சது. முதல்ல லேகா தான் எனக்கு ஃப்ரண்டானா.

அவ நான் ஏறும் இரண்டு ஸ்டாப் தள்ளிதான் ஏறுவா. எல்லாரும் ஒரே வகுப்பு தான் என்றாலும், நான் ஆரம்பத்தில் அவளிடம் ரொம்ப பேசியது கிடையாது. பேருந்தில் தினமும் ஒரு புன்னகையுடன் ஆரம்பித்த எங்களின் நட்பு இப்போது பிரிக்க முடியாத அளவிற்கு பயணமாகிக் கொண்டிருக்கிறது. அவள் மூலமாகத்தான் எனக்கு இரண்டு அஃப்தாப்களையும் தெரியும். இதில் ஒரு அஃப்தாபைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இவளுக்கு ஃப்ரண்ட் என்பதால், பார்த்தா சிரிப்பேன்.

அவ்வளவுதான். ஆனால் இப்போது அவன்தான் என்னுடைய பாய் பெஸ்ட்டின்னு சொல்லணும். ஒரு முறை லேகாவும், அஃப்தாபும் என்னை இந்த கிறுக்கு  அஃப்தாபிடம் தனியா விட்டு விட்டு ஊருக்கு போயிட்டாங்க. இவன் கூடத்தான் நான் தினமும் பேருந்தில் பயணம் செய்யணும். அவன் செய்யும் கிறுக்குதனமான சேட்டைகளை முதலில் பார்க்கும் போது எனக்கு அவன் மேல வெறுப்பு வரும். ஆனால் அவனிடம் பழகிய பிறகு தான் அவனுடைய குழந்தைத்தனம் எனக்கு புரிய வந்தது. தினமும் எங்க கல்லூரி அருகில் இருக்கும் பானிபூரி கடைக்கு கூட்டிக் கொண்டு போவான். அங்க என் பேரில் அக்கவுன்ட் வச்சிட்டான். கிட்டத்தட்ட 1200 ரூபாய்க்கு அங்க பானிபூரி சாப்பிட்டு இருந்தோம். அவரோட கணக்கை  செட்டில் செய்ற வரைக்கும் அந்தப் பக்கமா போகும் போது எல்லாம் நான் என் முகத்தை மறைச்சிட்டே போவேன். அதைப் பார்த்து அவன் சிரிப்பான்.

பள்ளிக்கூடம் வரை வீட்டில் பொத்தி பொத்தி தான் என்னை வளர்த்தாங்க. கல்லூரிக்கு வந்த பிறகு தான் அம்மா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. சொல்லப்போனா பீட்சா, பர்கர், பாஸ்தா எல்லாம் நான் இவங்களோட தான் முதல் முறையா சாப்பிடவே பழகினேன். எங்களுக்கு தோணும் போது எல்லாம் பீட்சா சாப்பிடுவோம். அப்பறம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் நாங்க நால்வரும் கோவா போன அந்த தருணங்கள். கல்லூரி ஆரம்பித்த நாட்கள் முதல் நாங்க நால்வரும் எங்காவது டூர் போகணும்ன்னு பிளான் செய்வோம். ஆனால் ஒவ்வொரு முறையும் எங்களின் திட்டம் தவிடுபொடியாயிடும். கடைசி வருடம் எப்படியாவது போயே ஆகணும்ன்னு திட்டமிட்டோம். முதல்ல வீட்டில் பர்மிஷன் வாங்கணும்.

எங்க வீட்டில் பெங்களூருக்குள் எங்க வேணும்னாலும் போங்க... ஊருக்கு எல்லாம் தனியா அனுப்பமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க. லேகா... அஃப்தாப் (1 அண்ட் 2) எல்லாரும் வந்து தான் அம்மா, அப்பாவிடம் பேசி சம்மதிக்க வச்சாங்க. அங்க முதல் முறையா டிரக்கிங், பாராகிளைடிங் என ரொம்பவே என்ஜாய் செய்தோம். கோவாவில் பல இடங்கள் இருந்தாலும், எங்களுக்கு ரொம்பவே பிடிச்ச இடம் பீச்தான். ஒவ்வொரு பீச்சிலும் நாங்க போட்ட ஆட்டம் சொல்லி மாளாது.

இவங்க மூணு பேர் இல்லைன்னா... சமூகம் எப்படி இருக்கும். நம்மை எப்படி பார்க்கும். நாம எப்படி நடந்துக்கணும்... எனக்கு தெரிந்திருக்காது. என்னுடைய வாழ்க்கைக்கான பாடங்களை இந்த மூணு பேரால தான் கத்துக்கிட்டேன். இப்ப நான் சென்னையில் இருக்கேன். தினமும் பேசுவேன். மாதம் ஒரு முறை ஊருக்கு போகும் போது எல்லாம் நான் சந்திக்கும் முதல் நபர்கள் இந்த மூன்று பேர்தான்.

சென்னைக்கு நான் வந்து ஒரு வருஷமாச்சு. இங்கு எனக்கு யாரையுமே ெதரியாது. இங்க எனக்கு முதலில் ஷூட்டிங்கில் பரிச்சயமானது என்னுடைய மாமா பொண்ணா நடிக்கும் வைஷ்ணவி. ஷூட் போது நான் ரொம்பவே அமைதியா இருப்பேன். இவளைப் பார்த்த முதல் நாளே என்னை சிரிக்க வைச்சா. இவகூட நான் செட்டில் இருந்தா எப்போதும் சிரிச்சிட்டே தான் இருப்பேன். இங்க செட்டில் இருக்கிறவங்கள எல்லாம் கிண்டல் செய்றது தான் எங்க வேலையே.

எல்லாரும் சீனியர் ஆர்டிஸ்ட் என்றாலும் எங்க இரண்டு பேரையும் குழந்தையா தான் பார்ப்பாங்க. நான் இங்க தங்க வீடு தேடிய போது, அவ வீட்டை வாடகைக்கு தரதா சொன்னா. ஆனால் என்னால அப்ப போக முடியல. அப்புறம் அவ வீட்டில் ஒரு நாய்குட்டி இருக்கு. எனக்கு நாய்ன்னா ரொம்ப பிடிக்கும். அதோட விளையாடவே நான் அவ வீட்டுக்கு போக ஆரம்பிச்சேன். இப்ப அவ வீட்டிலேயே செட்டிலாயிட்டேன். இப்ப அவ வீட்டில் தான் தங்கி இருக்கேன். அவ வீட்டில எல்லாரும் என்னை அவங்க பொண்ணு போல பார்த்துக்கிறாங்க. எனக்கு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் நண்பர்கள் என்றாலும்... என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள்’’ என்றார் மதுமிதா.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்