SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதீத உழைப்பின் உன்னத பிம்பம்! கே.ஆர்.விஜயா

2022-08-03@ 17:52:47

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-102

திரை இசைக்குப் புதுவரவான வாணி ஜெயராமின் தேன் குரலில் ஒரு பாடல் 70களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் இடம் பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற அப்பாடல் ஆண், பெண் அனைவரையும் கிறங்க வைத்தது. அப்பாடலின் வழியாக நம் நினைவுகளில் என்றென்றும் நிறைந்திருப்பவர் புன்னகை அரசி. எவ்வளவோ பாடல்களுக்கு அவர் நடித்திருந்தாலும் இது மட்டும் ஸ்பெஷல், எவர்க்ரீன் பாடல்.

படத் தயாரிப்பாளரும், சுதர்சன் டிரேடிங் கம்பெனி உரிமையாளரும் ஃபைனான்சியருமான வேலாயுதம் நாயர் பல படங்களின் தயாரிப்புக்கு உதவியாகப் பண உதவி செய்தவர். ஏறக்குறைய 60 படங்களின் தயாரிப்புக்கு அவர்தான் ஃபைனான்சியர். பெரும் செல்வந்தர். அவர் ஃபைனான்ஸ் செய்து நடிகர் பாலாஜி தயாரிப்பாளராக மாறிய படம் ‘அண்ணாவின் ஆசை’.

பின்னாட்களில் ‘ரீமேக் கிங்’ என அறியப்பட்ட அவரால் முதலில் தயாரிக்கப்பட்ட இப்படமும் ஒரு ரீமேக் படம் தான். அசோக் குமார், தர்மேந்திரா, தனுஜா நடிப்பில் 1965ல் வெளியான ‘சாந்த் அவுர் சூரஜ்’ இந்திப் படத்தின் கதை. இது வெற்றி பெற்ற படம் என்பதால் அதனை மறு ஆக்கம் செய்ய முன்வந்தார் பாலாஜி. 1966 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, பாலாஜி, இந்தி நடிகர் அசோக்குமார் உட்பட பலரும் நடித்திருந்தனர்; கே.ஆர்.விஜயாவும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போதெல்லாம் வேலாயுதம் நாயர் வருவார். அங்கு நடித்துக் கொண்டிருந்த விஜயாவின் மீது அவருக்கு ஏற்பட்ட ஒருவித ஈர்ப்பு நாளடைவில் இருவருக்குமிடையே பரஸ்பரம் அன்பாகவும் காதலாகவும் மலர்ந்தது. ‘அண்ணாவின் ஆசை’ படம் இந்திப் படம் அளவுக்குப் போகவில்லை. ஆனாலும் பத்திரிகைகளின் பரவலான ஆதரவையும் மெலிதான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. படம் வெற்றி பெற்றதோ இல்லையோ, இப்படம் மூலம் வேலாயுதம் நாயர் - விஜயாவின் காதல் வெற்றி பெற்றது. இருவரும் 1966 ஆம் ஆண்டில் ரகசியமாகத் திருமணமும் செய்து கொண்டார்கள். விஜயா அதன் பின் இரண்டாண்டுகள் வரை எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

மூத்த மகளான விஜயாவின் உழைப்பை நம்பியே அம்மா, அப்பா, நான்கு சகோதரிகள், ஒரு சகோதரர் அடங்கிய அவரது பெரிய குடும்பம் இருந்தது. விஜயாவின் திருமணம் குடும்பத்தில் பெரும் புகைச்சலையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தியது. மூன்றாண்டுகளில் சம்பாதித்த அனைத்தையும் உதறி விட்டு, கட்டிய புடவையுடன் வெளியேறினார் விஜயா. தன் திருமணம் மற்றும் அதனால் எழுந்த பூதாகரமான பிரச்சனைகள் குறித்து சில ஆண்டுகளின் பின் பிரபல சினிமா இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் கே.ஆர். விஜயா,“அதுவரை நான் சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் என் குடும்பத்தினரிடம் விட்டு விட்டு, கட்டியிருந்த புடவையோடு மட்டுமே என் கணவர் வீடு புகுந்தேன்.

என் திருமணம் பற்றிப் பல கதைகள், வெளியுலகை விட வீட்டில் என் சுற்றத்தினர் அதை அழகாக விமர்சித்தார்கள். எனக்கு என் வீட்டில் என் குடும்பத்தினர் தந்த திருமண வாழ்த்து என்ன தெரியுமா? “நீ நல்லாயிருக்க மாட்டே... நாசமாத்தான் போவே...! இன்னும் எத்தனை நாளுக்கு இந்த வாழ்வு? கூடிய சீக்கிரம் அவரால் கைவிடப்பட்டுத் திரும்பி வரத்தான் போகிறாள்” எனக் கூறியவர்கள், என் ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்து, “ஜோதிடமும் அப்படித்தான் சொல்கிறது” என்று கூறித் தங்களுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அது மட்டுமா? கோவிலிலும் மாந்திரீகர்களிடமும் அவர்கள் நினைத்து வந்தது போல நடக்கப் பூசையும் பிரார்த்தனையும் நடத்தினர்.”‘பொம்மை’ - 1972 மே இதழ்.

அசாத்திய உழைப்பைச் செலுத்திய கடும் உழைப்பாளிகே.ஆர்.விஜயா அந்த நேரத்தில் மிகவும் பிஸியான நடிகையாக உச்சத்தில் இருந்தவர். அனைத்துக் கதாநாயகர்களுடனும் இணைந்து எல்லாவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய திறமையான நடிகையாகவும் இருந்தார். 1966 ஆம் ஆண்டில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா இரு படங்கள், தமிழில் 11 என மொத்தம் 15 படங்கள் அந்த ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் வெளியாகியிருக்கின்றன.

அவற்றில் பலவும் வெற்றிப் படங்கள். இதன் பிறகு 1968 வரை அவர் படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், முன்னதாக நடித்து முடித்திருந்த 15 தமிழ்ப் படங்களும், 3 மலையாளப் படங்களும் 1967 ஆம் ஆண்டிலும் வெளியாகியிருக்கின்றன. சிவாஜி கணேசனுடன் நடித்தவை 6 படங்கள்; எம்.ஜி.ஆருடன் ஒரு படம். இவை தவிர ஜெய்சங்கருடன் நடித்த பல படங்கள் என அத்தனையும் வெற்றியை வாரிக் குவித்தவை. 1968 ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் நடிக்க வருவதற்கு முன்பாக அந்த ஆண்டிலும் தமிழில் 3, மலையாளத்தில் 2, தெலுங்கில் 1 என 6 படங்கள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டாண்டுகளில் தேன்நிலவுக் கொண்டாட்டம், பிரசவம், ஓய்வு என்றிருந்தவர் அதற்கு முன்னதாகவே எந்த அளவுக்குக் கடுமையாக உழைத்திருந்தால் இவ்வளவு படங்கள் வெளியாகியிருக்கும் என்ற சிந்தனையே மலைக்க வைக்கிறது; ஒரு பதினேழு வயதுப் பெண்ணின் அசாத்திய உழைப்பில் விளைந்த சாதனையாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்
கிறது. உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவர் கே.ஆர்.விஜயா.

மீண்டும் திரைக்கு வந்து மின்னிய நட்சத்திரம்எட்டு மாதக் கர்ப்பிணியாகக் கணவர் வேலாயுதம் நாயருடன் ஸ்ரீலங்கா சென்றிருந்தபோது, அங்குள்ள ரசிகர் ஒருவர் இவர்கள் இருவரையும் புகைப்படம் எடுக்க, அது பத்திரிகைகளில் வெளியாகி இவர்களின் திருமணம் குறித்த செய்தி பரவலாக வெளியில் தெரிய வந்தது. குழந்தை பிறந்து ஓராண்டு காலம் வரையிலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மீண்டும் விஜயாவின் திறமையை மதித்து அவரைத் திரைப்படங்களை நோக்கி இழுத்து வந்த பெருமைக்குரியவர் தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர். முன்னதாக அவரது தயாரிப்பில்  எம்.ஜி.ஆருடன் நடித்த ‘தொழிலாளி’, ‘விவசாயி’ இரு திரைப்படங்களும் நன்கு ஓடிய வெற்றிப்படங்கள். மேலும், ‘காட்டுராணி’, ‘தாயும் மகளும்’, ‘கன்னித்தாய்’ படங்களிலும் நடித்திருந்தார். அதனால் தங்களின் அடுத்த படத்திலும் விஜயாவே நடிக்க வேண்டும் என சின்னப்ப தேவர் பிடிவாதமாக இருந்தார். தொடர்ந்தும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என வீடு தேடி வந்து நட்புரீதியான அழைப்பு விடுத்தார்.

ஆனால், விஜயாவுக்கு கணவர், குழந்தை, குடும்பம் என்பதைத் தாண்டி மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் எந்த ஆர்வமும் இல்லை. விஜயாவை மீண்டும் திரைப்படங்களில் நடிக்க சம்மதிக்க வைத்தவர் அவருடைய கணவர் வேலாயுதம் நாயர். ‘பணத்துக்காக நடிக்க வேண்டாம். வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதை விட, உனக்குத் தெரிந்த நடிப்புத் தொழிலைத் தொடர்ந்து செய். திரையுலகில் நல்ல வரவேற்பும், ஆதரவும் உனக்கு இருக்கிறது.

உன் திறமைகளை வீணாக்க வேண்டாம்’ என வேலாயுதம் நாயரும் வலியுறுத்தவே, விஜயா மீண்டும் திரையுலகில் நுழைந்தார். 1969 பிப்ரவரியில், ஜெய்சங்கருடன் இணைந்து நடித்த ‘அக்கா தங்கை’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அன்று தொடங்கிய அவரது திரையுலக மறு பிரவேசம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான பயணமாக இப்போது வரை தொடர்கிறது.

நடிகையானாலும் ஞாயிறு விடுமுறை வேண்டும்மீண்டும் நடிக்க வந்த விஜயா, அதுவரை திரையுலகம் காணாத, புதிய சில கண்டிஷன்களையும் சேர்த்தே கொண்டு வந்தார். மற்ற பெண்கள் அலுவலகப் பணிகளுக்குச் செல்வதைப் போல காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் படப்பிடிப்பில் பங்கேற்பது, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுத்துக் கொள்வது, படப்பிடிப்புகளுக்குச் செல்வதில்லை என்பதையெல்லாம் முதலில் ஆரம்பித்து வைத்தவர் விஜயா தான். அதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர் வேலாயுதம் நாயர். விஜயாவுக்கு இருந்த வரவேற்பினால், அதை எல்லாம் தயாரிப்பாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

வெளியூரில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கும் கூட சொந்த விமானத்தில் சென்று வரும் அளவுக்கு வசதியுள்ளவராகவும் அப்போது அவர் இருந்தார். அன்றைய பத்திரிகைகள் இது குறித்து வாய் பிளந்து வியந்து பக்கம் பக்கமாக எழுதியுள்ளன. திரைப்பட ஆய்வாளரும், ‘காட்சிப்பிழை’ திரைப்பட ஆய்விதழின் ஆசிரியருமான சுபகுணராஜன் அவர்கள், தன் இளம் வயதில் மதுரை ஏரோட்ராமில் ஒரு ரசிகராகக் காத்திருந்து கே.ஆர்.விஜயா சொந்த விமானத்தில் வந்திறங்கியதைப் பார்த்து வியந்தது குறித்தெல்லாம் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதியவர்.

குடும்பப்பாங்கான வேடங்களுக்கே முன்னுரிமை 1966 வரை கவர்ச்சி கலந்த நாயகியாகத் திகழ்ந்தவர், அதன் பின் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே பிரதிபலித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவருடனும் இணைந்து நடித்தவர், முன்னணி நாயகர்கள் அல்லாத பலருடனும் நடித்திருக்கிறார். நகைச்சுவை நாயகர்களான நாகேஷ், தேங்காய் சீனிவாசன் படங்களிலும் நாயகியாக நடித்தவர். சிவாஜியுடன் மட்டும் 32 படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலப் படங்களில் இணையாக மட்டுமல்லாமல், சகோதரி, மகள், நண்பனின் மனைவி, சகோதரன் மனைவி, ஒருதலையாகக் காதலிக்கப்பட்ட காதலி என பல வேடங்கள்.

கே.ஆர். விஜயாவின் பிற்காலப் படங்கள் பலவற்றிலும் சிவாஜியின் நாயகியாகவே தொடர்ந்தார். ஆனால், எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன், தொழிலாளி, விவசாயி, தாழம்பூ, நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன் என 6 படங்களில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரின் பிற்கால நாயகிகள் அனைவரும் கவர்ச்சியை முன்னிறுத்தி நடிக்க வைக்கப்பட்டார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

1970களுக்குப் பின் கதாநாயகியை முதன்மைப் பாத்திரமாக்கி முன்னுரிமை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கண்ணம்மா, வாயாடி, திருடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, கியாஸ்லைட் மங்கம்மா, மிட்டாய் மம்மி, அக்கா, ஜானகி சபதம், ஆயிரத்தில் ஒருத்தி, தாய் வீட்டு சீதனம், நாடகமே உலகம், அன்னபூரணி, மங்கலநாயகி என பல படங்களின் கதைகள் விஜயாவுக்காகவே எழுதப்பட்டவை. இவ்வகைப் படங்கள் ஓரளவு நல்ல வசூலையும் பெற்றுத் தந்தன.

மதுரை திருமாறன் போன்றவர்கள் புதிய இயக்குநர்களாகக் களம் இறங்கி விஜயாவின் படங்களை எழுதி இயக்கினார்கள். இதில் பல படங்கள் வேலாயுதம் நாயர் ஃபைனான்ஸ் செய்த சொந்தப் படங்கள். இந்தப் படங்களின் நாயகர்களாக ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், விஜயகுமார், ஜெய்கணேஷ், மோகன் (சர்மா) போன்ற நாயகர்கள் நடித்தனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதை அவர்களும் கௌரவக் குறைச்சலாக நினைக்கவில்லை.

தெய்வ நாயகி தெய்வீக நாயகியானார் கே.ஆர்.விஜயா தரித்த தெய்வ வேடங்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் அம்மன் வேடங்களில் மிகவும் பொருந்திப் போனார். 1966 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஸ்ரீகிருஷ்ண பாண்டவீயம்’ படத்தில் என்.டி.ராமாராவ் ஏற்ற கிருஷ்ணன் வேடத்துக்கு இணையாக ருக்மணியாக முதன்முதலில் புராணப் பாத்திரம் ஏற்க ஆரம்பித்தார் விஜயா. என்.டி. ராமாராவ்,  கிருஷ்ணன், ராமன் வேடங்களில் நடித்துப் பேரும் புகழும் பெற்றவர். அவரே பாராட்டும் அளவு விஜயாவின் வேடப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருந்தது. பின்னர் பல தெலுங்குப் படங்களிலும் அது தொடர்ந்தது.

தமிழில் 1967ல் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் தெய்வானையாக முதன்முதலில் தோன்றினார். பின்னர் ‘திருமால் பெருமை’ யில் பெரியாழ்வார், நந்தவனத்தின் திருத்துழாய் செடியினருகில் கண்டெடுத்து வளர்க்கும் கோதை நாச்சியாராக நடித்தார். 1970ல் வெளியான ‘நம்ம வீட்டு தெய்வம்’ புராணக் கதையுமல்ல, புராணப் பாத்திரங்களும் அதில் இடம் பெறவில்லை. பழையனூர் நீலியை நினைவுறுத்தும் பழி வாங்கும் ஒரு கற்பனைக் கதை. அதில் பக்தியும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எல்லோரையும் புரட்டிப் போட்ட சுவாரசியமான கதை. மிகச் சிறப்பாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் வடிவில் அம்மன் வருகிறாள். அம்மன் படம் முழுவதும் தோன்றவில்லை. இறுதிக் காட்சியில் துர்க்கையாக அவதாரம் எடுத்து துரோகம் செய்தவனை வீழ்த்துகிறாள். ஆனால், மக்கள் அம்மனாகவே விஜயாவை நினைத்தார்கள்; பார்த்தார்கள்.

கூட்டம் கூட்டமாகப் படம் ஓடிய தியேட்டரில் குவிந்தார்கள். அதன் பிறகு பல ஆண்டு காலம் வரை கே.ஆர்.விஜயா அம்மன் வேடங்களை ஏற்று நடித்தார். அவருக்குப் பின் எத்தனையோ நடிகைகள் அரிதாரம் பூசி அம்மனாக  அவதரித்தாலும் கே.ஆர்.விஜயாவுக்கு இணையாக யாரும் நிற்க முடியவில்லை. பக்திப் படங்களிலும் புராணப் படங்களிலும் அவர் தவிர்க்க முடியாதவரானார். இயக்குநர்களின் தேர்வு நாயகியுமானவர்அப்போதைய பிரபல இயக்குநர்களின் நடிகையாகவும் அவர் திகழ்ந்தார். ஏ.பி.நாகராஜன், பி.மாதவன், கிருஷ்ணன் - பஞ்சு, கே.எஸ். கோபால கிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலசந்தர், ஏ.சி.திருலோகசந்தர், கே.விஜயன் என அனைத்து இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இயக்குநர்கள் சொந்தமாகப் படம் தயாரித்தபோதும் விஜயாவையே தங்கள் படங்களின் நாயகியாக்கினார்கள்.

விஜயாவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன் பல படங்களில் அவரையே நாயகியாக நடிக்க வைத்தவர். குறிப்பாக விஜயாவின் 100வது மற்றும் 200வது படங்களான ‘நத்தையில் முத்து’, ‘படிக்காத பண்ணையார்’ படங்களையும் அவரே இயக்கினார். நத்தையில் முத்து படத்தின் நாயகன் மது (முத்துராமன்) பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவன். அமெரிக்காவுக்குச் சென்று மேற்படிப்பை முடித்துத் திரும்பியவன். நாயகி செல்லக்கண்ணு (விஜயா) ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்தவள்; நாயகன் குடும்பத்துப் பண்ணையாள். இவர்கள் இருவரின் காதலையும் திருமணத்தையும் வைதீக வைணவக் குடும்பமும் அக்ரஹாரமும் மறுதலிக்கின்றன; நாயகனும் நாயகியும் அந்த எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொண்டு மீண்டு வருகிறார்கள் என்பது கதை. அம்பேத்கரின் கருத்துகள் படத்தில் பேசப்பட்டன. கூடவே காந்தியத் தத்துவங்களும் இணைந்திருந்தன.

வசனங்கள் அத்தனை கூர்மையாக விமர்சனத்துடன் வெளிப்பட்டதோடு, அக்ரஹார நடைமுறைகள், தீண்டாமை என அனைத்தையும் கிழித்துத் தொங்க விட்டன. இறுதியில் சாதியம் தோற்கிறது. சேரியிலிருக்கும் மருமகள் அக்ரஹாரத்துக்கு மடிசார் கட்டிய மாமியாக வந்து சேருகிறாள். ஆனால், நடைமுறையில் இப்போது வரை சாதியம் ஆதிக்கம் செலுத்திக் கொடி கட்டிக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. நவீன அக்ரஹாரங்கள் உருவாகி விட்டன. 70களில் வெளியான இப்படம் எத்தகைய வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. கே.ஆர்.விஜயா தான் ஏற்ற வேடத்துக்கு முற்றிலும் நியாயம் செய்து மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் அல்லாமல், பேசப்படாத எத்தனையோ வேடங்களையும் அவர் ஏற்றிருக்கிறார். 1978ல் பீம்சிங் இயக்கிய இறுதிப்படமான ஜெயகாந்தனின் ‘கருணை உள்ளம்’ படத்தின் நாயகி கௌரியும் அதிகம் பேசப்படாத பாத்திரம்தான். காதலில் தோல்வியுற்று முதிர் கன்னியாகத் தனித்து வாழும் கௌரி. கால ஓட்டத்தில் தான் குடியிருக்கும் வீட்டில் சக குடித்தனக்காரராக இருக்கும் நடுத்தர வயது முதலியாரை (ஸ்ரீகாந்த்) சந்திக்கிறாள்.

பெண்களைக் கண்டு கூச்சப்படும், பேசத் தயங்கும் அவர் ஒரு காக்கை வலிப்பு நோயாளி. குளித்து விட்டு வரும்போது, துவைத்துப் பிழிந்த ஈர வேட்டியை பாத்ரூமில் மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறார். அதன் பின் குளிக்கச் செல்லும் கௌரி அந்த வேட்டியை எடுத்துக் கொண்டுவந்து அவரிடம் கொடுக்கிறாள். அதை வாங்கக் கை நீட்டும் அவருக்கு வாய் கோணி, கைகள் நடுங்கிக் கீழே விழுந்து வலிப்பு வந்து விடுகிறது. கௌரியே அவருக்கு முதலுதவி செய்து தூக்கி விடுகிறாள்.

முன்னாள் காதலனும் (விஜயகுமார்) மனைவியின் பிரிவுக்குப் பின் மீண்டும் கௌரியைத் தேடி வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான். ஆனால், இப்போது கௌரி உண்மையிலேயே தன் உதவியும் ஆதரவும் அன்பும் முதலியாருக்குத்தான் தேவை என்றுணர்ந்து அவரை மணக்க முன் வருகிறாள். இப்படி பல படங்கள் விஜயாவின் நடிப்பில் உண்டு. இவர் நடித்த பல படங்கள் விருது பெற்றுள்ளன. தமிழக அரசின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலைமாமணி விருதும் அவரை கௌரவித்தது. சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்தது.

கணவர் வேலாயுதம் நாயர் மறைந்து விட்டார். ஒரே மகள் ஹேமாவின் அன்பில் திளைத்திருக்கும் விஜயா, 70 வயதைக் கடந்த நிலையில் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். நம் மனங்களிலும் நிறைந்திருக்கிறார்.செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் இடம்பெறும் கட்டுரைகள் காப்பிரைட் உரிமை பெற்றவை. இக்கட்டுரைகளிலிருந்து எந்த ஒரு பகுதியும் கட்டுரை ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் அச்சு வடிவிலோ, யூ டியூப் சானல்களிலோ எடுத்தாளப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்