SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள்!

2022-08-03@ 17:48:25

நன்றி குங்குமம் தோழி

ஆடி பிறந்ததும் பண்டிகைகள் தேடி ஓடிவரும். இனி தொடர்ந்து பண்டிகைகள்தான் என்றாலும் ஆடி மாதத்தில்தான் நிறைய பண்டிகைகள் வரும். ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்தந்த கடவுளுக்கு ஏற்ற பிரசாதங்கள் செய்து படைப்பது வழக்கம். ஆடி மாதப்பிறப்பு, ஆடி 18, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, நாகபஞ்சமி, வரலட்சுமி விரதம்... என வரிசைக் கட்டும் பண்டிகைகளுக்கு என்ன நெய்வேத்தியம் செய்யலாம் என்று விவரிக்கிறார் சமையல்
கலைஞர் ராஜகுமாரி.

தினை பாயசம்


தேவையானவை:

தினை அரிசி - 1 கப்,
துருவிய வெல்லம் - ¾ கப்,
துருவிய தேங்காய் - ¼ கப்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி,
பாதாம் துண்டுகள் - தலா 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் வறுத்து 2 கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவிட்டு வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி வறுத்துச் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும். நன்றாகக் கலந்து விடவும். ஆடிக்கிருத்திகை அன்று முருகப்பெருமானுக்கு உகந்த தினைப் பாயசத்தை செய்து படைக்கலாம்.

வாழைக்காய் கறியமுது

தேவையானவை:

வாழைக்காய் - 2,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ¼ கப்,
பெருங்காயம் - ½ டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை 8 இதழ்கள்.

வறுத்துப் பொடிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
துவரம் பருப்பு,
பச்சரிசி - தலா 1 டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு,
எள் - தலா 1 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் - 3,
மிளகு - 1 டீஸ்பூன்.

செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு குழையாமல் வேக விட்டுத் தனியே வைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தப் பொருட்களை வறுத்து எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து தனியே வைக்கவும். பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெந்த வாழைக்காயைச் சேர்த்து பொடித்த பொடியினைத் தூவி ஒரு முறை புரட்டி தேங்காய்த் துருவலைத் தூவிக் கிளறி விட்டு இறக்கவும். ஆடி அமாவாசையன்று இந்த வாழைக்காய் கறியமுதைச் செய்து முன்னோர்களுக்குப் படைப்போம்.

அவல் புட்டு

தேவையானவை:

கெட்டி அவல் - 1½ கப்,
துருவிய வெல்லம் - 1 கப்,
துருவிய தேங்காய் - ¼ கப்,
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,
நெய் - 4 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் அவலை லேசாக வறுத்து வாசனை வர ஆரம்பித்ததும் இறக்கி விடவும். மிக்ஸியில் ரவை பதத்திற்கு உடைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். வேறு ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து உடைத்த அவலின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து 10 நிமிடம் மூடி வைக்கவும். ஒரு கப் வெல்லத்தை நீர் விட்டு (ஒரு கரண்டி) கெட்டிப் பாகு வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு தேங்காய் துருவல், முந்திரித் துண்டுகள் வறுத்து பாகில் சேர்த்து ஏலப்பொடியும் தூவி இறக்கவும். பாத்திரத்தில் மூடிவைத்துள்ள அவலை உதிர்த்து விட்டு வெல்லப்பாகினை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலந்து விடவும். அவல் புட்டு தயார். ஆடிப்பூரத்தன்று இதனைச் செய்து படைத்து மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும்.

மாமிடிகாய புளிஹோரா

தேவையானவை:

புளிப்பில்லாத மாங்காய் - 1,
கெட்டியான புளிக்கரைசல் - 1 கப்,
உப்பு தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
துருவிய வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்,
உதிரான சாதம் - 3 கப்.

தாளிக்க:

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
ரீபைன்ட்(அ) கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 8 இதழ்கள்,
கடலை,
உளுத்தம் பருப்புகள் - தலா 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த வேர்க்கடலை - 4 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வரமிளகாய் - 6,
எள் - 1 டேபிள் ஸ்பூன்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
கடுகு - ½ டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தேங்காய்த் துருவல் சேர்த்து மாங்காயைத் தோல் சீவி கேரட் துருவியில் துருவி அதனையும் சேர்த்து வதக்கி திக்கான புளிக்கரைசலை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், வெல்லத் தூள் சேர்த்து கொதிக்க விடவும். எல்லாமாகச் சேர்ந்து வரும் போது வறுத்துப் பொடிக்கக் கொடுத்தவற்றை வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். மீண்டும் கொதிவிட்டு எல்லாமாகச் சேர்த்து கெட்டிப்பதம் வந்ததும் இறக்கி உதிராக வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். மாமிடிகாய புளிஹோரா தயார். ஆடிப் பெருக்கன்று இந்த சாதத்தைச் செய்து நீர்நிலைகளில் வைத்துப் படைக்கவும்.

ஹயக்ரீவா

தேவையானவை:

கடலைப்பருப்பு - 1 கப்,
வெல்ல துருவல் - 1 கப்,
தேங்காய் மெல்லிய கீற்றாக நறுக்கியது - ¼ கப்,
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடலைப்பருப்பை ½ மணி நேரம் ஊறவைத்து குக்கரில் அளவான நீர் விட்டு குழையாமல் வேகவிடவும். வெல்லத்தை ஒரு கரண்டி நீர் விட்டு இரண்டு கொதிவிட்டு வெந்த கடலைப்பருப்பினைச் சேர்த்து நெய்யில் தேங்காய் கீற்றுகளை வறுத்துச் சேர்த்து ஏலப்பொடியும் தூவி, மேலும் இரு கொதிவிட்டு இறக்கவும். ஹயக்ரீவா ஜெயந்தி அன்று இந்த ஹயக்ரீவா செய்து படைத்து குழந்தைகளுக்கு கொடுப்போம். கல்விக்கடவுளான ஹயக்ரீவருக்கு இதனைச் செய்து படைத்தால் குழந்தைகள் கல்வியில் ஆர்வத்துடன் இருந்து முன்னேறுவர்.

வெள்ளை அப்பம்

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,
முழு வெள்ளை உளுந்து - ¼ கப்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்.
கறிவேப்பிலை - 8 இதழ்கள்.
எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை:

அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அரைத்த மாவில் உப்பு, இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் அரிந்து போட்டு, கறிவேப்பிலையை ெபாடியாக அரிந்து போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கலந்த மாவு இட்லிமாவு பதம் இருக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் கலந்தமாவினை ஒரு கரண்டியால் எடுத்து ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவினையும் இதுபோல் அப்பங்களாகச் செய்து எடுக்கவும். ஆவணி அவிட்டம் அன்று செய்து படைக்கவும். ஆடி மாதம் ஒரு சிலருக்கும் ஆவணி மாதம் ஒரு சிலருக்கும் இந்த ஆவணி அவிட்டம் வரும்.

முப்பருப்பு வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு,
துவரம் பருப்பு - தலா ½ கப்,
உளுத்தம் பருப்பு - ¼ கப்,
வரமிளகாய் - 2,
கொர கொரப்பாகப் பொடித்த மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
உடைத்த முந்திரித் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் - ½ டீஸ்பூன்,
பொடியாக அரிந்த மல்லி,
கறிவேப்பிலை இதழ்கள் - தலா 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

3 பருப்புகளையும் வர மிளகாயுடன் சேர்த்து நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரினை வடிகட்டி உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு உடைத்த முந்திரித் துண்டுகள், பெருங்காயம், தேங்காய்த் துருவல், மிளகுத் தூள், மல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் பிசைந்த மாவினை வடைகளாகத் தட்டி பொரித்து எடுக்கவும். முப்பருப்பு வடை தயார். வரலட்சுமி விரதத்தன்று (வெங்காயம் சேர்க்காமல்) இந்த முப்பருப்பு வடையினைச் செய்து அம்மனுக்கு படைக்கலாம்.

ஸ்பெஷல் மாவிளக்கு

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,
துருவிய வெல்லம் - 2 கப்,
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,
நெய் - 8 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியை நீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும்  நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும். முக்கால் பதம் உலர்ந்ததும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் போடவும். வெல்லத் துருவலை 1 கரண்டி நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டு கொதி விட்டு இறக்கவும். பாத்திரத்தில் உள்ள மாவில் நெய்யை சூடு செய்து ஊற்றி ஏலப்பொடி தூவி வெல்லக்கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பிசைந்து கைகளால் உருட்டி நடுவில் சிறிய பள்ளம் செய்து நெய் ஊற்றி திரிப் போட்டு ஏற்றவும். பகவானுக்குப் படைக்க ஏற்ற ஸ்பெஷல் மாவிளக்கு தயார். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு போன்ற நாட்களில் இந்த ஸ்பெஷல் மாவிளக்கு செய்து ஏற்றி பகவானுக்குப் படைக்கவும். நெய் சேர்ப்பதாலும், வெல்லத்தினை இரண்டு கொதிவிட்டு சேர்ப்பதாலும் விரைவில் கெடாமல் இருக்கும்.

வெள்ளிப் பிள்ளையார் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,
பயத்தம் பருப்பு - ¼ கப்,
தேங்காய்த் துருவல் - ¼ கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
துருவிய வெல்லம் - 2 கப்.

செய்முறை:

வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் அரிசி, பயத்தம் பருப்பு இரண்டினையும் மிதமாக வறுத்து ரவை பதத்திற்கு உடைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து 3 கப் நீர் விட்டுக் கொதிக்கவிடவும். கொதித்ததும் உடைத்தவற்றைச் சேர்த்து, வறுத்த எள் சேர்த்து வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் நெய் சேர்த்து இறக்கி பிடிகொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். வெள்ளிப் பிள்ளையார் கொழுக்கட்டை தயார். இந்தக் கொழுக்கட்டைக்கு மேல் மாவு தேவையில்லை. ஆடி மாதத்தின் நடுவில் வரும் வெள்ளிக்கிழமையின் அதிகாலையில் இந்தக் கொழுக்கட்டை செய்து படைக்கவும்.

சிம்லி உருண்டை (எள்)

தேவையானவை:

வெள்ளை எள்,
கருப்பு எள் - தலா ½ கப்,
வெல்லத்துருவல் - 1 கப்.

செய்முறை:

வெறும் வாணலியில் வெள்ளை எள்ளை வாசனை வரும்வரை வறுத்துத் தனியே வைக்கவும். கருப்பு எள்ளையும் அதே வாணலியில் வாசனை வரும் வரை வறுத்துத் தனியே வைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் குறைந்த ஸ்பீடில் இரண்டு எள்ளையும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி வெல்லத்துருவலையும் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். நாகபஞ்சமி அன்று இதனைச் செய்து கோயில்களில் உள்ள நாகர் சிலைகளுக்குச் செய்து படைக்கவும்.

ஆடி கும்மாயம்

கும்மாயம் மாவு செய்ய தேவையானவை

முழு உளுந்து - 1 1/4 கப்,
பச்சரிசி - 1 1/2 மேசைக்கரண்டி,
பாசிப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி.

மற்ற பொருட்கள் :

வெல்லம் - 1/2 கப்,
பனை வெல்லம் - 1/2 கப்,
நெய் - 1/4 கப்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் கும்மாயம் செய்ய தேவைப்படும் பொருட்களை தனித்தனியாக வறுத்து மாவு போல் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் மாவினை எடுத்து தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லம், பனை வெல்லம் இரண்டையும் சேர்த்து கொதிவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி தனியே வைக்கவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மாவினை வறுக்கவும். பிறகு அது ஆறியதும், வெல்லப்பாகில் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நெய்யினை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கெட்டியாகி கையில் ஒட்டாமல் பந்து போல் உருண்டு வந்ததும் இறக்கி பரிமாறவும். இதனை ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாளுக்கு படைப்பது வழக்கம்.

தொகுப்பு : ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்