SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!

2022-08-01@ 17:45:50

நன்றி குங்குமம் தோழி

எஸ்.விஜயகிருஷ்ணன்

‘கடன்’ என்ற வார்த்தை நமது வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. வரலாற்றில், இலக்கியத்தில், குடும்பத்தில், நாட்டில் இந்த வார்த்தைக்கு என்றுமே பலமுண்டு.  ‘‘செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து’’ என்னும் பிரபலமான பாடல் வரிகள் தனக்கு உணவளித்தவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனைக் குறிப்பது, ‘‘ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா’’ என்று அன்னையின் அன்பு, பாசத்தை மகன் பெற்ற கடனாக எண்ணுவது என்றெல்லாம் பேசப்பட்டாலும், இன்று குறிப்பாக ‘கடன்’ என்னும் வார்த்தை பொருளாதாரத்தில் ‘கொடுக்கல்; வாங்கலையே’ சுட்டுகிறது.

இந்தக்  கட்டுரையில் தனிநபர் கடன் பெறுவது குறித்துப் பார்க்கலாம். அக்காலத்தில் கொடுத்த கடனை திரும்பப் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து கடன் தொகையை கடன் பெற்றவர் திரும்பத் தராதபோது கடனாளியை ஊரின் நடுவில் நிற்கவைத்து அவரைச் சுற்றி கடன் தந்தவர் ஒரு வட்டத்தை வரைந்து விட்டுப் போவாராம். கடன் தொகையைச் செலுத்தும்வரை கடனாளி அந்த வட்டத்துக்குள்ளேயே நிற்க வேண்டுமாம். ஆனால் இக்காலத்தில் கடன் பெற்றவர்களுக்கு  அத்தகையச் சிக்கல்கள்  பெரும்பாலும் இல்லை.

கடன் வாங்கியபின் எவ்வாறு செலுத்துவது என்பதைவிட எப்படிக் கடன் பெறுவது என்ற சிந்தனைதான் இன்று அதிகமுள்ளது. கடன் பெறுவதையும், கடனைத் திருப்பச் செலுத்துவதையும் எந்தவித சிக்கலில்லாமல் புரிந்துச் செயல்படுத்தி சுமைகளை சுகமானதாக்கி வாழ்க்கையை வளப்படுத்துவதே நமது பயணம்.

தனிநபர் கடன் (Personal  Loan)   

மிகவும் எளிதான திட்டமாக வங்கிகள் வடிவமைத்திருப்பது தனிநபர் கடன் திட்டமாகும். கடன் பெற எண்ணுபவர் முதலில் தனக்கு என்ன தேவைக்காகக் கடன் வேண்டும், அதனை உரியகாலத்தில் திருப்பச் செலுத்தத் தன்னால் இயலுமா என்ற இரண்டு கேள்விகளை முதலில் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். அவசியமான தேவைக்காக மட்டுமே கடன் பெறுவது, மேலும் தனக்கு இந்நாளில் உள்ள மாத வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து ஒவ்வொரு மாத கடன் தவணையையும் திருப்பச் செலுத்தமுடியும் என்றால் மட்டுமே அதனை பெறவேண்டும்.

சிலர் தனக்கு இன்னும் சில மாதங்களில் பதவி உயர்வு வரலாம் என்றும், அவ்வாறு வந்தால் மாத ஊதியம் உயரலாம் என்றும், வணிகத்தில் இருப்பவராக இருந்தால் தான் ஈட்டும் லாபம் பெருகலாம் என்றும் மனக்கணக்கு போடுவது அடுத்தவாரம் மழை பெய்யும் என்று இன்று விதை விதைப்பவர்களைப் போலத்தான். மழை ‘வரும்’ ஆனா ‘வராது’ என்னும் நிலை பொருந்தினால் கடனைத் திருப்பச் செலுத்த வேண்டிய காலத்தில் கையில் பணமில்லாமல் தவணையை செலுத்த முடியாமல் போகலாம்.

எளிதில் தனிநபர் கடன் பெற

ஒருவர் எளிதில் கடன்பெற நிலவ வேண்டிய சூழல் என்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.

1. ஒருவரின் வருமானமும் செலவும்தான் கடன்பெறும் தகுதியைத் தீர்மானிக்கிறது. இங்கு ‘செலவு’ என்பது வீட்டுச் செலவு மட்டுமல்ல. ஏற்கனவே கடன் பெற்றிருந்தால். கடன் அட்டையைப் பயன்படுத்தியிருந்தால் அவற்றுக்காகச் செலுத்தவேண்டிய தவணைத் தொகையும் செலவுக் கணக்கில் சேரும். இவ்வாறு செலுத்தவேண்டிய கடன் தவணை 40% மிகாமல் இருக்க வேண்டும். மிச்சம் 60% வீட்டுச் செலவுக்கும், சேமிப்பிற்கும் தேவை என்பது ஒரு பொதுவான அளவீடு.

2.கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் என்பதை அளக்கும் அளவீடுதான் கிரெடிட் ஸ்கோர். பொதுவாக தனிநபர் கடன்பெற இந்த மதிப்பெண் 725 அல்லது அதற்குமேல் இருப்பது நல்லது. அதற்குக் குறைவாக இருந்தால் சில வங்கிகள் கூடுதலாக இன்னொருவரின் உத்தரவாதம் (Guarantee) பெற்று கடன் வழங்குகின்றன. அதற்கேற்ப வட்டியும் சற்று கூடுதலாக வசூலிக்கப்படும். 600க்கும் குறைவாக இந்த மதிப்பெண் இருந்தால் கடன்பெற இயலாது. ஒருவருக்கு இந்த கடன்தகுதி மதிப்பெண் எவ்வளவு உள்ளது என்பதை இணையதளம் மூலமாக அணுகலாம்.

கடன் தகுதி மதிப்பெண்ணை எவ்வாறு மதிப்பிடலாம்

*பெற்ற கடன் எவ்வளவு சீரான சரியான நேரத்தில் திருப்பச் செலுத்தப்பட்டது : 35%
*கடன் மற்றும் கடன் அட்டைகளில் நிலுவையில் உள்ள தொகை மற்றும் தவணைத் தொகை : 30%
*கடன் வரலாற்றின் கால அளவு : 15% .
*வைத்திருக்கும்  கணக்குகளின்  வகைகள் : 10%
*விண்ணப்பிக்கும் புதிய கடன் தகுதி : 10 %  

3.குடும்பத்தின் இதர வருமானங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் இருக்க வேண்டும். இதன்மூலம் குடும்பத்தின் மொத்த செலவுகள், செலுத்தவேண்டிய மாதத் தவணைத் தொகைகள், சேமிப்பின் நிலை ஆகியவை குறித்து அளவீடு செய்தபின் எஞ்சிய வருமான நிலைக் கொண்டு ஒருவர் தனிநபர் கடன் பெறமுடியும்.

4.ஒரு நேரத்தில் ஒரு கடன் வழங்குனரிடம் / வங்கியிடம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பல வங்கிகளில் விண்ணப்பங்களைத் தந்தால் ஒருவரைப் பற்றிய மதிப்பீடு நன்றாக இருக்காது.

5.எந்த வங்கியிடமிருந்து / கடன் வழங்குபவரிடமிருந்து கடன் பெறலாம் என்பதை அலசி ஆராய்ந்து முடிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரங்களைக் கண்டு மறைமுக வட்டி மற்றும் கட்டணங்களை வசூலிப்பாளர்களிடம் சிக்காமல் இருப்பது நல்லது.

6.சேமிப்பு / நடப்புக் கணக்குகளிலிருந்து பிறருக்கு பணம் தருவதற்கு ஒருவர் வழங்கும் காசோலைகள் உரிய நேரத்தில் பணமாக்கப் பட்டிருக்கவேண்டும். கணக்கில் பணமில்லை என்று காசோலை மறுக்கப்பட்டு திருப்ப அனுப்பியிருக்கக்கூடாது. ஒரு வங்கியின் சிறந்த வாடிக்கையாளர் என்ற அடையாளமே கடன் பெற தகுதியுடைய ஒன்றாகும்.

7. ஒருவர் பணிபுரியும் அலுவலகமே மாத சம்பளத்திலிருந்து வங்கியின் கடன் தவணையை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து வங்கிக்குச் செலுத்திவிடும் என்றால் அந்தப் பணியாளர் தனிநபர் கடன் பெறுவது எளிதாகும்.

கடனின் கால அளவு, வட்டி மற்றும் கட்டணங்கள்

ஒருவர் கடன் பெறுவதற்கு முன் அது குறித்து பல வினாக்கள் உள்ளன:

*எவ்வளவு கடன் கிடைக்கும்..?

வருமானம் மற்றும் வயதை பொறுத்தது. ஒருவர் 21 வயது முதல் 60 வயது வரை கடன்  பெறமுடியும். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்திலிருந்து மாதா மாதம்  பிடித்தம் செய்யும் வசதியோடு ஓய்வூதியக் கடன் (Pension Loan) வழங்கப்படுகிறது. அந்தக் கடனை ஒருவர் 70 வயதுவரை பெறமுடியும். தனிநபர் கடன் தொகை ரூ.25000/- முதல் ரூ.750000 வரை  வழங்கப்படுகிறது. சில வங்கிகள் மூன்றாம் நபர் உத்தரவாதம் மற்றும் சொத்து  அடமானத்துடன் ரூ.1500000/- வரை கடன் வழங்குகின்றன. ஒருவருடைய நிகர மாத  வருமானம் (Net Monthly Income) எவ்வளவோ அதனுடன் ஒவ்வொரு மாதமும்  கட்டவேண்டிய சமமான மாத தவணை ஒப்பிட்டு  கடன்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

EMI மற்றும் NMI இரண்டையும் வகுத்து அதனை 100ஆல் பெருக்கவேண்டும். அதிகபட்ச கடன்தொகை கணக்கீடு இந்த விகித  அடிப்படையில் செய்யப்படுகிறது.ஒரு தனிநபரின் மாத வருமானம் ரூ. 40000/- என்றும் அவர் பெறும் கடனுக்கான மாத தவணைத் தொகை ரூ. 16000/- என்று வைத்துக்கொள்வோம். இங்கு வட்டி விகிதம் 15% என்று  நிர்ணயித்தால் EMI / NMI விகிதம் = 16000 / 40000 x 100 = 40% ஆகும். ஐந்து ஆண்டுகள் கடன் காலம் எனில் அவருக்கு கிடைக்கும் தனிநபர் கடனின் உச்ச அளவு ரூ.675000/- ஆகும். வேறு கடன்களோ, கடன் அட்டைத்  தவணைகளோ இருக்கக்கூடாது.

அவ்வாறு கடன் இருந்து அதற்கு மாதம் ரூ. 10000/-  செலுத்துகிறார் என்றால் EMI ரூ. 16000/- + ரூ.10000/- சேர்த்து EMI / NMI  விகிதம் 65% வரும் பட்சத்தில் கடன் தொகை  குறையும். வட்டியின் அளவு குறைந்தால் கடன் தொகை அளவு கூடுவதற்கு வாய்ப்புண்டு.  மேலும் பணிக்கால அனுபவம், எஞ்சியுள்ள பணிக்காலம், வயது  ஆகியவையும் கடன் தொகையை நிர்ணயிக்கும். மாத ஊதியத்தில் இல்லாமல் வணிகம்,  தொழில் அல்லது விவசாயம் செய்பவர்களுக்கு அவர்களது வருட வருமான ஆவணத்தில்  உள்ளபடி வருமான அளவைக்கொண்டு கடன்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  

*வட்டி எத்தனை சதவிகிதம்?

பொதுத்துறை அரசு வங்கிகளில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 9.00% லிருந்து 16.50% வரை நிர்ணயிக்கப்படுகிறது. புதிய  தலைமுறை தனியார் வங்கிகள் 9.50%  லிருந்து 18.00% வரை வட்டி வசூலிக்கின்றன. பிற தனியார் வங்கிகள், சிறுநிதி  வங்கிகள், நிதி நிறுவனங்கள் 12.50% லிருந்து 27.00% வரை கணக்கிடுகின்றன. வட்டி கணக்கிடுவதில் குறையும் நிலுவைத் தொகையின் மேல் தினக்கணக்கின்படி வட்டி அல்லது மாத முடிவில் உள்ள  நிலுவைத் தொகையின்படி வட்டி என்று இரண்டு முறைகளில் பொதுவாக வட்டி  கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவரின் கடன் கணக்கில் ரூ. 200000/- நிலுவை  உள்ளது. ஜூலை மாதம் 5ஆம்  தேதி தவணைத் தொகை ரூ.7000/- செலுத்துகிறார்.

தினக்கணக்கின்படி ஜூலை 6ஆம் தேதி முதல் ரூ.193000/- நிலுவைத்  தொகையின்பேரில் வட்டி கணக்கிடப்படும். மாத முடிவில் உள்ள நிலுவைத்  தொகையின் பேரில் வட்டி என்றால் இந்த உதாரணத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ரூ.  200000/- நிலுவைத் தொகையின் பேரிலும் ஆகஸ்ட் 1ஆம் தேதிமுதல் ரூ. 193000/-  மீதும் வட்டி கணக்கிடப்படும். இரண்டாவது முறையில் செலுத்திய தவணைத் தொகையான ரூ.7000/-த்திற்கு 27 நாட்களுக்கு (ஜூலை 5 முதல் 31 வரை ) வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதனைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கடனுக்காக  விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட கால அளவிற்குமுன் கடன் நிலுவைத்தொகை  முழுவதையும் திருப்பச் செலுத்தினால் சில வங்கிகள் 2% அபராத வட்டி வசூலிக்கின்றன.

*கடன்பெற கட்டணம் உள்ளதா?

வங்கிகள் செயலாக்க அல்லது பரிசீலனைக் கட்டணம் என்பதை கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே வசூலிக்கின்றன. கடன் தொகையில் 1.00% முதல் 2.50% வரை இந்தக் கட்டணம் இருக்கும். இதனை வங்கியில்தான் செலுத்தவேண்டும். எவரிடமும் பணமாக வழங்கக் கூடாது. வங்கிகள் இந்தக் கட்டண விகிதத்தில் சலுகை  அளிப்பதுண்டு.  

*திருப்பச் செலுத்த வேண்டிய கால அளவு?

கடன் பெறுபவரின் கடனைத் திருப்பச் செலுத்தும் வசதி, கடன் தொகை ஆகியவற்றை  உள்ளடக்கி திருப்பச் செலுத்தும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இது 12  மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை இருக்கும்.

*மாதா மாதம் கட்டவேண்டிய தவணைப் பணம்?

கடன் பெறும் தொகை முன்னர் குறிப்பிட்ட கடனின் கால அளவு மற்றும் நிகர மாத வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். மாதா மாதம் செலுத்த வேண்டிய தவணைத்தொகை EMI /NMI விகிதத்தின்படி வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக திருப்பிச் செலுத்தும் பணம் அளவுக்குள் மாதத் தவணை அமையும்.

*ஆவணங்கள்?  

முதலில் வங்கியின் தனிநபர் கடன்திட்ட விவரக் குறிப்பைப் படித்து அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பிப்பவரின் புகைப்பட அடையாள அட்டை, இருப்பிடச் சான்று, பான் கார்டு (அல்லது) படிவம் எண் 60 {விவசாய வருமானமில்லாத  தனிநபருக்கானது}  / 61 {விவசாய வருமானம் உள்ளவருக்கானது}  பூர்த்தி  செய்வதற்கான விவரங்கள், வருமானம் மற்றும் அதற்குரிய வரி பதியப்பட்ட ஐ.டி.ஆர் (ITR ) கடந்த இரண்டு ஆண்டுகளின் வருமானக் கணக்கீட்டு  அறிக்கை, வங்கியில் உள்ள சேமிப்பு / நடப்புக் கணக்கின் ஆறுமாதகால அறிக்கை, சொத்துக்கள் மற்றும் ஏற்கனவே கடன்கள் பெற்ற பட்டியல் [வங்கியின் விண்ணப்பத்தில் இந்தப் படிவம்  அச்சிடப்பட்டு இருக்கும்],  கடனுக்காக அடமானம் / பிணையமாக பதியவேண்டிய சொத்து / பொறுப்புறுதியாளர் விவரம்  ஆகியவற்றை வங்கியின் அதற்குரிய படிவத்தில் குறிப்பிடவேண்டும்.

ஒருவர் இன்னொருவரோடு (தந்தை + மகன் / கணவன் + மனைவி) கூட்டாகச் சேர்ந்து கடன் பெறுபவராக இருந்தால், கூட்டுக் கடனாளியின் விவரங்களை இதே பட்டியல்படி பெற்று இருவரும் வங்கியை அணுகி தனிநபர் கடன்பெற அதற்குறிய விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து வங்கி அலுவலரிடம் வழங்க வேண்டும். விண்ணப்பிக்குமுன் இணைக்கும் ஒவ்வொரு நகல் (Xerox) ஆவணத் தாளிலும் ‘தனிநபர் கடன்பெற வங்கியிடம் வழங்கப்பட்டது’ என்று எழுதி விண்ணப்பிப்பவர் கையொப்பமிட்டு வழங்கவேண்டும்.  

இவ்வாறு செய்தால் அந்த நகல் ஆவணங்களை வேறு எதற்காவது உரியவரின் அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்க இயலும். வங்கி தனிநபர் கடனை அனுமதித்தவுடன், கடன் வாங்குபவருக்கு கடனின் முழு விவரங்கள் அதாவது கடன் தொகை, அதற்குரிய திரும்பிச் செலுத்தவேண்டிய கால அளவு, கடன் நிலுவைத் தொகையின்மீது கணக்கிடப்படும் வட்டி விகிதம், ஒவ்வொரு மாதத் தவணைத்தொகை, உத்தரவாதம் தருபவர் குறித்த விவரங்கள், இதர விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை அனைத்தும் எழுதப்பட்ட கடிதமாக வங்கியால் வழங்கப்படும். கடன் பெறுபவர் அந்தக் கடிதத்தின் நகலில் அனைத்தையும் படித்து கடன்பெறுபவர் கையெழுத்திட்டு வங்கியிடம் வழங்கும் முத்திரைத் தாளில் பதியப்பட்ட கடன் ஒப்பந்தப் பத்திரமும் சட்டரீதியாக கடன்பெறுபவரை பிணைக்கும்.  

ஒருவர் ரூ. 500000/- தனி நபர் கடனாகப் பெறுகின்றார்.  60 தவணைகளில் திருப்பச் செலுத்தவேண்டும். வட்டி விகிதம் 14%. அனைத்து மாதத் தவணைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினார் என்றால். அவர் வங்கியில் பெற்ற கடனுக்காகச் செலுத்தும் மொத்த தொகை ரூ 6,98,047.53. அதாவது அவர் செலுத்தும் மொத்த வட்டி ரூ.1,98,047.53 ஆகும். வட்டி விகிதம் குறையக் குறைய செலுத்தும் மொத்த வட்டியும் குறையும். தனிநபர் கடன் குறித்து மேலும் சில தகவல்கள் மற்றும் வெவ்வேறு பிரிவினருக்கான சிறப்புத் தனிநபர் கடன் வசதி குறித்து விரிவாகப் பார்ப்போம். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்