SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுகதை-அன்னை என்பவள்

2022-07-29@ 17:42:42

நன்றி குங்குமம் தோழி

கலைவாணி சொக்கலிங்கம்

“பயமா இருக்கும்மா!” - மிரட்சியோடு சொன்ன மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் மணிமேகலை. மகள் சொன்ன தகவலைக் கேட்டு அவளுக்கும் பயமாகத்தான் இருந்தது. ஆனால் தன் பயம் தன் மகளை இன்னும் பலவீன மாக்கி விடும் என்பதால் உள்ளே எழுந்த பயத்தை விழுங்கி தன்னை திடமாக்கியவாறே மகளின் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.

“பயப்படக் கூடாது. அதான் அம்மாகிட்ட சொல்லிட்டல்ல. நான் பார்த்துக்கிறேன்.”‘‘என்னம்மா பண்றது? எனக்கு நாளைக்கு ரிவிஷன் இருக்குது.”“சரி! முதல்ல முகம் கைகால் கழுவிட்டு யூனிபார்மை மாத்திட்டு வா. அம்மா காபி கலக்குறேன்.”“சரிம்மா!”- என்றவாறே பிருந்தா தன்னறைக்குள் நுழைய, பதறிய நெஞ்சோடு சமையலறையை நோக்கி நடந்தாள் மணிமேகலை. கைகள் அனிச்சையாய் அடுப்பை பற்றவைத்து பால் பாத்திரத்தை அடுப்பிலேற்ற, மனம் மகளது வார்த்தையை எதிரொலித்தது.

“பார்க்க ரெளடி மாதிரி இருக்காம்மா. ரொம்ப நாளா என்னை ஃபாலோ பண்றானாம். நான் சரியாய் கவனிக்கல. என்னை சின்சியரா லவ் பண்றானாம். நானும் அவனை லவ் பண்ணனுமாம். இல்லேன்னா என்னைத் தூக்கிட்டுபோய் தாலிகட்டிடுவானாம். நாளைக்கே நான் பதில் சொல்லணுமாம். தினமும் ஸ்கூல் வேன் பின்னாலயேதான் வர்றான். எம்
ஃபிரெண்ட்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரியா பார்த்து கிசுகிசுன்னு பேசிக்கிறாங்க. எனக்கு அசிங்கமா இருக்குமா!

அந்தப் பையன் என்னை ஏதாவது பண்ணிடுவானாம்மா? எனக்கு… ஸ்கூலுக்கு போகவே பயம்மா” - மகளின் குரலைப் போலவே மணிமேகலையின் உடலும் நடுங்கியது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை இப்படி விரட்டுகிறான் என்றால் நிச்சயம் ஏதோ உருப்படாத பயலின் வேலையாகத்தான் இருக்கும். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கலாமா? அல்லது வேனில் குழந்தைகளோடு வரும் ஆசிரியையிடம்… வேண்டாம்! அது நாமே எல்லாருக்கும் இதை தெரிவித்ததாகி விடும்.

வேறன்ன செய்யலாம்? இதை அலட்சியமாய் விடவும் முடியாது. இன்றைய காலக்கட்டத்தில் தெருவிற்கு நாலு தறுதலைகள் இப்படித்தான் சுற்றுகிறது. படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் வெட்டி பந்தாவிற்காய் ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு பெண்கள் இருக்கும் திசையில் கழுகுகளாய் வட்டமிடுகின்றது! பள்ளி முடிந்து வேனில் ஏறுவதற்கு முன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து வேனில் ஏறுவதற்கு முன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து இப்படி மிரட்டியிருக்கிறான் என்றால்… அவனை சாதாரணமாய் எடைபோடக் கூடாது.

பேசாமல் கணவரிடம் சொல்லி விட்டால் என்ன? ம்! அதுதான் சரி! தனியாய் கூப்பிட்டு நாலு வார்த்தை மிரட்டினால் அரண்டு ஓடிவிடப் போகிறான்! கணவர் வரட்டும்! பேசிக் கொள்ளலாம் - மனதை சமாதானம் செய்து கொண்டே பாலைக் காய்ச்சி, ஆற்றியநேரம் சோப்பின் மணம்கமழ தாயைத் தேடி வந்தாள் பிருந்தா.“ம்மா! போலீஸ்ல சொல்லிடலாமா?” - எனக் கேட்டதும் மணிமேகலை திடுக்கிட்டாள். தன்னைப் போலவே தன் மகளும் இதே எண்ணத்தில்தான் உழன்று கொண்டிருக்கிறாள்!

இது அவளது மனதையும் படிப்பையும் பாதிக்குமே!“பிருந்தாம்மா! சும்மா அதைப்பத்தியே நினைக்கக் கூடாது. எக்ஸாம் இருக்குன்னியே! கிண்ணத்தில் சுண்டல் எடுத்து வெச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு காபி குடிச்சிட்டு போய்ப் படிடா!”“முடியலம்மா! நாளைக்கு காலையில அந்தப் பையன் வந்து நிப்பானே! எல்லார் முன்னாலயும் வந்து பேசிடுவானோ, ஏதாவது பண்ணிடுவானோன்னு பயமா இருக்கும்மா!”“பயப்படக்கூடாதுடா! அப்பா வரட்டும். அப்பா கிட்ட பேசிட்டு…”“ஐயோ! வேணாம்மா!”“ஏன்டா?”

“அப்பாகிட்ட சொன்னால் படிச்சது போதும், வீட்ல இருன்னு சொல்லிடுவாங்க! நான் படிக்கணும்மா!”“சரி! நீ சாப்பிட்டு படி! நாளைக்கு என்ன பண்ணலாம்னு அம்மா யோசிக்கிறேன்.”“போலீஸ்ல சொன்னால் பப்ளிசிட்டி ஆயிடுமேம்மா!”“வேண்டாம்டா! நம்மலால முடியாத பட்சத்துலதான் போலீஸுக்கு போகணும். அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். ஒரு அரைவேக்காட்டு பயலோட மிரட்டலுக்கு பயந்து நம்ம பேரை நாமளே கெடுத்துக்கணுமா? நீ எதைப்பத்தியும் யோசிக்காதே! அம்மா இருக்கேன்!” - என்றவாறே மகளை இறுக அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பு அவளுக்கு தைரிய மூட்டியது போலும்.

“ஓ.கே.ம்மா! நான் படிக்கிறேன்!”“சரிடா” - என்றவள் மகள் குடித்து முடித்து நீட்டிய டம்ளரை வாங்கிக் கொண்டாள். மனம் பலவிதமாய் சிந்திக்க, கணவனின் வருகைக்காக காத்திருக்கத் துவங்கினாள். என்னதான் மகள் பயந்தாலும் இது கணவனிடம் மறைக்கும் விசயம் அல்லவே! வரட்டும். பேசி முடிவெடுக்கலாம் என்றவாறே இரவு உணவை தயாரித்து முடித்தபிறகும் கணவன் வந்தபாடில்லை.மாதவனுக்கு தனியார் அலுவலகத்தில் வேலை. சிலசமயங்களில் வேலை முடிந்து வர இரவு பத்து மணியாகிவிடும். இன்று வேலை அதிகமோ? இன்னும் வரவில்லையே! ஒன்பது மணிக்கு மகளுக்கு சாப்பாடு கொடுத்து படுக்கவைத்தாள்.

“படிச்சது போதும்! தூங்கு!”
“எக்ஸாம் இருக்கும்மா! நிறைய படிக்கணும்.”
“காலையில எழுந்து படிச்சிக்கலாம். உடம்புக்கு போதுமான அளவுக்கு ரெஸ்ட் கொடுக்கணும். அமைதியாய்த் தூங்கு”.“அம்மா! ஏதாவது ஐடியா கிடைச்சுதா?”“ம்! நாளைக்கு காலையில சொல்றேன்! தூங்கு! - என்று மகளின் அருகே அமர்ந்து மெதுவாய் தட்டிக் கொடுக்க, மெல்ல மெல்ல உறங்கிப் போனாள் பிருந்தா! இரவு பதினோரு மணிக்கே வீடு திரும்பிய மாதவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“இந்தச் சனியன்பிடிச்ச வேலையை என்னிக்கு விட்டுத் தொலைக்கிறேனோ அன்னிக்குத்தான் எனக்கு நிம்மதி! நாங்க என்ன மனுஷனா மிஷினா? சக்கையாய் பிழிஞ்சிடுறானுங்க! சீக்கிரமா வேற வேலையை தேடணும்” - உடை மாற்றும் போதும் சாப்பிடும் போதும் அவன் புலம்பித் தீர்த்துவிட, மணிமேகலை வாயைத் திறக்கவேயில்லை.இரவு படுத்தபிறகே மெதுவாய் ஆரம்பித்தாள். “என்னாங்க! நாளைக்கு கொஞ்சம் லேட்டா வேலைக்கு போக முடியுமா?”“ஏன்?”“இல்ல! பிருந்தாவோட ஸ்கூல்ல…”“இதோ பாரு! சும்மாவே எம்மண்டை காயுது. இதுல நீ வேற இன்னும் டென்ஷனாக்காதே!  என்ன? பேரண்ட்ஸ் மீட்டிங்கா? நீயே போயிட்டு வா! இன்னும் ஒரு வாரத்துக்கு என்னை தொந்தரவு படுத்தாதே” - என்று திரும்பிப் படுத்துக் கொண்டவன் சற்று நேரத்தில் உறங்கியும் விட, மணிமேகலையால் உறங்க முடியவில்லை. கட்டிலில் அமர்ந்து விடியவிடிய சிந்தித்து ஒரு முடிவை எடுத்தாள்.

மறுநாள் பள்ளிக்கு புறப்பட்ட பிருந்தா வியப்பாய்க் கேட்டாள்.“என்னம்மா சொல்றீங்க? நீங்களும் என்கூட ஸ்கூலுக்கு வர்றீங்களா?

“இல்ல! நீ வேன்ல போ! நான் பஸ்ல வர்றேன் பிருந்தா. உன் வேன் வர்றதுக்குள்ள நான் உன் ஸ்கூலக்கு போயிடுவேன். ஸ்கூலுக்கு வெளியே நிக்கிறேன். நீ அந்தப் பையன் யாருன்னு அடையாளம் காட்டிட்டு போ! வேனைவிட்டு இறங்கியதும் திரும்பிக்கூட பார்க்காம கிளாஸ்க்கு போயிடு. சரியா?”

“ம்மா! என்னம்மா பண்ணப் போறீங்க?” - தயக்கமும் ஆர்வமுமாய் கேட்ட மகளின் தோளில் தட்டிக் கொடுத்தாள்.“நான் உன் அம்மாடா! அம்மாவுக்கு தன் புள்ளைய எப்படி பாதுகாக்கணும்னு தெரியும். போ! நல்லா எக்ஸாம் எழுது. உன் கவனம் முழுக்க படிப்புல மட்டும்தான் இருக்கணும். சரியா?

“சரிம்மா!” - என்று புறப்பட்டவளை பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு காலியாய் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள் மணிமேகலை. பத்தாவது நிமிடம் பிருந்தாவின் பள்ளியை அடைந்து வரிசையாய் நின்ற மரத்தடியில் வாசலை பார்த்தவாறே ஒதுங்கி நின்று கொண்டாள். அவளுக்கு முன்னே இரண்டு இருசக்கர வாகனங்கள் நின்றிருக்க, அதன் அருகே இரு வாலிபர்கள் நின்றிருந்தனர்! வாலிபர்கள் அல்ல… மீசை கூட சரியாக முளைக்காத சிறுவர்கள் எனலாம்.

தலைமுடியை தாறுமாறாக கொத்திவிட்டு ஏனோதானோவென்றிருந்தவர்களை கண்டதும் மணிமேகலை இனம் கண்டுகொண்டாள். இருவரில் ஒருவன்தான் தன் மகளை மிரட்டியவன்! மற்றவன் இவனை ஊக்குவிக்க வந்தவனாக இருக்க வேண்டும்! வேன் வரட்டும் என்று காத்திருக்கையில் இருவரில் ஒருவன் உரக்க குரல் கொடுத்தான்.

“ஏய்… உன் ஆளோட வேன் வருதுடா!” - என்றதும் மற்றவன் சட்டைப் பையிலிருந்த சீப்பை எடுத்து தன் பரட்டைத் தலையை வாரிவிட, மணிமேகலையின் பார்வை கூர்மையானது. அது பிருந்தாவின் வாகனம்தான். கண்ணாடி ஜன்னல் வழியே அன்னையை கண்டு கொண்ட பிருந்தா தன் ஜடையை சரி செய்வதாய் பாவனை செய்து தன் ரிப்பனை தொட்டுக்காட்ட மணிமேகலை சுதாரித்துக் கொண்டாள்.சிவப்பு நிற ரிப்பன்! சிவப்பு சட்டை அணிந்தவன் பள்ளியை நோக்கி நடக்கத் துவங்க, உடன் வந்தவன் வாழ்த்தி அனுப்பினான். “மச்சான்! தைரியமாப் போ! ஓ.கே. சொல்லிடுவா” - என்றதும் பெருமையாய் புன்னகைத்தவாறே புறப்பட்டவனை குரல் கொடுத்து நிறுத்தினாள் மணிமேகலை.

“தம்பி! ஒரு நிமிஷம்! - என்றதும் திரும்பினான். முகத்தை சுருக்கி குழப்பமாய் பார்த்தான்.“தம்பி! நீ இந்த ஸ்கூல்லயா படிக்கிற?” - எனக் கேட்டவாறே அவனை நெருங்கி நின்றாள் மணிமேகலை.“இல்லையே?”“அப்புறம் ஸ்கூல்ல உனக்கு என்ன ேவலை?”“அலோ! நான் எங்கே வேணா போவேன்? நீங்க யாரு?”“நான் பிருந்தாவோட அம்மா!” - மணிமேகலை நேராய் சொல்ல, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சில கணமே தடுமாறினான் அவன். உடனேயே சமாளித்துக் கொண்டு கோணலாய் சிரித்தான்.

ஓ! மிரட்டுறதுக்கு வந்தீங்களா?” “சேச்சே! நான் ஏம்ப்பா உன்னை மிரட்டணும்? என்னவோ எம்பொண்ணை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னியாமே! எதுக்கு அவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? நல்ல பையனா இருந்தால் கல்யாணத்தை பத்தி பேசலாம்னுதான் வந்தேன். ஆமா! நீ என்ன படிக்கிற?” - மணிமேகலை நிதானமாய்க் கேட்க அவனது முகம் மாறியது. “எ… என்ன?”“என்ன படிக்கிறன்னு கேட்டேன்.

ஸ்கூலுக்க போறியா? காலேஜிக்கு போறியா?”
“நான்… படிக்கல…”
“ஏன்?”“அ...து…”
“ஓ! படிப்பு மண்டையில ஏறலையா? படிக்க வேண்டிய வயசில ஸ்கூலுக்கு ஒழுங்காய் போனால்தானே படிப்பு வரும். இப்படி வெட்டியாய் சுற்றினால் எப்படி படிப்பாய்?”
“அ… லோ! நீங்க…”“அட இருப்பா! நான் பேசிடுறேன். எம்பொண்ணு இப்பதான் ப்ளஸ்டூ படிக்கிறா. இப்பவே கல்யாணம் பண்ணினால் உன்னைத் தூக்கி ஜெயில்ல போட்டுடுவாங்க. அப்புறம் எம்பொண்ணு தெருவில நிக்கணும்.” - மணிமேகலை சாதாரணமாய்ச் சொல்ல, அவனது முகம் வெளிறிப் போனது.

“என்ன? ஜெயிலா?..”“அட ஆமாப்பா! உனக்கு சட்டம் தெரியாதா? போக்சோ சட்டத்தில் உள்ளே போனேன்னுவை எப்பத் திரும்புவியோ எப்படித் திரும்புவியோ! எதுக்கு வம்பு? பேசாம நான் சொல்றமாதிரி செய்யுறியா?”“எ… என்ன செய்யணும்?”“எம்பொண்ணு ப்ளஸ் டூ முடிச்சதும் நீட் எக்ஸாம் எழுதப்போறா! அதுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்கிறாள். எப்படியும் பாஸ் பண்ணிடுவா. அப்புறம் அஞ்சு வருஷம் படிப்பு.. பயிற்சி அது இதுன்னு எப்படியும் ஏழெட்டு வருஷம் ஆயிடும். நீ அதுவரைக்கும் வெயிட் பண்ணுவியா? இப்படியே இல்ல.

ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு அவளை மாதிரியே நீட் எக்ஸாம் எழுது. அட்லீஸ்ட் ரெண்டு டிகிரியாவது முடிச்சிட்டு கௌரவமான ேவலையில சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கு. அதுக்கப்புறமா என் வீட்ல வந்து ெபாண்ணு கேளு! நானே எம்பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” - மணிமேகலை நிறுத்த, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “ஆனா ஒன்னு! இதெல்லாம் நடந்து முடியுறவரைக்கும் நீ எம்பொண்ணை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. இப்படி ஸ்கூல் வாசல்ல வந்து நிக்கிறது… ஃபாலோ பண்றது… பேசுறதுன்னு எதுவும் வெச்சுக்கக் கூடாது. என்ன சொல்ற? உன்னால படிக்க முடியுமா?”

“அய்யே… இது சரிவராது மாமூ! என்னவோ பெரிய உலக அழகிய பெத்து வெச்சிருக்கிற மாதிரி இந்தம்மா சீன் போடுது. நமக்கென்ன ஊருல வேற பொண்ணா கிடைக்காது. வாடா போலாம்! படிக்கணுமாம்… வேலைக்கு போவணுமாம், அவன் எரிச்சலாய் முனகிக் கொண்டே தன் வாகனத்தில் ஏறி அமர, மற்றவனும் அதை ஆமோதித்தவாறே வாகனத்தில் ஏறிக் கொள்ள, அடுத்த நிமிடம் இருவரும் காணாமல் போயினர்.மாலை பள்ளிமுடிந்து வீடு திரும்பிய பிருந்தா உற்சாகமாய் தாயைக் கட்டிக் கொண்டாள்.

“என்ன மம்மி பண்ணீங்க? அந்த பையன் ஈவ்னிங் வரலையே!”“அவனுக்கு புரியுற பாஷையில புரிய வைத்தேன். இனிமே வரமாட்டான்.”“தேங்க்யூம்மா! இப்பதான் மைண்ட் ரிலாக்ஸா இருக்கு. ”“சரி! இனிமே எதைப்பத்தியும் கவலைப்படாமல் படிக்கணும். எந்த பிரச்னை என்றாலும் முதல்ல அம்மாகிட்ட வந்து சொல்லிடணும். அம்மான்றவ உங்களை பெத்து வளர்க்கிறவ மட்டுமில்ல… உங்களோட கேடயம்! பாதுகாப்பு கவசம்! புரியுதா?”“புரியுதும்மா!” - ஆமோதிப்பாய் தலையசைத்து அன்னையை அணைத்துக் கொண்டாள் பிருந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்