SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A-Z

2022-07-14@ 17:27:23

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா


கடந்த இதழ்களில் ஆண்களின் ஒவ்வொரு உடைகள் பற்றி அலசி ஆராய்ந்தோம். அதாவது அவர்கள் அலுவலகம் செல்லும் போது அணிய வேண்டிய உடைகள். நண்பர்கள் மற்றும் கேஷ்வலாக இருக்கும் போது என்ன மாதிரியாக தங்களின் உடைகளை தேர்வு செய்யலாம் என ஒவ்வொரு விசேஷத்திற்கு ஏற்ற உடைகள் குறித்தும் அதற்கான அணிகலன்கள் பற்றியும் விரிவாக எழுதி இருந்தோம். இந்த இதழிலும் ஆண்களின் உடைகளைப் பற்றித்தான் பேசப்போகிறோம். அதாவது  அவர்கள் மிகவும் விரும்பும் உடற்பயிற்சி செய்யும் போது அவர்கள் எவ்வாறு உடைகளை அணியலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கூடைப்பந்து, ஷட்டில், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விளையாடும் போது மட்டும் தான் இது போன்ற உடைகள் அணிய வேண்டும் என்றில்லை. உடற்பயிற்சி செய்வதும் ஒரு வித விளையாட்டு போன்று என்பதால், அந்த நேரத்திலும் விளையாட்டு சார்ந்த உடைகள் அணியலாம். மேலே குறிப்பட்டது போல் ஃபிட்னெஸ் என்பது ஃபேஷனோடு இணைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரிடம். அதாவது நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது அணியக்கூடிய உடைகளில் பல விதமான நன்மைகள் அடங்கி இருக்கிறது. இந்த உடைகள் மிகவும் வசதியானது, எல்லா விதமான சூழலிலும் அணியக்கூடியது மற்றும் இன்றைய நடைமுறைக்கு ஏற்றது.

இன்றைய ஆண்கள் தாங்கள் அணியும் உடை குறிப்பாக விளையாட்டு மற்றும் ஃபிட்னெஸ் உடைகள் கூட ஸ்டைலாகவும் அதே சமயம் தங்களுக்கு நன்றாக பொருந்த வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

துணிகளின் வகைகள்

பெரும்பாலான ஆண்கள் தங்களின் ஸ்போர்ட்ஸ் உடைகள் பாலியஸ்டர், நைலான், ரேயான் மற்றும் ஸ்பாண்டெக்ஸ் போன்ற துணிகளில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காரணம் இந்த உடைகள் உடலோடு ஒட்டிக் கொண்டு இருந்தாலும், சருமத்தை உறுத்தவோ அல்லது பாதிப்பினை ஏற்படுத்தாது. மாறாக இவை மிகவும் சவுகரியமானதாகவும், வியர்வை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க கூடியதாகவும் மற்றும் விளையாடும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ உடலுக்கு நிறைய அசைவுகள் கொடுக்கப்படுவதால், அதற்கு ஏற்ப இந்த உடைகள் உடலை இறுக்கி பிடிக்காமல் இருக்க உதவுகிறது.

செயல்பாடு

வீட்டில் சாதாரணமாக அணியக்கூடிய இந்த உடைகள் ஒருவருக்கு அழகான தோற்றத்தினை அளிப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். காரணம் இந்த உடைகளில் பட்டன்களுக்கு பதில் ஜிப், நாடாக்கள் அல்லது ஸ்னாப்ஸ் என்ற அழுத்தக்கூடிய பட்டன்கள் கொண்டு டிசைன் செய்யப்படுகிறதால், அணிவதும் எளிது. தற்போது வடிவமைக்கப்படும் இது போன்ற சாதாரண பேன்ட்களில் கண்டிப்பாக செல்ஃபோன் வைக்கக் கூடிய பாக்கெட், மறைக்கப்பட்ட ஜிப்கள் மற்றும் பிளீத்தோரா பாக்கெட்கள் என்று சொல்லப்படும் தனிப்பட்ட பாக்கெட் கொண்ட பேன்ட்கள் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் ஃபேஷனாக உள்ளது.

டி-ஷர்ட்

பெரும்பாலான நேரங்களில் குறிப்பாக ஜிம்மிற்கு பயிற்சி செல்ல விரும்புபவர்கள் வட்ட வடிவ கழுத்து மற்றும் உடலை இறுக்கி பிடிக்கக் கூடிய ஃபிட்டான டி-ஷர்ட்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். அதே சமயம் இது காஷ்வலாக அணியக்கூடிய உடை தானே என்று அலட்சியமாகவும் இருந்துவிடக்கூடாது. காரணம் உங்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ற உடையினை அணியாமல் இருந்தால், அது உங்களை மற்றவர்கள் பார்க்கும் போது ஒரு விதமான அழுக்கான தோற்றத்தில் இருப்பது போல் வெளிக்காட்டும். எந்த டி-ஷர்ட்கள் அணியும் போதும், அது உங்களின் உடலின் அளவிற்கு ஏற்ப அணியவேண்டும். அப்போது தான் நீங்கள் உடற்பயிற்சிக் கூடமே சென்றாலும் மற்றவர்களின் பார்வைக்கு அழுக்கான தோற்றமாக தென்படாமல், மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியளிப்பீர்கள்.

உடற்பயிற்சிக்கு செல்லும் போது பெரும்பாலும் சாதாரண டி-ஷர்ட்கள் அல்லது வியர்வையினை உறிஞ்சிக்கொள்ளும் தன்மைக் கொண்டு ஸ்வெட் டி-ஷர்ட்டினை தேர்வு செய்யலாம். அல்லது காஷ்வல் டி-ஷர்ட்களான காலர் கொண்ட டி-ஷர்ட்களையும் அணியலாம். ஆனால் அதே சமயம் உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது விளையாட்டில் ஈடுபடும் போதோ அதற்கான உடைகளை மட்டுமே தேர்வு செய்து அணிவதை வழக்கமாக கொண்டிருங்கள். ஆனால் அதே சமயம் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கேஷ்வல் உடைகளை அணியும் போது, எக்காரணம் கொண்டும் உங்களின் பழைய உடற்பயிற்சி டி-ஷர்ட்களை அணிவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் ஸ்லிட் கட் அமைப்புக் கொண்ட ஸ்வெட் டி-ஷர்ட்கள் அல்லது மிகவும் மெல்லியதாக இருக்கும் டி-ஷர்ட்களை அணியலாம்.

டிராக் பேன்ட்ஸ்

டி-ஷர்ட் அணிந்த பிறகு அதற்கான சரியான பேன்ட்களையும் தேர்வு செய்வது மிகவும் அவசியம். இது போன்ற நேரத்தில் ஸ்வெட் பேன்ட்ஸ், ஜாக்கர்ஸ் அல்லது விளையாட்டின் போது அணியக்கூடிய ஷார்ட்ஸ்களை அணியலாம். அவ்வாறு அணியும் போது, ஸ்லிம் ஃபிட் கொண்ட பேன்ட்டினை தேர்வு செய்யலாம். அவை உங்களின் தோற்றத்தினை மேலும் அழகாகவும், அதே சமயம் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்பதை உணர முடியும். எல்லாவற்றையும் விட உடற்பயிற்சியின் போது நீங்கள் எந்த உடை அணிந்திருந்தாலும், அவை உங்களுக்கு ஃபிட்டாக இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு அணியுங்கள் அப்போது தான் அந்த உடைகள் மிகவும் சவுகரியமாக இருக்கும்.

ஷார்ட்ஸ்

வசதியானது, ரிலாக்ஸ் உணர்வை தருவது, விளையாட்டிற்கு ஏற்றது, இளமையானது மற்றும் மனதினை லேசாக வைத்துக் கொள்ளக் கூடிய உடை என்று பல பெயர்களை அதற்கு சொல்லலாம். ஷார்ட்ஸ் சவுகரியமான உடையா இருந்தாலும் உடற்பயிற்சி கூடத்தில் நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்தால் அதற்கான சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். ஷார்ட்ஸின் நீளம் முட்டிக்கால் கீழ் வரை இருக்க வேண்டும். உடலை இறுக்கி பிடிக்காமல் கொஞ்சம் தளர்வாக காற்றோட்டமாக இருக்கணும். பாக்சர்ஸ் ஷார்ட்ஸ்களை கண்டிப்பாக ஜிம்மில் அணியக்கூடாது. அதேபோல் உடலை இறுக்கி பிடிக்கும் ஷார்ட்ஸ்களை சைக்கிலிங் செய்யும் போது மட்டும் தான் அணிய வேண்டும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அணியக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காலணிகள் (ஷுக்கள்)

உடற்பயிற்சிக்கு என்று குறிப்பிட்ட காலணிகள் தான் பயன்படுத்த வேண்டும். அதாவது ஓட்டப்பந்தயம் அல்லது இதர விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தக்கூடிய ஷூக்களைத் தான் உடற்பயிற்சி செய்யும் போது அணிய வேண்டும். அப்போது தான் நீங்கள் பயிற்சி எடுப்பதற்கு மிகவும் வசதியாகவும் மேலும் பார்க்கவும் நல்ல தோற்றத்தினையும் அளிக்கும். ஸ்னீக்கர் போன்ற ஷூக்களுக்கும் முற்றிலும் ‘NO’ சொல்ல வேண்டும். அந்த ஷூக்களை எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தக்கூடாது.

ஆத்லீச்சர் என்றால்?

ஆத்லீச்சர் என்பது விளையாட்டு துறை மற்றும் சாதாரணமாக அணியக்கூடிய உடைகளின் கலவை. உடற்பயிற்சி செய்யும் போது வசதியாகவும், உடலை இறுக்கி பிடிக்காத வண்ணமும் அதே சமயத்தில் வியர்வையின் கட்டுப்படுத்தக்கூடிய உடைதான் இந்த ஆத்லீச்சர் உடைகள். இதனை விளையாட்டு பயிற்சி செய்யும் போதும் அணியலாம். அதே சமயம் சாதாரணமாக வெளியே செல்லும் போதோ அல்லது வீட்டில் இருக்கும் போது கூட அணியலாம். இந்த உடைகள் தற்போது சமூகவலைத்தளத்தில் மட்டுமில்லாமல் பாப் கல்ச்சரிலும் மிகவும் பிரபலம். விளையாட்டு துறைசார்ந்த உடைகள் எப்போது ஆத்லீச்சர் உடைகளாக பரிணாமம் அடைந்ததோ அன்று முதலே இவை ஃபேஷன் உலகிற்குள் அடி எடுத்து வைத்துவிட்டது என்பது தான் அர்த்தம். அதனைத் தொடர்ந்து பல ஃபேஷன் டிசைனர்கள் இந்த உடைக்கான புது வடிவங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலாடைகள்

ஆத்லீச்சர் உடைகளைப் பொறுத்தவரை அதன் மேலாடைகள் தேர்வு செய்ய நிறைய வகைகள் உள்ளன. பாம்பர் ஜாக்கெட், கிளைம்பர் ஜாக்கெட்  போன்ற உடைகள் அனைத்தும் நாம் நினைச்சு பார்க்க முடியாத நிறங்கள் மற்றும் டிசைன்களில் பரிணாமம் அடைந்த போது அவை அனைத்தும் ஆத்லீச்சர் உடைகளாக மாறுகிறது. இவைகளின் நிறங்கள் மட்டுமில்லாமல் அதில் தேவைக்கு அதிகமான ஜிப்கள், பேன்சி தையல்கள் மற்றும் விளையாட்டு குறித்த டிசைன்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இவை தவிர ஸ்வெட் டி-ஷர்ட்கள் தான் இப்போது ஃபேஷன் டிசைனர்களின் மிகவும் பிடித்த உடையாக மாறிவருகிறது. இருப்பினும் உங்க உடலுக்கு சிக்கென்று பொருந்தக்கூடிய உடையாக அவை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருந்தாலும் அவை சரியான தோற்றத்தினை கொடுக்காது. அதேபோல், விளையாட்டு துறை சார்ந்த டி-ஷர்ட்கள் கண்களைப் பறிக்கக் கூடிய அடர்ந்த நிறங்கள் கொண்டு வரும் போது பார்க்க நேர்த்தியாகவும் அதே சமயம் பளிச்சென்ற தோற்றத்தை அளிக்கும்.

ஆண்களுக்கு பல விதமான ஷர்ட்கள், ஜாக்கெட்கள் இருந்தாலும், விளையாட்டு என்று வந்துவிட்டால் அதற்கு டி-ஷர்ட்கள் தான் மிகவும் சிறந்த உடை. காரணம் டி-ஷர்ட்கள் அணியும் போது மற்ற ஷர்ட்கள் அல்லது சூட் உடைகளுக்கான தனிப்பட்ட அணிகலன்களை அணிய வேண்டும் என்ற அவசியமிருக்காது.

கால்சட்டைகள்

ஆண்கள் அணியும் கால் சட்டைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இரண்டு விருப்பங்கள் மட்டும் தான் உள்ளது. பேன்ட் மற்றும் ஷார்ட்ஸ். குறிப்பாக விளையாட்டு துறையை தேர்வு செய்யும் போது ஸ்வெட் பேன்ட்கள் அதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. ஸ்வெட் பேன்ட்கள் அணியும் போது அதை மெல்லியதாகவும், மிருதுவாகவும் மற்றும் அதன் கஃப் பகுதி எலாஸ்டிக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

சாதாரண நிறங்கள், அளவான டிசைன்கள் இந்த உடைக்கு ஏற்றது. ஸ்வெட் பேன்ட்கள் சரியாக பொருந்தக்கூடிய அளவிலும் அதே சமயம் பாக்சர் ஷார்ட்ஸ் அணிந்து அதற்கு மேல் அணிவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.அதேபோல் ஷார்ட்ஸ் அணியும் போது ஸ்வெட் பேன்ட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும் உங்களின் ஷார்ட்ஸ்அவெட் பேன்ட்களின் துண்டிக்கப்பட்ட உடைபோல் இருக்க வேண்டும்.

காலணிகள்

என்னதான் பளிச்சென்ற உடைகள் அணிந்தாலும், அதற்கேற்ற காலணிகளை அணிந்தால் தான் அந்த உடை முழுமை அடையும். ஆத்லீச்சர் உடைகளுக்கு ஸ்னீக்கர் ஷூக்கள் தான் பெஸ்ட் சாய்ஸ். இரண்டு உடைகளின் கலவை என்பதால், நீங்கள் ஃபார்மல் உடைகளுக்கு அணியக் கூடிய ஷூக்களை தவிர்த்து மற்ற எந்தவிதமான காலணிகளையும் தேர்வு செய்து அணியலாம். ஆனால் அதில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நீங்கள் அணியும் ஷூக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தான்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்