SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!

2022-07-07@ 15:16:58

நன்றி குங்குமம் தோழி

எஸ்.விஜயகிருஷ்ணன்

வங்கிகளின் சேமிப்பு, நடப்புக்கணக்கு, வைப்புக் கணக்கு, பாதுகாப்புப் பெட்டக வசதி, கடன் மற்றும் பற்று அட்டைகள், வெளிநாடு வாழ் இந்தியர் கணக்குகள், பணப்பரிமாற்றங்கள்,  ஏ டி எம் மற்றும் இணையதளச் சேவை என்று வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வங்கிப்பணிகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இனி தொடர்ந்து வங்கிக் கடன்களைப் பற்றி பேசுவோம். கடன் என்பது நிதி உருவாக்கம். கடனாளர் என்பவர் கடன் கொடுப்பவர். கடனாளி கடன் பெறுபவர். வங்கியிடமிருந்து நாம் எந்தெந்த நிதித்தேவைகளுக்குக் கடன் பெறலாம், யார் கடன் பெறலாம், எவ்வாறு கடன் பெறலாம், கடனைத் திரும்பிச் செலுத்தும்முறை, கால அளவு என்னென்ன போன்ற அனைத்து கேள்விகளை தெளிவாகப் புரிந்துகொள்வோம்.

கடன்களின் கால அளவு


குறுகியகாலம், மத்தியகாலம் மற்றும் நீண்டகாலம் என கடன்கள் மூன்று கால அளவுகளில் வழங்கப்படுகின்றன. இதனை கடன் பெற்ற தொகைக் கொண்டு நிர்ணயிக்கப்படும். ஒருவரிடம் பணம் கடனாகப் பெற்று குறிப்பிட்ட காலத்தில் கடனை வட்டியுடன் திருப்பி தரவேண்டும். அவசரத்தேவைக்கு தனிநபரிடம் இருந்து இவ்வாறு கடன் பெறும் போது, வட்டிச் சுமை அவர்கள் வாழ்க்கையில் ஈட்டும் பணத்தின் பெரும்பகுதியை விழுங்கிவிடுகிறத. இந்த நிலையில் இருந்து மக்களை மீட்க கால அளவை நிர்ணயித்து வங்கிகள் கடன் வழங்கத் துவங்கின.

குறுகியகாலக் கடன் (Short  Term  Loan)

இதனை  ரொக்கக் கடன் (Cash Credit) என்பர். ஒருவர் வங்கியிடமிருந்து உரிய ஆவணங்களுடன் கடன் பெற்று மூன்று ஆண்டுகளுக்குள் தவணை முறையில் திருப்பச் செலுத்துவது குறுகியகாலக் கடன். நிறுவனங்கள், வணிகர்கள், தனி நபர்கள் நடப்பு மூலதன தேவைக்காகப் பெறும் கடன். ஒருவர் சணல் பைகள் தயாரிக்கும் தொழில் செய்கின்றார். தொழிலுக்கு தேவையான மூலப்பொட்கள், பைகள் தைக்கும் இயந்திரம், விளம்பரச் செலவு, வண்டி மற்றும் இடத்திற்கான வாடகை, ஊதியம், மின்கட்டணம், குடிநீர், கழிப்பிட வசதி என அனைத்து தேவைக்கான பணத்தினை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நடப்பு மூலதனம் (Working Capital), மற்றொன்று நிலையான முதலீடு (Fixed  Investment). மூலப்பொருட்களை பணம் தந்து வாங்குவோம். அதன் மூலம் நாம் பொருட்களை தயாரித்து சந்தையில் விற்றதும் நாம் போட்ட முதலீடு கிடைத்துவிடும். இது நடப்பு மூலதன சுழற்சி (Working  Capital Cycle). இங்கு பணம் மீண்டும் பணமாக மாறுவதற்கான காலம் குறைவு. இந்த கடனை ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுக்குள் முடித்துவிடலாம்.

இந்தக் கடனை ரொக்கக் கடனாக பெறுவது ஒருவழி. கேட்புக் கடனாக (Demand  Loan) வங்கி வழங்குவது மற்றொரு முறை. கேட்புக் கடனும் குறுகிய காலக் கடன் என்பதால் மூன்றாண்டுகளுக்குள் திருப்பச் செலுத்தவேண்டும். நடப்புக் கணக்கில் குறுகியகாலத் தேவைக்காக அனுமதிக்கப்படும் மிகைப்பற்று (Overdraft), நகைக் கடன் (Jewel  Loan) கேட்புக்கடன் பட்டியலில் வரும். கேட்புக்கடன் என்பது வழங்கிய கடனை வங்கி திருப்பிக் கேட்டவுடன் கடன் மற்றும் அதற்குரிய வட்டி முழுவதையும் உடனே வங்கியில் செலுத்திவிடவேண்டும். என்றாலும் குறுகிய காலக் கேட்புக் கடன் என்பது தனி வங்கிக் கடனுதவித் திட்டமாகும்.

நடப்பு மூலதனத் தேவையின் கணக்கீடு  

சாதாரண நடைமுறையில் நிறுவனத்தின் ஒரு வருட மொத்த விற்பனைத் தொகையில் ஐந்தில் ஒருபங்கு வங்கியிடம் நடப்பு மூலதனக் கடனாக நிறுவனம் பெறமுடியும். மொத்த விற்பனைத் தொகையை கணக்கிடும்போது பொருட்களை விற்பனை செய்த பிறகு வாங்குபவர் 90 நாட்களில் பணம் தருவார் என்னும்போது நிறுவனம் கடனாக வழங்கிய அந்தப்பொருளின் விற்பனையும் ஆண்டு மொத்த விற்பனையாக கணக்கிடப்படும். அதே நேரத்தில் நிறுவனத்துக்கு மூலப்பொருட்களை பிறர் கடனாக வழங்கினால் அதன் தொகை மொத்த விற்பனைத் தொகையில் கழிக்கப்படும். இந்தக் கணக்கீடு தனி நபரின்/ நிறுவனத்தின் / வணிகத்தின் நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

சில தொழிலகங்களில் வருடம்முழுவதும் ஒரே மாதிரியான விற்பனை இருக்காது. உதாரணமாக பட்டாசு தொழிற்சாலை. தீபாவளிக்கு முன்பாக அதிக பட்டாசுத் தயாரிப்பும், விற்பனையும் இருக்கும்.  அதன் பிறகு மூலதனத் தேவை பெருமளவு குறைந்துவிடும். இதைப்போல பணத்தேவை என்பது வணிக நிலை, சூழல்நிலை, தாராளமாகக் கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகும் மூலப்பொருட்கள், அரசின் ஊக்குவிப்பு, திட்டச் செயலாக்கம், இன்னபிற காரணங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

மத்தியகாலக் கடன் (Medium Term  Loan)

மூன்று ஆண்டுகளுக்கு மேலே ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பச் செலுத்தவேண்டிய கடனாகும். சிறு நிறுவனம் துவங்க தேவையான பொருட்களை பெறுவதற்காக வழங்கப்படும் கடனை நிறுவனம் மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு காலத்திற்குள் வங்கியில் திரும்பிச் செலுத்தலாம்.

நீண்டகாலக் கடன் (Long Term  Loan)


கடனைத் திரும்பிச் செலுத்தவேண்டிய கால அளவு ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் எனில் அத்தகைய கடன்களை நீண்ட காலக்கடன் என்று வங்கிகள் நிர்ணயம் செயகின்றன. தனிநபர் கடன் (Personal  Loan), வீடு வாங்க / கட்டுவதற்கான கடன் (Housing  Loan), உற்பத்தி மற்றும் வணிகத்திற்குப் பயன்படும் நிலையான கருவிகள், இயந்திரங்கள், தளவாடங்கள், நிலம், கட்டிடங்கள், இரும்பு / மரச்சாமான்கள், நிலையான சொத்துக்கள் வாங்குவதற்கு வங்கியிடம் கடன் பெரும் தொகை அதிகம் என்பதால், அதனை திரும்பிச் செலுத்துவதற்கும் கால அளவு அதிகம் என்பதால் இவற்றுக்காக வங்கி நீண்டகாலக் கடன் வழங்குகின்றது.

வட்டி வீதம்

மக்கள் வங்கியில் தங்களின் தேவைக்கு ஏற்ற கணக்கைத் துவக்குகிறார்கள். சேமிப்புக் கணக்கு, நிலைவைப்புக் கணக்கு, தொடர்வைப்புக் கணக்கு ஆகியவற்றில் அவர்கள்  செலுத்தும் தொகைக்கு அதிலுள்ள இருப்பு மற்றும் கால அளவிற்கு ஏற்ப வங்கி ‘வட்டி’ செலுத்தும். வைப்புகளுக்கு வட்டி வழங்க வங்கியிடம் பணம் ஏது? வைப்புகளாக வாடிக்கையாளர்களிடம் பெற்ற தொகையில் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசெர்வ் வங்கியின் அனுமதியின்படி ஒரு பகுதியை பொதுமக்களுக்கு அவர்களின் அனுமதிக்கப்பட்ட வணிக / விவசாய / தொழில் / தனிநபர் பயன்பாட்டிற்கு கடனாக வங்கி வழங்கலாம்.

அவ்வாறு வழங்கப்படும் கடன் தொகைக்கு வங்கி வட்டி வசூலிக்கலாம். இவ்வாறு பெறும் வட்டி வருவாயிலிருந்துதான் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிகளுக்கு வங்கி வட்டி வழங்குகின்றது. அதே சமயம் வைப்புகளுக்கு வங்கி வழங்கும் வட்டியின் அளவைவிட வங்கி கடனாளியிடமிருந்து வசூலிக்கும் வட்டியின் அளவு அதிகம். கடன் தொகை, கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டிய கால அளவு சார்ந்தே கடனுக்கான வட்டி விகிதம் வங்கி நிர்ணயிக்கிறது.

விவசாயம், தொழில், சிறு/குறு வணிகம், ஏற்றுமதி, வீட்டு வசதி, அடிப்படைத் தேவைகளை வழங்கும் பணிகள் ஆகிய முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கியால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் சற்று குறைவு. உதாரணமாக பெறுவணிக நிறுவனங்கள் பெறும் கடனுக்கு 14 % முதல்  18 % வரை வட்டி கணக்கிடப்படுகிறது என்றால் விவசாய கடனுக்கு 7% வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அரசுத்துறையில் அங்கீகாரம் பெற்ற இடத்தில் வீடு கட்ட, வீட்டுக்கடனுக்கு 6.5% முதல் 7.00% வசூலிக்கப்படுகிறது. மகளிர் கடன் பெற்றால் அவர்களுக்கு சலுகைகள் உள்ளன.

வங்கிகள் நிலுவையில் உள்ள கடன்

தொகையைக் கணக்கிட்டு அதற்கான வட்டியை ஒவ்வொரு மாத முடிவிலும் அசலோடு சேர்த்துவிடும். அடுத்த மாதம் கடனின் நிலுவைத்தொகை வட்டியோடு சேர்த்து அதிகமாகிவிடும். அதனால் வட்டிக்கு வட்டியினை தவிர்க்க கடனாளி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும் வட்டித்தொகையை தவறாமல் செலுத்திட வேண்டும்.

வீட்டுக்கடன்

வீடு கட்ட / வாங்க பெரும் கடனை நிலையான வட்டி வீதத்தின்படியோ (Fixed  Interest  Rate) அல்லது மிதக்கும்  வட்டி வீதத்தின்படியோ (Floating  Rate) நாம் செலுத்தலாம்.

(அ) நிலையான வட்டி வீதம்

கடனைத் திரும்பிச் செலுத்தும் காலம் முழுவதும் கடன் தொகைக்கான வட்டி ஒரே வீதத்தில் கணக்கிடப்படும். சந்தையின் பணவீக்கம், அரசு மற்றும் ரிசெர்வ் வங்கி அறிவிக்கும் வங்கி வட்டிவீத மாற்றங்கள் ஆகியவை இதனைப் பாதிக்காது. அந்தந்த காலத்தில் செயலில் உள்ள வட்டிவிகிதத்தினைவிட சற்று அதிகமாக (+ 1% அல்லது 2 %) இருக்கும்.

(ஆ) மிதக்கும் வட்டி வீதம் (Floating Rate of Interest)  

அரசு / ரிசெர்வ் வங்கி நிர்ணயிக்கும் வங்கி வட்டி வீதம், சந்தைகளின் நிலைக்கேற்ப வங்கிகள் திட்டமிட்டு அறிவிக்கும் வட்டி வீதம் ஆகியவற்றையொட்டி இதன் வட்டி வீதம் அமையும். கடன் வழங்கும் வங்கிகள் தனது அடிப்படை வட்டி வீதத்தை மாற்றும்போது அதற்கேற்ப கடனுக்கான வட்டி வீதமும் மாறும். பத்து வருடங்களுக்குள் திரும்பிச் செலுத்தவேண்டிய கடன் என்றால் நிலையான வட்டி வீதத்தையும் அதற்குமேல் கால அளவு என்றால் மிதக்கும் அல்லது மாறக்கூடிய வட்டி வீதத்தையும் தேர்ந்தெடுப்பது நல்லது.

கடனைத் திரும்பிச் செலுத்துதல் (Repayment of  Loan)

வங்கியில் நாம் பெற்ற கடனை உரிய காலத்திற்குள் திரும்பிச் செலுத்த பல அளவீடுகள் உள்ளன.  

(1) மொத்தமாகக் காலமுதிர்வில் செலுத்துவது

கேட்புக்கடன் பெறுபவர்கள் திரும்பிச் செலுத்த கால அளவு 36 மாதங்கள் என்றால் அந்த முதிர்வுக் காலத்தில் அசல் மற்றும் வட்டியையும் சேர்த்து வங்கியில் செலுத்தவேண்டும். கடனாளி இடையில் தம்மிடம் பணமிருந்தால் கடனில் செலுத்துவதற்குத் தடையில்லை. செலுத்தும் தொகையின் கழிவு போக மீதமுள்ள அசல் தொகையின்மேல்தான் வட்டி கணக்கிடப்படும்.

(2) கடனின் அசல் தொகை

அப்படியே இருக்க வட்டியை மட்டும் உரிய காலத்தில் செலுத்தி அசல் தொகைக் கடனைப் புதுப்பிப்பது அந்தந்த மாதம் கணக்கிடும் வட்டியை மட்டும் வங்கியில் செலுத்திவிட்டு அசல் தொகைக் கடனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு கடனைப் புதுப்பிக்க தொடர்ந்து வணிகம் / விவசாயம் /தொழில் செய்வதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், வரவு, செலவு லாபமீட்டும் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை கடனைத் திருப்பிக்கட்டவேண்டிய முதிர்வு காலத்திற்கு முன்பே வங்கிக்கு வழங்கி கடனைப் புதுப்பிக்க / அதிகரிக்க / குறைக்க விண்ணப்பிக்க வேண்டும்.

மிகைப்பற்றுக் கடன் நடப்புக் கணக்காளருக்கு (Current  Account  Holder) வழங்கப்படுகிறது. கடன்தொகையின் உயர்மட்ட அளவினை வங்கி நிர்ணயிக்கும். அதற்கு மிகாமல் கணக்கிலிருந்து பணம் பெறலாம். உதாரணமாக ஒருவருக்கு 5 லட்சம் கடன் என்றால் அவர் அந்தத் தொகைவரை கடனாகப் பணம் பெறலாம். பணம் பெற்றபின் இரண்டு நாட்களில் 3 லட்சம் அவர் செலுத்திவிட்டால், மீதமுள்ள கடன் தொகையான 2 லட்சத்திற்குத்தான் வட்டி கணக்கிடப்படும். அடுத்தநாள் 1 லட்சம் வேண்டுமெனில் தன் மிகைப்பற்று கணக்கிலிருந்து பணமாக அல்லது காசோலையாக/ பணம் அனுப்புதல் (Remittance) மூலமாக பெறலாம்.

(3) சமமான மாதாந்திரத் தவணைகளில் கடனைச் செலுத்துவது (EMI)


கடனை நாம் மாதா மாதம் ஒரு தொகை செலுத்தி அடைப்பது. இதன் மூலம் அசல் மற்றும் வட்டி இரண்டையும் தவணை முறையில் செலுத்தவேண்டும். இவை இரண்டைக் கொண்டு தான் EMI நிர்ணயிக்கப்படுகிறது. கடனை செலுத்த வேண்டிய கால அளவு முதலில் வரையறுக்கப்படும். அதாவது அசல் மற்றும் வட்டி எவ்வளவு என்பதை கணக்கிட்டு மொத்தம் செலுத்தவேண்டிய தொகையை குறிப்பிட்ட மாதங்களால் வகுத்து EMI எவ்வளவு என்று வங்கி தெரிவிக்கிறது.

வீடுகட்ட வாங்கும் கடனை இருபது ஆண்டுகாலத்தில் திரும்பிச் செலுத்த வேண்டும் என்றால், 240 மாதங்களுக்கு EMI நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்கம் முதல் கடனின் முதிர்வுக்காலம் வரை ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டிய தொகை சமமாக இருக்கும். இவ்வாறு செலுத்தும்போது அசலுக்கு எவ்வளவு செல்கிறது, வட்டிக்கு எவ்வளவு செல்கிறது என்று நாம் கணக்கிட்டால் வட்டிக்குச் செல்லும் தொகைதான் அதிகமாக இருக்கும். அசல் தொகை நாம் பணம் செலுத்தச் செலுத்த குறைந்துகொண்டு வரும்போது மாதா மாதம் வட்டியும் குறையும்.  

EMIல் கடனைத் திரும்பிச் செலுத்தும்போது கடன் சுமை குறையும். சுலபமாக திருப்பிச் செலுத்தலாம். மாத வருமானம் பெறுபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். ஒவ்வொரு மாதமும் வங்கிக்குச் செல்லவேண்டிய தேவையுமில்லை. இணையத்தின் வாயிலாகவோ அல்லது மின்னணுத் தீர்வின் (Electronic Clearing  System - ECS) வழியாகவோ மாதத் தவணைத் தொகையை வங்கியில் கடன் கணக்கில் செலுத்திவிடமுடியும். கடன் தொகை, வட்டி விகிதம், கடனைத் திரும்பிச் செலுத்தவேண்டிய காலஅளவு, கடன் பெற்றவரின் வருமானம் ஆகிய காரணிகள் ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டிய தவணைத் தொகையை நிர்ணயிக்கின்றன. வங்கிக்கடன் திட்டங்கள், அதன் விளக்கங்கள், கடனுக்கான ஆவணங்கள், பிணையங்கள், விண்ணப்பித்துக் கடன்பெறும் முறை ஆகியவை குறித்து தொடர்ந்து  பார்க்கலாம்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்