SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தனின் தலையில் 108 நத்தைகள்

2022-06-23@ 17:16:55

நன்றி குங்குமம் தோழி

எப்போதுமே வளர்ந்த கவிஞர்களை விட, வளரும் கவிஞர்களின் எழுத்துக்கள் பல கனவுகளையும், மகிழ்ச்சியையும், எளிமையின் அழகையும் நமக்கு சுலபமாக கடத்திவிடுகிறது. அப்படித்தான் இந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயதே ஆன தனிக்‌ஷா பாரதியின் கவிதைகளும் வாழ்வின் எளிமையான அழகியலை ஒரு குழந்தையின் பார்வையில் நமக்கு காட்டுகிறது.

இவருடைய தந்தை கவிஞர் இரா. பூபாலன். அம்மா ரத்னம். தனிக்‌ஷா சுமார் ஐந்து வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை அன்றாடம் ஆக்கிக்கொண்டுள்ளார். 12 வயதில் இருந்து எழுதவும் ஆரம்பித்திருக்கிறார். இவருடைய சொந்த ஊர் பொள்ளாச்சி. ‘‘நான் என்னுடைய ஐந்து வயதில் இருந்தே, பள்ளி பாட புத்தகங்களை தாண்டி குழந்தைகளுக்கான கதை, கவிதை புத்தகங்களை படிக்க தொடங்கிவிட்டேன். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழி புத்தகங்களையும் படிப்பேன். அப்பா வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பியதும், ஏதாவது ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கிவிடுவார்.

நானும் அதே போல என் அப்பாவைப் பார்த்து தான், எனக்கு கிடைக்கும் நேரத்தை டிவி மற்றும் செல்போனில் வீணாக்காமல் நல்ல புத்தகங்களை தேடி கண்டுபிடித்து வாசிக்க தொடங்கினேன். எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவல் என்னை மிகவும் கவர்ந்தது. பார்ப்பவர்களிடமெல்லாம் இந்த நாவலைப் பற்றி நிச்சயம் பேசி விடுவேன். அதே போல எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள் என்றால் அது பாரதியார் தான். கவிஞர் சிற்பி மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் கவிதைகளும் சமீபத்தில் வாசித்ததில் எனக்குப் பிடித்தமானவை. என் அப்பா இரா. பூபாலன் அவர்களுடைய கவிதைகளுக்கும் என் மனதில் தனி இடம் உண்டு.

மழை தினந்தினம் படிக்கிறது
பழுப்பு இலைகளின்
பசுமைக் கதைகளை.

பொதுவாக சின்ன வயசில் இருந்தே, நான் எப்போது கதை சொல்ல சொன்னாலும், என் அப்பா ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளை சொல்லுவார். எப்படி உங்களுக்கு இவ்வளவு கதைகள் தெரிகிறது ... உங்களுக்கு இந்த கதைகளை எல்லாம் யார் சொல்லியது என்று அப்பாவிடம் ஒரு முறை கேட்டேன். அப்போது அவர், ‘இந்த கதைகளை எல்லாம் நான் புத்தகங்களில் இருந்து தான் கற்றுக்கொண்டேன்’ என்றார். அப்போது, நானும் நிறைய புத்தகங்கள் படித்தால் எனக்கும் நிறைய கதைகள் தெரிய வரும் என்ற ஆர்வத்தில்தான் நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன்.

பின்னர் நானும் என் அப்பாவும் சேர்ந்து பல புத்தகங்கள் படிக்க தொடங்கினோம். என் அப்பாவின் ‘பொம்மைகளின் மொழி’ எனும் கவிதை புத்தகத்தின் அட்டைப்படத்தில் என்னுடைய புகைப்படம்தான் இருக்கும். அப்போது எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும். என்னுடைய புகைப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டு அந்த புத்தகத்தைதான் நான் முதல் முறையாக படித்தேன். அந்த வயதில் எனக்கு எழுத்துக் கூட்டிதான் படிக்க தெரியும். ஆனால் வளர்ந்ததும் மீண்டும் அதே புத்தகத்தைப் படித்து பார்த்து வியந்து போனேன். என் அப்பாவின் எழுத்தை முதலில் படித்து அதனால் வாசிப்பின் மீது ஆர்வம் உண்டாகியதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்.  

குவளையில் விழுந்த
ஒரு துளி மழை    
சர்க்கரை இல்லாமலே ருசிக்கிறது.

தினமும் பாடபுத்தகங்களை தாண்டி ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துவிடுவேன். தினமும் ஒரு பத்து நிமிடமாவது படித்தால்தான் மனதுக்கு திருப்தி கிடைக்கும். தோணும் போதெல்லாம் படிப்பேன், தோணும் போதெல்லாம் எழுதுவேன். அட்டவணை போட்டு எல்லாம் எதுவும் செய்வது கிடையாது. தினமும் இவ்வளவு வாசிக்க வேண்டும் அல்லது இவ்வளவு எழுத வேண்டும் என்ற இலக்கும் எதுவும் இல்லை. இந்த வாசிப்பையும் எழுத்தையும் நான் சாப்பிடுவது தூங்குவது போல, அன்றாட ஒரு செயலாகத்தான் பார்க்கிறேன்” என்ற இந்த குட்டி கவிஞர் தன் கவிதை தொகுப்பு பற்றி விவரித்தார்.

“புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்... லாக்டவுன் சமயத்தில் தான் இதை எழுதினேன். அந்த நேரம் ஆன்லைன் வகுப்பு என்பதால், ப்ரீடைம் நிறைய இருக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் எழுதுவேன். மேலும் அப்பாவுக்கும் வர்க் ஃப்ரம் ஹோம் என்பதால், அவரும் ஆன்லைனில் வேகமாக  வேலையினை முடித்திடுவார். அதன் பிறகு நானும் அப்பாவும் ஒன்றாக சேர்ந்து படிப்போம். அப்படி ஒரு நாள் என் அப்பா வாசித்துக்கொண்டிருக்கும் போது, நான் அவரை படிக்கவிடாமல் அவருடன் விளையாடினேன். கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த அவர், என்னை அழைத்துக் கொண்டு போய், என்னிடம் பாஷோ இதழில் வெளியாகியிருந்த கவிதைகளை காட்டினார்.

அந்த இதழின் மூலமாகத்தான் எனக்கு ஹைக்கூ கவிதைகளின் அறிமுகம் கிடைத்தது. நான்கே வரிகள் இருக்கும் ஹைக்கூ கவிதைகள் ஆரம்பத்தில் எனக்கு புரியவே இல்லை. அப்பா தான் எனக்கு பல கவிதைகளை விளக்கினார். ஆனால், அவருடைய விளக்கத்தைக் கேட்டு அந்த கவிதைகளை மீண்டும் படித்த போது அதன் அர்த்தம் புரிந்தது. பக்கம் பக்கமாக கவிதை வரிகளை எழுதாமல், நாலே வரிகளில் நச்சென்று இருந்த அந்த கவிதைகள் எனக்கு ரொம்பவே பிடிச்சு போனது. அன்று இரவுக்குள் ஒரு ஹைக்கூ கவிதையாவது நிச்சயம் எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் எப்போதுமே என்ன எழுதினாலும் அதை என் அப்பாவிடம் தான் முதலில் காட்டுவேன். அவர் நான் எழுதும் கதைகளை படித்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு. ஆனா இன்னும் நல்லா எழுது” என்று தான் சொல்வார். அப்படித்தான் முதல் முறையாக அன்று நான் எழுதிய ஹைக்கூ கவிதையான

‘‘உலகைத் துறந்த
புத்தனின் தலையில்
108 நத்தைகள்’’


எழுதி அப்பாவிடம் காண்பித்தேன். ரொம்ப நல்லா இருக்கு என்றவர், மேலும் கவிதைகளை எழுத சொல்லி ஊக்குவித்தார். அதுமட்டுமில்லாமல் நான் எழுதிய கவிதைகளை மற்ற கோணத்தில் விளக்கவும் செய்தார். அப்போது தான் எனக்கே என் எழுத்து மீது நம்பிக்கை அதிகரித்தது. இன்னும் நன்றாக எழுத வேண்டும்... நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை உருவானது.

மதியவேளை நகர்கிறது
சாலை மரங்களின்
சலசலப்பு ஓசையுடன்.


நான் இந்த புத்தகத்திற்காக எதுவுமே எழுதவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வெளியிடப் போகிறேன் என்று கூட எனக்கு தெரியாது. நான் எனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் சுமார் 300 ஹைக்கூ கவிதைகளை ஆறு மாதத்தில் எழுதினேன். அந்த 300 கவிதைகளில் இருந்து எழுத்தாளர் மு.முருகேஷ் குறிப்பிட்ட சில கவிதைகளை மட்டும் இந்த புத்தகத்திற்காக தேர்ந்தெடுத்தார். பாஷோ இதழின் ஆசிரியர் கவினும் இந்த புத்தகம் வெளி வர மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார்’’ என்று கூறும் தனிக்‌ஷாவுக்கு வாசிப்பு எழுத்தை தவிர, கதை சொல்வதிலும் ஆர்வம் அதிகம். அதற்காக ஒரு யுடியூப் சேனலே வைத்திருக்கிறார்.

அதிகாலை விற்பனையில்
தலைமீது
மலர்ந்து பொங்கும் பூக்கூடை.


“கதை சிறகுகள் என்ற யுடியூப் சேனலை நான் ஊரடங்கில் தான் ஆரம்பித்தேன். அதில் குழந்தைகளுக்கான கதைகள், சின்ன சின்ன சுவாரஸ்யமான தகவல்களை பகிர்வேன். எப்படி என் அப்பாவிடம் கதை சொல்லி கேட்பேனோ, அதே போல நான் படிக்கும் கதைகளையும் என் நண்பர்களுடன் பகிரும் பழக்கம் எனக்கு இருந்து வந்தது. லாக்டவுனில் நண்பர்களை சந்திக்க முடியவில்லை. அவர்களுக்கு பதிலாக யுடியூபில் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அப்பா எடிட் செய்ய உதவினார். இப்போது நானே ரெக்கார்ட் செய்து அதை எடிட் செய்து அப்லோட் செய்ய தொடங்கிவிட்டேன். நான் நிறைய பேசுவேன். நான் நேரில் பார்ப்பதை, மனதில் நினைப்பதை எல்லாம் பேசிக்கொண்டே இருப்பேன். அதே பேச்சை இப்படி எழுத்துக்கள் மூலமாக சின்ன சின்ன அழகான ஹைக்கூ கவிதைகளாக வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதால் நான் எழுதவே ஆரம்பித்தேன்” என்ற தனிக்‌ஷா அடுத்ததாக சிறுகதை தொகுப்பை எழுதி வருகிறார்.

சமையல்களை அனுமதியின்றி
சாப்பிடும் அணில்களை
எந்த மரமும்  பகைப்பதில்லை.

‘‘சொல்லப் போனால் நான் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதற்கு முன்பிருந்தே கதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். எனது கதைகளுக்கு பரிசும் வாங்கி இருக்கிறேன். நான் எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் முழுக்க முழுக்க மந்திரம், மாய உலகம், பேசும் மிருகங்கள், ராஜா ராணி என நிஜ உலகத்தில் எதையெல்லாம் பார்க்க முடியாதோ அதையெல்லாம் என் கதை உலகத்தில் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் அது ஒருகதை தொகுப்பாக வெளியாகும் என்று நம்புகிறேன்.

கண்ணுக்குள் விழுந்த மழைத்துளி
கண்ணீராகிக் கசிகிறது.


பள்ளி புத்தகங்களின் மூலமாக மட்டுமல்லாமல்,  மற்ற புத்தகங்களின் வழியாக தான் நம்முடைய அறிவு தெளிவாகிறது. வாசிப்பு என்பது பள்ளி புத்தகத்துடன் நின்றுவிடக்கூடாது என்று அப்பா அடிக்கடி சொல்வார். பள்ளி புத்தகங்கள் படிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மற்ற புத்தகங்களையும் வாசிப்பதை எல்லாரும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கதை புத்தகங்களைப் படிப்பதால் நம் நினைவாற்றல் பெருகும். மேலும் நவீன உலகின் மற்ற பொழுது போக்குகளையும் விட வாசிப்பு ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் உபயோகமான நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கிறது. இதனால் வாசிப்பு மிகவும் அவசியம். மேலும் வாசிப்புப் பழக்கம் புதிய சிந்தனைகளையும் உற்சாகத்தையும் தருகிறது” என்று ஒரு சின்ன அறிவுரையுடன் முடிக்கிறார். என்றும் பழுக்கா மாங்காய்ப் பிஞ்சுகள்சேலைகளை அலங்கரிக்கின்றன. வாசிப்பு, எழுத்து தவிர தனிக்‌ஷாவிற்கு அறிவியல் மீதும் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக முறையான பரதநாட்டியமும் கற்று வருகிறார். நல்ல ஓவியரும் கூட.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்