SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளை குதூகலமாக்கும் பட்டாணி சமையல்

2022-06-21@ 17:36:06

நன்றி குங்குமம் தோழி

பச்சைப் பட்டாணியில் கிட்டத்தட்ட 1300 இனங்கள் உள்ளது. பச்சைப் பட்டாணிக்கு தோட்டப் பட்டாணி, இனிப்பு பட்டாணி, இங்கிலீஷ் பட்டாணி என்றும் பெயர்கள் உண்டு. எல்லா காய்கறிகளையும்விட ஊட்டச்சத்து மிகுந்தது. பச்சைப் பட்டாணியில் பலவித ஆரோக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளதால், குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதும் கூட. மேலும், தற்போது பள்ளி திறக்க இருக்கும் நிலையில் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு லஞ்ச் மற்றும் ஸ்னாக்ஸாக கொடுத்து அனுப்பலாம். பலவிதமான சுவையான பட்டாணி உணவுகளை தோழிகளுக்காக வழங்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் இளவரசி.

பச்சைப் பட்டாணி பால் கூட்டு  

தேவையானவை :

பச்சைப் பட்டாணி - 1 கப்,
தேங்காய் துருவல்  - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல்  - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சைமிளகாய் - 2,
முந்திரிபருப்பு - 6.

செய்முறை :

தேங்காய் துருவலில் 2 முறை பால் எடுத்து இரண்டாம் பாலில் பச்சைப்பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிதளவு தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி விழுது, வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பின் இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளித்து பட்டாணி கூட்டில் சேர்க்கவும்.

பட்டாணி புலாவ்  

தேவையானவை :

பச்சைப் பட்டாணி -1/2 கப்,
அரிசி - 1 கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
புதினா,
மல்லி - சிறிதளவு,
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்,
சோம்பு - 1/4 ஸ்பூன்,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு,
ஏலம் - 1,
உப்பு - தேவையான அளவு,
நெய்,
எண்ணெய் - தேவையான அளவு,
முந்திரிபருப்பு - 5-8.

செய்முறை :

அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் பட்டை, கிராம்பு, ஏலம், சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பச்சைமிளகாய், புதினா, மல்லி சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி தேங்காய்ப்பால், உப்பு, சேர்க்கவும். நன்கு கொதித்ததும் பச்சைப் பட்டாணி, அரிசி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு தூவி பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி லட்டு  

தேவையானவை :

பச்சைப் பட்டாணி - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

ஒரு அடிகனமான வாணலியில் தேங்காய் துருவல் மற்றும் மிக்ஸியில் அடித்த பச்சைப் பட்டாணியை சேர்த்து கிளறவும். தேங்காய் நன்றாக வதங்கி பட்டாணியுடன் ஒன்றாக சேரும்போது, ​​சர்க்கரை சேர்த்து கிளறவும். 2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். பட்டாணி கலவை ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இறக்கவும். இளஞ்சூடாக இருக்கும் பொழுது கைகளில் நெய் தடவிக்கொண்டு, ​​லட்டுகளாக பிடிக்கவும். சத்தும் சுவையும் நிறைந்த  பச்சைப் பட்டாணி லட்டு தயார்.

பச்சைப் பட்டாணி பூரி

தேவையானவை :

கோதுமை மாவு - 1 கப்,
பச்சைப் பட்டாணி - 1/4 கப்,
உப்பு - தேவையான அளவு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

பச்சைப் பட்டாணியை உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு சேர்த்து பிரட்டி பட்டாணி கலவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து சிறிய வட்டங்களாக தேய்த்து பூரிகளாக பொரித்து எடுத்து நமக்கு விருப்பமான கிரேவியுடன் பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி பேபி உருளை வறுவல்  


தேவையானவை :

பச்சைப் பட்டாணி - 1 கப்,
பேபி உருளை - 150 கிராம்,
மல்லித் தழை - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 6,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பச்சைப் பட்டாணி, உப்பு, பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தழை சேர்த்து 3/4 பதமாக வேகவைத்து ஆறியபின் அரைத்துக் கொள்ளவும். பேபி உருளையை வேகவைத்து ஆறிய பின் தோல் உரித்து முள் கரண்டியால் குத்தி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பேபி உருளை, உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து சிவக்க வதக்கவும். நன்றாக வதங்கிய பின் பட்டாணி கலவை சேர்த்து வதக்கவும். பேபி உருளை, பட்டாணி கலவை ஒன்று சேர்ந்து வதங்கிய பின் இறக்கவும். சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட சுவையும், மனமும் நிறைந்த அருமையான தொடுகறி தயார்.

பச்சைப் பட்டாணி காளான் சுக்கா

தேவையானவை :

பச்சைப் பட்டாணி  - 1 கப்,
காளான் - 200 கிராம்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 1,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 3/4 டீஸ்பூன்,
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:

பச்சைப் பட்டாணியை 1/2 வேக்காடாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். காளானை சுத்தம் செய்து சிறியதாகக் நறுக்கி கொள்ளவும். பின்னர்  வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்தூள், மல்லித்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் காளான், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி வெந்த பின்னர் கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கி மல்லித்தழை தூவி இறக்கவும்.

பச்சைப் பட்டாணி சீஸ் தோசை

தேவையானவை :

பச்சைப் பட்டாணி - 1/2 கப்,
தோசை மாவு - 1 கப்,
சீஸ் - தேவையான அளவு,
கேரட்,
முட்டைக்கோஸ் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பீன்ஸ் - 1/4 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து ஆறியபின் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், உப்பு சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். பட்டாணி கலவையை தோசை மாவில் கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை ஊற்றி மூடி வைத்து பாதி வெந்த பின் காய்கறி கலவையை பரவலாக தூவி விடவும். துருவிய சீஸை பரவலாக சேர்க்கவும். மல்லித்தழை தூவி சிறு தீயில் வைத்து வேக விட்டு எடுத்து சூடாக பரிமாறவும். காலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.

பச்சைப் பட்டாணி குழம்பு


தேவையானவை :

பச்சைப் பட்டாணி - 1 கப்,
வெங்காயம் - 1,
இஞ்சி,
பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

வறுத்து அரைக்க :

மிளகாய் வற்றல் - 6,
மல்லி - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்

செய்முறை :


வறுத்து  அரைக்க தேவையான பொருட்களை இளஞ்சிவப்பாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சைப் பட்டாணி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.

மட்டர் மலாய்

தேவையானவை :

சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய்  - 1 நறுக்கியது,
சிறிய துண்டு  இஞ்சி - நறுக்கியது,
2-3 பெரிய பூண்டு - நறுக்கியது,
ஏலக்காய்  - 2,
வெங்காயம்  - 1 நறுக்கியது,
முந்திரி - 2 டீஸ்பூன்,
கசகசா -  1 டீஸ்பூன்,
பால் - 1/4 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
பச்சைப் பட்டாணி - 1 கப்,
கிரீம் - 1/4 கப்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் தாளித்து, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், முந்திரி மற்றும் கசகசா சேர்க்கவும். வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் நன்கு ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  அரைத்த மசாலா சேர்த்து, பச்சை வாசனை முழுவதுமாக போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் ஊறிய பச்சைப் பட்டாணி  சேர்த்து வேகவைக்கவும். வெந்த பின்னர் கிரீம் சேர்த்து கலக்கவும். வாணலியை மூடி, சிறு தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். கரம் மசாலா தூவி இறக்கவும். சப்பாத்தி, ரொட்டி உடன் பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி பாக்கெட்ஸ்


தேவையானவை:

பச்சைப் பட்டாணி - 1 கப்,
கோதுமை மாவு - 1 கப்,
வெங்காயம் - 1 நறுக்கியது,
இஞ்சி,
பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவை உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்து லேசாக மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய் தூள், உப்பு, கரம்சாலா சேர்த்து வதக்கவும். மசித்த பட்டாணி சேர்த்து சிறு தீயில் வதக்கி மல்லித் தழை தூவி இறக்கி ஆறியபின் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கோதுமை மாவை உருட்டி சதுர வடிவில் தேய்த்து நடுவில் பட்டாணி கலவையை வைத்து மூடி எண்ணெய் தொட்டு லேசாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்