SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் ரேசர் நிவேதிதாவுக்கு நள்ளிரவில் நடந்த சம்பவம்

2022-06-10@ 17:29:35

நன்றி குங்குமம் தோழி

தேசிய அளவில் இரண்டு முறை சாம்பியன் பட்டங்களை வென்றவர் பைக் ரேசர் நிவேதிதா ஜெஷிகா. மே மாதம் 10ம் தேதி இரவு தனது டுவிட்டர் பக்கத்தில், பணி முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் முன்பின் தெரியாத ஒரு நபர் தன்னை வழிமறித்து அத்துமீறியதைப் பதிவிட்டதுடன், அந்தப் பதிவை முதல்வர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்கும் ஹாஸ்டேக் செய்திருந்தார். அவரின் பதிவு வெளியான ஒருசில மணி நேரத்தில் தமிழகக் காவல் துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், குற்றவாளியை மே 17ம் தேதி புறநகர் பகுதியான சென்னை எண்ணுரில் வைத்து பிடித்தனர்.

பைக் ரேசர் நிவேதிதா ஜெஷிகாவிற்கு என்னதான் நடந்தது என அவரிடம் பேசியபோது...என் வீடு இருப்பது ஆதம்பாக்கம். வழக்கம் போலவே அன்றைய தினமும் நான் என் வேலைகளை முடித்துவிட்டு, அண்ணா நகரில் இருந்து இரவு என் வீடு இருக்கும் ஆதம்பாக்கத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்தேன். அப்போது நடு இரவு மணி 12:30 இருக்கும். அசோக் பில்லரைத் தாண்டும்போது யாரோ ஒரு நபர் என்னை பைக்கில் பின்தொடர்வதுபோல் உணர்ந்தேன். ஆனாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், என்னைப்போல் அந்த வழியில் பயணிப்பர் என நினைத்து இயல்பாக வண்டி ஓட்டினேன். ஆனால் அந்த நபரின் பின் தொடர்வில் மனசுக்குள் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

கத்திப்பாரா பாலம் ஏறும்போது சந்தேகத்தின் பேரில் என் வண்டியின் வேகத்தை வெகுவாகக் குறைத்தேன். அப்போது அந்த நபர் என் முன்னால் கடந்து சென்றதுடன், அவனும் தன் வண்டியின் வேகத்தைக் குறைத்து என்னை திரும்பிப் பார்த்தான். அவன் என்னைத்தான் பின் தொடர்கிறான் என்கிற சந்தேகம் எனக்கு உறுதியானது.

ஆலந்தூர் மெட்ரோ மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால், அவனை என்னவெனக் கேட்கலாம் என நினைத்து வண்டியை ஓரமாக நிறுத்தினேன். ஆனால் அவன் அங்கு நிற்காமலே நேராகச் சென்றுவிட்டான். இடது பக்கமாகத் திரும்பி சப்வேக்குள் இறங்கி மேலே ஏறி நேராகச் சென்றால் 500 மீட்டர் தூரத்தில் என் வீடு. ஆனால் அந்த நேரத்தில் அந்த ரோடு ரொம்பவே அமைதியாக இருந்தது.

மீண்டும் அவன் நம்மை பின் தொடர்ந்தால் என்ன செய்வது என நினைத்த நிலையில், என் வீட்டுக்கு தகவல் சொல்வதற்காக, வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டே பையில் இருந்த என் கைபேசியை எடுத்தேன். அப்போது அந்த நபர் சட்டென எங்கிருந்து என் முன்பு வந்தான் என நான் சுதாரிப்பதற்குள், என் கையை பிடித்து இழுக்க, என் வண்டி லேசாகக் கீழே சாய்ந்தது. கைபேசி கைநழுவி சற்று தொலைவில் விழ, நான் என் வண்டியை சட்டென நிறுத்தினேன். அவன் என்னை கடந்து வேகமாக முன்னால் சென்றுவிட்டான்.

நான் சுதாரித்து எழுந்து, என் மொபைலை வேகமாக எடுத்து என் பேக்கில் போட்டுவிட்டு வண்டியை  ஸ்டாட் செய்யும் நேரத்தில் மீண்டும் எதிர் பக்கமாகத் திரும்பி வந்தவன், எனதருகில் கிட்டே வந்து, நான் அப்படித்தான் செய்வேன்... நீ என்ன செய்வ என சொல்லிவிட்டு கிளம்ப எனக்கோ கோபம் தலைக்கேற, அவன் வண்டியின் நம்பர் பிளேட்டை போட்டோ எடுக்க முயற்சிக்க அப்போதுதான் கவனித்தேன் அவன் வண்டி நம்பர் பிளேட் இல்லாமலே இருப்பதை.

இரவு நேரத்தில் தனியாக வரும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து அத்துமீறியதும் இல்லாமல், நான் அப்படித்தான் செய்வேன் என்றால் என்ன அர்த்தம். அவன் நோக்கம்தான் என்ன? அவன் எதற்காக என்னை பின் தொடர்ந்தான். திருட வந்தவனாக இருந்தால் என் மொபைல் கீழே விழுந்தபோதே எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். அல்லது என்னிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அவன் நோக்கம் அதுவாகவும் தெரியவில்லை. வேறென்ன காரணம் என்று யோசித்த நிலையிலே, அந்த இரவிலும் துணிச்சலோடு அவன் சென்ற வழியாக பாலம் வரை அவன் தென்படுகிறானா என பார்த்துக் கொண்டே சென்றேன். ஒருவேளை அவன் தென்பட்டால், வழியில்தான் காவல் நிலையம் இருக்கிறது.

யாரையாவது கத்தி அழைக்கலாம் என அப்போது நினைத்தேன்.  ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவனைக் காணவில்லை. அந்த நேரத்தில் எனக்கு எஸ்.ஓ.எஸ். காவலன் செயலி நினைவில் இருந்தாலும், என் மொபைலை ஸ்விட்ச் ஆன் செய்து செயலியை தேடி நுழைவதற்கான நேர இடைவெளி குறைவாக இருந்தது. சட்டென மொபைலில் இருந்த பாதுகாப்பு எண் 112க்கு அழைத்தேன். என் அவசரத்துக்கு அது பெரிதாக பயனளிக்கவில்லை.

வீட்டிற்கு அருகில் இருந்த ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றேன். அப்போது நடுநிசி மணி 1:30 நெருங்கியது.முன்பின் தெரியாத ஒரு நபரால் எனக்கு நடந்த அத்துமீறலை காவல் நிலையத்தில் கூறியதோடு, எந்த நோக்கத்தில் அவன் என் பின்னால் வந்தான்? நாளையும் நான் பணிகளை முடித்து வீடு திரும்பும்போது அவன் என்னை இதேபோல் தொடரும் நிலை வரக்கூடாது என என் நிலையைக் கூறினேன். அப்போது ஒரு கான்ஸ்டபிள் சம்பவம் நிகழ்ந்த இடம்வரை என்னுடன் வந்து, அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை நோட் செய்துகொண்டதுடன், காலையில் காவல் நிலையம் வந்து புகார் எழுதிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்.

தூக்கத்தில் இருக்கும் பெற்றோரை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, நடந்த சம்பவம் குறித்து எதுவும் வீட்டில் சொல்லாமலே தூங்கச் சென்றேன். இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம்  எதுவும் எனக்கு நேர்ந்ததில்லை. எனக்கு நடந்ததுபோல் நாளையே வேறொரு பெண்ணுக்கு நேரலாம் என்பதால், எனக்கு நேர்ந்ததை அனைவருக்கும் தெரியப்படுத்த நினைத்து, சம்பவத்தை அப்படியே விவரித்து டுவிட் செய்ததுடன், அதை  முதல்வர், மினிஸ்டர், கமிஷனர் போன்றவர்களுக்கு ஹேஸ்டேக் செய்த பிறகே தூங்கச் சென்றேன். அதிகாலை காவல்துறை என்னை தேடி வீட்டிற்கு வந்தபிறகே எனக்கு நேர்ந்த சம்பவம் பெற்றோருக்கே தெரியவந்தது. புகாரை எழுதி வாங்கிய காவல்துறையினர்,  அன்றே சி.சி.டி.வி புட்டேஜ்களை கலெக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும், எப்படியும் அவனை பிடித்துவிடலாம் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்.

ஆனால் குறிப்பிட்ட அந்த குற்றவாளியின் இரு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை. அத்துடன் அவன் தன் முகத்தை மறைப்பதற்காக ஹெல்மெட் வேறு அணிந்திருந்ததால் அவனை உடனடியாக கண்டுபிடிப்பது காவல் துறைக்கு ரொம்பவே சவாலாக இருந்தது. என் டுவிட்டர் பதிவைப் பார்த்த அஸிஸ்டென்ட் கமிஷனர், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர், போலீஸ் அபீஸியல்ஸ், மினிஸ்டர் போன்றவர்கள் என்னை கைபேசியில் அழைத்து சம்பவத்தை கேட்டதுடன், எஸ்.ஓ.எஸ். செயலியை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்கள்.

கைபேசியில் என்னிடம் பேசிய அசிஸ்டென்ட் கமிஷனர், ஆதம்பாக்கம் முதல் அண்ணா நகர்வரை வழியில் இருக்கும் அனைத்து சிசிடிவி புட்டேஜ்களையும் சேகரித்து குற்றவாளியை தேடி வருவதாகவும் எப்படியும் பிடித்துவிடுவோம் என்றும் என்னிடத்தில் தெரிவித்தார். என்னுடைய குறிப்பிட்ட டுவிட்டர் பதிவில், என்னைப்போல் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கீழே வந்து கமெண்ட் செய்ததுடன், அவரவருக்கு நேர்ந்த சம்பவங்களையும் வெளிப்படுத்தி, பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

சம்பவத்தை வெளியில் சொன்னால் நம் அடையாளத்தை வெளிப்படுத்திவிடுவார்கள். நமக்கு அசிங்கம் என்றெல்லாம் பெரும்பாலான பெண்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்த மாதிரியான குற்றச் சம்பவங்களை புகாராகக் கொடுத்தால்தான் குற்றவாளி தவறு செய்ய அடுத்து பயப்படுவான். உடனடியாக காவல் நிலையம் செல்ல முடியாதவர்கள் எஸ்.ஓ.எஸ் காவலன் செயலி அல்லது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புகாரைப் பதிவு செய்யலாம் என்றவர், இந்த மாதிரியான விசயங்களில் பெண்கள் தைரியமாக செயல்பட்டு, பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்தால்தான் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அழுத்தமாக.

இது நம்ம ஊர்!  நம்ம சிட்டி! தலைநகரில் நாம் ரொம்பவே பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்தே பல இரவுகளில்  அசால்டாக பயணித்தேன். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மண்டைக்குள் மணி அடிச்சுறுக்கு என்றவர், பணி நிமித்தமாக பெண்கள் இரவு நேரங்களில் பயணிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்ட நிலையிலும், பாலியல் ரீதியாக எந்த அசம்பாவிதம் நிகழ்ந்தாலும், சமூகம் பெண்கள் மீதே இன்னும் குற்றம் சுமத்துகிறது.

நீ ஏன் அந்த நேரத்தில் வண்டியில் தனியாக அங்கு சென்றாய் என்ற கேள்வியை தவிர்த்து, அவன் ஏன் அந்த நேரத்தில் அங்கு வந்தான் எனக் கேட்டால் பெண்கள் சந்திக்கும் பெரும்பாலான பாலியல் அத்துமீறல்களுக்கு மாற்று கிடைக்கும் என விடைபெற்றார்.அவரைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க துரிதமாகச் செயல்பட்ட ஆதம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ரெத்தினகுமாரிடம் பேசிய போது...

எங்கிருந்து அவன் என்னை பின் தொடர்கிறான் என எனக்குத் தெரியாது. ஆனால் அசோக் பில்லர் வரும்போதுதான் என்னை ஒருவன் பின்தொடர்கிறான் என உணர ஆரம்பித்தேன் என ஆரம்பித்து தன்னை அவன் ஓடும் வண்டியில் கையை பிடித்து இழுத்து கீழே விழவைத்தான் என்கிற அந்த சம்பவத்தை விவரித்து பைக் வீராங்கனை நிவேதிதா ஜெஷிகா ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் இருந்தது. அதில் இருந்த காட்சிப் பதிவுகளில் அவன் வண்டியில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெளிவானதுடன், வண்டியில் ஹெட் லைட்டும் இல்லை எனத் தெரிய வந்தது. குற்றவாளி ஹெல்மெட் வேறு அணிந்திருந்தான். நிவேதிதா அண்ணா நகரில் கிளம்பிய இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கலெக்ட் செய்து கவனிக்கத் தொடங்கினோம். ஆனால் அந்த பதிவுகளில் குறிப்பிட்ட ஆள் பின் தொடர்ந்த காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் மதுரவாயலில் இருந்து வரும் சாலை நூறடி ரோட்டில் சேரும் மேம்பாலம் அருகே அந்த பெண் வரும்போது அவர் முன்னே செல்ல குறிப்பிட்ட நபர் பின்னால் வருகிறான்.

குறிப்பிட்ட அந்த இடத்திற்கு முன்னால் அண்ணா நகரில் உள்ள சிசிடிவி பதிவுகளைப் பார்த்தால் அதில் அவன் இல்லை. அவன் மதுரவாயலில் இருந்து வந்து ஏறும் மேம்பாலத்திற்கு எங்கிருந்து வருகிறான் என மதுரவாயல் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து பின்னோக்கி போனால், அவன் நொளம்பூரில் தெருத்தெருவாக எங்கெல்லாமோ தனி நபராகவே செல்லும் புட்டேஜ்கள் வருகிறது. மதுரவாயலில் இருந்து நொளம்பூருக்குள் நுழைவதும் திரும்பவும் நொளம்பூரில் இருந்து மதுரவாயல் நோக்கி செல்வதுமான பதிவுகள் இருந்தது. மீண்டும் மதுரவாயலில் இருந்து எம்எம்டிஏ செல்கிறான்.

ஒரு இடத்தில் மட்டும் இவன் பின்னாடி ஒரு நபரை உட்கார வைத்து செல்லும் புட்டேஜ் இருந்தது. அந்த நபர் யார்? எங்கு இறங்கினார் எனப் பார்த்தபோது, அவர் ஒரு காம்ளெக்ஸில் இறங்கி உள்ளே செல்கிறார். அவரைத் தேடிச் சென்றபோது, ஓலோ பைக் டாக்ஸி மூலம் அவரை அவன் டிராப் செய்தது தெரிய வந்தது. உடனடியாக ஓலோ நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவன் குறித்த தரவுகளை கலெட் செய்தோம். அவன் புளியந்தோப்பைச் சேர்ந்த, பைக் டாக்சியில் பணிபுரிந்துவரும் சந்திரகாசன் எனவும், அவனுக்கு வயது 34 திருமணம் ஆனவன் எனவும் தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் ஃபுட் டெலிவரி, குட்ஸ் டெலிவரி செய்வதுடன், அவ்வப்போது பைக் டாக்ஸி புக் செய்யும் நபர்களையும் பிக்கப் டிராப் செய்தும் வந்திருக்கிறான். அதனால்தான் ஒரு இடத்தில் நிற்காமல் எப்போதும் வண்டியில் சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறான்.

அவனை தேடும் பணியில் கிட்டதட்ட 110 சிசிடிவி புட்டேஜ்களைப் பெற்று   பார்க்க நேர்ந்தது. தொடர்ந்து அவனை டிராக் செய்ததில் அவன் புளியந்தோப்பு, வியாசர்பாடி, புது வண்ணாரப்பேட்டை அப்படியே எண்ணூர் சென்றுகொண்டு இருந்தான். எப்படியும் மதிய உணவுக்கு எண்ணூரில் எங்காவது வண்டியை நிறுத்துவான் என  காத்திருந்து அதன்படியே அவனை பிடித்தோம். இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்களை இந்த மாதிரி பின் தொடர்ந்து டீஸ் செய்வதை ஒரு வேலையாக தொடர்ந்து செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது என விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்