SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!

2022-06-07@ 17:51:49

நன்றி குங்குமம் தோழி

எஸ்.விஜயகிருஷ்ணன்

‘‘வெறுங்கை என்பது மூடத்தனம்; உன் விரல்கள் பத்தும் மூலதனம்: கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன் கைகளில் பூமி சுழன்று விழும்” என்னும் கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் வரிகள் நமக்கு உலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நமது வெற்றி நமது கைகளில். நமது வளம் நமது உள்ளத்தில். எவற்றையும் அறிந்துகொள்ளும் ஆவல் மட்டும் போதாது. முயன்று அறிந்து தெரிந்து தெளிந்தால்தான் நமது வாழ்க்கைப் பயணத்தின் சுமை நீங்கும், வாழ்க்கையினைப்  பசுமையாக்கும். வெளிநாட்டில் வசிப்போர் இந்திய வங்கியில் கணக்குத் துவக்கி நடத்தும் வழிமுறைகளைக் குறித்து கடந்த இதழ்களில் பார்த்தோம். இது குறித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்வதற்கு முன் சில கேள்விகளுக்கான பதில்களை பற்றி பார்ப்போம்.

நாம் எந்த வங்கியில் என்னென்ன கணக்குகளைத் துவக்கி நடத்தலாம்? ஒவ்வொரு வங்கியும் நம்மை அணுகி தங்கள் வங்கியில்தான் கணக்குத் துவங்கவேண்டும் என்று வேண்டிக் கேட்கும் காலமிது. வங்கி வாடிக்கையாளரைத் தேர்வு செய்யும் காலம் மாறி வாடிக்கையாளர் வங்கியைத் தேர்ந்தெடுக்கும் காலம் நம் கைகளில். வங்கிகளின் மூலதனமே நாம் தான். முதலில் நமக்கு என்ன நிதிச்சேவை தேவை என்பதை முடிவு செய்து அதனை முழுமையாக வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

வங்கியில் வைக்கவேண்டிய குறைந்த வைப்பு (Minimum Balance), வட்டி விகிதம், சேவைத் திட்டங்கள், கணக்குப் பராமரிப்புக் கட்டணங்கள், ஏ.டி.எம் அட்டை, கடன் அட்டை ஆகியவற்றில் உள்ள பயன்பாட்டுச் சலுகைகள், அவற்றின் கட்டணங்கள், வங்கியின் இருப்பிடம், தேவையான இடங்களில் உள்ள ஏ.டிஎம் மையங்கள், இணையத்தின் மூலமாகப் பெறும் சேவைகள் அவற்றுக்கான கட்டணங்கள் போன்றவற்றை நாம் முழுமையாகத் தெரிந்துகொண்டு வங்கிச் சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

*ஏற்கனவே வாடிக்கையாளர்களாக இருப்பவரிடம் வங்கியின் சேவைக் குறித்துக் கேட்டு அறியலாம்.

*அந்தந்த வங்கியின் இணையப்  பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை படித்து விவரங்களை புரிந்துகொள்ளலாம்.    

*பொருளாதாரம் குறித்து பத்திரிகையில் வங்கி பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் வங்கியின் பங்கின் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.

*வங்கிப் பணியாளர்களிடம் பொறுமையாகப் பேசி நமக்குத் தேவையான விவரங்களை அறியலாம்.

*வங்கியில் நாம் கணக்குத் துவக்கிய சில மாதங்களிலேயே அந்த வங்கியின் சேவையைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டவை தவிர தனிநபர் அல்லாத நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அமைப்புகள் அனைவரும் அவரவர் சூழலுக்கு ஏற்ப வங்கிச் சேவையைத் தேர்ந்தெடுக்கலாம்.

வெளிநாடுவாழ் இந்தியர் கணக்குகள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் கணக்குத் துவக்கி நடத்துவதற்காக நடைமுறையில் உள்ள வங்கிச் சேவைகள் குறித்து மேலும் சில விவரங்கள்.

என்.ஆர்.ஓ (NRO - Non-Resident Ordinary Account) கணக்கிலிருந்து பெறும் வட்டிக்கு இந்தியாவில் வருமான வரி செலுத்தவேண்டும். வரிச்சுமை இல்லாத என்.ஆர்.ஓ கணக்கு உள்ளதா என்றால், உள்ளது.

வரிப்பிடித்தம் இல்லாத என்.ஆர்.ஓ கணக்கின் விவரங்கள் 

என்.ஆர்.ஓ வரி சேமிப்புத் திட்டம் (NRO Tax savings scheme). இந்தத் திட்டம் நிலைவைப்பாகும் (Fixed Deposit). இந்த வைப்பின் கால அளவு ஐந்து ஆண்டுகளாகும். காலமுதிர்விற்கு முன் பணம் எடுக்க முடியாது. அவ்வாறு பணமெடுத்தால் வைப்பின் மூலம் பெறும் வட்டிக்கான வருமானவரி செலுத்தவேண்டும். மேலும் இந்த வைப்பின் மீது கடன்பெறமுடியாது. இந்த நிலைவைப்பை நாம் அல்லது மற்றவர் பெறும் கடனுக்குப்  பிணையமாகத் (Security) தரமுடியாது.

வெளிநாட்டில் வாழ்பவர்களின் குடும்பத்தினர்/உறவினர் இந்தியாவில் வசிக்கின்றனர் என்றால் அவர்கள் அந்த வெளிநாடுவாழ் நபரின் கணக்கிலிருந்து அவரின் அனுமதியுடன் அவர் செலுத்தும் பணத்தினை உடனடியாகப் பெறலாம். அதற்காக வழங்கப்படுவதுதான் என்.ஆர்.ஐ குடும்ப அட்டை (NRI  Family Card).

என்.ஆர்.ஐ குடும்ப அட்டை  

பத்து வருடங்களுக்குச் செல்லுபடியாகும் இது பற்று அட்டையாகும் (Debit Card).  இந்த அட்டை இந்தியாவில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வழங்க விண்ணப்பிக்க வேண்டும். அட்டையினைப் பெறும் குடும்ப உறுப்பினரின் முகவரி, இருப்பிடச் சான்று, புகைப்படச் சான்று ஆகியவற்றை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு வழங்கவேண்டும். வங்கியிடமிருந்து இந்த அட்டையைப் பெற்றவுடன் இதன் எண்களை கணக்கு வைத்துள்ள வெளிநாடுவாழ் இந்தியருக்குத் தெரிவிக்கவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியர் தனது கணக்கில் இந்த அட்டையை இணையத்தின் மூலம் இணைக்கலாம். இந்த அட்டையில் ரூ.100/- முதல் ரூ.100000/- வரை அவர் இருப்பாக வைக்கலாம். அவசரத் தேவைகளுக்கு ஏ.டி.எம் மையங்களில் இந்த அட்டையைப் பயன்படுத்திப் பணம் பெறலாம். மேலும் வணிக வளாகங்கள், கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொருமுறை இந்த அட்டையைப் பயன்படுத்திச் செலவழிக்கும்போது, உரிமையாளருக்கு பணமெடுத்த தொகையின் விவரங்கள் மின்னஞ்சல் வழியாகச் சென்றடையும். கணக்கிற்கு இணையவழிச் சேவை வழங்கப்பட்டிருப்பதால் அதன் மூலம் இருப்பில் உள்ள தொகையை அறிந்துகொள்ளலாம். இணையத்தில் e-card என்னும் தடத்தில் Prepaid Card  என்னும் இடத்தின் கீழ் இதன் விவரங்களைக் காணலாம். இதற்கான ஆண்டுக் கட்டணம் ரூ.100/- வங்கியால் வசூலிக்கப்படும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவினைப் பூர்வீகமாகக் கொண்டு அயலகத்தில் வசிப்பவர்கள் என்.ஆர்.ஓ, என்.ஆர்.இ (NRE - External) மற்றும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (FCNR-B) இந்திய வங்கியில் துவக்கி நடத்தலாம். ஆனால் தனியாகக் குடியிருப்பாளர் (Resident Account) கணக்கினைத் துவக்க இயலாது. அவரின் பெயரினை இரண்டாவது விண்ணப்பதாரராக அமைத்து முதலாவது நபராக இந்தியாவில் வசிக்கும் உறவினரைச் சேர்த்துக் கணக்கினைத் துவக்கலாம்.  

இந்தியாவில் வேலைவாய்ப்பில் உள்ள வெளிநாட்டவர் தனியாகக் குடியிருப்பாளர் கணக்கினை வங்கியில் துவக்கலாம், ஆனால் என்.ஆர்.இ, என்.ஆர்.ஓ கணக்குகளைத் துவக்க  முடியாது.  தனியாகக் குடியிருப்பாளர் கணக்கினை வைத்துள்ள இந்தியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர் பணி முடிந்து வெளிநாடு செல்லும்போது அந்தக் கணக்கினை என்.ஆர்.ஓ கணக்காக மாற்றி வரவு செலவுகளை ஆறு மாதங்கள்வரை தொடரலாம். அந்தக் கால அளவிற்குப் பிறகும் தொடர இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி வேண்டும்.  

இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் என்.ஆர்.ஓ கணக்கினைத் துவக்கலாம். ஆனால் தனியாகக் குடியிருப்பாளர் கணக்கினையோ, என்.ஆர்.இ கணக்கினையோ ஆரம்பிக்க முடியாது. கணக்கினைத் துவக்க பாஸ்போர்ட் நகல், வெளிநாட்டு முகவரிச் சான்று, இந்தியாவில் கல்வி பயில்வதற்கு அனுமதிக்கப் பட்டதை உறுதிசெய்யும் கல்வி நிறுவனத்தின் கடித நகல், கணக்குத் துவக்குபவரின் புகைப்படம் ஆகியவற்றை வழங்கி கணக்கைத் துவக்கலாம். கணக்கைத் துவக்கிய 30 நாட்களுக்குள் இந்தியாவில் வசிக்கும் இருப்பிட சான்றினை மாணவர் வங்கிக்கு வழங்கவேண்டும். இந்திய இருப்பிடச் சான்று பெறும்வரை அந்தக் கணக்கில் 1000 அமெரிக்க டாலர்வரைதான் வெளிநாட்டிலிருந்து செலுத்தமுடியும்.

மேலும் அந்தக் காலம்வரை மாதம் ரூ.50000/- வரைதான் கணக்கிலிருந்து பணமாகப் பெறமுடியும். இருப்பிடச் சான்று பதிவானவுடன் என்.ஆர்.ஓ கணக்காக இயக்கலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் குறுகியகாலப் பயணம் மேற்கொள்ளும்போது என்.ஆர்.ஓ கணக்கினைத் துவங்கலாம். தனியாகக் குடியிருப்பாளர் கணக்கு, என்.ஆர்.இ கணக்கு துவக்க முடியாது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் எவ்வாறு வங்கியிடமிருந்து காசோலைப் புத்தகம் பெறலாம்?

கணக்கு வைத்துள்ளவர்கள் இணைய வங்கியியல் (Internet Banking) மூலமாகவோ அல்லது காசோலை கேட்டு விண்ணப்பக் கடிதம் வங்கிக்கு அனுப்புவது மூலமாகவோ பெறலாம். மின்னஞ்சல் மூலம் காசோலை புத்தகம் கேட்டுவரும் கோரிக்கைகளை வங்கிகள் ஏற்பதில்லை.

குடியுரிமை வெளிநாட்டு நாணயக் கணக்கு (Resident Foreign Currency Account)   

வெளிநாடுவாழ் இந்தியர்கள் நிரந்தரமாகக் குடியிருக்க இந்தியாவிற்குத் திரும்பியபிறகு தாம் வைத்துள்ள வெளிநாட்டு நாணயமாக உள்ள பணத்தை இந்தியாவில் இந்திய ரூபாயாக மாற்றாமல் பிறநாட்டு நாணயமாகவே வங்கியில் செலுத்திவைக்கும் வசதி உள்ளது. இந்தக் கணக்கிற்கு குடியுரிமை வெளிநாட்டு நாணயக் கணக்கு என்று பெயர்.

இது ஒரு நிலைவைப்புக் கணக்காகும். அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்ட், ஈரோ ஆகிய நாணயங்களில் இந்தக் கணக்கைத் துவக்கலாம். வெளிநாடுவாழ் இந்தியர் தம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை விற்று அதன்மூலம் வரும் பணம் / அவரது வெளிநாட்டுப் பணிக்காகப் பெறும் ஓய்வூதியப் பணம் / வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும்போது தம்முடன் அனுமதிக்கப்பட்டு எடுத்துவந்த அந்நிய நாட்டுப் பணம் அல்லது அந்நியநாட்டுக் காசாக உள்ள பயணக்காசோலை / NRE மற்றும் FCNR-B  கணக்கில் நிலுவையில் உள்ள பணம் ஆகியவற்றை இந்தக் கணக்கில் முதலீடு செய்யலாம்.  இந்த நிலைவைப்பின் கால அளவு குறைந்தது ஒரு ஆண்டு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்.   

வெளிநாட்டில் வங்கிக் கணக்கு

இந்தியாவில் குடியுரிமை பெற்றவர் வெளிநாட்டில் வங்கியில் கணக்கினைத் துவக்கி நடத்த இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் நிலைகளில் அனுமதியளிக்கிறது.  

*இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் கல்வி பயிலச் செல்லும் மாணவர் அங்கு வங்கியில் கணக்கினைத் துவக்கி இந்தியாவில் நடைமுறையில் உள்ள அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (Foreign Exchange Management Act) விதிகளின்படி இந்தியாவிலிருந்து பணம் பெற்று செலவழிக்கலாம்.

*பொருட்களை விற்பதற்காக வெளிநாட்டு வர்த்தகக் கண்காட்சியில் பங்குபெறுவோர் அங்கு வங்கியில் கணக்குத் துவக்கி விற்பனையின்மூலம் பெற்ற பணத்தினை செலுத்தலாம். கண்காட்சி முடிந்த ஒரு மாதத்திற்குள் அந்தக் கணக்கில் நிலுவையில் உள்ள பணத்தினை இந்தியாவில் இயங்கும் தமது கணக்கிற்கு மாற்றிக் கொள்ளவேண்டும்.

*இந்தியாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர் அல்லது இந்தியர் தமது ஊதியத்தினை வெளிநாட்டில் உள்ள தமது வங்கிக் கணக்கில் வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் பெறமுடியும். அதேப்போல் இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர் தமது ஊதியத்தினை வெளிநாட்டில் உள்ள தமது வங்கிக் கணக்கில் இந்திய நிறுவனத்தின் மூலம் பெறமுடியும்.

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை எளிதாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு இந்திய வங்கிகளில் துவக்கி நடத்தப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கணக்கு பெருமளவில் உதவுகின்றது. மேலும் மீண்டும் வெளிநாட்டிற்கே பணத்தைத் திருப்பி அனுப்பவும் இந்திய ரிசர்வ் வங்கி எளிமையான செயல்பாடுகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ளது. என்.ஆர்.இ மற்றும் அயல்நாட்டு நாணயத்தில் உள்ள FCNR -B கணக்கில் செலுத்தப்படும் தொகை மற்றும் வட்டி வருமானத்திற்கு இந்திய வருமான வரிச்சட்டத்தின்படி (Income Tax Act 1961) வருமான வரி செலுத்தவேண்டியதில்லை.

இந்தியாவில் வசிப்பவர்கள் துவக்கி நடத்தும் கணக்குகளைவிட வெளிநாடுவாழ் இந்தியர்களின் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி பொதுவாக பல வங்கிகளில் சற்று அதிகமாக உள்ளது. மேலும் கணக்கு வைத்திருப்பவர் தனக்கான முகவரை நியமித்துக் கணக்கினை நிர்வகிக்கலாம். கணக்கு வைத்துள்ளவருக்கு  அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புப் பெட்டக வசதிகளை பல வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. வங்கியில் ஒருவர் பெற்றுள்ள லாக்கர் வசதியை வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பயன்படுத்தவேண்டும் என்பது வங்கிகள் வகுத்துள்ள விதி. ஆனால் வெளிநாடுவாழ் இந்தியர்களின் லாக்கர்களுக்கு அவர்கள் வழங்கும் கடிதத்தில் குறிப்பிடும் காரணத்தின்படி இந்த விதியில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம் மிகப்பெரிய அளவில் உதவுகின்றது. குறிப்பாக வங்கிகளின் சேமிப்புத் தொகை பெருக்கத்திற்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு மகத்தானது. எனவேதான் இந்திய வங்கிகள் என்.ஆர்.இ கணக்குகளைத் துவக்க பெருமளவில் இலக்குகளை அமைத்து இயங்குகின்றன. இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து வெளிநாடுவாழ் இந்தியர்களும் நிறுவனங்களும் இந்தியாவில் இயங்கும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பணம் 68968 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்தியாவிலிருந்து பிற நாடுகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5710 பில்லியன் அமெரிக்க டாலராகும்.  இத்தகைய சூழலில்தான் ஒருவர் வெளிநாடுவாழ் இந்தியர் என்று நிர்ணயிக்கும் சட்டங்களில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நிதிச் சட்டம் 2020 மற்றும் நிதிச் சட்டம் 2021 ஆகியவை 2020-2021 நிதியாண்டு முதல் அமலாகும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.

ஒரு வருடத்தில் 182 நாட்களுக்குக் குறைவாக இந்தியாவில் தங்கியிருக்கும் இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிற நாட்களில் அயலகத்தில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காகத் தங்கியவர்களை வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்று 31-03-2020 வரை சட்டம் நிர்ணயித்தது. இந்த நாளுக்குப் பிறகு ஒரு வெளிநாடுவாழ் இந்தியரின் இந்திய வருட வருமானம், வருமான வரி விதிக்கப்படவேண்டிய வருட வருமானம், ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமெனில் இந்தியாவில் தங்கியிருக்கும் நாட்களின் அளவை 120 ஆக புதிய சட்டத் திருத்தம் குறைத்துள்ளது. வரிவிதிக்கப்படவேண்டிய இந்தியாவில் ஈட்டும் வருட வருமானம் ரூ.15 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் 181 நாட்கள்வரை ஒரு வருடத்தில் தங்கியிருக்கலாம். அவர்களுக்கான வெளிநாடுவாழ் இந்தியர் என்னும் அங்கீகாரம் மாறாது.  

குடியிருப்பாளராகவும் கருதப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் (Resident but Not Ordinarily Resident’ (RNOR)

வரிசையான 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தவர் அல்லது இதற்கு முந்தைய 7 ஆண்டுகளில் மொத்தமாக 730 நாட்களுக்கும் குறைவாக இந்தியாவில் தங்கிய வெளிநாடு வாழ்பவர் குடியிருப்பாளராகவும் கருதப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் என்று நிர்ணயிக்கப்படுகின்றனர். இவர்கள் வெளிநாட்டில் ஈட்டும் பணத்திற்கு இந்தியாவில் வருமானவரி கிடையாது. மேலும் இவர்களுக்கான வங்கிக் கணக்குகள் விரிவாக மேற்குறிப்பிட்டவையே ஆகும்.

வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் வங்கிகளின் வைப்புத் திட்டங்களையும், வங்கிகள் வழங்கும் பொதுவான சேவைகளைக் குறித்தும் விரிவாகப் பேசினோம். இனி வரும் இதழ்களில் வங்கிகள் வழங்கும் அனைத்துக் கடன் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்வோம். 

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்