SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

கோடைகால குளு குளு ரெசிபீஸ்

2022-05-27@ 17:18:02

நன்றி குங்குமம் தோழி

கோடையில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு, பானங்களால் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகலாம். மசாலா, சூடான, வறுத்த மற்றுப் கனமான உணவை உண்ணுவதால் வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்னைகள் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்க பருவகால கோடைகால உணவு மாற்றம்  மிகவும் அவசியம்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம் என்றாலும், கோடையில் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க சரியான உணவுகளையும் சாப்பிட வேண்டும். இந்த கோடையினை உணவு மூலம் குளுமையாக மாற்ற, அதற்கான குளு குளு உணவினை தோழிகளுக்காக வழங்கியுள்ளார் உணவு ஆலோசகர் கோவர்த்தினி.

பலாப்பழம் புட்டிங்

தேவையானவை:

பலாப்பழம் - 1 கப்,
பால் - 200 மிலி,
கடல் பாசி - 5 கிராம்,
சர்க்கரை - 50 கிராம்.

செய்முறை:

பலாப்பழத்திலிருந்து விதையை நீக்கி துண்டுகளாக வெட்டவும். கடாயை சூடாக்கி அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது அதில் கடல் பாசியைச் சேர்த்து நன்கு கலக்கவும், அது கரைந்துவிடும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது பலாப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை பால் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். புட்டிங் தயார், குளிர்ச்சியாக பரிமாறவும். கடல் பாசி எடையை குறைக்கவும், தோல் மற்றும் முடிக்கு நல்லது. பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும்
அல்சர் பிரச்னையை தடுக்கிறது.

இந்தோ மெக்சிகன் சாலட்

தேவையானவை:

ப்ரோக்கோலி - 1 கப்,
கேரட் - 1 கப்,
பனீர் - 1 கப்,
சிவப்பு குடைமிளகாய்  - 1 கப்,
சோளம் - 1 கப்,
உப்பு - சுவைக்கு ஏற்ப,
மிளகாய் செதில்கள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

காய்கறிகளை துண்டுகளாக நறுக்கவும். சோளத்தை வேகவைத்து தனியாக வைக்கவும். ப்ரோக்கோலியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, வெந்ததும் தனியாக வைக்கவும். ஒரு கடாயில், ஆலிவ் எண்ணெய் சேர்த்து, பின்னர் பனீர், கேரட், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து குறைந்த தீயில் சமைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் அதில் சமைத்த ப்ரோக்கோலி மற்றும் சோளத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது மிளகாய் செதில்கள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. கேரட், குடல் ஆரோக்கியத்தை காக்கவும், கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பனீர், வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும்.

வெள்ளரி மோர்

தேவையானவை:

தயிர் - 1 கப்,
வெள்ளரிக்காய்  - 1/2 எண்ணிக்கை,
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - 1/4 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

வெள்ளரியை துண்டுகளாக நறுக்கவும். புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கவும். இஞ்சியின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் வெள்ளரி, தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்தால், குளிர்ச்சியான மோர் தயார். தயிர், செரிமானத்திற்கு நல்லது. சிறந்த புரோபயாடிக் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வெள்ளரியில் உள்ள நீர்  உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வைட்டமின் கே ரத்தம் உறையவும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆம்லா மோஜிடோ

தேவையானவை:

நெல்லிக்காய் - 8 துண்டுகள்,
எலுமிச்சை - 2,
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப,
உப்பு - இரண்டு சிட்டிகை,
புதினா - 5 கிராம்,
சிவப்பு மிளகாய் தூள் - ஒரு சிட்டிகை,
ஐஸ் க்யூப்ஸ் - தேவையானது.

செய்முறை:  

நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து சிறிது நெல்லிக்காயை சேர்த்து 3 நிமிடம் சமைத்து தனியே வைக்கவும். அதே கடாயில் சர்க்கரை மற்றும் மீதமுள்ள நெல்லிக்காயுடன் தண்ணீர் சேர்த்து, கேரமல் செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் எலுமிச்சையை வாய் முழுவதும் தேய்த்து, இப்போது சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தேய்க்கவும். அதே கிளாஸில் வேகவைத்த நெல்லிக்காய் துண்டுகள், எலுமிச்சை துண்டுகள், புதினா இலைகள், கேரமல் செய்யப்பட்ட நெல்லிக்காய், லெமன் ஜூஸ் சிறிதளவு மற்றும் ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து, குளிர்ச்சியாக பரிமாறவும். நெல்லிக்காய், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எலுமிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.   புதினாவில் உள்ள இரும்புச் சத்து , பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும்.

தர்பூசணி ஆலோவேரா ஜூஸ்

தேவையானவை:

தர்பூசணி  - 1 கப்,
கற்றாழை - 1 கப்,
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

தர்பூசணியின் விதைகளை நீக்கி துண்டுகளாக வெட்டவும். இப்போது கற்றாழையின் வெளிப்புறத் தோலை நீக்கி, சதையை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவவும். ஒரு மிக்ஸி ஜாரில் தர்பூசணி, கற்றாழை மற்றும் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில் ஜூஸை ஊற்றி அதனுடன்  ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கவும். தர்பூசணியில் அதிக நீர் சத்துள்ளது. வெயிலுக்கு டீஹைட்ரேட் ஆகாமல் பாதுகாக்கும். கற்றாழை, சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும்.

ஆரஞ்சு ஸ்மூத்தி

தேவையானவை:

ஆரஞ்சு - 2, விப்பிங் கிரீம் பவுடர் - 1 கப்,
பால் - 250 மி.லி,
சர்க்கரை - 1/2 கப்,
ஆரஞ்சு எசென்ஸ் - 2 துளிகள்,
பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி.

செய்முறை:

ஒரு ஆரஞ்சு பழத்தை வெட்டி சாறு எடுக்கவும். மற்றொரு ஆரஞ்சு பழத்தில் இருந்து தோல் மற்றும் விதையை நீக்கி துண்டுகளாக வெட்டவும். பாதாம் பிசினை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயை சூடாக்கி பால் சேர்த்து கொதித்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பால் 1/3 பங்கு சுண்டியதும், ஆறவைத்து ஆரஞ்சு சாறு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில், பாலுடன் விப்பிங் கிரீம் சேர்த்து, எலக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். அதில் ஆரஞ்சு சாறு கலவை மற்றும் இரண்டு துளிகள் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து, பாதாம் பிசின் மற்றும் ஆரஞ்சு கலவையை சேர்த்து இரண்டு  மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்னர் குளிர்ச்சியாக பரிமாறவும். ஆரஞ்சு, ரத்த சோகைக்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தும்.

இளநீர் குலுக்கி

தேவையானவை:

இளநீர் - 200 மி.லி,
இளநீர் வழுக்கை - சிறிய துண்டுகள்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சை - 1,
சப்ஜா விதைகள் - 2 டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப,
ஐஸ் கட்டிகள் - மூன்று க்யூப்ஸ்.

செய்முறை:

சப்ஜா விதைகளை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். இளநீர் சதையை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். எலுமிச்சையை துண்டுகளாக வெட்டவும். ஒரு கிளாஸில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்பு, உங்களுக்கு தேவையான சர்க்கரை, ஐஸ் கட்டிகளுடன் சேர்க்கவும். இப்போது இளநீர் மற்றும் இளநீர் சதையை சேர்க்கவும். டம்ளரின் வாயை மற்றொரு டம்ளர் கொண்டு மூடி நன்றாக குலுக்கவும். இளநீர் குலுக்கி தயார். இளநீர், உடல் சூட்டை தணிக்கும். கொழுப்பு இல்லாத பானம். இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. சப்ஜா விதைகள், உடல் எடையை குறைத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் மற்றும் வயிறு வீக்கத்தை போக்கும்.

முலாம்பழம் ஐஸ்கிரீம்

தேவையானவை:

முலாம்பழம்- 1 சிறியது,
ஃப்ரஷ் கிரீம் - 1 கப்,
கண்டென்ஸ்ட் மில்க்  - 1/2 கப்

செய்முறை:

முலாம்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, விதைகள் மற்றும் தோலை நீக்கி, துண்டுகளாக வெட்டி, தண்ணீர் சேர்க்காமல் பேஸ்டாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் ஃப்ரெஷ் க்ரீமை நன்றாக அடிக்கவும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும். இதனுடன் முலாம்பழம் விழுதை சேர்த்து நன்கு கலந்து, ஒரு சிறிய கப்பில்  ஊற்றி 6 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். தயாரானதும் நட்ஸ்கள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். முலாம்பழம், ரத்த அழுத்தத்திற்கு நல்லது. இதில் உள்ள பொட்டாசியம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. சருமத்திற்கு நல்லது.

நுங்கு ஷேக்

தேவையானவை:

நுங்கு - 6 துண்டுகள்,
சப்ஜா விதைகள் - 2 டீஸ்பூன்,
பாதாம் பிசின் - 2 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1/2 கப்,
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

பாதாம் பிசினை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். நுங்குவின் தோலை நீக்கி, சதையை துண்டுகளாக நறுக்கவும். சப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் நுங்கு துண்டுகள் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அடித்துக் கொள்ளவும். இப்போது ஒரு கிளாஸில் மாற்றி, சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலக்கவும். நுங்கு, செரிமான பிரச்சனையை போக்கும். தோல் தொடர்பான பிரச்னைக்கு சிறந்தது. பாதாம் பிசின் இயற்கையாகவே உடலை  குளிர்ச்சியாக வைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும்.

குல்கந்து மில்க்

தேவையானவை:

குல்கந்து - 4 டீஸ்பூன்,
ஜவ்வரிசி  - 1/4 கப்,
பால் - 250 மிலி,
ரோஜா எசென்ஸ்  - 2 சொட்டு,
கடல் பாசி - 5 கிராம்,
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப,
கன்டென்ஸ்ட் மில்க்  - 1/4 கப்,
ரோஜா இதழ்கள் - சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வறுத்த  ஜவ்வரிசியை சேர்க்கவும். வெந்ததும் பால் மற்றும் கன்டென்ஸ்டு மில்க், ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். கெட்டியான நிலையாகும் வரை சமைத்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில், பால் சேர்த்து, கடல் பாசியை கரைத்து விட்டு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, குல்கந்து சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவையை ஒரு தட்டில் ஊற்றி 1 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பின்னர் க்யூப்ஸ் போல் வெட்டவும். ஒரு கிளாஸில் ஜவ்வரிசி கன்டென்ஸ்ட் மில்க் கலவையை சேர்த்து அதில் குல்கந்து க்யூப்ஸ் சேர்த்து ரோஜா இதழ்கள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். குல்கந்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. தொடர்ந்து உட்கொள்வது மூலம் கடுமையான புண்கள், மலச்சிக்கலை குறைக்கும். ஜவ்வரசி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தும்.

தொகுப்பு : ப்ரியா

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்