SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திரைகடல் ஓடியும் தீராத தமிழ்ப்பற்று!

2022-05-26@ 17:54:45

நன்றி குங்குமம் தோழி

கடல் கடந்து சென்றாலும் தமிழ் மீது கொண்ட தீராத பற்றால், பல்வேறு இலக்கியப் படைப்புகளை படைப்பவர்கள் ஏராளம். அவர்களில் ஒரு புதிய அறிமுகம் முனைவர் கலைவாணி சுரேஷ்பாபு. தமிழகத்தை சேர்ந்தவரான இவர் துபாயில் ‘அது ஒரு முன்பனிக் காலம்’ எனும் கவிதை நூலையும், ‘களிமண் பொம்மைகள்’ என்ற சிறுகதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். அதோடு, ஏராளமான பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள், விழிப்புணர்வு கட்டுரைகள் மூலம் தமிழ் இலக்கியச் சேவையாற்றி வருகிறார். இவரது இலக்கியப் பணியை பாராட்டி, குளோபல் ஹூயூமன் பீஸ் பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டத்தை வழங்கி உள்ளது.

இது தவிர கவிச்சோலை விருது, சமூக சிற்பி விருது, சித்திரச்சோலை விருது, அதியமான் விருது, செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் இலக்கிய விருது என ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள கலைவாணி ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.‘‘வேலை மற்றும் தொழில் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது. நானும் வேலைக்காகத்தான் 2004ம் ஆண்டு துபாய் வந்தேன்.

இளங்கலை கணினி பொறியியல் பட்டதாரியான நான், 2005 முதல் 2013 வரை மனிதவள மேலாண்மை அதிகாரியாக முதலில் பணியாற்றினேன். பின்னர் எனது கணவரின் நிறுவனத்தில் சேர்ந்து தலைமை செயலாளராக  உயர்வு பெற்றேன். பொதுவாக, பெற்றோர்தான் மகன்களுக்கான பாதையை காட்டுவார்கள். ஆனால் என் விஷயத்தில் அது தலைகீழாக நடந்தது. எனது இளைய மகன் 3ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தமிழ் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தான். அவனுக்கான தேடலில் தான் எனக்கான பாதையை நான் கண்டுபிடித்தேன். அவனுக்காக நல்ல நல்ல தமிழ் புத்தகங்களை தேடித் தேடி வாங்கிக் கொடுப்பேன். அவன் படிக்கும் அதே புத்தகத்தை நானும் படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.

அடுத்ததாக எனக்கு உதவியது கொரோனா. ஆமாம்... கொரோனா காலகட்டம் பலருக்கு வலியும் வேதனையும் மிகுந்ததாக இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் அது மிக அருமையான வசந்த காலம் என்று தான் கூறுவேன். வேலை என்று ஓடிக் கொண்டிருந்த நான் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. ஓய்வு நேரத்தை வீணாக்காமல், என் கணவர், மகன்களின் ஒத்துழைப்புடன் எழுத்துப் பணிக்காக என் நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன். சரியாக சொல்ல வேண்டுமானால், கொரோனா காலகட்டம்தான் என்னுடைய இலக்கிய பயணம் மெருகேறிய பொற்காலம். இதில் பல கவிதைகள், கட்டுரைகள், விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதினேன். அதன் மூலம்  துபாயில் தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் எனக்கு ஓர் அறிமுகம் கிடைத்தது.

தமிழருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல துபாயிலும் தமிழும், தமிழ் இலக்கியமும், தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் எங்கும் பரவி இருக்கிறது. தமிழ்நாட்டில் எப்படி சங்ககால இலக்கியத்தையும், நம்முடைய இலக்கிய முன்னோடிகளையும் போற்றுகிறார்களோ, அதே போல துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், புத்தகக் கண்காட்சிகள், நூல் வெளியீடுகள், தமிழ் இசைக் கச்சேரிகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. இங்குள்ள ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் தமிழ் மணம் வீசுகிறது. இங்குள்ள தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய் மொழியான தமிழைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இலக்கிய நூல்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் நீதி கதைகளையும் கூறி வளர்க்கிறார்கள்.

நம்முடைய கலாச்சாரம், பண்பாடு, மொழி... நம்மோடு அழியாமல், அடுத்த சந்ததியினருக்கும் சேர வேண்டும். தமிழர்களுக்கான அடையாளம் என்றும் மறையக்கூடாது. முக்கியமாக தாய் மண்ணிற்கும் தாய்மொழிக்கும் களங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இன்று, பெரும்பாலான வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் இலக்கியவாதிகளில் பலர் கைதேர்ந்த புலவர்களோ அல்லது  செஞ்சொற் பாவலர்களோ அல்ல. தாங்கள் கடந்து வந்த கலாச்சார உரையாடல், பண்பாடு சார்ந்து கண்டதையும் கேட்டதையும் பட்டதையும் பாடலாய் கவிபாடிய சாமானியர்கள் தான். பொருள் தேடி புலம்பெயர்ந்தவர்கள் உண்டு, உள்நாட்டில் வாழ முடியாமல் விரட்டப்பட்டு புலம்பெயர்ந்தவர்களும் உண்டு.

அவ்வாறு வரும் போது, வீடு, வாசல், உறவு என எது கைநழுவிப் போனாலும், அவர்களுடன் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் விஷயங்களில் இலக்கியமும் ஒன்று. தங்கள் வாழ்க்கை ஏன் சூறையாடப்பட்டது? மனித உரிமை மீறலுக்கான காரணங்கள் என்ன?  இந்த நிலைக்கு காரணமானவர்கள் யார்? இந்த கேள்விக்கான கோபத்தினை தங்களின் படைப்புகள் மூலம் பதிவு செய்து வருகிறார்கள் இந்த புலம்பெயர்ந்த இலக்கியவாதிகள். இலக்கிய துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு என்னுடைய அட்வைஸ் உங்களுக்கான இலக்கை தேர்ந்தெடுங்கள். அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த துறையில் உங்களால் மிளிர முடியும்’’ என்ற கலைவாணியின் இலக்கு சாகித்ய விருது.

தொகுப்பு: ஜோதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்