SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுக்குடும்ப கிச்சன் மூலம் என் அப்பாவை பார்க்கிறேன்!

2022-05-25@ 16:59:37

நன்றி குங்குமம் தோழி

‘‘கூட்டுக் குடும்பமா வாழ்ந்த காலம் மாறி இப்போது எல்லாம் தனிக்குடும்பமாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தாத்தா, பாட்டி, தங்கச்சி என ஒரு குடும்பமாக வாழும் போதுதான் அதன் சுகத்தை உணர முடியும். அந்த சுகத்தைதான் நாங்க கூட்டுக் குடும்ப கிச்சனாக கொடுத்து வருகிறோம்’’ என்கிறார்கள் திருச்சியை சேர்ந்த நித்யா, சசிகுமார் தம்பதியினர். இவர்கள் திருச்சி, ஸ்ரீராமபுரத்தில் ‘அமுது உணவகம்’ என்ற பெயரில் இரவு நேர உணவகத்தினை நடத்தி வருகிறார்கள்.

‘‘நானும் மற்ற பெண்களைப் போல் சாதாரண இல்லத்தரசி தான். என் கணவருடன் சேர்ந்து நான்கு பேர் அண்ணன், தம்பிகள். எல்லாம் கூட்டுக் குடும்பமா தான் வாழ்ந்து வருகிறோம். வீட்டில் விசேஷம் என்றால், இருபது பேர் என்றாலும், எல்லா பெண்களும் விதவிதமாக சமையல் செய்ய இறங்கிடுவோம். எனக்கு தையல் கலையோ அல்லது மற்ற விஷயங்கள் ஏதும் தெரியாது. சமையல் மட்டும் எனக்கு பிடிச்சதும் கூட. என்னை ரிலாக்சாக வைப்பதும் அது தான்’’ என்ற நித்யா கடந்த ஆறு மாதம் முன்பு தான் இந்த உணவகத்தினை துவங்கியுள்ளார்.

‘‘நான் கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு திருமணமாயிடுச்சு. அதன் பிறகு சில காலம் தான் படிப்பை தொடர முடிந்தது. முழுசாக முடிக்க முடியவில்லை. காரணம் அதற்குள் நான் கருவுற்றேன். பெண் பிள்ளையும் பிறந்தாள். அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன். குடும்பம் குழந்தைகள்ன்னு வாழ்க்கை அப்படியே போயிடுச்சு. இதற்கிடையில் என் கணவர் என்னை பி.எட் படிக்க வைத்தார். இப்ப என் மகள் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். வீட்டில் நானும் என் கணவர் மட்டும் தான். எங்களுக்கான சமையல் என்றாலும் காலை ஒரு இரண்டு மணி நேரம் தான் இருக்கும்.

அதன் பிறகு நாள் முழுக்க எனக்கு பெரிதாக வேலை இருக்காது. அந்த நேரத்தில் செல்போன் தான் என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. நாளடைவில் அதுவே எல்லாமுமாக மாறிவிட்டது. எந்நேரமும் செல்போன் பார்ப்பது, அதில் விளையாடுவதுன்னு என் நேரம் கழிய ஆரம்பிச்சது. என்னுடைய தனிமையை போக்க வந்த ஒரு நண்பனாகவே நான் செல்போனை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் என் கணவருக்கும் ெபரிய வாக்குவாதமே வர ஆரம்பிச்சது. அவர் நான் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பதாக சொல்லிக்காண்பித்தார். அப்போது தான் நானுமே ரியலைஸ் செய்தேன்.

என்னுடைய எல்லா நேரத்தையும் செல்போன் சாப்பிடுவதை உணர்ந்தேன். நான் எதுவுமே உபயோகமா செய்யவில்லை. நேரத்தை வீண் அடித்திருக்கேன் என்று புரிந்தது. எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். என்ன செய்வதுன்னு யோசித்த போது தான் என் மகள் நீ ஏன் மறுபடியும் ஒரு உணவகம் ஆரம்பிக்கக்கூடாதுன்னு கேட்டா. பத்து வருஷம் முன்பு நானும் என் கணவரும் இணைந்து ஒரு உணவகத்தை நடத்தி வந்தோம். காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் இயங்கக் கூடிய உணவகம். எனக்கு சமைக்க தெரியும். ஆனால் எல்லா உணவும் என்னால் சமைக்க முடியாது. சமையல் மாஸ்டரை நம்பி தான் அந்த உணவகத்தை நடத்தினோம்.

காலப்போக்கில் எங்களால் அதை திறமையாக நடத்த முடியவில்லை. காரணம் சமையல் மாஸ்டர்கள் யாரும் ஒழுங்காக வேலைக்கு வரமாட்டாங்க. அன்று விடியும் தினமே எங்க இருவருக்கும் பதட்டமாக ஆரம்பிக்கும். இன்று யார் வரமாட்டோம்ன்னு சொல்வாங்கன்னு என்ற எண்ணத்தில் தான் இருப்போம். இதனால் நிறைய இழப்பை சந்தித்தோம். பாதி நாட்கள் சரியாக இயக்க முடியாமல் போனது. அது எங்களுக்கு ஆறாத காயத்தினை ஏற்படுத்தியது. உணவகத்தை அப்படியே மூடிவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பிச்சோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் சசிகுமார்.

‘‘எங்களுடையது விவசாய குடும்பம் தான். அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுப்பட்டதால், நான் ெபரிய அளவில் படிக்கவில்லை. அதே சமயம் படிச்சிட்டு இருந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அழைத்து வந்து, அவங்க படிப்பையும் பாதியிலேயே விட வேண்டிய சூழல் ஏற்பட்டதால்... அதுவே என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அவங்கள எப்படியாவது ஒரு பட்டதாரியாக்கணும்ன்னு நான் அவங்கள பி.எட் படிக்க வைச்சேன்.

அன்று முதல் இன்று வரை விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் விவசாயத்தை எங்களால் ெதாடர்ந்து செய்ய முடியவில்லை. காரணம் பூச்சிக் கொல்லி மருந்து என எல்லா ரசாயனமும் கலந்து எங்களின் நிலத்தின் மண் முற்றிலும் சத்து இழந்து போனது. ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது குறித்த பயிற்சி பற்றி கேள்விப்பட்டேன். ஒன்பது நாள் நடைபெற்ற பயிற்சியில் பங்கு பெற்று, அழிந்த எங்களின் மண் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுத்தேன். இப்போது எங்க நிலம் அழகான தென்னந்தோப்பாக மாறி இருக்கிறது. விவசாயத்தை காப்பாத்திட்டோம் என்று சந்தோஷம்தான் பட முடிந்ததே தவிர எங்களின் பொருட்களை நல்ல முறையில் விற்க முடியவில்லை.

பல இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் அடிமட்ட விலையில் வாங்கி அவர்கள் பல மடங்கு லாபத்தில் விற்க ஆரம்பித்தார்கள். இதனால் எங்களால் ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் பார்க்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் இதை நாங்களே விற்பனை செய்வது மட்டுமில்லாமல் எவ்வாறு பயன்படுத்தலாம்ன்னு திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது தான் அமுது உணவகம்’’ என்றார் சசிகுமார்.

‘‘எங்களின் முக்கிய நோக்கம் வீட்டில் செய்யப்படும் உணவினை சுவையாகவும் தரமாகவும் கொடுக்க வேண்டும் என்பது தான். பொதுவாக வீட்டில் நாம் சிற்றுண்டியாக என்ன செய்வோம். இட்லி, தோசை, சப்பாத்தி, அடை, பூரி, ஆப்பம் போன்றவை தான் செய்வோம். பரோட்டா, ஃபிரைட் ரைஸ் போன்ற உணவுகள் எப்போதாவது தான் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். மேலும் ஏற்கனவே மற்றவரை நம்பி எனக்கு உணவுத் துறையில் பல கசப்பான அனுபவங்கள் இருப்பதால், அந்த தப்பை மீண்டும் செய்ய நானோ என் கணவரோ விரும்பவில்லை. என்னால் செய்யக்கூடிய உணவுகளை மட்டுமே கொடுத்து வருகிறேன்.

ஆறு மாசம் முன்பு தான் ஆரம்பிச்சோம். ஒரு மாசம் நானும் என் கணவர் மட்டுமே பார்த்துக் கொண்டோம். கொஞ்சம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்த பிறகு ஆட்களை நியமித்தோம். இங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் பெண்கள் தான். அவர்கள் தான் பொறுப்பாக இருப்பாங்க. எங்க உணவகத்தில் அன்று தயாரிக்கப்படும் உணவினை மறுநாள் பயன்படுத்த மாட்டோம். தோசை, இட்லிக்கான மாவினை என் கணவர் எனக்கு அரைச்சு கொடுத்திடுவார்.

பெண்கள் இரண்டு ஷிப்ட் முறையில் வருவாங்க. காலையில் வர்றவங்க காய்கறி நறுக்குவது, சட்னிக்கு தேங்காய் துருவுவது எல்லாம் செய்வாங்க. மாலையில் வரவங்க, தோசை மற்றும் இட்லி சுடுவது போன்ற வேலையில் ஈடுபடுவாங்க. இதில் ஒருவர் வரவில்லை என்றாலும் என்னால் சமாளிக்க முடியும். அந்த தைரியத்தில் தான் இதனை ஆரம்பிச்சேன். எங்களின் ஸ்பெஷாலிட்டியே லைவ் கிச்சன் தான். அதாவது ஆர்டர் கொடுத்த பிறகு தான் செய்ய ஆரம்பிப்போம். 12 வகை தோசை மற்றும் 7 வகை சட்னியினை கொடுக்கிறோம். இது தவிர அடை, சப்பாத்தி, ஆப்பம், தேங்காய்ப்பாலும் உண்டு. இங்கு மற்றொரு  ஸ்பெஷல் நாங்க பயன்படுத்தும் தோசைக்கல்.

இது வீட்டில் பயன்படுத்துவது போல இருக்காது. முழுக்க முழுக்க இரும்பால் ஆனது. ஒவ்வொரு கல்லும் 22 கிலோ எடை இருக்கும். மேலும் உணவகத்தில் பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் தேங்காய் அனைத்தும் எங்க தோட்டத்தில் இயற்ைக விவசாயம் முறையில் பயிர் செய்யப்பட்டது. ஆப்பம், தேங்காய்ப்பால் சாப்பிடுவதற்காகவே இங்க நிறைய வயதானவர்கள் வராங்க. கோவிட் போது என் அப்பாவை இழந்தேன். அதனைத் தொடர்ந்து என் மாமனார் மற்றும் மாமியாரும் தவறிட்டாங்க.

அதனால் இங்க வரும் வயதானவர்கள் எல்லாரையும் எங்களின் பெற்றோராகத்தான் பார்க்கிறோம். என்னைப் பொறுத்தவரை மேலும் பல கிளைகள் ஆரம்பிக்கணும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. இந்த உணவகத்தையே நல்ல முறையில் நடத்தினா போதும். ஆரம்பத்தில் நல்லா இருந்தது. இப்ப சுமாராதான் இருக்குன்னு சொல்லிடக்கூடாது என்பதில் நானும் என் கணவரும் ரொம்பவே கவனமா இருக்கிறோம்’’ என்றார் நித்யா.

செய்தி: ப்ரியா

படங்கள்: பாலசந்தர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்