SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலை பின்னிவிடுறது ஒரு வேலையா?

2022-05-24@ 17:28:26

நன்றி குங்குமம் தோழி

ஹேர் ஸ்டைலிஸ்ட் ப்ரியங்கா

நான் ப்ரியங்கா நாகநாதன். ஹேர்ஸ்டைலிஸ்ட். சென்னையில் இருக்கும் பெரும்பாலான மேக்கப் ஆர்டிஸ்டுக்கு என்னை தெரியும் என்றவர், நம்மை ப்ளஸெண்டா காட்ட மேக்கப் போடுவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் ஹேர் ஸ்டைல் செய்து கொள்வதும் என நம்மிடம் பேசத் தொடங்கினார்.மேக்கப்பில் ஹேர் ஸ்டைலிஸ்டுன்னு ஒரு பிரிவு தேவையா? என்ற நமது கேள்விக்கு, கண்டிப்பாக. திருமணத்தில் மணப்பெண்ணிற்கு மேக்கப் போட்டதற்கான ரிசல்ட் கரெக்டா பக்காவாக கிடைக்கனும்னா அதற்கு ஹேர் ஸ்டைலிங் ரொம்ப ரொம்ப  முக்கியம். தவிர்த்து மணப் பெண்ணிற்கு மேக்கப் ஆர்டிஸ்டே ஹேர் ஸ்டைலும்  சேர்த்து செய்தால் நேரம் கூடுதலாக எடுப்பதுடன், ரிசல்டும் சரியாக வராது. ப்ரைடல் மேக்கப் என்பதே இங்கு ஒரு கூட்டு கலவைதான் என்றவர், மேக்கப் ஆர்டிஸ்டுகளுடன் ஹேர் ஸ்டைலிஸ்டான நாங்களும் கூடவே இருப்போம் என்கிறார்.

ஒரு மணப்பெண் திருமண மேடைக்குத் தயாராகி வரும்போது, சுற்றியிருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பது உடை அலங்காரம், மேக்கப் தவிர்த்து, மணப் பெண்ணின் ஹேர் ஸ்டைலும்தான் என்றவர், ஹேர் ஸ்டைலிங் செய்வதன் மூலம் மணப் பெண்ணின் அழகை கூடுதல் ஈர்ப்புடன் வெளிப்படுத்த முடியும் என்கிறார் அழுத்தமாய். தவிர இப்போதெல்லாம் திருமணத்தில் மணப்பெண் தவிர்த்து, பெண்ணின் சகோதரி, நாத்தனார், தோழிகள், உறவினர் என எல்லோருமே ஹேர் ஸ்டைலிங்கை விரும்பிச் செய்து கொள்கிறார்கள் என்றவர், நடுத்தர இல்லத் திருமணங்களிலும் கூட பெண்கள் ஹேர் ஸ்டைலிஸ்டுகளை ஹயர் செய்துகொள்கிறார்கள். அந்த அளவிற்கு இத்துறை வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்கிறார்.

ஹேர் ஸ்டைலிங் செய்வதை முக அமைப்பை வைத்துதான் முடிவு செய்வீர்களா? என்றதற்கு அஃப்கோர்ஸ்.. பட் கூந்தலின் பின்பகுதியில் செய்யப்படும் ஸ்டைலுக்கும், முன் பக்கம் உள்ள கூந்தலில் செய்யப்படும் ஸ்டைலுக்கும் வேறுபாடுகள் உண்டு. பின்பகுதி ஹேர்ஸ்டைலிங் என்பது மணப் பெண்ணின் விருப்பத்திற்கானது. அவர்கள் விரும்பிக் கேட்பதை செய்து கொடுத்துவிடுவோம். ஆனால் முன் பக்கம் அவர்களின் முக அமைப்பிற்கு, எந்த மாதிரியான ஹேர் ஸ்டைலிங் சரியாக இருக்கும் என்பதை நாங்களே முடிவு செய்வோம். ஹேர்ஸ்டைலிங் செய்து கொள்ளப் போகிறவரின் நெற்றி அமைப்பு, முக வடிவம் இவற்றைப் பொறுத்தே முகத்திற்கான ஹேர் ஸ்டைல் தீர்மானிக்கப்படும்.

மூன்று விதமான ஸ்டைல்களை மணமகளுக்கு பரிந்துரைத்து, அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்வோம். ஹேர் டென்ஸிட்டி கம்மியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே ஹேர் எக்ஸ்டென்ஷன் கொடுத்து ஸ்டைலிங் செய்யப்படும். மற்றபடி ஒரிஜினல் ஹேர் மூலமாகவே ஸ்டைலிங் செய்யப்படும். ஒரு ஹேர் ஸ்டைல் செஷனுக்கு மட்டுமே 3 முதல் 4 ஆயிரம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றவர், விதவிதமான ஹேர் ஸ்டைல் வட இந்தியாவில் இருப்பவர்கள் மூலமாகவே இங்கே இறக்குமதியாகிறது. இதற்கான வகுப்புகளை நாங்கள் பெரும்பாலும் மும்பை, டெல்லி  போன்ற பெரு நகரங்களுக்குச் சென்றும், வெளி நாடுகளுக்குப் பயணித்தும் கற்றுக்கொண்டு வருகிறோம்.

சீப்பை (comb) ஹேண்டில் செய்வதுதான் ஹேர்ஸ்டைலில் மிகப் பெரிய கலை. சீப்பை நம் கட்டுப்பாட்டுக்குள் வசப்படுத்தவே பெரும்பாலானவர்களுக்கு ஒரு மாதம் எடுக்கும் எனச் சிரித்தவர்,  பிறருக்கு ஸ்டைலிங் செய்துவிடும் அளவுக்கு நாம் தேர்வாக பயிற்சிகள் இதில் மிகமிக முக்கியம் என்கிறார். இதற்கென பயிற்சி வகுப்புகளில் இணைவதற்கு 35 ஆயிரத்தில் தொடங்கி நாம் எடுத்துக்கொள்ளும் பேக்கேஜ் பொருத்து 1.5 லட்சங்களைத் தொடும் என்றவர், இதில் சிலர் புராடெக்டுகளையும் நமக்கு கொடுத்துவிடுவார்கள் என்கிறார்.

இந்தத் துறையை பொறுத்தவரை ஹேர் ஸ்டைலிங் செய்து விடுவது சிலருக்கு கம்ஃபெர்ட். ஹேர் ஸ்டைலிங் வகுப்புகளை எடுப்பது சிலருக்கு கம்ஃபெர்ட். இது எல்லாத்தையும்விட ரொம்ப ரொம்ப முக்கியம் குடும்ப உறுப்பினர்களின் சப்போர்ட். ‘தலை பின்னிவிடுறது ஒரு வேலையா? இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என புரியாத கேள்விகளே என்னைச் சுற்றி துவக்கத்தில் இருந்தது. எல்லாவற்றையும் தாண்டியே இந்தத் துறையில் சாதித்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் இன்ஸ்டா பக்கங்களில் நான் போடும் பதிவுகளையும், பிறர் என்னைப் பாராட்டுவதையும் பார்த்து என் குடும்ப உறுப்பினர்களின் மனம் மகிழ்ச்சியில் ரொம்பவே மாறியிருக்கிறது. நான் செய்வதும் தொழில்தான் என என் வேலையை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் எனச் சிரித்தவர், முகூர்த்த நேரங்கள் பெரும்பாலும் காலையிலும், வரவேற்பு நிகழ்ச்சிகள் மாலையிலும் இருப்பதால், வேலைக்கு சென்று திரும்பும் கணவன் பள்ளிக்கு சென்று திரும்பும் குழந்தைகளை கவனிப்பதில் பெரும்பாலும் எங்களுக்கு சிக்கல்கள் வரும். என்னைப் பொறுத்தவரை, என்னைப் புரிந்து கொண்ட கணவர் எனக்கு  துணையாக அமைந்ததால், பெரிதாக பிரச்சனைகள் இல்லை. திருமண நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் ஹேர் ஸ்டைலிங் வகுப்புகளையும் எடுத்து வருகிறேன் என்கிறார், சென்னை பள்ளிக்கரணையில் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை இயக்கி வரும் ப்ரியங்கா.

இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் நிறைய ஹேர் ஸ்டைல் வீடியோக்கள் வருகிறதே, அதை பார்த்து நம்மால் அதேபோல் செல்ஃபாக செய்துகொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, அவை எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள். ஹேர் ஸ்டைலிங் செய்ய நிறைய நிறைய ப்ராக்டிஸ் தேவை. அதே சமயம் அதீத ஆர்வமும் ஈடுபாடும் இதற்குத் தேவை. நான் இந்தத் துறைக்குள் தைரியமாக காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு மிகப் பெரிய ஹேர் ஸ்டைலிஸ்டு ஜாம்பவான்களிடத்தில் மாணவியாக இருந்து பயிற்சி எடுத்திருக்கிறேன்.

இதற்கான நேரடி வகுப்புகளில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்றிருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு கிரியேட்டிவா எதையாவது செய்ய புடிக்கும். அதை நான் ஹேர் ஸ்டைலிங்கில் செய்யத் தொடங்கினேன்.நாம் வித்தியாசமாக ஒன்றைச் செய்யும்போது எல்லோரும் அதை ரசிப்பார்கள்தானே. அந்த ரசனை என்னை இதற்குள் முழுமையாக ஸ்வீகரித்துக் கொண்டது என்றவர், இதுவும் ஒரு கிரியேட்டிவ் ஃபீல்டுதானே என்கிறார் நம்மை பார்த்து புன்னகைத்து.

விஷுவல் மீடியாவில் தொலைக்காட்சி பெட்டி எப்படி நம் வீட்டுக்குள் வந்து எல்லாவற்றையும் சேர்க்கிறதோ, அப்படித்தான் சோஷியல் மீடியாவில் இன்ஸ்டா பேஜ். இளசுகளின்  இப்போதைய டிரெண்ட் இன்ஸ்டாதான். இதுவொரு ஓப்பன் மார்க்கெட் பிளேஸ் என்றவர், நம்மோட வொர்க் எல்லாத்தையும் அதில் படங்களாகவும், விஷுவலாக அப்போதைக்கு அப்போது சுடச்சுட வெளிப்படுத்தி லைக்குகளை அல்லலாம். நாம் செய்யும் வேலையின் அவுட்புட் பலரை சென்றடையும்போது அதற்கான வேல்யு என்பது தனிதான்.

இதுவும் ஒரு போதையே என்றவர், இன்ஸ்டா பயன்படுத்தாத மக்களுக்கு வேர்ட் ஆஃப் மவுத்தான் எங்களுக்கான மார்க்கெட். எதாவது ஒரு திருமணத்தில் நம் வேலை பிடித்துபோய் நண்பர்கள், உறவினர்கள், உறவினர்களின் நண்பர்கள் என நாங்கள் தொடர்ந்து ஆல்வேஸ் பிஸி என விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: எம்.சதீஷ்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்