SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஃபேஷன் A - Z

2022-05-12@ 17:21:46

நன்றி குங்குமம் தோழி

கடந்த இதழில் ஆண்களின் சட்டை வகைகள், அதனை எவ்வாறு அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் ஆண்கள் தங்களின் சட்டையினை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக ஆண்களுக்கு உடையினை அணிய வேண்டுமே தவிர அதை எப்படி தேர்வு செய்ய வேண்டும் மற்றும் அணியும் முறை பற்றிய சிந்தனைகள் இருக்காது. நம்மில் பெரும்பாலானவர்கள் அணியும் சட்டைகள் அவர்களின் பேன்ட்டிற்கு மேட்சிங்காக இருக்காது. அதேபோல் அவர்களின் உடல் அளவிற்கு பொருந்தாத உடையினை கூட அணிவார்கள். அதை தங்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ப சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. அவர்கள் எல்லாரும்  தங்களின் சட்டையினை எவ்வாறு தேர்வு செய்து, அதை சரியாக தங்களுக்கு பொருந்தும் ஃபிட்டில் அணியலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஆண்கள் அணியும் சட்டையில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக எல்லாரும் சொல்வது… விதிகள் அமைக்கப்பட்டு இருப்பது அதை மீறுவதற்கு என்று. ஆனால் சில விதிகளை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக நாம் அணியும் உடைகள். அப்போது தான் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் போது நாம் பார்க்க வசீகரமாகவும் அதே சமயம் அழகாகவும் தோற்றமளிப்போம். இந்த விதிகளை குறிப்பாக ஆண்கள் தங்களின் கவனத்தில் கொள்வது அவசியம். இதன் மூலம் அவர்கள் தங்களின் உடைகள் அணியும் முறையில் தவறு செய்யாமல் இருக்க உதவும்.

ஒவ்வொரு ஆணின் கப்போர்டில் கண்டிப்பாக இருக்க வேண்டியது கேஷ்வல் சட்டைகள். இவை பிரதானமானதும் கூட. ஆனால் அந்த உடைகளும் உங்களின் அளவுக்கு ஏற்ப பொருந்தி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். அலுவலகம் செல்லும் போதோ அல்லது வார இறுதிநாட்களில் நண்பர்களுடன் வெளியே செல்லும் போதோ… எந்த  தருணமாக இருந்தாலும் சரியான அளவில் உடைகள் அணிய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது உங்களை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமில்லாமல், உங்களுக்கு சவுகரியமாகவும் அதே சமயம் தன்னம்பிக்கையும் கொடுக்கும்.

சரியான அளவினை தேர்வு செய்யுங்கள்

உங்க உடல் அளவிற்கு ஏற்ற உடை என்றால் அது சில கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். முதலில் உங்கள் மார்பக பகுதியினை இறுக்கிப்பிடிக்காமல், சரியாக பொருந்தி இருக்க வேண்டும். அதேபோல் அக்குள் பகுதி, தோள்பட்டை இந்த இடங்களிலும் சரியாக பொருந்தினால் தான் உங்களால் எளிதாக கையினை தூக்கவும், நீங்கள் முழுமையாகவும் எளிதாகவும் இயங்க உதவும். சரியான அளவில் இருக்கும் சட்டைகள் உங்கள் உடலோடு ஒட்டி இருந்தாலும், இறுகப் பிடித்து இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தாது.

ஒரு ஆண் சட்டை அணியும் போது, அவனுடைய மார்பகப் பகுதியில் இருந்து இடுப்பு வரை அந்த சட்டை எந்தவித சுறுக்கங்கள் ஏற்படுத்தாமல், அழகாக உடல் மேல் தவழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தினை தரவேண்டும். ஒரு சிலருக்கு சட்டையின் அளவு சரியாக பொருந்தினாலும், அதன் நீளம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் சட்டையினை பேன்டினுள் டக்டின்  செய்யும் போது, அதிக அளவு துணி பேன்டிற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

உடல் அளவிற்கு  ஏற்ப பொருந்துவது போல் சட்டையின் நீளமும் சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். எந்த சட்டையாக இருந்தாலும் ரொம்ப லூசாகவோ அல்லது உடலை இறுக்கிப்பிடிக்கும் படி இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் உங்களால் எந்தவித அசவுகரியம் இல்லாமல் அந்த சட்டையினை அணிய முடியும். பாக்சி ஃபிட் சட்டைகள் என்றால் சட்டைகள் உங்களின் இரு பக்கவாட்டிலும் லூசாகவும் பார்க்கும் போது சதுர வடிவ அமைப்பை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணங்கள் ஒன்று அந்த சட்டை உங்களின் அளவினை விட பெரியதாக இருக்கலாம் அல்லது சரியான முறையில் தைக்கப்படாமல் இருக்கலாம்.

எந்த ஒரு சட்டையாக இருந்தாலும், முதலில் சரியான அளவில் அது தைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை சட்டையினை தேர்வு செய்யும் முன்பு பக்கவாட்டில் சீம் மற்றும் பின்புறத்திலும் சீம்கள் கொண்டு தைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்கினாலும், அதே சமயம் உங்களுக்கு அந்த சட்டை கச்சிதமாக பொருந்துகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் அணியும் சட்டையின் அளவு சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ள… சட்டையை அணிந்த பிறகு ஒன்றரை முதல் மூன்று இஞ்ச் அளவிற்கு சட்டையின் பக்கவாட்டு பகுதியில் எக்ஸ்ட்ரா துணி இருக்க வேண்டும்.

சட்டையின் பட்டன்கள், பெல்ட்டின் பக்கில், பேன்டின் ஜிப் மூன்றும் நேர் கோட்டில் இருக்க வேண்டும். இவை ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும் பார்க்க நேர்த்தியாக இருக்காது.

சரியான நீளம்

கேஷ்வல் சட்டைக்கு மிகவும் முக்கியமானது அதன் நீளம். சட்டையின் நீளம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. அப்போதுதான் சட்டையினை பேன்டிற்குள் டக்கின் செய்தாலும் அல்லது அவ்வாறு செய்யாமல் இருந்தாலும் அதை அணிந்து இருப்பவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தாது. இதற்கு இரண்டு விதிகளை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.
1. சட்டையினை பேன்டிற்குள் டக்கின் செய்தாலும் சரி... செய்யாவிட்டாலும்... சட்டையின் பக்கவாட்டில் போடப்பட்டு இருக்கும் தையலானது பேன்ட் பாக்கெட்டின் மத்திய பகுதிக்கு நேராக இருக்க வேண்டும். சட்டையின் நீளமும் பேன்ட் பாக்கெட்டின் இறுதி வரை மட்டுமே இருக்க வேண்டும். சட்டை பட்டன் தைக்கப்பட்டு இருக்கும் பகுதி, பேன்ட் ஜிப்பின் மத்திய
பகுதிக்கு நேராக இருக்க வேண்டும்.

அதே போல் அதன் நீளமும் பேன்டின் ஜிப்பின் பகுதி முடியும் அளவிற்கு இருந்தால் போதுமானது. 2. சட்டையினை பேன்டிற்குள் டக்கின் செய்த பிறகு, இரண்டு கைகளையும் மேலே தூக்க வேண்டும். அப்போது டக்கின் செய்யப்பட்ட சட்டையின் நுனி வெளியே வரக்கூடாது. அவ்வாறு வெளியே வந்தால், உங்க சட்டையின் அளவு மிகவும் குறைவானதாக இருக்கக்கூடும். சட்டையின் அளவு மற்றும் நீளம் சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ள சட்டையினை டக்கின் செய்யலாம், அல்லது செய்யாமலும் கண்டறியலாம். இந்த இரண்டு விதிகளும் சாதாரண கேஷ்வல் பேன்டுகளுக்கு மட்டுமே பொருந்துமே தவிர ஜீன்ஸ் பேன்டிற்கு கிடையாது. இப்போது பல ஆண்கள் லோ வெயிஸ்ட் ஜீன் பேன்டுகளைதான் விரும்பி அணிகிறார்கள்.  

காலர்கள்

சட்டையின் காலர்கள் இஞ்ச் அளவில் காலரில் உள்ள பட்டன் முதல் பட்டன் போடும் பட்டை வரை கணக்கிடப்படுகிறது. நீங்கள் அணியும் சட்டையின் காலர் பட்டனை மிகவும் எளிதாக அணியும்படி இருக்க வேண்டும். கழுத்தை இறுக்கி பிடிக்கக்கூடாது. அதே சமயம் காலர் பகுதியில் இரண்டு விரல்கள் அளவிற்கு இடைவேளை இருக்க வேண்டும். மேலும் காலர் பட்டன் உள்ள பகுதியில் இரண்டு விரல் அளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும். இதன் மூலம் சட்டை அளவு சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும். காலரின் நீளம் உங்களின் பின்னங்கழுத்து பகுதியின் நீளம் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஒரு விரல் அதற்குள் முழுமையாக மறையும் அளவு.

சட்டையின் கை

சட்டையின் கைப் பகுதியும் உங்களின் கையின் அளவிற்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்போது தான் கையை எளிதாக தூக்கவோ அல்லது அதனை இயக்கவோ முடியும். கையின் மேல் பகுதியில் ஒன்று முதல் ஒன்றரை இஞ்ச் அளவிற்கு லூசாக இருக்க வேண்டும். அதே சமயம் முன் கை பகுதியில் ஃபிட்டாக இருக்கணும். சட்டையின் கைப்பகுதி இடுப்பில் இருந்து அரை இஞ்ச் அளவிற்கு நீளமாக இருக்க வேண்டும். காரணம் சட்டை மேல் ஜாக்கெட் அணியும் போது, சட்டையின் கஃப் பகுதி அரை இஞ்ச் ஜாக்கெட்டை விட நீளமாக இருப்பது அவசியம். அதே போல் கஃப் பகுதியும் இறுக்கமாக இல்லாமல் சரியான அளவில் ஃபிட்டாக இருக்க வேண்டும். அதை கண்டறிய, சட்டையின் கஃப் பகுதியில் இரண்டு கைவிரல்கள் அளவு உள்ளே செல்லும் அளவிற்கு இடைவேளை இருக்கிறதா என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஒரு சிலர் சட்டையினை மடித்துக் கொள்ள விரும்புவார்கள். அவ்வாறு மடிக்கும் போது, கை முடியின் மேல் வரை மடிக்க வேண்டும்.

தோள்பட்டை

சட்டையின் முன் பகுதி மற்றும் பின் பகுதியினை இணைக்கக் கூடிய தையல் தோள்பட்டையின் மேல் சரியாக பொருந்தி இருக்க வேண்டும். இந்த தையல் உங்களின் கழுத்து வரை சென்றால், சட்டையின் அளவு சின்னதாக இருப்பதாக அர்த்தம்,

அக்குள் பகுதி

சட்டையின் அக்குள் பகுதிதான் உங்களின் சட்டை எவ்வாறு கச்சிதமாக பொருந்துகிறது என்பதை சுட்டிக்காட்டும். அதாவது அக்குள் பகுதியின் அளவு சரியாக இருந்தால் தான், சட்டை மார்பகம், தோள்பட்டையிலும் ஃபிட்டாக இருக்கும். எல்லாவிதமான உடல் அளவுகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காக சில பிராண்ட் சட்டைகள் அக்குள் பகுதியில் மட்டும் பெரியதாக வடிவமைத்திருப்பார்கள். கைகளுக்கு கீழ் அதிக அளவு துணி தொங்கிக்கொண்டு இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது. உங்களின் அக்குள் பகுதி எப்படி இருக்க வேண்டும் என்றால், பார்க்கும் போதே நேர்த்தியான தோற்றம் அளிக்க வேண்டும்.

அதே சமயம் இறுக்கி பிடிக்காமலும் இருப்பது அவசியம். அப்போது தான் கைகளை மேலே கீழே இயக்க எளிதாக இருக்கும். அதாவது 45 டிகிரியில் கைகளை மேலே தூக்கும் போது… எந்த வித அசவுகரியமும் இருக்கக்கூடாது. இந்த ஆலோசனைகளை எல்லா ஆண்களும் தங்களுக்கு சட்டையை தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் உடல் அளவினை சரியாக அளந்து டெய்லர்களிடம் கொடுத்து தைப்பதற்கும் ரெடிமேடாக வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ரெடிமேட் உடைகள் அனைவருக்கும் பொருந்தவேண்டும் என்பதற்காக ஒரு நிலையான அளவினை கடைப்பிடிப்பார்கள். அவ்வாறு வாங்கும் சட்டை உங்களுக்கு சரியான ஃபிட்டில் இல்லை என்று தோன்றினால் உடனே டெய்லரிடம் கொடுத்து உங்க அளவிற்கு ஏற்ப ஃபிட்டாக மாற்றிக்கொள்வது அவசியம்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்