SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-04-07@ 17:43:03

நன்றி குங்குமம் தோழி

*பாயசத்தை மீண்டும் சூடு படுத்தும்போது அடிப்பிடித்து விடும் அபாயம் உண்டு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதற்குள் பாயசம் உள்ள பாத்திரத்தை வைத்து காய்ச்சவும்.

*முட்டைகோஸின் மேல் உள்ள கடினமான இலையில் சத்து அதிகம். அவற்றை வீணாக்காமல், சூப், வடை, கூட்டு, பொரியல் இவற்றில் சேர்க்கலாம்.

*எந்தவிதமான சிப்ஸாக இருந்தாலும் நெய்யில் சிறிது உப்பு, காரம் பிசிறி சிப்ஸில் கலக்கினால் மணமுடனும், ருசியுடனும் இருக்கும்.

*உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் கறி செய்யும்போது மேலாக சிறிது ரொட்டித்தூளைத் தூவினால் ருசியாகவும், மொறுமொறுப்புடனும் இருக்கும்.

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

*குருமாவோ, தக்காளி குழம்போ எதுவாக இருந்தாலும் பொரித்த அரிசி ஒரு கரண்டி, ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லியுடன் தேங்காயும் சேர்த்து அரைத்து ஊற்றினால் குழம்பு அதிக ருசியுடன் இருக்கும்.

*பூண்டை நேர்வாக்கில் நறுக்கிக் கொண்டால் சுலபமாகத் தோல் உரிக்கலாம். எவ்வளவு பூண்டு என்றாலும் நகங்களில் எரிச்சல் இல்லாமல் பூண்டு உரிக்கலாம்.

*துவட்டலோ, குழம்போ செய்யும்போது வெங்காயத்தை வதக்கும்போது சிறிது நேரம் மூடி வைத்துவிட்டு வதக்கினால் விரைவில் வதங்குவதோடு, பொன்னிறமாகவும் இருக்கும்.

- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

*பீட்ரூட் சூப் செய்யும்போது தக்காளியையும் சேர்த்து வேக வைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும்.

*காபி, டீ பாத்திரங்களில் உள்ள கறை மறைய ஈரத்துணியில் சிறிது சோடா மாவைத் தடவி பாத்திரத்தை தேய்த்து பின் கழுவினால் மறையும்.

*தண்ணீரை ஃப்ரீசரில் ஐஸ்க்காக வைக்கும்போது ஒரு சிட்டிகை உப்புத்தூள் கலந்து வைத்தால்  ஜூஸில் கலக்கும்போது இனிப்புச்சுவை கூடுதலாகவும், தாகமும் அடங்கும்.

- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.

*தேங்காய் போளி சாப்பிட்டு திகட்டி விட்டதா? இரண்டு கப் கேரட் துருவலுடன் தேவையான வெல்லம், ஏலப்பொடி, கோவா சிறிது நெய் சேர்த்துப் பூரணம் செய்து போளி செய்தால் சூப்பராக இருக்கும்.

*துவரம்பருப்பு துவையல் தயாரிக்கும்போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் பூண்டும் சேர்த்து அரைக்கலாம். உடம்பிற்கும் நல்லது.

- எஸ். சுமதி, கரூர்.

*அரிசி களைந்த நீரில் மீனை கழுவினால், மீனில் உள்ள வாசனை போவதுடன் மீன் சுத்தமாகவும் இருக்கும்.

*புளியோதரை ெசய்யும் போது அதில் சிறிது சுக்குப்பொடியை சேர்த்து வைத்தால் போதும். இரண்டு நாட்களுக்கு அதிகமாக கெடாமல் இருக்கும்.

*இளசான தேங்காயைத் துருவினால் அது கொத்து கொத்தாக விழும். இந்த மாதிரி தேங்காயை உடைத்துப் ஃபிரிட்ஜில் சில மணி நேரமாவது வைத்திருந்து பின் துருவினால் அது பூப்பூவாக விழும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறிட, சுவையாய் இருக்கும்.

*கலந்த சாதம் செய்ய சாதம் சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்தால், பருக்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக நன்றாக இருக்கும்.

*பொரித்த அப்பளங்கள் நமத்துவிட்டால், அதை வாணலியில் வறுத்து சிறிது தேங்காய், கறிவேப்பிலை, புளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துவையலாக அரைக்க சுவை நன்றாக இருக்கும்.

- மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

*வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடி, மிளகு பொடி 1/4 டீஸ்பூன், ஓமம் சேர்த்து இறக்க சுவையாக இருக்கும்.

*பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து சட்னி, உப்புமா போன்றவற்றிற்கு பயன்படுத்த அல்சரே வராது.

*வாழைக்காயை பொரியல், பொடிமாஸ் செய்யும்போது மிளகுத்தூள் சேர்த்து சமைக்க வாய்வு பிடிக்காது.

*வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து சமைத்தால் கசக்காது.

- பா.கவிதா, சிதம்பரம்.

*தேங்காய் பர்பி செய்யும்போது கலவையில் ராகி மால்ட் இரண்டு ஸ்பூன் சேர்த்தால் கமகமவென்று சூப்பர் சுவையாக இருக்கும்.

- வே. இராமலட்சுமி, திருநெல்வேலி.

*பால்கோவா, ஸ்வீட்கள் மீந்து விட்டனவா? ஒரு கப் பாலில் ஸ்வீட் போட்டு, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் சுற்றவும். இதில் ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா பொடி சேர்த்து ஃப்ரீஸரில் வைத்தால், சுவையான வித்தியாசமான ஐஸ்கிரீம் ரெடி.

*அல்வா செய்யம்போது அதற்கான கலவையை கெட்டியாகும் வரை கிளறக் கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால், ஆறியபின் சரியாகி விடும்.

*மெதுவடைக்கு மாவு அரைத்து நீர்த்து விட்டதா? இரண்டு ரொட்டிகளை மிக்ஸியில் போட்டு தூள் செய்து வடை மாவுக்கலவையில் சேர்த்தால் மாவும் கெட்டியாகும். வடை சுடும்போது மொறு மொறுவென்று இருக்கும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.

ஓட்ஸ் இட்லி


தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 2 கப், (மிக்ஸியில் பொடித்தது)
உளுந்தம்பருப்பு - ¼ கப்,
தயிர் - ½ கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு,
பச்சை மிளகாய்,
இஞ்சி - தேவைக்கு.

செய்முறை:

உளுந்தை ஊற வைத்து, அரைத்து அதனுடன் ஓட்ஸ், தயிர், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, இவற்றை எல்லாம் தாளித்து, கரைத்து வைத்துள்ள மாவில் நன்கு கலந்து இட்லிகளாகச் செய்யலாம். ஆரோக்கியமான இட்லி ரெடி.

- இல.வள்ளிமயில், மதுரை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்