SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஃபேஷன் A - Z

2022-03-29@ 17:31:30

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன்  குறித்து  அலசுகிறார் ஃபேஷன்  டிசைனர்  ஷண்முகப்பிரியா

பெண்களின் இடையினை உடுக்கைக்கு இணையாக கவிஞர்கள் வர்ணிப்பது வழக்கம். அதேபோல் இடையினை தான் பெண்களும் விரும்புகிறார்கள். சினிமா நடிகைகள் அவர்களின் துறைக்காக பல உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதால் ஓரளவுக்கு மெல்லிய இடையினை மெயின்டெயின் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சாதாரண பெண்களுக்கு அது சாத்தியப்படுவதில்லை. கல்யாணமாகி குழந்தை பிறந்துவிட்டால் ஒரு சிலரே தவிர பெரும்பாலானவர்கள் அதில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுவதில்லை. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் ‘பாடி ஷேப்பர்’. உங்களை ஒரு இஞ்ச் ஸ்லிம்மாக காட்டும் உபகரணம் தான் இந்த பாடி ஷேப்பர்.

பாடி ஷேப்பர் அல்லது ஷேப்வியரை பெண்கள் அணியும் போது எடுப்பாக இருக்கும் தொப்பை பிளாட்டாகவும், இடுப்புகளில் வளைவுகளையும் எடுத்துக்காட்டும். இந்த உடைக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. அதன் மூலம் அவற்றின் துணி, வடிவங்கள் மற்றும் அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள் மட்டுமே அணிந்து வந்த இந்த பாடி ஷேப்பர்கள் தற்போது ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பாடி ஷேப்பர்களை நாம் உடலில் அணிந்து கொண்டு அதன் மேல் உடையினை அணிய வேண்டும். இவ்வாறு அணியும் போது உங்களின் உடலின் அளவில் தற்காலிகமாக மாற்றத்தினை ஏற்படுத்தும். மெல்லிய இடை மற்றும் அழகான வடிவம் கொண்ட அமைப்பினை ஒருவரின் உடலுக்கு தருவதற்காகவே அமைக்கப்பட்டது தான் இந்த ஷேப்வியர். இதனை அணியும் போது நம் உடலில் உள்ள தளர்வான தசைகளை இறுக்கமாக்கும். இதனால் நாம் விரும்பும் உடல் வடிவத்தினை பெறமுடியும்.

வரலாற்றினை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், ஷேப்வியர்கள் விக்டோரியன் காலத்து பெண்கள் இதனை அணிந்திருந்ததாக தெரியவந்துள்ளது. பருத்தி, லெனின், சாட்டின், பட்டு போன்ற பல்வேறு துணிகளில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கார்செட் என்று அழைக்கப்படும் இந்த உடைகள் மிகவும் கடினமான இரும்பு கம்பிகளாலும் வடிவமைக்கப்பட்டு வந்தன. இவை நெஞ்செலும்பு கூட்டினை இறுக்கி பிடிப்பது மட்டுமில்லாமல் நம் உடலில் உள்ள மற்ற பாகங்களையும் பாதிப்பினை ஏற்படுத்தும். முக்கியமாக நுரைலீரலும் சுறுக்கப்படுவதால், அவை விரிவடையமுடியாத காரணத்தால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும்.

உடைகள் ஒருவரின் வசதி மற்றும் சவுகரியத்திற்காக அணியக்கூடியது. ஆனால் இந்த வகையான ஷேப்வியர்கள் ஒருவரை சங்கடப்படுத்தவும் அவர்களை மிகவும் கடுமையாக தண்டிப்பதற்கு ஈடாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் காலப்போக்கில் இந்த கிராசெட் உடைகளில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டது. அதன் பிறகு எல்லாரும் மிகவும் சவுகரியமாக அணியக்கூடிய உடையாக மாறியது. தற்போது பல வித சைஸ்கள், டிசைன்கள், நிறங்கள் மற்றும் ஒருவரின் சருமத்தின் நிறத்திற்கு ஏற்பவும் ஷேப்வியர்கள் மார்க்கெட்டில் உள்ளது. அதே சமயம் இந்த உடை ஒவ்வொரு பெண்ணின் அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டிய உடை கிடையாது.

ஆனால் சில சிறப்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் போது இதனை அணிந்தால் உங்களுக்கே உங்கள் மேல் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். அந்த மாதிரியான தருணங்களில் இதனை அணிந்து செல்லலாம்.உங்க உடலில் ஒவ்வொரு அங்கத்தினையும் அழகான வடிவமாக்க பல வித அளவுகள் மற்றும் டிசைன்களில் ஷேப்வியர்கள் உள்ளன. உங்களின் முழுமையாக உடலிலும் மாற்றம் தெரிய வேண்டும் என்று இதனை முழுமையாக அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்க உடலில் குறிப்பிட்ட சில அங்கங்களான தொடை, வயிறு மற்றும் பின்புறம்... போன்ற குறிப்பிட்ட பகுதியினை மட்டும் ஷேப்வியர் மூலம் அழகாக மாற்றிக் கொள்ளலாம்.

உடல் அங்கங்களை வடிவமாக்க...

* மினிமைசர் உள்ளாடை, உங்களின் மார்பகம் மற்றும் முதுகுப் பகுதியினை திடமாக எடுத்துக்காட்டும்.

* எக்டென்டெட் பிரீஃப்-இது பெரும்பாலும் பெண்கள் அணியும் பான்டி போன்றது. ஆனால் இவை வயிறு, இடுப்பு, விலா எலும்பு மற்றும் இடைக்கும் இடையே உள்ள இடைப்பட்ட பகுதியான வெயிஸ்ட் மற்றும் பிட்டத்திற்கு அழகான வடிவம் கொடுக்கும்.

* ஸ்லிப் ஷேப்பர்-பார்க்க ஆண்கள் அணியும் இறுக்கமான ஷார்ட்ஸ் போன்ற அமைப்பு கொண்டது. இவை வயிறு, இடுப்பு மற்றும் மேலாடை அணியக்கூடிய பகுதி வரை நீண்டிருக்கும்.

* ஷேப்பிங் டாப்-தொடையில் ஆரம்பித்து பிட்டம், வயிறு மற்றும் இடுப்பு வரை இருக்கும். மேலும் இதில் உள்ளாடைகளும் இணைக்கப்பட்டிருப்பதால், மார்பக பகுதியில் உள்ள தசைகளை மறைத்து அழகாக எடுத்துக்காட்டும்.

* வெயிஸ்ட் கிளின்சர்-வயிறு மற்றும் இடுப்பு பகுதியை மட்டுமே மறைக்கும். இந்த வகை கிராசெட்கள் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் இருக்கும் தசைகள் விரிவடைந்து தளர்ந்திருந்தால், அவற்றை இறுக்கி தூக்கிப்பிடிக்க உதவும்.

* தை ஷேப்பர்-இதுவும் ஷார்ட்ஸ் போல் அணியவேண்டும். ஆனால் இவை வயிறு, இடுப்புப் பகுதியை மட்டுமே மறைப்பதால், பிட்டம், தொடை போன்ற பகுதி அழகாகவும் எடுப்பாகவும் இருக்கும்.

* பாடி ஸ்யூட்-இது முழு உடலையும் அழகான வடிவமாக மாற்றி அமைக்கும். இது தொடையில் இருந்து ஆரம்பித்து பிட்டம், வயிறு, இடுப்பு மற்றும் மார்பகம் வரை இருக்கும். இதனுடன் உள்ளாடையும் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் கைப்பகுதி முழு கையாகவும் அல்லது ஸ்லீவ்லெஸ் டிசைகளிலும் உள்ளது.

யாரு எந்த ஷேப்வியர்களை அணியலாம்

ஷேப்வியர்கள் பல வித டிசைன்கள், அளவுகள் மற்றும் வடிவங்களில் வருகிறது. ஷேப்வியர்கள் பெரும்பாலும் பருமனான உடல் தோற்றம் கொண்டவர்கள் தான் அணிவது வழக்கம். ஆனால் இவை ஒல்லியான தேகம் கொண்டவர்களும் அணியும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் சில குறிப்பிட்ட உடைகளை அணியும் போது மேலும் அழகான தோற்றத்தினை கொடுக்கும்.

ஒருவர் ஷேப்வியரினை தேர்வு செய்யும் முன் அவர்களின் உடலில் எந்த பகுதியினை அழகாக எடுத்துக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் ஒவ்வொரு ஷேப்வியர்கள் அந்தந்த உடல் பாகத்தினை எடுப்பாக காண்பிக்கும்படி பல விதமான வடிவங்களில் கிடைக்கிறது. இதனால் அவர்கள் அணியும் போது, உடலில் உள்ள அனைத்து பகுதியினையும் சமமாக மறைத்து அழகான வடிவத்தினை கொடுக்கும்.

ஒருவர் தனக்கான சரியான அளவு கொண்ட ஷேப்வியர்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம். இதனால் அணிந்து நடக்கும் போது மற்றும் பேசும் போது அசவுகரியத்தினை உணரமாட்டார்கள். இவை உடலினை மிதமான முறையில் இறுக்கிப்பிடிப்பதால் அழகான தோற்றம் மற்றும் வடிவத்தினை கொடுக்கும். அதே சமயம் மிகவும் கடினமாக உடலை இறுக்கிப்பிடிக்கும் ஷேப்வியர்களை தொடர்ந்து அணிந்து வந்தால் தசைகள் அனைத்தும் இறுகி நாளிடைவில் உங்களின் உடல் மிகவும் கட்டுக்கோப்பாக மாறும் என்கிறார்கள். ஆனால் இவை ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

ஷேப்வியர் மிகவும் சாதுர்யமாக அணியவேண்டும். அதாவது கால்வழியாக அணிந்து அதை அப்படியே உடம்பின் மேல் பாகம் வரை இழுத்து விடவேண்டும். அவ்வாறு அணியும் போது ஒரு சில பகுதியில் அணிய முடியாமல், இறுக்கிப்பிடித்தால், அடுத்த அளவினை தேர்வு செய்து அணியலாம். உடல் சங்கடப்படுத்தி அணிய வேண்டும் என்றில்லை. மேலும் இதனை அணியும் போது உடலில் உள்ள தசைகள் அனைத்தும் ஷேப்வியருக்குள் சமமாக அடங்கும் படி நேரத்தியாக அணிய வேண்டும். அவ்வாறு அணியும்போது தான் பெர்ஃபெக்ட்டான உடல் அமைப்பினை பெற முடியும். எல்லாம் சரி நான் விரும்பிய உடல் அமைப்பினை தற்காலியமாக வெளியே செல்லும் போது இந்த ஷேப்வியர் அணிவதால் பெற முடிகிறது என்று சந்தோஷப்படுபவர்கள் இதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஷேப்வியர்கள் தொடர்ந்து அணிந்துவந்தால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.பொதுவாக ஷேப்வியர்களால் ஏற்படும் முக்கிய பிரச்னை சரும பாதிப்பு. குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் நீண்ட நேரம் அணியும் போது அவர்களுக்கு சருமத்தில் பிரச்னை அதிகமாக இருக்கும்.

நீங்கள் ஷேப்வியரினை வாங்கும் போது உங்களின் உடலுக்கு ஏற்ற சரியான அளவினை தேர்வு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். மிகவும் இறுக்கி பிடிக்கும் ஷேப்வியர்களை தேர்வு செய்யாதீர்கள். குறிப்பாக இடுப்பு பகுதியினை அதிகமாக இறுக்கிப்பிடித்தால், கால்களுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் கால் வலி மட்டுமில்லாமல் அதனை தொடர்ந்து பல வித உபாதைகளை சந்திக்க நேரிடும். ஒரு உடையினை தேர்வு ெசய்வதும், அறிவு சார்ந்த விஷயம். ஒரு உடை பொருந்தவில்லை என்றால், நமக்கு பொருந்தக்கூடிய அளவில் அதனை தேர்வு செய்ய வேண்டும் என்ற பொது அறிவு வேண்டும்.

இதில் முக்கிய கட்டமைப்பு என்னவென்றால், ஒரு உடை உங்களின் உடலில் தடயம் அல்லது காயத்தினை ஏற்படுத்தினால் அது மிகவும் இறுக்கமான உடை என்பது தான். இதையே அதிக நேரம் அணியும் போது, வயிற்று பகுதியில் உள்ள செரிமான குழாயில் பாதிப்பு ஏற்படும். மேலும் வயிற்றில் உள்ள சில ரசாயனங்கள் உணவுக்குழாய்க்குள் கசியும்
வாய்ப்புள்ளது.

ஷேப்வியர்களை பெண்கள் அணிவது காலம்காலமாக இருந்து வரும் பழக்கம். இதை அணியும் போது எப்படி ஒருவருக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறதோ, அதேபோல் இதனால் பல நிறை குறைகளும் உள்ளது.ஷேப்வியர்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்  

* உடலில் உள்ள எக்ஸ்ட்ரா தசைகளை அப்படியே மறைத்து உங்களின் உடையின் அளவினை குறைக்கும்.

* மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் அணிந்தால், அவர்களின் இடுப்பு மணிக்கண்ணாடி போன்ற அமைப்பு பெறும்.

* இடுப்பு மற்றும் முதுகு வரை இருக்கூடிய பாடி ஷேப்பர்களை அணிவதால், ஒருவரின் முதுகெலும்பு தண்டு வளையாமல் நேராக இருக்க உதவும்.

* அழகான தோற்றத்தினை கொடுக்கும் போது நமக்குள்ளே ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.

ஷேப்வியர்கள் அணிவதால் ஏற்படும் தீமைகள்  

* இதை மிகவும் பொறுமையாக அணிய வேண்டும். இதற்குள் உங்களை நுழைத்துக் கொள்வது என்பது மிகவும் சாதுர்யமான விஷயம். தளர்வான தசைகளை சரியான முறையில் ஷேப்வியருக்குள் பொருத்த வேண்டும்.

* இதை தொடர்ந்து அணியும் போது சருமத்தின் கீழ் இருக்கும் தசைகள் சுறுங்குவதால், அங்குள்ள நரம்பு மற்றும் ரத்தநாளங்களை பாதிக்கும்.

* நீங்கள் அணியும் ஷேப்வியர்களைப் பொறுத்து உங்களின் உடலின் பாதிப்புகள் மாறுபடும்.

* ஷேப்வியர்கள் விலையுயர்ந்தது. இதை தொடர்ந்து அணியும் போது அதற்காக நீங்கள் செலவிடும் தொகையும் அதிகமாகும்.

எந்த ஒரு உடையாக இருந்தாலும் ஒருவரின் சவுகரியம் என்பது மிகவும் அவசியம். இதன் மூலம் ஒருவருக்கு தங்கள் மேல் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்