SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A - Z

2022-02-18@ 18:02:04

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன்  குறித்து  அலசுகிறார் ஃபேஷன்  டிசைனர்  ஷண்முகப்பிரியா

பெண் குழந்தைகளுக்குதான் எத்தனை டிசைன்கள். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஆனால் அதுவே ஆண் குழந்தைகளுக்கு என்று பார்த்தால்... பேன்ட், சட்டை, டீ ஷர்ட், வேஷ்டி என்று தான் சொல்ல முடியும். இதுவே முன்பெல்லாம் குழந்தைகளுக்கான உடைகளுக்கு நாம் பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டோம். காரணம் அவர்களுக்கு ஒரு அழகான மற்றும் விலை உயர்ந்த உடைகளை வாங்கினாலும் அதை ஒரு வருடத்திற்கு மேல் போட முடியாது. குழந்தைகள் வளர்ந்துவிடுவதால் அவர்களுக்கு பத்தாமல் போய்விடும்.

அதனாலேயே வளரும் வரை இவர்களின் உடைகளுக்கு நாம் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இன்றைய நிலையே வேறு. குழந்தை பிறந்த நாள் முதல் அவர்கள் வளரும் வரை அழகான உடைகளை அணிந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் இன்றைய காலத்து பெற்றோர்கள். அதுவும் அன்றைய ஃபேஷன் உலகிற்கு ஏற்ப. பெண் குழந்தைகளுக்கு பல வகை உடைகள் மார்க்கெட்டில் உள்ளது. ஆனால் அதுவே ஆண் குழந்தைகளுக்கு பல வகை உடைகளை தேர்வு செய்வது என்பது சவாலான விஷயம் தான். இந்த இதழில் உங்களின் செல்லக் கண்ணன்களுக்கு எவ்வாறு உடை அணிவிக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே ஆண் குழந்தைகளுக்கு உடைகள் தேர்வு செய்ய வேண்டும் என்றாலே பெற்றோர்கள் கொஞ்சம் திணறித் தான் போகிறார்கள். காரணம் ஆண் குழந்தைகளின் தேவை என்ன என்று பலருக்கு புரிவதில்லை. இன்றைய தலைமுறையினர் தங்களின் ஃபேஷன் என்ன என்று புரிந்து வைத்துள்ளனர். அதற்கு ஏற்ப தான் நாம் அவர்களுக்கான உடையினை தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களின் உடைகளை தேர்வு செய்யும் முன்பு எந்த துணியில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த சமயத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடையும் இருக்க வேண்டும். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை உலகம் முழுதும் குளிர்காலம் என்பதால், அந்த சீசனுக்கு ஏற்ற உடையினை தேர்வு செய்யலாம். பருத்தி அல்லது பருத்தியுடன் கம்பளி இணைக்கப்பட்ட துணியினாலான பேன்ட், ஓவரால், முழுக்கை கொண்ட டி-ஷர்ட் சரியான தேர்வாக இருக்கும். மிதமான கிளைமேட் என்பதால் உடையின் நிறங்களும் கண்களுக்கு குளிர்ச்சியான நீலம், வெள்ளை, கிரே என நியூட்ரல் நிறங்களை தேர்வு செய்யலாம்.

அதே சமயம் கம்பளி உடைகள் மற்றும் ஹுட்டீஸ்கள் பிரைட் நிறங்களான சிகப்பு, மெரூன். மஸ்டர்ட் மஞ்சள் நிறங்கள் குறிப்பாக ஓவரால் உடைகளுக்கு மேல் அணியும் போது குழந்தைகளை மேலும் பளிச்சென்று எடுத்துக்காட்டும். செம்மரி ஆட்டின் தோலில் இருந்து செய்யப்படும் கோட் தான் ஃபிளீஸ். இதில் குழந்தைகளுக்கு அழகான ஸ்வெட்டர் அல்லது ஓவர்கோட் போல செய்யலாம். பராமரிப்பதும் எளிது. கதகதப்பாக இருக்கும் உடை என்பதால் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. இதனுடன் கழுத்தை சுற்றி குரங்கு குல்லா அணியும் போது மேலும் உங்களை ஸ்டைலிஷாக எடுத்துக் காட்டும்.

வெயில் காலத்தில் மெல்லிய காற்றுப் புகக்கூடிய பருத்தி மற்றும் மஸ்லின் துணிகள் பெஸ்ட். குழந்தைகளின் மென்மையான சருமம் போல் பருத்தி ஆடைகளும் மென்மையாக இருக்கும். வியர்வையை உறிஞ்சும். சருமத்தை பாதுகாக்கும். தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தி மூலம் நெய்யப்படும் காட்டன் உடைகளும் மார்க்கெட்டில் உள்ளன. மேலும் சிந்தடிக் உடைகள் சில குழந்தைகளுக்கு சருமத்தில் அலர்ஜியினை ஏற்படுத்தும்.

அதனால் எப்போதும் வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளை தேர்வு செய்யலாம். வெயில் காலத்தில் பருத்தி உடையில் என்ன பெரிய ஃபேஷன் வடிவமைக்கலாம்ன்னு கேட்க தோணும். அந்தக் காலத்திலும் பருத்தி உடையாக இருந்தாலும் கண்களை கவரும் நிறங்கள் மற்றும் டிசைன்கள் கொண்டு குழந்தைகளின் உடைகளில் விளையாடலாம். மேலும் வெளியே செல்லும் போது ெவயிலின் தாக்கத்தினை குறைக்க தலையில் தொப்பி அணிந்தாலும், அதுவும் ஒரு வகையான ஃபேஷன் ஐகான் என்பதை மறந்துவிடாதீர்கள். இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், குழந்தைகளுக்கான உடைகளை தேர்வு செய்யும் போது, அவர்களை சிரமப்படுத்தாமலும் வசதியாக உணரும் உடைகளையே வாங்க வேண்டும்.

இப்போது பெரியவர்களுக்கு உடைகளை வடிவமைப்பது போல் டிசைனர்கள் குழந்தைகளுக்கான உடைகளையும் பார்த்து பார்த்து மிகவும் அழகாக டிசைன் செய்கிறார்கள். பெரியவர்களுக்கு மட்டும்தானா ஃபேஷன்... இவர்களுக்கும் உண்டு என்பவர்கள் இவர்களுக்கான பலவித ஃபேஷன் உடைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரன்டெட் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அபிமானி அவர்கள் உலகில் உலா வரும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள். ‘எனக்கு ஸ்பைடர்மேன் படம் போட்ட டிரஸ் வேணும்’ன்னு குழந்தைகள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். அவர்களை கவர்வதற்காகவே மிகவும் பிரபலமான கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் கொண்ட டி-ஷர்ட்கள் ஆன்லைனில் மட்டுமல்லாமல் கடைகளிலும் கிடைக்கிறது. சாதாரணமா மாலை நேரங்களில் கார்ட்டூன் படம் போட்ட டி-ஷர்ட்கள் மற்றும் ஷார்ட்ஸ் அதற்கு இணையாக ஸ்னீக்கர் அல்லது ஸ்போர்ட்ஸ் ஷூக்களை அணியலாம். குழந்தைகள் ஓடி விளையாடும் போது ஷார்ட்ஸ் போன்ற உடை தான் அவர்களுக்கு வசதியாகவும் அதே சமயம் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

டெனிம் ஜாக்கெட்

இப்போது டெனிம் ஜாக்கெட் தான் ஃபேஷன் டிரண்டாகி வருகிறது. எல்லா நாட்களிலும் அணியக்கூடிய மிகவும் வசதியான மற்றும் ஃபேஷனான உடை. இதில் பல டிசைன்கள் உள்ளன. ஒரு சில ஜாக்கெட்களில் அழகான ஸ்டிக்கர்கள் அல்லது பேட்ச் டிசைன்கள் இருக்கும். இதனை எந்த டிசைனும் இல்லாத பிளைன் வெள்ளை அல்லது கருப்பு நிற டி-ஷர்ட் மேல் அணிந்தால் அழகான ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். இந்த உடை வெயில், மழை மற்றும் குளிர் காலம் என எந்தக் காலத்திற்கும் அணியலாம். ஒரு வேளை குழந்தைகள் இதனால் அசவுகரியமாக நினைத்தால், இதனை கழட்டி விடுவதும் எளிது.

போலோ நெக் டி-ஷர்ட்

போலோ நெக் டி-ஷர்ட்டுடன் காக்கி பேன்ட் அல்லது டிரவுசர்கள் அணிந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இந்த உடை ஆண் குழந்தைகளுக்கான பெஸ்ட் ஸ்டைல். திருமண விழா முதல் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி வரை எல்லா தினங்களுக்கும் ஏற்ற உடை. ஒரு அழகான தோற்றத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் குழந்தைகள் இதை அணியும் போது அவர்களுக்கான கம்ஃபர்ட்டினை கொடுக்கும். இப்போது இந்த டி-ஷர்ட்கள் பருத்தி ஆடைகளிலும் கிடைக்கிறது. மேலும் வெளியே செல்லும் போது, குழந்தைகளுக்கு பேன்ட் தான் பாதுகாப்பு. அவர்கள் கீழே விழுந்தாலும், கால் முட்டியில் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

ஹுடெட் டி-ஷர்ட்

நடைப்பழகும் சிறுவர்களுக்கான ஏற்ற உடை. இது கைப்பகுதி இருந்தும் இல்லாமலும் வருகிறது. வெயில், குளிர், மழை என ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப டிரன்டியான உடைகள் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையின் கப்போர்டிலும் இந்த ஹுடெட் டி-ஷர்ட்கள் இருப்பது அவசியம். இது பல டிசைன்களில் வருகிறது. பிரின்ட் செய்யப்பட்டு, முயல் காது மற்றும் டைனோசரின் முதுகில் உள்ள முட்கள் போல் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த ஹுட் வகை டி-ஷர்ட்கள் குழந்தைகளின் ஃபேவரெட். இதனை ஜீன்ஸ், ஷார்ட்சுடன் சேர்ந்து அணியலாம். இதற்கு ஸ்னீக்கர்ஸ் ஷூ அணிந்து நடக்கும் போது ஒரு அழகான ஸ்டைல் கொடுக்கும்.

சஸ்பெண்டர்ஸ் மற்றும் பேன்ட்

உங்கள் சுட்டிக் குழுந்தைகளுக்கு சஸ்பெண்டர்சுடன் ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்தால் டேஷிங் லுக்கினை கொடுக்கும். இதுவும் உங்க குழந்தையின் கப்போர்ட்டில் இருக்க வேண்டிய உடை. பேன்டுடன் அணிவதை விட ஷார்ட்சுடன் அணியும் போது உங்க குழந்தை இன்னும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். அழகான பிரின்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட் அல்லது கண்களை பறிக்கும் நிறங்கள் கொண்ட டி-ஷர்ட்டுகள் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன். இதற்கு பார்ட்டி லுக் கொடுக்க மெல்லிய நிறம் கொண்ட ஷர்ட் போ டை அணியலாம்.

ஓவரால்ஸ்

ஓவரால் என்பது பல முறைகளில் அணியக்கூடிய அழகான உடை. இது பார்க்க சஸ்பெண்டர்ஸ் போல் இருந்தாலும், ஒரு பேன்டுடன் இணைந்த ஒரு முழுமையான உடை. இதனை மட்டுமே அணியலாம். அல்லது டி-ஷர்டுடன் சேர்த்தும் அணியலாம். டெனிம், கார்ட்ராய், பருத்தி என பல வகை துணிகளில் கிடைக்கிறது. இந்த உடையினை பல காலம் அணியலாம். இதன் தோள்பட்டையில் பட்டன்கள் இணைக்கப்பட்டு இருப்பதால் அதனை குழந்தைகள் வளர வளர அதற்கு ஏற்ப அட்ஜஸ் செய்து கொள்ள முடியும்.

பாரம்பரிய உடைகள்

எவ்வளவு மார்டர்ன் மற்றும் ஃபேஷன் உடைகள் இருந்தாலும் வேஷ்டி ஷர்ட், குர்தா, கோட் சூட்களான பாரம்பரிய உடைகளில் உங்கள் செல்லங்கள் ராஜகுமாரன் போல் மிளிர்வார்கள். இதில் பல வண்ணங்கள் மற்றும் டிசைன்கள் இருப்பதால், உங்கள் குழந்தைக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த உடைக்கு ஏற்ப காலணிகளையும் தேர்வு செய்து அணிந்தால் நேர்த்தியாக இருக்கும். வேஷ்டிக்கு அழகானசெப்பல்கள் அணியலாம். குர்தாவிற்கு கட்ஷூ மற்றும் கோட் சூட் என்றால் பார்மல் ஷூக்களை தேர்வு செய்யலாம்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்