SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-01-27@ 17:30:13

நன்றி குங்குமம் தோழி

*சலித்த சப்பாத்தி மாவுக்கப்பியை வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரித்து விடலாம்.

*இட்லிக்கு சட்னி செய்யும்போது புளிக்குப்பதில் தோல் சீவிய மாங்காய்த் துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாகயிருக்கும்.

*சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி அடை மாவில் போட்டு அடை செய்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*காலி ஃப்ளவர், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காய், சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். காலிஃப்ளவர் சட்னி, இட்லி, சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

*கடலைப்பருப்பு ஊற வைத்து அரைக்கவும். பலாச்சுளைத்துண்டுகளை ஆவியில் வேக வைத்து அரைக்கவும். இதனுடன் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறலாம்.

- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

*தோசை மாவு அரைக்கும்போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.

*1 கரண்டி நெய் அல்லது எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி, அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.

*தோசை மாவில் கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊற்றி தோசை வார்த்தால், தோசை மணமாக இருக்கும்.

- ஆர்.மகாலட்சுமி, சென்னை.

*ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம்.

*மீன்களை எண்ணெயில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். இதைத் தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

*மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

- ச.லெட்சுமி, செங்கோட்டை.

*ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்

*பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர்வடை ரெடி.

*பனீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி ஃபிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

*கருணைக்கிழங்கைச் சதுர வடிவில் நறுக்கவும். ஈரம் காய்ந்ததும், வாணலியில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு மொறுமொறுப்பாகப் பொறித்தெடுத்து ஆம்சூர் பொடி, சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்தால், கருணைக்கிழங்கு சிப்ஸ் தயார்.

- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

*வெள்ளை உளுந்தை வறுத்து மைய அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கமகம வாசனையாக இருக்கும்.

*சேமியா உப்புமா செய்யும்போது எலுமிச்சை பழத்தை உப்புமாவில் பிழிந்துவிட்டால் ருசி அபாரமாய் இருக்கும்.

- ஹேமலதா, தஞ்சை.

*பச்சை மிளகாயை இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வாசனை வரும்வரை வதக்கவும். சூடாக இருக்கும்போதே உப்பு தூவி சிறிது எலுமிச்சை சாறு கலந்தால் திடீர் ஊறுகாய் தயார்.

*முந்திரி, பாதாம், கசகசா போன்றவை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.

*அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சுபோல இருக்கும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள்  பொடி தூவினால், உலை கொதித்து வெளியே வழியாது.

*தேங்காய் சாதம் செய்யும்போது சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப்பொடி கலந்தால் சுவையும், மணமுமாக இருக்கும்.

- கே.ராகவி, வந்தவாசி.

*ரவா தோசை செய்யும்போது 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

*சுண்டலை தாளிதம் செய்து இறக்கியபின் இரண்டு  டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து தூவினால் சுவையாக இருக்கும்.

- க. நாகமுத்து, திண்டுக்கல்.

அவல் இட்லி

தேவையான பொருட்கள்:

ஊற வைத்த பச்சரிசி - 2 கப்,
அவல் - 1 கப்,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
உப்பு - தேவைக்கு, முந்திரி பருப்பு - 10 (பொடித்தது), இஞ்சி - 1 டீஸ்பூன்,
மல்லி இலை,
கறிவேப்பிலை,
தயிர் - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை நன்கு களைந்து, தயிரில் ஊற வைக்கவும். அரிசி, தேங்காய்த்துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அவலை ஊற வைத்து, தனியே அரைத்து, இவற்றையெல்லாம் ஒன்றாக கலந்து, பொடித்த முந்திரி, இஞ்சித்துருவல் கலந்து, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இட்லி செய்யலாம். ருசியான மிருதுவான அவல் ரெடி.

- இல.வள்ளிமயில், மதுரை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்