SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரு குரலில் திருக்குறள்!

2022-01-18@ 15:15:21

நன்றி குங்குமம் தோழி

மார்கழி என்றாலே நம் பாரம்பரிய கலைகளான பரதம், கர்நாடக சங்கீதம் அனைத்தும் மக்களுக்கு விருந்தளிக்கும் மாதம். கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக கொரோனா தாக்கலால் அனைத்து நிகழ்ச்சிகளும் வர்சுவல் முறையில் நடைபெற்று வந்தாலும், மக்கள் தங்களின் ஆதரவினை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருக்குறளுக்கு அழகான விளக்கம் தந்தது மட்டுமில்லாமல், அதை ரசிக்கும் படியான இசை அமைத்து தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் சாகேத்தராமன். இவர் இசை அமைத்து பாட... அந்த குறள்களுக்கு எளிய நடையில் விளக்கம் அளித்துள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள்.

‘‘இரண்டு வருஷமா வர்சுவல் முறையில் தான் கச்சேரி நடந்து வருகிறது. இந்த முறை அதிக அளவு இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் கச்சேரியினை லைவா பார்க்கலாம். இந்த வருட கச்சேரிக்காக வர்சுவல் முறையில் ஷூட் எடுத்த போது, ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை...’ என்ற திருக்குறளைப் பற்றி பாடினேன். வர்சுவல் என்பதால் ஒரு கேமராமேன் மற்றும் மைக் மேன் இருவர் முன் தான் முதலில் பாடினேன். திருக்குறள் வரிகளுக்கு நான் இசையமைத்து பாடியதை கேட்டவர்கள் பிரமிச்சு போயிட்டாங்க.

கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை இசைப் பற்றி தெரிஞ்சவங்க தான் ரசிப்பாங்க. இவங்களுக்கு இசை குறித்து பெரிய விவரம் இல்லை என்றாலும் குறளை இசையோட சேர்த்து பாடியபோது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்பதான் எனக்குள் ஒரு பொறி தட்டியது. திருக்குறளை இசை வடிவில் மக்களுக்கு கொண்டு போய் கொடுக்கலாம்ன்னு. இசையோடு குறளுக்கான விளக்கமும் எளிய முறையில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்னு நினைச்சேன். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சாரிடம் கேட்ட போது அவரும் சரின்னு சொல்ல... அப்படித்தான் ‘இரு குரலில் திருக்குறள்’ உருவானது’’ என்றவர் 15 குறள்களுக்கு மட்டும் தற்ேபாது இசை அமைத்து பாடியுள்ளார்.

‘‘கோவையில் உள்ள என் நண்பர் சங்கர் சிவ சுப்பிரமணியன் தான் எனக்கு குறள்களை தேர்வு செய்து கொடுத்தார். அவர் ேதர்வு செய்த 100 குறள்களில் 15ஐ மட்டுமே  தேர்வு செய்திருக்கேன். காரணம் திருக்குறளைப் பாட்டாக பாடும் போது, அதற்கான சரியான ராகத்தை தேர்வு செய்யணும். அப்பதான் கேட்கும் போது காதுக்கு இனிமையா இருக்கும். உதாரணத்திற்கு,

‘நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு’. குறளில் வள்ளுவர் மழையின் முக்கித்துவத்தைப் பற்றி கூறியிருப்பார். மழை என்றாலே அம்சவர்தினி ராகம். இந்த ராகத்தை பாடினா கண்டிப்பா மழை வரும்ன்னு சொல்வாங்க. அதை நான் அன்று உணர்ந்தேன். காலை ஷூட்டின் போது, வெளியே நல்ல வெயில். இந்த ராகத்தில் திருக்குறளைப் பாடிய பிறகு 15 நிமிடம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு.

 குறள் மற்றும் அந்த ராகம் இரண்டுக்கும் இருக்கும் சக்தியை நான் மட்டுமில்லை ஸ்டுடியோவில் எல்லாருமே வியந்தோம். இந்த குறள் மட்டுமில்ல ஒவ்வொரு குறளுக்கும் அதற்கு ஏற்ப ராகத்தை தேர்வு செய்து பாடி இருக்கேன். ‘செவிக்குணவு இல்லாத போது சிறிது..’ இந்த குறளுக்கு கர்ணரஞ்சனி ராகத்தில் பாடி இருக்கேன். கர்ணம்  என்றால் சமஸ்கிருதத்தில் காதுன்னு அர்த்தம். செவிக்கு இனிமையாக இருக்கும் இந்த ராகம். அதேப்போல் ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்...’ குறளுக்கு பாக்கிய ராகம். அன்பை குறிப்பிடும் ராகம்’’ என்றவர் ஒவ்வொரு ராகத்தையும் பல ஆய்வுகள் செய்து தேர்வு ெசய்துள்ளார்.

‘‘திருக்குறள் என்பது இயல். அதற்கு கர்நாடக சங்கீதத்தை இணைக்கணும்ன்னு என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அந்த குறளில் உள்ள வார்த்தைகளுக்கு ஏற்ப ராகம் அமையணும். ஒரு சில குறள்களுக்கு சரியான ராகம் பொருந்திடுச்சு. ஆனால் ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்...’ குறளுக்கு குறைந்தபட்சம் 10 ராகத்தில் பாடினேன். எதுவுமே திருப்தியா இல்லை. கடைசியா பாக்கிய ராகம் தான் அழகா பொருந்தியது. ஒரு குறளை ராகத்தோடு இணைத்து பாடியது மட்டுமில்லாமல் அதற்கு இணையாக ஆலாபனை, கீர்த்தனையும் சேர்த்து பாடி அந்த குறளை முடித்திருக்கேன். இதன் மூலம் குறளுக்கு ஒரு முழுமையான இசை வடிவம் கொடுத்திருக்கேன் என்று நம்புகிறேன்.

இசையமைத்து இருக்கும் 15 குறள்களை தினமும் ஒரு குறள்னு saketharaman யுடியூப் சேனலிலும், #saketharamans  இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கேன். பலருக்கு பத்து நிமிட வீடியோவை கூட பார்க்க பொறுமையில்ல, நேரமும் இல்லை என்பதால் 30 வினாடி மற்றும் ஒரு நிமிடம் என இரண்டு விதமாக வெளியிட்டு இருக்கேன். உலகம் முழுக்க திருக்குறளைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், அதனால் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற குறள்களுக்கும் இசை அமைக்க இருக்கிறேன்’’ என்றார் கர்நாடக இசைக் கலைஞரான சாகேத்தராமன்.

‘‘ஒரு நாள் என்னை சாகேத்தராமன் தொலைேபசியில் தொடர்பு கொண்டார். ‘திருக்குறளை கர்நாடக சங்கீத இசையில் மக்களிடம் கொண்டு செல்ல இருக்கேன். நீங்க அந்த குறள் குறித்த விளக்கம் மற்றும் அறிமுகம் செய்தா நல்லா இருக்கும்’ன்னு கேட்டார். திருக்குறள் கர்நாடக சங்கீத வடிவிலா... வித்தியாசமா இருக்கேன்னு யோசித்தேன். திருக்குறள் இலக்கியம். கர்நாடக சங்கீதம் என்பது இசை. இரண்டிற்கும் தனிப்பட்ட உயரம் உண்டு.

அதேப்போல் தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் உள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கும் தமிழுக்கும் மூத்த இலக்கியம் மற்றும் அடையாளமான திருக்குறளை இதன் மூலம் கொண்டு சேர்க்க முடியும் என்ற சாகேத்தராமனின் ஈடுபாடு பார்த்து ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது. அதனால் அவர் பேசிய போது நான் முதலில் இது சாத்தியப்படுமான்னு தான் யோசிச்சேன். ஆனால் இவர் இவ்வளவு தன்னம்பிக்கையோடு சொல்லும் போது, சரின்னு சொல்லிட்டேன்.

திருக்குறள் ஒன்னே முக்கால் அடி கொண்ட பாடல். ஆழ்வார் பாசுரங்கள், சிலப்பதிகாரத்தை கூட எளிதாக இசை அமைச்சு பாட முடியும். இது அவ்வளவு எளிதில்லையேன்னு அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் ஒவ்வொரு குறளையும் எடுத்து அதை எந்த ராகத்தில் பாடினா நன்றாக இருக்கும்ன்னு ஆய்வு செய்த பிறகு தான் பாட இருப்பதாக கூறி 15 குறள்களை தேர்வு செய்து அனுப்பினார். சாதாரண மக்களுக்கும் இலக்கியம், இசை இரண்டுமே போய் சேரணும் என்பதால் அதற்கேற்ப விளக்கம் அளிக்க திட்டமிட்டேன்.

திருக்குறளுக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் முதல், மு.வரதராஜன், டாக்டர் சாலமன் பாப்பையான்னு எத்தனையோ பேர் உரை எழுதி இருக்காங்க. அவர்கள் எழுதி இருப்பதை படித்து குறளுக்கான பொருளை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு என்னுடைய நடையில் எளிமையா விளக்கம் ெகாடுத்திருக்கேன். விளக்கம் மட்டுமில்லாமல் அதற்கு ஏற்ப தெரிந்த செய்தியினை மக்களுக்கு புரியக்கூடிய பார்வையில் விளக்கம் ெகாடுத்திருக்கேன்.

‘குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.’

இந்த குறளை எடுத்துக் கொள்ளலாம். நமக்கு ரொம்ப பிடிச்சமானது என்றால் அது இசை. அதிலேயே ஒருவருக்கு புல்லாங்குழல் இசை பிடிக்கும். மற்றவருக்கு வீணையின் நாதம் பிடிக்கும். ஏன் கடுமையான பசியில் இருப்பவனுக்கு பாத்திர சத்தம் கூட பிடித்த இசையாக இருக்கலாம். மருத்துவமனையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு டாக்டர் சொல்கிற ‘நீங்க குணமாயிட்டீங்க’ என்பது கூட இசை தான்.

ஆனால் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான இசை தன் குழந்தைகள் பேசுகிற மழலை மொழி. அது தருகிற இன்பம் இசைக் கருவிகள் தரும் இன்பத்தைவிட பெரிதுன்னு வள்ளுவர் சொல்லி இருக்கார்னு 15 குறள்களுக்கும் அதற்கேற்ப விளக்கம் அளித்திருக்கேன். ராஜா என்றால் நகைச்சுவை உணர்வு இருக்கும்னு பலர் நினைப்பாங்க. குறளைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் நகைச்சுவையா பேச முடியாது. ஜனரஞ்சகமாக எல்லாருக்கும் புரியும்படி விளக்கம் கொடுத்து முயற்சி செய்திருக்கேன்.

கர்நாடக இசையில் தெலுங்கு கீர்த்தனைகள் தான் இருக்கும். அப்படி இருக்கும் போது அதில் திருக்குறளை தூக்கி வைப்பது பெரிய விஷயம். இந்த முயற்சி புதிது. இதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பவர்கள் கண்டிப்பா அங்கீகரிப்பாங்க. 1330 குறள்களுக்கும் விளக்கம் மற்றும் இசை கொண்டு வர முடியாது. எப்படி இன்பத்துப்பாலில் பெரும்பகுதியினை வெளிப்படையாக பேச முடியாதோ அதேப்போல் எல்லா குறள்களுக்கும் பொருத்தமான இசை அமைக்க முடியாது. வாய்ப்பு இருப்பதை தேர்வு செய்து இசை அமைத்திருக்கார். இது ஒரு சோதனை ஓட்டம் தான். இதற்கு வரும் வரவேற்பு பொருத்துதான் அடுத்த கட்டம் பற்றி யோசிக்க இருக்கிறோம்’’ என்றார் ராஜா.

தொகுப்பு: ஷன்மதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்