15 வருஷமானாலும் 15 ரூபாய்தான் சாப்பாடு!
2022-01-18@ 15:00:47

நன்றி குங்குமம் தோழி
அக்கா கடை
மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயில், அடுத்து அங்குள்ள வீதி தெருக்களில் உள்ள உணவகங்கள். இங்குள்ள பெரும்பாலான உணவகங்களின் சிறப்பே அதன் தனிப்பட்ட சுவை மற்றும் உபசரிப்புதான். அப்படிப்பட்ட உணவகங்களில் ஒன்றானது மதுரையில் வடக்கு பெருமாள் மேல் திருவீதியில் அமைந்துள்ள அரிமீனாட்சி டிபன் சென்டர். இதனை சீதாலட்சுமி, சிவராஜன் தம்பதியினர் கடந்த ஆறு வருடமாக நடத்தி வருகிறார்கள். இதில் சிறப்பம்சமே எந்த உணவு சாப்பிட்டாலும் 15 ரூபாய் தானாம்.
‘‘எனக்கும் என் கணவர் இருவருக்கும் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தான். சின்ன வயசில் இருந்தே எனக்கு சமையல் மேல் தனி ஈடுபாடு உண்டு. திருமணத்திற்கு பிறகு அந்த சமையல் கலை தான் எங்களின் வாழ்வாதாரமாக மாறியதுன்னு சொல்லலாம். என் மாமனார் சொந்தமாக ஒரு உணவகம் வைத்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் அதை எடுத்து நடத்த முடியவில்லை. அதனால் என் கணவர் ஒரு டீக்கடையில் தான் முதலில் வேலைக்கு சென்றார்.
தினக்கூலி என்பதால் எங்களால் குடும்பத்தை பராமரிக்க சிரமமாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நான் வீட்டில் சும்மா இருப்பதால் அவருக்கு உதவியாக ஏதாவது செய்யலாம்ன்னு யோசித்தேன். அப்போது தான் வீட்டில் இருந்தபடியே கலவை சாதம் செய்து ெபாட்டலமாக மடித்து கொடுத்தேன். அவரும் அதை விற்பனை செய்து வருவார். இதனால் ஓரளவுக்கு வருமானம் பார்க்க முடிந்தது. அதில் வந்த வருமானத்தில் எங்க வீட்டின் மேல் தளத்தில் ஒரு இடத்தை வாடகைப் பிடித்தோம்.
அதில் வடை மட்டுமே போடலாம்ன்னு தீர்மானித்தோம். டீக்கடை, ஒட்டல், கல்லூரி கேன்டீன் என வடைகளை சப்ளை செய்ய ஆர்டர் பிடித்தோம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் பல இடங்களுக்கு வடைகளை சப்ளை செய்ய ஆரம்பித்தோம்’’ என்றவர் தங்களின் குலதெய்வம் கொடுத்த உத்தரவின் பேரில் தான் உணவகத்தை ஆரம்பித்ததாக கூறினார்.‘‘எங்களுக்கு எல்லாமே எங்க குலதெய்வம் நாலுகோட்டை அரிமீனாட்சி தான். எங்க வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றாலும் அவரிடம் உத்தரவு கேட்காமல் செய்ய மாட்டோம். அப்படித்தான் உணவகம் குறித்த உத்தரவும் கேட்டோம்.
அப்போது, எல்லாரும் சாப்பிடக்கூடிய விலையிலும் தரமானதாகவும் கொடுப்பதாக இருந்தால் உணவகம் ஆரம்பிக்கலாம்ன்னு உத்தரவு வந்தது. அவரின் வாக்கை நாங்க எப்போதும் மீறியதில்லை என்பதால் அவரின் சொல்படி ஆறு வருஷத்துக்கு முன்பு 15 ரூபாயில் உணவினை வழங்க ஆரம்பித்தோம். இன்று வரை விலையில் எந்த மாற்றமும் நாங்க செய்யவில்லை. சொல்லப்போனால் இன்னும் 15 வருடங்களுக்கு இதே விலையில் தான் கொடுக்க திட்டமிட்டிருக்கோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் சிவராஜன்.
‘‘இந்த உணவகம் ஆரம்பிக்க என் மனைவி தான் காரணம். அவங்க தான் நம்மாள செய்ய முடியும்ன்னு எனக்கு ஒரு உத்வேகம் கொடுத்தாங்க. சமையல் முதல் கடையின் நிர்வாகம் மற்றும் கடையின் பராமரிப்பு எல்லாமே அவங்க தான். நானும் என் அக்கா மகனும் அவங்களுக்கு உதவியா இருக்கோம்ன்னு சொல்லலாம். சமையல் வேலை எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. காலையில் மற்றும் மதிய உணவு மட்டும் தான். இரவு நேர உணவு கிடையாது. அதேப்போல் ஞாயிறு அன்று விடுமுறை. காலை இட்லி, பூரி, பொங்கல், வடை. மதியம் புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளிசாதம்ன்னு ஐந்த வகை கலவை சாதம் தான் தருகிறோம்.
எந்த சாப்பாடு எடுத்தாலும் 15 ரூபாய் தான். வடைக்கு மட்டும் எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்குறோம். மத்தபடி இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி கூட்டு, சாம்பார், ஊறுகாய் எல்லாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆறு வருஷம் முன்பு கடை ஆரம்பிச்ச போது காலை என் மனைவி தான் கடையில் இருப்பாங்க. அப்ப அவங்க அந்த வழியாக செல்பவர்களிடம், ‘புதுசா கடை ஆரம்பிச்சு இருக்கோம். சாப்பிட்டு பாருங்கன்னு கூப்பிடுவாங்க’. ஒரு பெண் கடைக்கு முன் நின்று இப்படி கூப்பிட முதலில் மன தைரியம் வேண்டும்’’ என்றார் சிவராஜன்.
‘‘கடையை ஆரம்பிச்ச போது 10 பேர் வந்து சாப்பிட்டா பெரிய விஷயமா இருந்தது. இப்ப 100க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட வராங்க’’ என்று பேசத் துவங்கினார் சீதாலட்சுமி. ‘‘என் கணவர் சொன்னது போல், நான் கடை வாசலில் நின்று சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டு இருக்கேன். காரணம் இது எங்க உழைப்பால் ஆரம்பித்த கடை. அதனால் அதை நல்லபடியா நடத்த மேலும் உழைப்பு போடுவதால் பலன் எங்களுக்குதான். நான் அப்படி கூப்பிட்டு வந்து சாப்பிட்ட பத்து நபர்கள் மற்றவர்களுக்கு சொல்லி இப்ப அவங்க 100 பேரா உயர்ந்திருக்காங்க. எங்களுக்கு பணம் சம்பாதிப்பது பெரிய நோக்கம் இல்லை. வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தணும்.
காரணம் எங்க கடையை சுற்றியுள்ள ஏரியாவில் உள்ள நிறுவனங்களில் நிறைய தினசரி கூலிக்காக தான் வேலைப்பார்க்க வருவாங்க. அவங்களின் ஒரு நாள் பட்ஜெட் 50 ரூபாய் தான். அதில் தான் அவங்க காலை மற்றும் மதிய உணவினை பார்த்துக் கொள்ளணும். 15 ரூபாய்க்கு அவங்களால் திருப்தியா சாப்பிட முடியும். அதனால் தான் நாங்க விலைவாசி 60% அதிகமாகி இருந்தாலும் உணவின் விலையை மாற்றவில்லை. அவர்களின் பசியை நாங்க நன்கு அறிவோம். காரணம் என் கணவர் டீக்கடையில் வேலை பார்த்த போது அவருக்கும் தினசரி கூலியா தான் சம்பளம் கொடுப்பாங்க. அதில் ஒரு சிறிய தொகையில் தான் சாப்பிடுவார். அந்த விலையில் எங்கு உணவு இருக்குன்னு தேடிப்போய் சாப்பிடுவார். இந்த உலகத்தில் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் சாப்பாடுதான். அதனால் அதை மனசார கொடுக்கிறோம்’’ என்றார் சீதாலட்சுமி.
செய்தி: ப்ரியா
படங்கள்: வெற்றி
மேலும் செய்திகள்
திரைகடல் ஓடியும் தீராத தமிழ்ப்பற்று!
பல தடைகளை உடைத்துதான் வெளிவந்தேன்!
கூட்டுக்குடும்ப கிச்சன் மூலம் என் அப்பாவை பார்க்கிறேன்!
12 வயதில் பேக்கரி தொழில்முனைவோர்!
அக்கா கடை-தொழிலாளர்களுக்காகவே நள்ளிரவு மட்டுமே இயங்கும் உணவகம்!
உங்கள் குழந்தை வெஜிடபிள் மாதிரி... ஒரே இடத்தில்தான் இருப்பான்!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!