SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A - Z

2021-12-28@ 17:29:49

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

ஜோதிகா புடவை, சிம்ரன் ஜீன்ஸ், நயன்தாரா ஸ்கர்ட் என அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப உடைகள் பிரபலமாவதை நாம் பார்த்து வருகிறோம். ஃபேஷன்... எதிலிருந்து அமைக்கப்படுகிறது என்று பார்த்தால், அது உருவாகும் இடம் சினிமாவாகத்தான் உள்ளது. மக்களை மகிழவைக்கும் சினிமா மறுபக்கம் ஃேபஷன் ஹப்பாகவும் மாறி இருக்கிறது என்று நாம் யோசித்து பார்க்கும் போதுதான் புரிகிறது. சினிமாவிற்கும் ஃபேஷனுக்கும் என்ன தொடர்புள்ளது என்பது குறித்து இந்த இதழில் பார்க்கலாம். சினிமா உலகளாவில் ஃபேஷன் டிரண்டுகள் என்னென்ன நிலவி வருகிறது என்பதை சுட்டிக்காட்டும் பெட்டகம்.

கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் பலதரப்பட்ட சினிமாக்களில் வரும் நாயகிகள் அணியும் உடை மற்றும் அணிகலன்கள் போலவே அணிந்து கொள்ள வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். ஒருவர் அணியும் உடை முதல் அவர்கள் பேசும் ஸ்டைல், நடந்து  கொள்ளும் விதம் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால்... அதில் கண்டிப்பாக  ஏதாவது ஒரு சினிமாவின் தாக்கம் இருக்கும்.

அப்படிப்பட்ட ஃபேஷன் தாக்கத்தை நம்மை அறியாமலேயே சினிமா ஏற்படுத்தி வந்துள்ளது. உதாரணத்திற்கு அம்மா, அப்பாவின் பழைய புகைப்படத்தை எடுத்து பார்த்தால், அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய உடை அல்லது அணிகலன்களின் சாயலில் ஏதாவது ஒரு உடை மற்றும் ஆபரணங்கள் இன்றைய தலைமுறையினரின் அலமாரியில் பார்க்க முடியும். வெள்ளித்திரை மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் யாருமே மறுக்க முடியாது.

உதாரணத்திற்கு ‘96’ படத்தில் ஜானுவாக நடித்த திரிஷாவின் குர்தா, ஜீன்ஸ் மற்றும் கழுத்தை சுற்றி அணியும் துப்பட்டா தான் பெண்கள் மத்தியில் மிகவும் ஃபேமசாக இருந்தது. அதன் அடிப்படையில் பார்த்தால், சினிமாவில் நடிகைகள் அணிவதை மற்றவர்களும் எவ்வாறு அணியக்கூடியதாக செய்யலாம் என்று செயல்படுவது ஃபேஷன் துறையின் ஒரு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது. அதே சமயம் அதில் நடிகைகள் அணியும் எல்லாவற்றையும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அணிய முடியாது. எந்திரன் படத்தில் கிளிமஞ்சாரோ பாடலில் நடிகை ஐஸ்வர்யா ராய் நெருப்புக்கோழி கொண்டைப் போல் சிகை அலங்காரம் செய்திருப்பார். அந்த உடை மற்றும் சிகை அலங்காரம் சினிமாவிற்கானது மட்டுமே!

ஃபேஷன் துறையின் மேல் ஒரு தாக்கத்தினை சினிமா ஏற்படுத்தினாலும், காலத்திற்கு ஏற்ப இங்கும் ஃபேஷன் மாறினாலும், ஃபேஷன் துறைக்கு பெரிய  ஊன்றுகோலாக சினிமா இருந்து வருகிறது. வெள்ளித்திரையில் நயன்தாரா ஒரு உடை அணிந்து வந்திருப்பார். பழைய ஸ்டைல் உடையாக இருந்தாலும் அந்த சமயத்தில் அது டிரண்டாக மாறும். இதைப் பார்த்து தான் ஃபேஷன் டிசைனர்கள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் என எல்லாரும் தங்களிடம் இருக்கும் பழைய டிசைன் உடைகளை தூசி தட்டி அதற்குள் ஒரு புது ஃபேஷனைப் புகுத்தி அறிமுகம் செய்கிறார்கள்.

1960ம் காலக்கட்டத்தில் நம்முடைய அம்மாக்கள் தலை முடியினை பெரிய பன் சைசில் கொண்டைப் போல் முடிந்திருப்பார்கள். கேப் ஸ்லீவ் மற்றும் ஷார்ட் ஸ்லீவ் போன்ற கைகள் கொண்ட பிளவுஸ்களை அணிந்திருந்தார்கள். மேலும் புடவையைக்கூட வித்தியாசமாக முடிந்து வந்தனர். காரணம் அந்தக் காலக்கட்டத்தில் சினிமாவில் உள்ள நடிகைகளின் உடை அமைப்பிற்கு ஏற்ப இவர்களும் தங்களின் உடைகளை பல விதமாக உடுத்தினர்.

குறிப்பாக நடிகை சரோஜாதேவியின் ஸ்கார்ப், நடிகை சாவித்திரியின் ஹை நெக் பிளவுஸ், நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் காதுகளை மறைக்கும் சிகை அலங்காரம், நடிகை சவுக்கார் ஜானகி அவர்களின் காலர் பிளவுஸ் (இப்போதும் சவுக்கார் அவர்களின் பிளவுஸ்களை பெண்கள் விரும்புகிறார்கள்) பெண்களின் மத்தியில் சூப்பர் ஹிட்டானது. உடைகளின் டிசைன்கள் மட்டுமில்லாமல் துணிகளின் ரகங்களும் சினிமா நடிகைகளைப் பார்த்தே உடுத்த ஆரம்பித்தனர். மெல்லிய துணியான வாயல் துணியில் பூ டிசைன்கள் கொண்ட உடைகள் பெண்களை ஈர்த்தது. மேலும் பட்டுப்புடவைகள் என்றால் அதில் மஸ்டர்ட் அல்லது பச்சை நிற பூ டிசைன்கள் கண்டிப்பாக இருக்கும்.

80களில் பெரும்பாலும் சினிமாவில் வரும் உடைகள் மற்றும் மேக்கப்பினை பெண்கள் அப்படியே பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே தான் சினிமா நடிகையின் ஃபேஷனை பின்பற்றினார்கள். காரணம் பலருக்கு அந்த அலங்காரம் தங்களுக்கு பொருந்துமா என்ற தயக்கம் இருந்தது. 80களில் சினிமாவில் நடிகைகள் அணிந்த உடைகள், அணிகலன்கள் அவர்களின் பெயரைக் கொண்டே விற்பனையானதால், மக்கள் அதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர்.

சினிமா மட்டுமே புதிய ஃபேஷன்களை அறிமுகம் செய்யவில்லை. மக்கள் எளிதாக பிரதிபலிக்கக் கூடிய ஆடைகளையும் ஃபேஷனாக மாற்றினார்கள். உதாரணத்திற்கு நடிகைகளான ஹீரா, ராதிகா, நதியா, ரேவதி இவர்கள் கல்லூரி பெண்களாக நடிக்கும் போது அவர்கள் உடுத்திய ஆடைகளை எளதில் அதே போல் தைத்துக் கொள்ள முடியும் என்பதால், கல்லூரி பெண்கள் அதிகம் அதே போன்ற ஆடையினை விரும்பி உடுத்தி இருப்பதை பார்க்கலாம். 80களில் நடிகை நதியாவின் ஃபேஷன் பல பெண்களை ஈர்த்தது. நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா பொட்டு என அவரின் எல்லா ஃபேஷன்களையும் பெண்கள் காப்பி அடித்தார்கள்.

நதியாவை தொடர்ந்து ஹீரா, ராதா, தேவி, அமலா, அம்பிகா, கவுதமி, சுகன்யா, குஷ்பு, ராதிகா, ரேவதி இவர்களின் ஸ்டைல்களும் பாப்புலராக ஆரம்பித்தது. உதாரணத்திற்கு நடிகை சங்கீதா பூவே உனக்காக படத்தில் அணிந்த புடவை, இதயத்தை திருடாதே படத்தின் நாயகியின் ஸ்கர்ட் துப்பட்டாவுடன் மேலாடை (கீதாஞ்சலி என்று அழைக்கப்பட்ட முக்கால் அளவு கொண்ட ஸ்கர்ட், சம்கி வேலைப்பாடு கொண்ட  மேலாடை துப்பட்டா இந்த உடை 90களில் மிகவும் பாப்புலர்), பொன்னுமணி படத்தில் நடிகை சவுந்தர்யா அணிந்த சுடிதார், மன்னன் திரைப்படத்தில் விஜயசாந்தி அணிந்த பிளவுஸ், வருஷம் 16 படத்தில் குஷ்பூ அணிந்த பாவாடை தாவணி, சத்ரியன் படத்தில் பானுப்பிரியாவின் ஜார்ஜெட் புடவை பூ டிசைன் கொண்ட பிளவுஸ், புதிய முகம் படத்தில் ரேவதியின் மிடிஸ்கர்ட் என பல உடைகள் அந்தந்த காலக்கட்டத்தில் பிரபலமானது.

90களில் பெரும்பாலான உடைகள் உடலை இறுக்கிப்பிடிக்காமல் மிகவும் தளர்வாகத்தான் இருந்து வந்தன. பிரபுதேவாவின் பேகி பேன்ட் ஸ்டைல் அந்த காலத்தில் ஆண்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ். அதேபோல் அவர்கள் அணியும் டி-ஷர்ட்களும் மிகவும் நீளமாகவும் தளர்வாகவும் இருந்து வந்தன. இந்தக் காலக்கட்டத்தில் தான் கேஷுவல் உடைகளுக்கு ஆண்கள் பர்முடா போன்ற ஷார்ட்ஸ்களை அணிய ஆரம்பித்தனர். 90களில் நிலவி வந்த சினிமா ஃபேஷன்களை நாம் அப்படியே மறுபடியும் உருவாக்க முடிந்தது. ஆனால் 2000ங்களில் சினிமாவில் வெளியான உடைகளை நம்மால் நிஜ வாழ்க்கையில் அன்றாடம் அணிய முடியாத வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

உதாரணத்திற்கு உனக்கு 20 எனக்கு 18 படத்தில் நாயகிகள் குட்டை பாவாடைகளை அணிந்திருந்தனர். அந்த உடைகளை நாம் யாராலும் அணிந்து கல்லூரி மற்றும் பொது இடங்களுக்கு செல்ல முடியாது. இவை எல்லாம் தெரிந்தே உணர்வுபூர்வமாக வடிவமைக்கப்பட்டன. ஆனால் இந்த உடைகளை பெரியவர்களால் அணிய முடியவில்லை என்றாலும் குழந்தைகளுக்கு இது போன்ற உடைகளை அணிந்து மகிழ்ந்தனர். சினிமாவை தொன்று தொட்டு இயங்கி வரும் ஃபேஷன்... அவை ஆடைகளோ அல்லது அணிகலன்களோ எதுவாக இருந்தாலும், மக்களால் அதை எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும். நாம் அனைவரும் குர்தா மற்றும் ஜீன்சினை அணிவது வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் அதையே காக்க காக்க படத்தில் ஜோதிகா அணியும் போது அதன் தோற்றம் புதிதாக இருந்தது. அதேபோல் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா அணியும் காட்டன் புடவைகள் மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகாவின் புடவைகள் மேல் பெண்கள் மோகம் கொண்டிருந்தனர்.

ரீல் உலகில் நிலவி வந்த ஃபேஷன்களை பட்டியலிட்டால் அவை ரியல் உலகிற்கு சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே அந்த உடைகள் மற்றும் அணிகலன்களை ஃபேஷனாக மாற்றி அமைக்க முடியும். 80 மற்றும் 90களில் ஜார்ஜெட் புடவைகள் எவ்வாறு ஃபேமசோ அதேபோல் 20களில் காட்டன் புடவைகள் மிகவும் பிரபலமாயின. ஆனால் பெரும்பாலான பெண்கள் புடவையினை அணிய மிகவும் சங்கடப்பட்டனர். ஆனால் திரிஷா காட்டன் புடவையினை அணிந்ததைப் பார்த்து பல பெண்கள் புடவையினை கொண்டாட துவங்கினர்.

ஃபேஷன் துறைகள் சினிமாவினால் இருந்து மட்டுமே ஈர்க்கப்படவில்லை. அரசியல் துறையில் மிளிர்ந்த இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி அவர்கள் பல ஊர்களில் இருந்து தேர்வு செய்து அணியும் ஹாண்ட்லூம் புடவைகளும் ஃபேஷன் உலகில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. புடவையினை அழகாகவும் அதே சமயம் ஈர்க்கக்கூடிய வகையில் நம்மூர் பெண்களைப் போல் வேறு யாராலும் அணியமுடியாது. குறிப்பாக ஷிபான் புடவைகள். பெண்களின் வளைவு நெளிவுகளை அழகாக சுட்டிக்காட்டும் ஷிபான் புடவைகளை எந்த உடல் வாகு கொண்டிருக்கும் பெண் அணிந்தாலும் தேவதைப் போல் மிளிர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த புடவைகள் பெண்கள் மிகவும் விரும்பும் புடவையாக பல ஆண்டு காலம் அவர்கள் மனதில் இடம் பெற்றிருந்தது. உடலோடு தழுவி இருக்கும் ஷிபான் புடவைகளை பல டிசைன்களில் அணிய முடியும். இப்போது... ஐந்தரை அடி நீளமுள்ள புடவையினை பல வித டிசைன்களை புகுத்தி வித்தியாசமான காம்போவுடன் அதற்கான பிளவுஸ் அணிவது ஃபேஷனாக நிலவி வருகிறது. சினிமா நாயகிகளின் உடைகள் மற்றும் அணிகலன்களை மட்டுமே ஃபேஷன் என பின்பற்றி வந்த பெண்கள் இப்போது அவர்களை போல் சிகை அலங்காரம் மற்றும் சரும பராமரிப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த 12 வருடங்களில் உடை மட்டுமில்லாமல் ஃபேஷன் சார்ந்த அனைத்தும் உலகளவில் நாளுக்கு நாள் பலவித மாற்றங்களை சந்தித்து வருகிறது.

கண்களை பறிக்கும் வண்ண நிறங்களை முன்பு விரும்பிய பெண்கள் இப்போது மெல்லிய நிறங்களை விரும்ப ஆரம்பித்துள்ளனர். புடவைக்கான ஜாக்கெட்களும் ஹாண்ட்லூமில் இருந்து புதுமையாக வடிவமைக்க விரும்புகிறார்கள். குறிப்பாக கான்ட்ராஸ்ட் டிசைன்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதாவது உடைகள் மெல்லிய நிறங்களாக இருந்தால், அதற்கான அணிகலன்கள் மிகவும் வண்ணமயமாகவும், பளபளப்பாகவும் இருந்தால் தான் பார்க்கும் போது, அழகாக தோற்றமளிக்கும். உடை மட்டுமில்லாமல் அவர்களின் தோற்றமும்  காலத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. பெண்கள் தங்கள் புருவங்களை அடர்த்தியாக வடிவமைக்க ஆரம்பித்து லிப்ஸ்டிக் வரை அனைத்தும் எல்லாரும் அணியக்கூடியது ஒன்றாக மாறிவிட்டது.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்