SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்துமஸ் மரம் ஏன் அலங்கரிக்கப்படுகிறது?

2021-12-23@ 17:53:15

நன்றி குங்குமம் தோழி

உலகளவில் பல மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப்பொருட்களுக்கு அடுத்ததாக அழகாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்தான் நியாபகம் வரும். அதிலும் இருண்ட குளிர்காலத்தில் பச்சை மரத்தைக் கொண்டு வீடுகளை அலங்கரிப்பதன் மூலம் புதிய வாழ்க்கையின் அடையாளத்தை இந்த மரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வழக்கம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ரோமானியர்கள் சாட்டர்னாலியா எனப்படும் திருவிழாவுக்கு, தங்கள் வழிபாட்டுத்தலங்களை ஃபிர் மரங்களைக் கொண்டு அலங்கரித்ததாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் கிறிஸ்தவர்கள் அந்த மரங்களை கடவுளுடன் அடையாளப்படுத்தி இருளையும், பணியையும் வீழ்த்த வந்த வெளிச்சமாக பார்த்தனர். மேலும் கடுமையான பனிக் காலங்களில் நோயையும், தீய சக்திகளையும் இந்த பச்சை மரங்கள் தடுக்கும் என்றும் நம்பப்பட்டது.

லாத்வியா, எஸ்தோனிய ஆகிய நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் வைக்கும் வழக்கம் தங்களிடமிருந்துதான் தொடங்கியதாக கூறுகின்றனர். இதன் ஆரம்பம் சரியாக தெரியாவிட்டாலும், கிறிஸ்துமஸ் மரங்களை வீடுகளில் வைக்கும் வழக்கத்தை அதிகம் பரப்பியது ஜெர்மனிதான் என்கின்றனர். அப்போது கிறிஸ்துமஸ் மரங்கள் உணவுகளால் அலங்கரிக்கப்பட்டது. ஜின்ஜர் பிரட், தங்கம் பூசப்பட்ட ஆப்பிள்கள் மற்றும் வீட்டிலேயே செய்யும் கைவினைப்பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து வந்தனர். சிலர் மெழுகுவர்த்தியைக் கொண்டும் அலங்கரித்தனர். காலப்போக்கில் மெழுகுவர்த்திக்கு பதிலாக மின் விளக்குகள் உபயோகத்திற்கு வந்தன.

1848ல் இங்கிலாந்து ராணி விக்டோரியாவும் அவரது குடும்பத்தினரும் வின்ட்சர் கோட்டையில், பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி நிற்பது  போன்ற ஓவியப்படம், லண்டன் செய்தித்தாளில் வெளியானதும் அந்நாட்டின் குடியிருப்புகளில் கிறிஸ்துமஸ் மரம் பிரபலமானது.பொதுவாகவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எந்த காலநிலையிலும் பச்சையாகவே இருக்கும் ஃபிர் அல்லது பைன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பச்சையாகவே இருந்து பின் உதிர்ந்துவிடும்.

முதலில் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமே இருந்த கிறிஸ்துமஸ் மரம், இன்று பெரும்பாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் அனைவரின் வீட்டிலும் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப மரங்களை வாங்கி அலங்கரிக்கின்றனர்.மரத்தின் உச்சியில் ஸ்டார் வைக்கப்படுகிறது. இது இயேசு பிறக்கும் போது அவரை கண்டுபிடிக்க உதவிய ஒளிரும் நட்சத்திரத்தைக் குறிக்கிறது. பச்சை, சிவப்பு, தங்கநிறம் வெள்ளி நிறங்களைக் கொண்டே கிறிஸ்துமஸ் மரம் பொதுவாக அலங்கரிக்கப்படும். பச்சை நிறம், மக்கள் உண்டு உயிர்வாழ இறைவன் உருவாக்கிய இயற்கையான மரம், செடி, தாவரங்களைக் குறிக்கிறது. சிவப்பு நிறம், இயேசு மக்களை காக்க சிந்திய ரத்தத்தை குறிக்கிறது.

வெள்ளியும், தங்கமும் ஆசியையும், செழிப்பையும் குறிக்கிறது.கிறிஸ்துமஸ் மணிகள், தொலைந்துபோன ஆடுகளை இருப்பிடத்திற்கு அழைத்துப் போகும் வழிகாட்டியாக இருப்பது போல, மக்களை நல்வழியில் செலுத்தும் அடையாளத்தைக் குறிக்கிறது. டின்செல் எனப்படும்  பளபளப்பான வண்ணத் தோரணங்கள், இயேசு பிறந்த போது, அவரை தொழுவத்தில் கதகதப்பாக வைத்திருக்க ஏற்றப்பட்ட நெருப்பின் தீப்பொறியைக் குறிக்கிறது. மின்விளக்குகள், வானத்தில் மின்னும் எண்ணற்ற நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.
 
பைன் மரத்தின் கூம்புகள், தாய்மையை அடையாளப்படுத்துகின்றன. பளபளக்கும் கிறிஸ்துமஸ் பந்துகள், விண்ணுலகத்திலிருந்து வரும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. மரத்தில் கட்டப்பட்டிருக்கும் செந்நிற ‘போ’ முடிச்சுகள் (Bow), மக்களிடையே என்றென்றும் நிலைத்திருக்கும் நல்லெண்ணங்களை குறிக்கும்.காலப்போக்கில் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இயற்கை மரங்களுக்குப் பதில் செயற்கை மரங்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட மரங்களும் இப்போது பிரபலமாக விற்பனையாகின்றன. பச்சை மரங்களுக்குப் பதில், சிவப்பு, வெள்ளை, வானவில் வண்ணங்கள் என்றும் மாறியுள்ளது.

இப்போது கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது குடும்பங்களை ஒன்றிணைக்கும் மகிழ்ச்சியான தருணமாய் பார்க்கப்படுகிறது.  அனைவரும் கிறிஸ்துமஸ் மரத்தை அழகாக அலங்கரித்து அருகில் பரிசுப் பொருட்களை வைப்பார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று, அந்த பரிசுப்பொருட்கள் ஒன்றாக பிரிக்கப்படும்.

20 ஆம் நூற்றாண்டுக்கு பின், பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரத்தை அழகாக அலங்கரித்துக் காட்சிப்படுத்தும் வழக்கம் பிரபலமாகியது. சுற்றுலாத் தலங்களில், தனியார் நிறுவனங்களில், ஷாப்பிங் மால்களில், கஃபேக்களில் என ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • peru_Clowns Day

  பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

 • yercaussss

  ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

 • america_primery

  அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்