SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழில் ஒரே படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சாந்தா ஆப்தே

2021-12-23@ 17:50:53

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-89

‘இன்பமே உந்தன் பேர் பெண்மையோ’ என்றும் ‘ஒன்றும் அறியாத பெண்ணோ’ என்றும் ‘இதயக்கனி’ படத்தில் உடன் நடித்த நாயகி ராதா சலூஜாவைப் பார்த்துப் பாடுவார் எம்.ஜி.ஆர். இந்தித் திரையுலகிலிருந்து தமிழுக்கு நாயகியாக நடிக்க வந்தவர் ராதா சலூஜா. அதன் பிறகு 1979ல் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த ‘கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன’ பட்த்தில் டிம்பிள் கபாடியாவின் தங்கை சிம்பிள் கபாடியா நாயகியாக அறிமுகமாகி, அந்தப் படத்துக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் மீண்டும் நடிக்கவேயில்லை. 1986-ல் கமலஹாஸன் அழைப்பின் பேரில், டிம்பிள் கபாடியா ‘விக்ரம்’ படத்தில் நடித்தார். இப்படி அங்கொருவரும் இங்கொருவருமாக பல்லவி, ரூபிணி என சில நடிகைகள் நடித்துக் கொண்டிருந்த நிலை ஒரு காலகட்டத்தில் மாறியது.

தமிழ்த் திரைப்படங்களில் வட இந்திய நட்சத்திரங்கள் கால் பதிக்கத் துவங்கிய நிலை 90களுக்குப் பின் முற்றிலும் தலைகீழாக மாறியது. முழுக்க முழுக்க வட இந்திய நடிகைகள் மட்டுமே முன்னணி நடிகைகளாக இங்கு மாறிய நிலையில் குஷ்பு, சிம்ரன், ஜோதிகா மூவரும் தங்கள் நடிப்பால் ஸ்டார் அந்தஸ்தை எட்டிப் பிடித்தார்கள். நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துப் பல ஆண்டுகளுக்குத் தமிழ்த் திரையில் கோலோச்சினார்கள். பின், நிரந்தரமாகத் தமிழகத்தையே தங்கள் முகவரியாக்கிக் கொண்டார்கள். குஷ்புவும் ஜோதிகாவும் தமிழகத்தின் மருமகள்களானதுடன், அரசியலிலும் அழுத்தமாகக் கால் பதித்தார் குஷ்பு.

தமிழில் பேசி அறிமுகமான சாந்தா ஆப்தே

அதேபோல சமீப ஆண்டுகளில் ஆப்தே என்ற பெயர் பரவலாக அறியப்பட்டது. ஆம், பிரகாஷ் ராஜ் தன் சொந்தப் படமான ‘தோனி’ யில் ராதிகா ஆப்தே என்ற மராத்தி நடிகையை நாயகியாக அறிமுகப்படுத்தினார். மென் சோகம் கப்பிய கண்களுடன் சிரிப்பறியா முகத்துடன் இளம் விதவையாக அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் அடுத்த ஃபிளாட் வாசியாக அப்படத்தில் தோன்றினார் ராதிகா ஆப்தே. அடுத்து ‘அகல்யா’ குறும்படத்தின் மூலம் அதற்கு நேர்மாறான ஒரு தோற்றத்தில், நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தினார். பின்னர் புயல் வேகத்தில் ‘கபாலி’ பட நாயகி குமுதவல்லியாக, ரஜினிக்கு இணையாக, கபாலி நாயகனைச் செதுக்கிய பெண்ணாக அனைவரையும் கவர்ந்தார்.

ஆனால், ராதிகா ஆப்தே தமிழ்ப் படங்களில் நடிக்க வருவதற்கு 80 ஆண்டுகளுக்கு முன்பாகவே மற்றொரு ஆப்தே நடிகை தமிழ்ப்படத்தில் நாயகியாக, அதிலும் சொந்தக் குரலில் தமிழில் பாடி, வசனம் பேசி நடித்திருக்கிறார். அந்தத் திறமைசாலியின் நடிகையின் பெயர் சாந்தா ஆப்தே. இன்றைய தலைமுறையினர் அறியாத ஒரு பெயர் சாந்தா ஆப்தே. வட இந்தியாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்து பிள்ளையார் சுழி போட்ட முதல் நடிகையும் இவர்தான். தாய்மொழி மராத்தி என்றாலும் இந்தியிலும் பல படங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்றவர். 1930களின் ஆரம்பத்தில் நடிக்கத் துவங்கிய இவர் இந்தியிலும் மராத்தியிலும் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

மராத்தி, இந்திப் படங்களில் பாடி நடித்து வட இந்தியாவில் ஜொலித்துக் கொண்டிருந்த அந்த நட்சத்திரத்தைத் தமிழில் நடிப்பதற்காக இங்கு அழைத்துக்கொண்டு வந்து சேர்த்தவர் யரகுடிபதி வரத ராவ் என்ற ஒய்.வி.ராவ். ஆரம்ப காலத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி சினிமா தயாரிப்பு முன்னோடி. நடிகர், இயக்குநர், சாதனையாளரும் கூட. பல மொழிகள் கற்றறிந்த வித்தகர். ‘சிந்தாமணி’ படத்தை இயக்கியதுடன் கன்னடத்திலிருந்து நடிகை அஸ்வத்தம்மாவை தமிழுக்கு அழைத்து வந்தவரும் இவரே.

நடிகை வசுந்தரா தேவியை சினிமாவுக்குக் கொண்டு வந்து சேர்த்தவரும் இவர்தான். ஆனால், அது சற்றே பிசகியதால், வேறு ஒரு பெண்ணை வசுந்தரா தேவி என்ற பெயரில் திரையில் அறிமுகப்படுத்தினார். அப்போதைய புகழ் பெற்ற நட்சத்திரங்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.பி.ராஜலட்சுமி, செருகளத்தூர் சாமா, தெலுங்கின் காஞ்சனமாலா என பலரையும் தன் படங்களில் இயக்கியவர். 1941 ஆம் ஆண்டில் வெளியான ‘சாவித்திரி’ படத்தின் நாயகி சாந்தா ஆப்தே என்றால், நாயகன் சத்தியவானாக நடித்தவர் ஒய்.வி.ராவ். சாந்தா ஆப்தே தன் தாய் மொழியான மராத்தி மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல், தமிழிலும் சொந்தக் குரலில் பாடி, வசனம் பேசி நடித்தவர்.

குஷ்பு, சிம்ரன், ஜோதிகா இவர்கள் பல படங்களில் நடித்திருந்தபோதும், இவர்களில் யாருமே சொந்தக் குரலில் பேசவில்லை. (ஜோதிகா நடித்த ‘மாயாவி’ மட்டும் விதி விலக்கு) இவர்கள் மட்டுமல்ல, நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்திய மொழியான மலையாளத்தைத் தாய்மொழியாகப் பேசும் நடிகைகளான அம்பிகா, ராதா, நதியா போன்றவர்கள் உட்பட பலரும் டப்பிங் கலைஞர்களின் புண்ணியத்தாலேயே தங்கள் திரை வாழ்க்கை முழுமையையும் நடித்துக் கடந்தவர்கள். இப்போது தமிழின் முதன்மை இடத்திலிருக்கும் கேரளத்துப் பெண் குட்டிகள் முதல் தமன்னா, ஹன்சிகா வரை அதுவே நியதியாகவும் ஆகி இருக்கிறது.

அந்த வகையில் பார்க்கும்போது சாந்தா ஆப்தே மாபெரும் சாதனையாளர் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் மொழி தெரியாவிட்டாலும் தன் கடும் முயற்சியால் அதை நிகழ்த்திக் காட்டினார். தமிழில் ‘சாவித்திரி’ என்ற ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்தார். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் அவர் நடித்திருப்பாரே ஆனால், பெரும் சாதனைகளைத் தமிழ்த் திரையுலகிலும் நிகழ்த்தியிருப்பார் என்று நம்பலாம்.

அப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே, ஓராண்டு காலம் சாந்தா தமிழ் எழுதவும் படிக்கவும் பயிற்சி பெற்றார். அவருக்குப் பயிற்சி அளித்தவர் வசனகர்த்தாவான வடிவேலு நாயக்கர் மற்றும் பூனாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருவரும் ஆவர். இந்தப் பெண்மணி சென்னை மயிலாப்பூரிலிருந்து திருமணமாகி பூனாவுக்குச் சென்றவர். இவர்கள் இருவரும் அளித்த பயிற்சியுடன், சாந்தா ஆப்தேவின் கடுமையான உழைப்பு, ஆர்வம் இரண்டும் ஒருங்கிணைந்ததால் அவரால் அற்புதமாகத் தமிழில் பாடவும் வசனம் பேசவும் முடிந்தது.

சாவித்திரியாக சாந்தாவும் நாரதராக எம்.எஸ்.சுப்புலட்சுமியும்விறகு வெட்டக் காட்டுக்குள் செல்லும் கணவன் சத்தியவானுடன் தானும் வருவதாகச் சொல்லி, உடன் செல்லும் சாவித்திரியின் கண்ணெதிரிலேயே சத்தியவான் மயங்கிக் கீழே விழுந்து உயிரை விடுகிறான். அவன் உயிரைக் கவர்ந்து செல்லும் எமனுடன் பின்தொடர்ந்து சென்று, பல தடைகளைக் கடந்து, போராடி, அவனுடன் சமயோசிதமாக வாதாடி கணவன் உயிரை மீட்டுக் கொண்டுவரும் பிடிவாதக்கார, புத்திசாலிப்பெண் சாவித்திரியாக நடித்தார். புராணக்கதை என்றபோதும் சாவித்திரியின் அலங்காரமும் உடைகளும் அழகும் மிக நாகரிகமாக அப்படத்தில் இருந்தன.

‘சாவித்திரி’ படத்துக்காக பாபநாசம் சிவன் எழுதிய பத்து பாடல்களில், எட்டு பாடல்களை சாந்தா ஆப்தே பாடியிருக்கிறார். இப்போதும் தமிழ்த் தொலைக்காட்சி சானல்கள் இப்படத்தைத் திரையிட்டு வருகின்றன. இப்படத்தில் இவருடன் நாரதர் வேடத்தில் நடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. சாவித்திரி வேடத்தில் நடிப்பதற்காக ராயல் டாக்கீஸார் முதலில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைத் தான் அணுகியிருக்கிறார்கள். ‘சகுந்தலை’ படத்துக்குப் பின் எம்.எஸ்.சுப்புலட்சுமி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் தீர்மானமாக இருந்தார். சதாசிவத்துடன் அப்போதுதான் அவருக்குத் திருமணமும் நடந்து முடிந்திருந்ததால் வந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் மறுத்து விட்டார். அதன் பின்னர் திரையில் சாவித்திரியாகும் வாய்ப்பு சாந்தா ஆப்தேவுக்குப் போய்ச் சேர்ந்தது.

தயக்கத்துடன் தயாரிப்பாளரை மீண்டும் அணுகியபோது, காலம் கடந்து விட்டது. சாவித்திரியாக சாந்தா ஆப்தே நடிப்பது உறுதியாகி விட்டது என்பதும் தெரிய வந்தது. ஆனாலும், எம்.எஸ்.சுப்புலட்சுமியைத் தவிர்க்க விரும்பாமல் நாரதர் வேட வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ‘ஆண் வேடம் ஏற்பதா?’ என்ற தயக்கம் ஒருபுறம் எழுந்தாலும், ஏற்கனவே அவருக்கு முன்னோடிகளான கே.பி.சுந்தராம்பாள், எஸ்.டி.சுப்புலட்சுமி, இருவரும் முறையே நந்தனாராகவும் கிருஷ்ணனாகவும் ஆண் வேடமேற்று நடித்துச் சாதனை புரிந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கியதால் தானும் நாரதர் வேடம் ஏற்க முன் வந்தார். அதன் மூலம் முதன்முதலில் நாரதர் வேடம் ஏற்ற பெண் என்ற பெருமைக்கும் உரியவரானார்.  அவருக்குப் பின் நாரதர் வேடமேற்று நடித்தவர் மற்றோர் இசைக்குயிலான என்.சி.வசந்த கோகிலம்.

சாந்தா பற்றிய மதிப்பீடுகள்  

இப்படத்தில் எமன் வேடம் ஏற்று நடித்த வி.ஏ.செல்லப்பா, ‘சினிமா ராணி’ என்று அறியப்பட்ட டி.பி.ராஜலட்சுமியுடன் இணைந்து பல படங்களில் நடித்த ஆரம்ப கால நடிகர். ‘அவ பக்கத்திலே நின்னா ஜில்லுன்னு இருக்கு, குளிரே தாங்க முடியலே. கடிச்சித் திங்கலாம் போல அப்படியொரு அழகு!’ நாயகி சாந்தா ஆப்தேவுடன் இணைந்து நடித்த பிறகு அவரைப் பற்றிய செல்லப்பாவின் கருத்து இப்படியாகத்தான் இருந்தது. தமிழ் மொழியை நன்கு  அறிந்த ஒரு நடிகையைப் பற்றியே அவர் இப்படியான கருத்தினைக் கொண்டிருந்தால், அதைத் தயங்காமல் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினால் இப்போதுபோல் மொழியே அறியாமல் வந்து, இரவல் குரலில் பேசி நடித்து விட்டுப் போகும் நடிகைகளைப் பற்றிச் சொல்லப்படும் கருத்துகள் எப்படியானதாக இருக்கும் என்பதையும் நாம் எளிதாக அனுமானிக்கலாம்.

ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், தன்னுடைய சிறு வயதில் தங்கள் வீட்டுச் சுவரில் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற விடுதலைப் போராட்ட நாயகர்களின் படங்களுக்கு இணையாக ஒரு இந்தி நடிகையின் படமும் தொங்கியதாக எழுதிச் செல்கிறார். ஆனால், அப்போது அவர் யாரென்பதைத்தான் அறிந்து கொள்ளவில்லை என்றும், அந்தப் படத்திலிருந்தவர் யாரென்பதைப் பின்னாளில், தான் அறிந்து கொண்டதாகவும் அவர் ‘சாவித்திரி’ படத்தில் நடித்த இந்தி நடிகை சாந்தா ஆப்தே என்றும் குறிப்பிடுகிறார்.

ஒரு வேற்றுமொழி நடிகை கடல் கடந்த தேசத்திலும் ரசிகர்களின் வீடுகளில் படமாக மாட்டி வைக்கும் அளவுக்குப் பிரபலமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்புகள் ஒருங்கிணைந்திருந்தபோதும் ஏனோ ‘சாவித்திரி’ திரைப்படம் பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், சாந்தா ஆப்தே தொடர்ச்சி யாக மேலும் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கக் கூடும்.

எவராலும் புறக்கணிக்கப்பட முடியாதவர்

1916 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் துத்னியில் பிறந்தவர் சாந்தா ஆப்தே. இந்த ஆண்டு அவருக்கு நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சாந்தாவின் தந்தையார் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றியவர். அற்புதமான கலா ரசிகர். இசையின் மீது பேரார்வம் கொண்டவர். பணியின் பொருட்டு குடும்பம் பந்தர்
பூருக்கு இடம் பெயர வேண்டிய நிலை. இளம் வயதில் பந்தர்பூரில் வளர்ந்த சாந்தா, ‘மஹாராஷ்டிர சங்கீத் வித்யாலயா’ வில் சிறு வயதிலேயே சேர்க்கப்பட்டார். அங்கு பெற்ற அருமையான இசைப்பயிற்சி சாந்தாவை அற்புதமானதொரு பாடகியாக உரு மாற்றியது.

 அந்தத் திறனே அவரை மிக இளம் வயதிலேயே திரை நட்சத்திரமாகவும் மாறுவதற்குத் துணை புரிந்தது. அந்தக் காலகட்டத்தின் நடிகையரில் மதராஸ், பம்பாய், கல்கத்தா, லாகூர் என நாட்டின் அனைத்துப் பகுதி திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஒரே தேர்வாக சாந்தா இருந்தார். அவர்களின் படங்கள் அனைத்திலும் நடித்த ஒரே நடிகையும் இவர்தான் என்பதும் சொல்லாமலே விளங்கும். 1932 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை கால் நூற்றாண்டுக் காலம் இந்தித் திரையுலகின் முதன்மை நாயகியாக ஜொலித்தவர். இந்தித் திரையுலகின் முன்னோடி இயக்குநர் சாந்தாராம், முன்னணி நடிகர் பிருத்விராஜ் கபூர் போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

சாந்தா ஆப்தே பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தபோதும் 1936 ஆம் ஆண்டில் சாந்தாராம் இயக்கிய ‘அமர்ஜோதி’ சாந்தாவின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாகும். இந்தியில் வெள்ளி விழா கண்ட முதல் படமும் அதுதான். தமிழில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கெல்லாம் முன்னோடி இப்படம். இளவரசி நந்தினியாக சாந்தா ஏற்றிருந்த வேடம் ஒரு முன் மாதிரிப் பெண்ணை அடையாளம் காட்டியது என்றால் மிகையில்லை. பெண்ணுக்கே உரிய குணங்களாகச் சுட்டப்படும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற குணங்களைப் புறம் தள்ளிய பெண்ணாக, மிக மிக இயல்பாகத் தோன்றுவார்.  

வாழ்க்கையில் முதன்முறையாகச் சந்திக்கும் முன்பின் அறிமுகமற்ற ஒரு இளைஞனிடம் நீண்ட காலம் பழகியதைப் போன்ற பாவனையில் குறும்பும் எள்ளலும் தொனிக்கப் பேசுவதும், பாடுவதும் என அந்தக் காட்சியை இளமைத் துள்ளல் மிக்க ஒரு காட்சியாக மாற்றியதில் சாந்தாவுக்குப் பெரும் பங்கு உண்டு. மரங்கள் அடர்ந்த கானகப் பகுதியில் சக மனிதர்களுடன் உரையாடுவது போன்றே மரம், செடி,  கொடிகள் மற்றும் பறவைகளுடன் உரையாடுவது போன்ற தொனியில் அவர் சொந்தக் குரலில் பாடும், ‘சுனோ சுனோ பன் கி ப்ரனி’ பாடலைச் சலிப்பின்றிக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். நாட்டு விடுதலைக்காகப் போராடும் வீரம் மிக்கப் பெண்ணாக அவர் தோன்றும் காட்சிகளில் வீரம் தொனிக்கப் பேசும் வசனங்களும் நடிப்பும் என்றென்றும் மனதில் நிலைத்திருக்கக் கூடியவை.

1932ல் வெளியான ‘ஷ்யாம் சுந்தர்’ படத்தின் மூலமாக இந்திப் படவுலகில் அறிமுகமாகி ‘பாடும் நட்சத்திரம்’ என்ற பெருமதிப்பைப் பெற அவரது குரலும் பாடும் திறனும் மிகையற்ற இயல்பான நடிப்பும் சாந்தாவை மிக விரைவாக புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தன. அவரது திறமை கண்டு மராத்திப் படவுலகமும் அவரை உச்சி முகர்ந்து ஏற்றுக் கொண்டது. மராத்தி, இந்தி என இரு மொழிகளிலும் தயாரான ‘துனியா நா மனே’ படத்தில் வயது முதிர்ந்த ஒருவருக்கு விருப்பமின்றிக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் இளம் பெண்ணாகச் சிறப்பாக நடித்திருப்பார். அப்படம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தில் ஒரு ஆங்கிலப் பாடலையும் சாந்தா பாடி அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.

நடிகை மட்டுமல்ல, புரட்சிப் பெண்ணும் கூட…

1930 ஆம் ஆண்டுகளில் துவங்கி 1940கள் வரையிலும் சாந்தாவின் இனிமையான குரலில் வெளிப்பட்ட பாடல்களும் அவர் நடித்த படங்களும் நாடெங்கும் பெரும் புகழ் பெற்றதுடன் அனைவராலும் கொண்டாடவும் பட்டன. இந்தித் திரையுலகின் புரட்சிப் பெண்ணாகக் கொண்டாடப்பட்டவர் தாம் திரையில் ஏற்ற கதாபாத்திரங்களால் மட்டுமல்லாமல், அசல் வாழ்க்கையிலும் மிகுந்த துணிச்சல் மிக்க பெண்ணாகவே இருந்தவர். பிரபாத் ஸ்டுடியோஸ் தன்னுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு மாற்றாகச் செயல்படுவதாக உணர்ந்தவர், ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைத் துவங்கினார். பின்னர், பிரபாத் ஸ்டுடியோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து முற்றிலும் விலகினார்.

ஆனால், ஸ்டுடியோ நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில், ‘ஃபிலிம் இந்தியா’ இதழின் ஆசிரியர் பாபுராவ் படேல், சாந்தா ஆப்தேவின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்தில் அவரைப் பற்றி தன் பத்திரிகையில் ஆபாசமாகவும் அவதூறுகளையும் எழுதி வந்தார். இதைக் கண்டு பொறுக்காத சாந்தா, வீரம் மிக்க ஒரு மராத்தியப் பெண்ணாக ஒரு குதிரையேற்ற வீரரைப் போல் உடையணிந்து கொண்டு, கையில் சவுக்குடன் மிடுக்காக ‘ஃபிலிம் இந்தியா’ பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றவர், கையிலிருந்த சவுக்கால் பாபுராவ் படேலுக்கு ஆறு சவுக்கடிகளை வரி வரியாக விளாசித் தள்ளி விட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மறைந்த எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான சாதத் ஹஸன் மண்ட்டோ தன்னுடைய ‘Stars From Another Sky’ என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதன் பிறகுதான் சாந்தா ஆப்தே தமிழில் ‘சாவித்திரி’ படத்தில் நடித்தார். இந்தி நடிகை நயனா ஆப்தே ஜோஷி, சாந்தாவுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.1964 பிப்ரவரி 24ஆம் நாள் சாந்தா ஆப்தே மாரடைப்புக்கு பலியானார்.

இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும்,  ஏன், அயல் நாடுகளிலிருந்தும் கூட எமி ஜாக்ஸன் போன்ற பல நடிகைகள் தமிழ்த் திரையில் ஜொலித்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் எங்கிருந்து வந்தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒருவர் சாந்தா ஆப்தே. அவருடைய இனிய குரலுக்குச் சான்றாகத் தமிழில் அவர் பாடிய பாடல்கள்
அழகாக இனிமையாக இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்