SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுகதை-ஒற்றைக்கல் மூக்குத்தி

2021-12-22@ 17:44:42

நன்றி குங்குமம் தோழி

தன்முன் இருந்த கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொண்டே தன் செயலரிடம் அடுத்தடுத்த பணிகளுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.“சிவா! வசந்தத்திற்கு அனுப்ப வேண்டிய மெட்டீரியல்லை அனுப்பிட்டு தகவல் சொல்லிடு. சரக்கை இறக்கியதும் மறக்காம செக் வாங்கிடச் சொல்லு மூர்த்திகிட்ட!”

“எஸ் ஸார்!”

“அப்புறம் தியாகு இந்த முறை எக்ஸ்ட்ரா ஆர்டர்
கேட்டிருந்தாரே?”
“அனுப்பியாச்சு ஸார்!”
“குப்தாவுக்கு?”
“பேக்கிங் நடந்திட்டு இருக்கு ஸார். ஈவ்னிங் அனுப்பிடலாம்.”
“லேட் பண்ணிடாதே! பொங்கல் பர்சேஸ் டைம். கொஞ்சம் சீக்கிரமாய் அனுப்பு.”
“ எஸ் ஸார்!”

“அப்புறம் மதனை அனுப்பி இந்த செக்கை எல்லாம் பேங்க்ல போட்டுட்டு வரச்சொல்லு. பணம் அக்கவுண்ட்ல ஏறினபிறகு தாஸுக்கு சரக்கு அனுப்புங்க.”
“எஸ் ஸார்! ஸார் அப்புறம்…” சிவா தயங்க, தன் பணியை நிறுத்திவிட்டு நிமிர்ந்தான்.
“என்ன?”
“ஸார்… வொர்க்கர்ஸ் பத்தி சொன்னேனே…”
“ஏன்? வொர்க்கர்ஸுக்கு என்ன?”
“அதான் ஸார்!  பொங்கலுக்கு லீவு
விடுறதை…”
“அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே.
பொங்கலுக்கு லீவுதான்னு.”
“இல்ல ஸார்! அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்… அடுத்து காணும்பொங்கல்…”

“ அது எனக்குத் தெரியாதா? விஷயத்தைச் சொல். எனக்கு வேலையிருக்கு” - ஹரிஹரன் சுள்ளென விழ, சிவா எச்சில் விழுங்கினான்.
“ இல்ல ஸார்! நம்மகிட்ட வேலை செய்யுறவங்கள்ல பாதிபேர் வெளியூர்காரங்க.”
“ஸோ வாட்?”
“போகி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு நைட்தான் ஊருக்கு கிளம்புவாங்க. பொங்கல் அன்னிக்கு காலையில இறங்கிட்டு அன்னிக்கு நைட்டே கிளம்புறதுன்னா…”
“லுக் சிவா. நீ இன்னும் மேட்டருக்கு வரல..”

“வொர்க்கர்ஸ் எல்லாம் ரெண்டுநாள் லீவு விடச் சொல்றாங்க ஸார்” - சிவா பட்டெனச் சொல்லிவிட புருவம் உயர்த்தினான் ஹரிஹரன்.
“வாட்? ட்டூ டேஸா?”
“ஆமா ஸார்!”
“என்ன விளையாடுறீங்களா? ஒரு நாள் வேலை நடக்கலன்னா நமக்கு எவ்வளவு
நஷ்டம்னு தெரியுமா?
“……………”

“பொங்கலை அட்டெண்ட் பண்ணிட்டு மறுநாளே எல்லாரும் வந்து வேலையில ஜாய்ன் பண்ணணும்னு சொல்லு. மாட்டுப் பொங்கல் அன்னிக்கு வொர்க் பண்ணினால் டபுள் சம்பளம்னு சொல்லு. தானாய் ஓடிவந்திடுவாங்க” - என்றவாறே கையெழுத்திட்ட கோப்புகளை நீட்டிய நேரம் அலைபேசி அழைத்தது. தயக்கமாய் நின்றவனை “கிளம்பு” என்று விட்டு போனை உயிர்பித்து காதில் வைத்தான்.“சொல்லு!”
“என்னங்க! உங்க அத்தை வீட்டுக்குப்
போகணுமே! எப்ப வர்றீங்க?”

“ஸ்ஸ! மறந்தே போயிட்டேனே! எத்தனை மணிக்கு எடுக்கிறாங்களாம்?”
“நாலு மணிக்குன்னு சொன்னாங்களே..”
“மணி இப்ப மூணு! சரி நான் போயிட்டு வந்திடுறேன். போனை வை!”
“என்ன? நீங்க மட்டுமா போறீங்க? நாங்க?”

“ஏய்! கொரோனா டைம்ல குழந்தைகளை கூட்டிட்டு அலையணும்றியா? வயசானவங்க
தானே? சும்மா நான் மட்டும் போயிட்டு வர்றேன்.”
“அதுக்கில்லங்க! நான் வரலன்னா உறவுக்காரங்க ஏதாவது சொல்லமாட்டாங்களா?”
“மத்தவங்களைப் பத்தி நீ ஏன் கவலைப்படுறே? நான் போனால் பத்துநிமிஷம் நின்னுட்டு கிளம்பி வந்திடுவேன். உன்னைக் கூட்டிட்டுப் போனால் இன்னிக்கு முழுக்க நகரமாட்ட. என் வேலை கெட்டுடும். போனை வை! நான் மட்டும் போயிட்டு வர்றேன்” - என்றவன் போனை கட் பண்ணிவிட்டு மேசையை மூடிக் கொண்டு எழுந்தான்.

சிவாவிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு புறப்பட்டு காஞ்சிபுரத்தை அடைந்தபோது அத்தை மயானத்தை நோக்கி பயணித்திருந்தாள். தெருமுழுக்க உதிரிப் பூக்கள் சிதறிக்கிடக்க, சாவு வீட்டில் கூடியிருந்த பெண்கள் கூட்டம் கலைந்து சென்று கொண்டிருந்தது. ஹரிஹரன் தன் காரை நிறுத்தியதும் பக்கத்து வீட்டுப் பெண் அரற்றினாள்.
“யாரு? அரியா? ஏன்டாப்பா? உனக்கு இப்பத்தான் நேரம் கிடைச்சுதா? தூக்கிவளர்த்தவ முகத்தைப் பார்க்கணும்னு தோணலை இல்ல. நாலு காசு பணம் பார்த்ததும் சொந்தபந்தம் எல்லா மறந்திடுது. ரெண்டு மாசமா படுக்கையில கிடந்தாளே!  ஒரு எட்டு வந்து பார்த்திருந்தால் போனவ நிம்மதியாய் போயிருப்பா..” அந்த அம்பாள் சத்தமாகவே புலம்ப, அவஸ்தையாய் நெளிந்தான்.
“இல்ல… வர்ற வழியில ட்ராபிக்ல மாட்டிகிட்டேன். அதான்..”

“என்னவோ போ! வந்ததுதான் வந்த. பத்து நிமிஷம் முன்னால வந்திருந்தால் கடைசியா அவ முகத்தையாவது பார்த்திருக்கலாம். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடல. இப்படியே நேரே போனால்...”“நான் போய் பார்த்துக்கிறேன்” என்றவன் காரை திருப்பி, சிதறிக்கிடந்த பூக்களைத் தொடர்ந்து செல்ல ஐந்து நிமிட பயணத்தில் இடுகாடு தென்பட்டது. மேளதாளத்தோடு அத்தை இடுகாட்டை அடைந்திருக்க, கூட்டம் கூடி ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்தது. ஹரிஹரன் தயக்கமாய் காரை நிறுத்தினான்.

‘இறங்கிச் செல்லலாமா? இப்படியே திரும்பிவிடலாமா? அத்தை தன் அப்பாவின் தமக்கை மட்டுமல்ல. வரிசையாய் ஐந்து குழந்தைகளைப் பெற்ற அம்மா அவற்றை வளர்க்க திணறியதைக் கண்டு தன் பிள்ளைகளோடு பிள்ளையாய் என்னையும் வளர்த்தவள். அத்தையின் வீட்டில் வசதிக்கு குறையில்லை என்பதால் உணவிற்கோ, ஆடைகளுக்கோ பஞ்சம் இருந்ததில்லை. விரும்பிய உடை, விரும்பிய படிப்பு.. விரும்பிய தொழில்.. வசதி படைத்த மனைவி என தனக்குக் கிடைத்த எல்லாமே அத்தை போட்ட பிச்சைதான்!

பணம் சேர சேர அதைத் தேடிக்கொண்டே ஓடினேனே தவிர உறவுகளை கண்டு கொள்ளவில்லையே! அத்தை படுக்கையில் விழுந்தபோதே அவளது மூத்தமகன் தகவல் தந்தான். அம்மா உன்னைத் தேடுகிறாள் என்று! அந்த சமயம் இன்னொரு கிளை அலுவலகத் திறப்பில் பிஸியாய் இருந்ததால் அப்படியே விட்டுவிட்டான். அதன்பிறகு கூட ஓரிரு முறை போன் வந்ததுதான்!
ம்ப்ச்! ஒரு முறை வந்து பார்த்திருக்கலாம்! மனம் கனக்க மௌனமாய் இறங்கி காரைப் பூட்டிவிட்டு கூட்டத்தை நெருங்கினான். கூட்டம் சன்னமாய் சலசலத்துக் கொண்டிருக்க, குழப்பமாய் மற்றவர்களை விலக்கிவிட்டு முன்னேற, அத்தையின் மகன்கள் இருவரும் தாயிடம் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தனர்.

“என்னாச்சு?”“பொணத்தோட நகைகளை எல்லாம் கழட்டியாச்சி. இந்த மூக்குத்தியை மட்டும் கழட்டமுடியல. அதான் புள்ளைக கழட்டிப்பார்க்கிறாங்க” - உறவுக்காரர் ஒருவர் சொல்ல, வேகமாய் அத்தையை நெருங்கினான். மலர் மாலைகளுக்கு நடுவே தெரிந்த அத்தை சுத்தமாய் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தாள். கொழு கொழு வென்றிருந்த அத்தையின் உடம்பில் எலும்பும் தோலும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

உயரமும் பருமனுமாய் காது நிறைய கல்கம்மலும், நான்கு வடச்சங்கியும், கைகளில் ஆறு காப்புகளும், மூக்கில் டாலடிக்கும் எட்டுகல் பேஸரியும், ஒற்றை மாணிக்கக்கல் பதித்த மூக்குத்திகளும், நெற்றி நிறைய குங்குமமாய் பார்த்துப் பழகியிருந்த அத்தையை இன்று இந்தக் கோலத்தில் கண்டதும் அவனையும் மீறி கண்கள் கசிந்தது.“ம்ஹீம்! முடியல! யாரையாவது வீட்டுக்கு அனுப்பி கொரடு வாங்கிட்டு வரச் சொல்லு!” - என்ற சுகுமாறனை பதட்டமாய் தடுத்தான் ஹரிஹரன்.“சுகு! என்ன பண்ற?”

“வா ஹரி! அம்மா சாகுறவரை உன்னைத்தான் தேடிச்சி! கடைசியாய் வாய்க்கரிசி போட வந்திட்ட..!”
“சுகு! அத்தை காலம்பூரா நகை நட்டோடு வாழ்ந்தவங்க! ஒரு மூக்குத்திதானே? இது மட்டுமாவது அத்தை கூடவே இருக்கட்டுமே!”
“ம்? அது எப்படி? நகையோடு புதைச்சா எவனாவது தோண்டி எடுத்திடுவான்” - இளையவன் மறுக்க, ஹரிஹரன் அவனிடம் திரும்பினான்.
“என்ன ஆனந்தா! இத்துணூண்டு மூக்குத்திக்கு எவன் வருவான்?”

“என்ன? இத்துணூண்டா? இது மாணிக்கக்கல் பதிச்சது. அப்பா முதல்முறையாய் வாங்கிக் கொடுத்தது. விலைமதிப்பில்லாதது. பேஸரியைக் கூட ஈஸியாக் கழட்டிவிட்டோம். இந்த ஒத்தக்கல்லு மூக்குத்திதான் இறுகிப்போச்சு போலிருக்கு. கொரடு வெச்சுக் கழட்டிடலாம்” - என்றதும் ஹரிஹரனின் தொண்டை அடைத்தது. அதற்குள் பெரியவர் ஒருவர் குரல் கொடுத்தார்.
“எப்பா! ஏற்கனவே படுக்கையில் கிடந்து நொந்த உடம்பு. இந்த ஒத்த மூக்குத்திக்காக உடம்பை புண்ணாக்கணுமா?”“அதுக்காக அப்படியே ெபாதைக்க முடியுமா பெரியப்பா? இதென்ன அஞ்சு ரூபாயா? பத்து ரூபாயா?”

“இல்லப்பா! மகாராணியாட்டம் வாழ்ந்தவ! செத்தபிறகும் இப்படி சங்கடப்படுத்தணுமா? பழைய மூக்குத்தி இது என்ன லட்ச ரூபாய்க்கா போகப்போகுது!”
“ஆமா ஆனந்தா! நான் வேணா அதுக்கான பணத்தைத் தந்திடுறேன்!” என்ற ஹரிஹரனை நக்கலாய் பார்த்தான் ஆனந்தன்.“ஹும்! பெத்த பிள்ளையாய் வளர்த்த என் அம்மாவை ஒருதரம் நேர்ல வந்து பார்க்க துப்பில்லை. நீ எங்களுக்கு பணம் தரப்போறியா?”“புதுப்பணக்காரன்யா... அந்த பவிசைக் காட்ட வந்திருக்கான் போலிருக்கு”“அட நிறுத்துங்கய்யா! ஒத்த மூக்குத்திக்காக எவ்வளவு நேரம்தான் என்னை நிக்க வெப்பீங்க. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நகருங்கய்யா! நான் கழட்டிப் பார்க்கிறேன்”  என்ற வெட்டியான் தன் முழுபலத்தையும் திரட்டி, மூக்குத்தியைக் கழற்ற, சில நிமிட போராட்டத்திற்கு பிறகு அத்தையின் மூக்குத்தி தனியாகவும், உடைந்த திருகாணி தனியாகவும் கழன்று வர, உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

கனத்த மனதோடு அத்தையை மண்ணுக்குள் அனுப்பிவிட்டு சாலையை நோக்கி நடந்தான் ஹரிஹரன். ‘பரம்பரை பணக்காரி அத்தை! அவளே உயிரைவிட்ட பிறகு ஒரு பொட்டுத் தங்கமின்றி மண்ணிற்குள் சென்றிருக்கிறாள்! எத்தனை பணம் சம்பாதித்து என்ன? கடைசியில் எதுவும் நம் கூட வரப்போவதில்லை! வாழும்வரை நாலுபேருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்து விட்டு சென்றால் நம் பேராவது நான்கு பேரால் பேசப்படும்! அதை விடுத்து பணம் பணம் என்று தேடிக்கொண்டே இருந்தால் மனநிம்மதியும் ஆரோக்கியமும்தான் பாழாகும். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை அத்தை மரணமும் இந்த மயான சம்பவமும் அவனுக்கு உணர்த்தியிருந்தது.

சாலையை அடைந்து காரை நெருங்குகையில் செல்போன் அழைத்தது. சிவா! எடுத்து காதில் வைத்தான்.“சொல்லு சிவா!”“ஸார்! தாஸ் வந்திருக்கார். மெட்டீரியல்ஸ் கேட்கிறார். டென்டேஸ்ல இரண்டு பில்லையும் சேர்த்து பே பண்றேன்னு சொல்றார்.”“கொடுத்தனுப்பு” - உடனே சம்மதித்தவனிடம் நம்பமுடியாமல் கேட்டான் சிவா.

“ஸார்! அப்போ… லோடு அனுப்பவா?”
“ம். அனுப்பு! பணம் எங்கே போயிடப்போகுது. தாஸ் ஏழெட்டு வருஷமா நம்மகிட்ட பார்ச்சேஸ் பண்றார். இதுவரை பில் பே பண்ண லேட் பண்ணியதில்லை! இப்ப ஏதோ கஷ்டம்! விடு! லோடை அனுப்பிடு! அப்புறம் சிவா! நம்ம ஸ்டாப்புகளுக்கு பொங்கலுக்கு த்ரீ டேஸ் லீவுன்னு சொல்லிடு. ஒன் மன்த் சேலரியை போனஸாய்க் கொடுத்துடலாம். வவுச்சர் ரெடி பண்ணு. நான் வந்திடுறேன்” - என்று போனைக் கட் பண்ணிவிட்டு காரில் ஏறியபோது மனம் சற்று லேசானது போல் தோன்றியது.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்