SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2021-12-22@ 17:30:17

நன்றி குங்குமம் தோழி

*காய்கறிகளை வேக வைத்த நீரில் அரிசி, பருப்பு போன்றவற்றை வேக வைக்கலாம். நீரில் அதிகச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது.

*மீன் வறுப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக எலுமிச்சை சாறு கலந்த நீரில் மீனை முக்கி வையுங்கள். பிறகு எடுத்து வறுத்தால் சமையலறையில் மீன் வாடையே வராது.

*முட்டைக்கோஸ் வேகும்போது இரண்டு, மூன்று பூண்டுப் பற்களைப் போட்டு விட்டால் வாசனையாக இருக்கும்.

- ஆர்.எம்.பிரதிக்‌ஷா, திருச்சி.

*தேங்காய் சாதம் செய்யும்போது, சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப்பொடி கலந்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.

*தேங்காய் பர்ஃபி செய்யும்போது சிறிது கடலை மாவு சேர்த்து செய்தால், சுவை அபரிமிதமாக இருக்கும்.

*பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ஃபிரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் நறுக்கினால் பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.

*பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்துவிட்டால் கெட்டியாகி விடும்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

 

*நூடுல்ஸ் செய்யும்போது வெறும் தண்ணீரில் வேக வைக்காமல் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அந்த சாறுடன் சேர்த்துச் செய்தால் நிறமும், சுவையும் அருமையாக இருக்கும்.

*பொட்டுக்கடலை மாவு, தேன், தேங்காய் துருவல், பேரீச்சம்பழம் கலந்து உருண்டை பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சத்தான சுவையான தின்பண்டம் இது.

- வே. இராமலட்சுமி, திருநெல்வேலி.

*பால் திரிந்து விட்டால் வருத்தம் வேண்டாம். அந்தப்பால் ஆறியபின் அதை மிக்ஸியில் போட்டு ஓட்டி, பிறகு வழக்கமாக தயிர் உறைய வைப்பதுபோல வைக்கலாம். தயிர் எந்த வித்தியாசமும் இல்லாமல் சுவையாக இருக்கும்.

*ரொட்டி துண்டு காய்ந்து விட்டால், அதில் சிறிது சூடான பாலை தெளித்து, பிறகு ரொட்டியை தோசைக்கல்லில் போட்டு வாட்டினால் ஃபிரஷ்ஷாக இருக்கும்.

*கொத்துமல்லி, புதினா சட்னி மீந்துவிட்டால், அதை மோரில் போட்டு மிக்ஸியில் அடித்துக் குடிக்கலாம். மசாலா மோர் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

*பிஸ்கெட்டுகள் வாங்கி வைத்து நமத்துப் போய்விட்டனவா? அந்த பிஸ்கெட்டுகளை ஒன்றிரண்டாக பொடித்து, பழங்களுடன் சேர்த்து ஃப்ரூட் சாலட் போல சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

*பூரிக்கு மாவு பிசையும்போது அத்துடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவைச் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால், பூரி நல்ல நிறத்தில் இருக்கும். அத்துடன் சுருங்காமலும் வரும்.

*கேழ்வரகை ஊற வைத்து பால் எடுத்து, கோதுமை அல்வா போல் செய்யலாம். கோதுமை அல்வாவைவிட சுவை அருமையாக இருக்கும்.

- எஸ்.ஸ்ருதி, சென்னை.

*பழங்கள் பாதியளவு மட்டும் பழுத்திருந்தால் புஸ்தகங்களுக்கு அட்டை போடும் காக்கி கவரில் சுற்றி வைத்தால் விரைவில் பழுத்துவிடும். உடனடி உபயோகத்திற்கு இம்முறையைப் பின்பற்றலாம்.

*பால் கவர், மளிகை சாமான்கள் வந்த கவர்களை கட் பண்ணும் கத்தரிக்கோல் முன் மழுங்கி இருந்தால் அலுமினியம் பாயில் பேப்பரை கத்தரிக்கோலை வைத்து (ஒரு ஏ4 சீட் பேப்பர் அளவு உள்ள) பொடியாக கட் பண்ணினால் கத்தரிக்கோல் முனை கூராகி விடும். கவர்களை கட் பண்ணுவதும் சுலபமாகிவிடும்.

*ரைஸ் குக்கரில் வைக்கும் சாதம் குழைந்து விட்டால் அந்த சாதத்தின் மீது ஒரு ஸ்லைஸ் பிரெட் ஐ வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்துவிட்டால் அந்த சாதத்தில் உள்ள அதிகப்படியான நீரை பிரெட் உறிஞ்சிவிடும். உதிர் உதிரான சாதம் தயாராகிவிடும்.

- எஸ். நிரஞ்சனி, முகலிவாக்கம்.

*மோர் மிளகாய், கொத்தவரை போன்ற வற்றல் போடுகிறபோது அவற்றை உலோகத்தட்டில் காய விடுவதற்கு மாறாக மூங்கில் தட்டில் உலர விட்டால், அளவுக்கு அதிகமான உப்பு அந்த மூங்கில் தட்டில் படிந்து வற்றல் நன்கு உலரும்.

*மணத்தக்காளி கீரைத்துவையல் அரைக்கும்போது கீரையுடன் இரு துண்டு பிஞ்சு பிரண்டையையும் சேர்த்து வதக்கித் துவையல் அரைத்தால் சுவையும், நன்மையும் கூடுதலாகக் கிடைக்கும்.

- என். பர்வதவர்த்தினி, பம்மல்.

*மோர்க்குழம்பை தட்டில் விட்டவுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவை சூப்பரோ சூப்பராக இருக்கும்.

*கத்தரிக்காயை  நான்காக பிளந்து பிரித்து எடுக்காமல் அதனுள் தோசை மிளகாய்ப்பொடியை தூவி சிறிது நேரம் கழித்து எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

*வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். நல்லதொரு பானமாக இருக்கும்.

- நா.செண்பகவல்லி, திருநெல்வேலி.


*வாழைத்தண்டை வட்ட வில்லைகளாக நறுக்கி வேகவைத்து, பிறகு அதை மசித்து, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.

*தோசை மாவுடன் கொஞ்சம் சாதத்தை போட்டு அரைக்க தோசை ‘பேப்பர் ரோஸ்ட்’ போல இதமாக வரும்.

*தோசை மாவு புளித்து விட்டால் அதில் கால் டீஸ்பூன் டேபிள் சால்ட், அரை டம்ளர் வெந்நீரை ஊற்றிக் கலக்கி தோசை வார்த்தால் புளிப்பு மறைந்து ருசி அமோகமாகயிருக்கும்.

- கே.எல்.புனிதவதி, கோவை.

*எலுமிச்சை, புளி, தயிர் சாதங்கள் செய்யும்போது அதில் ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

*ஃப்ரைட் ரைஸ், கலந்த சாத வகைகள் போன்றவற்றை செய்யும்போது, சாதம் சிதைந்து விடாமலிருக்க முள் கரண்டியை உபயோகிக்க வேண்டும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*உறை ஊற்ற தயிர் இல்லையா? கவலைப்படாதீர்கள். ஒரு தேக்கரண்டி வினிகரை பாலில் ஊற்றி விடுங்கள். மறுநாள் அருமையான தயிர் கிடைக்கும்.

*வடித்த சுடு கஞ்சியில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு விட்டால் வாழைப்பூவில் உள்ள பால் கஞ்சியில் கலந்துவிடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுக்க முடியும்.

*சுண்டைக்காயை வத்தல் செய்து மிக்ஸியில் பவுடராக்கி சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் மசாலாப்பவுடருடன் அரைக்கரண்டி கலந்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

*புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து செய்தால் மணமும், சுவையும் சிறப்பாக இருக்கும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்