SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!

2021-12-20@ 17:44:51

நன்றி குங்குமம் தோழி

கைபேசி வங்கியியல் (Mobile Banking) குறித்து நாம் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இருப்பினும் ஒரு சிலருக்கு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படும். அதாவது ‘‘எவ்வளவு பணம் மொபைல் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்யலாம்?” என்பது. கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அதே வங்கியில் உள்ள தனது பிற கணக்குகளுக்கு உச்சவரம்பு இல்லாமல் பணம் அனுப்பலாம். அனுப்பும் தொகை அனுப்புபவர் கணக்கில் இருக்கவேண்டும். மற்றவர் கணக்கிற்கோ அல்லது பிற வங்கியில் உள்ள தன் கணக்கிற்கோ பணம் அனுப்ப வேண்டுமெனில் அதற்கான உச்சவரம்பு அந்தந்த வங்கி  நிர்ணயிப்பதாகும். சாதாரணமாக ஒருநாளில் ரூபாய் பத்து லட்சம்வரை அனுப்பலாம் என்று வரையறுத்துள்ளனர்.

பணம் வரவு வைக்கவேண்டிய கணக்கை நாம் பணம் அனுப்புவதற்காக இணையவங்கிச் சேவைக்கோ, மொபைல் வங்கிச் சேவைக்கோ இணைக்கும் முதல் நாளில் Rs.50000/-, Rs .100000/-, Rs.200000/- என்று இவற்றில் ஏதாவது ஒன்றை பண பரிவர்த்தனை செய்ய இயலும் உச்சவரம்பாக வங்கிகள் வைத்திருக்கும். அதேபோல இந்தப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை அந்தந்த வங்கிகள் தன்னிச்சையாக நிர்ணயிக்கின்றன. வாடிக்கையாளரின் கணக்கு எந்த திட்டத்தில் துவக்கப்பட்டு நடத்தப்படுகிறதோ அந்தத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையோ அல்லது முன்னுரிமை வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லாமலோ வங்கிகள் இணையவழிப் பரிமாற்றம் அல்லது மொபைல் வங்கியியல் பரிமாற்றத்தினை அனுமதிக்கின்றன.

டிஜிட்டல் பாங்கிங் என்னும் இந்தத் தகவல் தொழில்நுட்ப கணக்குப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவையா என்ற சந்தேகமும் முன்வந்து நிற்கின்றது. வாடிக்கையாளர்கள் இணைய வங்கிச்சேவை, மொபைல் வங்கியியல் சேவை மற்றும் டெபிட் / கிரெடிட் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை செய்தல் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் பெறுவதற்காக அனைத்து வங்கிகளுக்குமான பொதுவான குறைந்தபட்ச தரநிலைகளை இந்திய ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டு வகுத்துள்ளது. சான்றிடப்பட்ட மென்பொருள், திட்ட வரைவு மற்றும் செயலாக்கம், கட்டண விகிதம் ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படிதான் வங்கிகள் நடைமுறைப்படுத்தமுடியும். எனவேதான் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இந்த வசதிகளை நம்பிக்கையுடன் பெறமுடிகிறது.  

வங்கிகளுக்கிடையே நடைபெறும் இந்தப்  பரிவர்த்தனைகளுக்கான தீர்வுகளும் அந்தந்த நாளிலேயே ஒரே நேரத்தில் நடைபெறுவதால் நமது கணக்கில் இருந்து பணம் மற்றவருக்கு செலுத்தப்பட்டபின் அந்த பணம் மற்றவரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்பட்டால் அதற்குரிய புகார் பெறுவதற்கும் உடனே அதனை தீர்ப்பதற்கும் நெறிமுறைகள் வங்கிகளில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் பெருமளவு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இந்த வசதிகளை உலகில் பெறுகின்றனர்.

நேரமிச்சம், பயணச் செலவு மிச்சம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்குப் பயனாகின்றன. வங்கிகளுக்கும் நேரிடைப் பரிவர்த்தனைகள் குறையும்போது பெருமளவு செலவுகள் குறைகின்றன. மேலும் வாடிக்கையாளரின் கணக்கு விபரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றும் சிலர் ஐயப்படுகின்றனர். வாடிக்கையாளர் தங்களது  கணக்கு எண்கள், பயனர் எண் (User  Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை பாதுகாப்பாகப் பயன்படுத்தினாலே போதும். வங்கிகள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பிற்கு உறுதி தருகின்றன.  

பயனர்களின் எண்ணிக்கையில் வேகமான வளர்ச்சி, மொபைல் நெட்வொர்க்கின் விரிவாக்கம் ஆகியவை இன்று தகவல் தொழில்நுட்பச் சேவைகளை முதன்மைப் படுத்தியுள்ளது. கடன் அட்டைகள் / பற்று அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதில் 2021 அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின்படி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் நிலைக்கட்டளையாக (Standing  Instruction) இணையதளம் / செயலி மூலம் வாடிக்கையாளரின் பற்று / கடன் அட்டையை வங்கியே ஆன்லைனில் பயன்படுத்தி மின்கட்டணம், தொலைபேசி கட்டணம், பிற நிலைக்கட்டணங்களைச் செலுத்தும் வசதி நீக்கப்பட்டுள்ளது.

இனி வாடிக்கையாளர் ஒவ்வொருமுறையும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தித்தான் பணப் பரிமாற்றம் செய்யமுடியும். அதாவது மின்கட்டணம், கேபிள் தொலைக்காட்சிக்  கட்டணம் போல மாதாமாதம் ஆட்டோ பே (Auto Pay) முறையில் வாடிக்கையாளர் ஒருமுறை பதிவுசெய்தவுடன் வங்கியே இவற்றை செலுத்தும் வசதி நீக்கப்பட்டுள்ளது.   
 
பாதுகாப்புப் பெட்டக வசதி (Safe Deposit Lockers)

நம்முடைய விலைமதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்க ஒரு நம்பகமான, பாதுகாப்புமிக்க சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது வங்கி அல்லது தபால் நிலையங்களாகத்தான் இருக்கமுடியும். வங்கிகளில் அமைந்துள்ள பாதுகாப்புப் பெட்டகங்கள் (Safe  Deposit  Lockers) சிறு சிறு பெட்டிகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு உள்பூட்டு மற்றும் அவற்றுக்காக தனித்தனியான சாவிகள் அமைக்கப்பெற்று ஒரு சாவி வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் இருவரின் கூட்டுப் பொறுப்பிலும், மற்றொன்று பெட்டக வசதி பெற்ற வாடிக்கையாளரிடம் இருக்கும். பாதுகாப்புப் பெட்டகங்களைப் பற்றிய சின்னச் சின்ன தகவல்கள் முதல் நாம் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தையும் குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்களிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை தமது நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு புதிய நிலங்களுக்குப்  பயணித்துவிட்டு மீளும் காலத்தில் அவற்றை மீட்டுப்பெறும் வழக்கம் இருந்ததென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருட்கள் காணாமல் போவதும், பொருட்களை பெற்றவர்கள் காணாமல் போவதும் கால வழக்கமானதும் வரலாறே.  பெட்டி போன்ற அமைப்பில் பாதுகாப்பாக வைத்து உலர் தாவரக்கொடி நார்களால் கட்டிவைத்து பூமிக்குள் யாருக்கும் தெரியாமல் புதைத்துப் பாதுகாக்கும் நிலையும் இருந்துள்ளது. ‘பூட்டு’ என்னும் கட்டமைப்பும் அதை இயக்கும் சாவியும் கண்டுபிடிக்கப்பட்டபின் பாதுகாப்பு என்பது நிம்மதியான மனித மனநிலையானது.

கிமு 1303ல் பிறந்து 1213ல் இறந்த இரண்டாம் ராமேசசின் கல்லறையில் சாவியைப்போன்ற பூட்டக்கூடிய சாதனத்தின் தடயங்கள் கிடைத்தன என்றும், 1861ல் லைனஸ் யேல் ஜூனியர் என்ற இயந்திரவியல் பொறியாளர் உருளை வடிவப் பூட்டினைக் (Combination Locks) கண்டுபிடித்தார் என்றும் ஜேம்ஸ் சார்ஜெண்ட் என்பவர் இதனை புழக்கத்தில் கொணர்ந்தார் என்றும் செய்திப் பதிவுகள் உள்ளன.  தி சேஃப் டெபாசிட் கம்பெனி ஆஃப் நியூயார்க் என்னும் நிறுவனம் 1865 மே மாதம் முதல் தேதியன்று கூட்டுப் பூட்டுகளுடன் 500 பாதுகாப்புப் பெட்டிகள் என்னும் பாதுகாப்புப் பெட்டகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.  சாவிக்குப் பதிலாக பயோமெட்ரிக் பதிவு  மற்றும் அணுகல் அட்டைகளின் மூலம் இயக்கும் அளவுக்கு பாதுகாப்புப் பெட்டக வசதி வளர்ச்சி கண்டுள்ளது.  

விலைமதிப்புமிக்க நகைகள், கற்கள், தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள், உலோகங்கள்,  சொத்துப்  பத்திரங்கள், உயில்கள், கணினித் தரவுகள், ஆடம்பர பொருட்கள், பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள், மேலும் இவற்றைப் போன்ற இழக்கவியலாப் பொருட்கள் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பாக வைப்பதற்கு இந்த பெட்டகம் பயன்படும். குறிப்பாகத் திருட்டு, வெள்ளம், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றினால் அழிந்து / தொலைந்து போகாமல் காப்பதற்கு, பாதுகாப்புப் பெட்டகங்கள் பயன்படுகின்றன. இப்படித்தான் என்றில்லை, ஒருவர் தான் குழந்தையாக இருந்தபோது விளையாடப் பயன்படுத்திய மகிழ்வூட்டியான ‘கிலுகிலுப்பையை’ வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பல வருடங்கள் வைத்திருந்தாராம். தன் காதலியின் முதல் கடிதத்தைப் மனப்பெட்டகத்தில் மட்டுமல்ல பாதுகாப்புப் பெட்டகத்திலும் வைத்திருந்தவர்கள் / வைத்திருப்பவர்கள் உள்ளனர்.

தங்கும் விடுதிகள், பயணக் கப்பல்கள், விமானங்கள் போன்ற இடங்களில் / நிறுவனங்களில்  தற்காலிக பாதுகாப்புப் பெட்டக வசதி கிடைத்தாலும் நாம் வங்கிகளில் வழங்கப்படும் இந்த வசதியைப் பற்றிதான் விவரிக்கின்றோம்.

பெட்டகத் தேர்வும் ஏற்பும்

பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளருக்கு மட்டுமே பாதுகாப்புப் பெட்டக வசதியை வழங்குகின்றன. எனவே, நமக்குத் பாதுகாப்புப் பெட்டக வசதி வேண்டுமெனில் ஒரு சேமிப்புக் கணக்கை அந்த வங்கிக் கிளையில் நாம் அவசியம் திறக்க வேண்டும். இதன் மூலம் வங்கியிடம் நம்மைப் பற்றிய அனைத்து விபரங்களும் கே ஒய் சி (KYC) படிவ வடிவத்தில் கிடைத்து விடும்.

வங்கியின் பாதுகாப்பு பெட்டக வசதியைப் பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன்னர் அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் கவனமாகப் படித்துப் பார்க்கவேண்டும். நமது வசதிக்காக பாதுகாப்புப் பெட்டகம் என்பது நமது குடும்ப உறுப்பினர் ஒருவரும் இணைக்கப்பெற்ற கூட்டுக் கணக்காக (Joint  Account) இருப்பது நல்லது. வங்கிப் பாதுகாப்புப் பெட்டகச் சேவையைப் பெற வாடிக்கையாளர் வயது 18-ஐத் தாண்டியிருக்க வேண்டும் என்பது முதல் விதி.  மேலும் நாம் கவனிக்கவேண்டிய பிற அம்சங்களைப்  பட்டியலிடுவோம்:

* பாதுகாப்புப் பெட்டகத் தேர்வில் நாம் முதலில் செய்யவேண்டியது வீட்டுக்கு அருகில் இயங்கும் பாதுகாப்புப் பெட்டக வசதியுள்ள வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் மிக  முக்கியமான ஆவணங்களையும் மற்றும் விலை மதிப்புமிக்க ஆபரணங்கள் மற்றும் பொருட்களையும் நெடுந்தொலைவு கொண்டு செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக விரைவில் வங்கியை அடையவும், பெட்டகத்தில் உடனே வைக்கவும் ஏதுவாக இருக்கும்.

* பெரும்பாலும் வங்கிகள், சிறியது, நடுத்தரம், பெரியது மற்றும் மிகப்பெரியது என நான்கு வகையான அளவுகளில் பெட்டக அறைகளை அளிக்கின்றன  நமது தேவைக்கேற்ற அளவில் பெட்டகத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய ஒரு வருட வாடகை எவ்வளவு என்பதை வங்கி அலுவலரிடம் கேட்டுத்  தெரிந்துகொள்ள வேண்டும்.. வாடகையை நமக்கு பெட்டகம் வழங்கும் முன்னரே வங்கியில் செலுத்தவேண்டும்..

அதற்குரிய தொகையை நமது சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால் வங்கியே நம் கணக்கில் பற்றுவைத்து வாடகையை வரவு வைத்துக் கொள்ளும். இயன்றவரை மொத்தமாக ஒரு தொகையை வங்கியில் ஆண்டுதோறும் வட்டி தரக்கூடிய வகையில் தவணை அமைத்து நிலைவைப்பாக செலுத்துதல் சிறப்பு.  இந்த டெபாசிட்டுக்கு நாம் பெறும் வட்டி நம் பாதுகாப்புப் பெட்டகத்தின் வாடகைத் தொகைக்குச் சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் நல்லது. இவ்வாறு நாம் செய்யும்போது பெட்டக வாடகையினை ஒவ்வொரு ஆண்டும் வங்கி குறிப்பிட்ட நாளில் நாம் செலுத்த மறந்து விட்டாலும் வங்கி நமது சேமிப்புக்கு கணக்கில் வரவுவைக்கும் நிலைவைப்பின்  வட்டித் தொகையிலிருந்து அதனைப் பெற்றுக்கொள்ளும்.   

* பாதுகாப்புப் பெட்டகத்தை பயன்படுத்த வங்கி எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கிறது என்பது பற்றி அறிவது நல்லது.  

* மேலும் குறிப்பிட்ட வங்கிக்கிளையில் சி.சி.டி.வி வழியாக மின்னணு கண்காணிப்பு, தானியங்கி அலாரமணி, பெட்டக அறையின் பாதுகாப்புக் கட்டமைப்பு  போன்றவை சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெட்டக இயக்கமும் பிற நிபந்தனைகளும்

பாதுகாப்பு பெட்டகத்தை பெறுவதற்கு நாம் வங்கியோடு எழுத்துமூலம் செய்துகொள்ளும் ஒப்பந்தம் ஏறக்குறைய வெறும் வாடகை ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளே நாம் வைக்கும் நம் பொருட்களுக்கு வங்கி பொறுப்பேற்காது. ஆகவே உள்ளே வைத்துப் பாதுகாக்கும் பொருட்களின் மதிப்பிற்கு நாம் பொதுவாக காப்பீடு - ஜெனரல் இன்சூரன்ஸ் செய்துகொள்வது நல்லது.  இது பிற்காலத்தில் வங்கியில் காவலையும் மீறி ஏதாவது கொள்ளைச் சம்பவம் நடைபெற்றாலும் நமது பொருட்களின் மதிப்பிற்கு சமமாக காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பெட்டகத்தைப்  பெற்று அதில், விலையுயர்ந்த பொருட்களை வைத்துப் பூட்டிவிட்டோம் என்பதோடு நமது பணி முடிவடையாது.

சீரான இடைவெளியில் நமது பாதுகாப்புப் பெட்டகத்தைப் பார்வையிடுவது மிகவும் முக்கியம். பாதுகாப்புப் பெட்டகத்தை வருடத்திற்கு ஒருமுறை அவசியம் வாடிக்கையாளர் இயக்க வேண்டும் என்று வங்கிகள் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் நமது உறவினர் அல்லது நண்பராக இருந்தாலும் நாம் பாதுகாப்புப் பெட்டகத்தை இயக்கச் செல்லும்போது பெட்டக அறைக்குள் வேறு ஒருவரை அழைத்துச் செல்லக்கூடாது. இருவர் இணைந்த கூட்டுக்கணக்காக இருப்பின் இருவரும் செல்லலாம். ஏற்கனவே இன்னொரு வாடிக்கையாளர் பெட்டக அறையில் அவரது பெட்டகத்தை இயக்கும்போது நாம் உள்ளே செல்லக்கூடாது.

பெட்டகத்தை இயக்குவதற்குச் செல்லும்முன்பு பெட்டக அணுகல் (Access  Register) புத்தகத்தில் நாம் கையெழுத்து போடவேண்டும். அதேபோல இயக்கம் முடிந்து நாம் வெளியே வந்தவுடன் நாம் சரியாகப் பெட்டகத்தைப் பூட்டினோம் என்றும், பூட்டப்பட்ட நமது பெட்டகத்திற்கு வெளியே எந்த விலையுயர்ந்த பொருளை வைத்துவிட்டு வெளியே வரவில்லை என்ற அச்சடித்த வாசகத்தின் கீழேயும் நாம் கையெழுத்து போடவேண்டும்.

நாம் எப்பொழுது பெட்டகத்தைத் திறக்கச் சென்றாலும் நம்முடன் பெட்டக அறைக்குள் வரும் வங்கி  அலுவலர் பெட்டகத்தின் வங்கிச் சாவியைப் பயன்படுத்தி ஒரு பூட்டைத் திறந்துவிட்டு வெளியே சென்றவுடன் நமது சாவியைப் பயன்படுத்தி அதற்குரிய பூட்டைத் திறந்து நாம் பெட்டகத்தை இயக்கவேண்டும். பெட்டகத்தில் நமது வேலை முடிந்தவுடன் அதை சரியாகப் பூட்டிவிட்டோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

நாம் நகைகளை பெட்டகத்திலிருந்து வெளிய எடுக்க வேண்டுமெனில் எவை தேவை என்பதை முன்னரே முடிவுசெய்துகொண்டு பெட்டக அறைக்குள் செல்வதே குழப்பங்களைத் தவிர்க்கும், பெட்டக அறைக்குள் நிறுத்தப்பட்டுள்ள நிலைக்கண்ணாடியின் முன் நகைகளை அணிந்துகொள்வீர்கள் என்றால் எந்த நகையும் கீழே விழுந்து விடாமல் அணியவும்.

பெட்டகத்தை இயக்குவதற்கு முன்னும் இயக்கி முடித்தபின்னும் நாம் பெட்டக அறைக்குள் நுழைந்த நேரத்தையும், வெளியே வந்த நேரத்தையும் வங்கி அலுவலர் அதற்குரிய பாதுகாப்புப் பெட்டக அணுகல் புத்தகத்தில் (Access Register) குறித்துக் கொள்வார். மேலும் பாதுகாப்புப் பெட்டகத்தில் நாம் வைத்துள்ள விலையுர்ந்த பொருட்களின் பட்டியலை நம்முடன் வைத்திருப்பது நலம். குறிப்பாக விலையுயர்ந்த நகைகளை அவற்றை வாங்கிய பணமதிப்பிற்கு ஆதாரமாக விளங்கும் ரசீதுடன் (Bill) வைத்திருந்தால் பாதுகாப்பையும் மீறி இழப்பு ஏற்பட்டால் அதற்குரிய அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைப் பெற உதவும். பாதுகாப்பாக வைத்துள்ள ஆவணங்கள், பத்திரங்களின் நகலை நாம் நமது இல்லத்தில் வைத்திருக்கவேண்டும்.

பாதுகாப்புப் பெட்டகக் கணக்கிற்கான வாரிசுதாரர் நியமனம். பெட்டகச் சாவி தொலைந்து விட்டால் என்ன செய்வது, பெட்டகக் கணக்கை எவ்வாறு முடிப்பது, பெட்டகம் வைத்துள்ளவர் இறந்துவிட்டால் அவரின் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் அல்லது சட்ட ரீதியான வாரிசுகள் என்ன செய்யவேண்டும் என்ற விவரங்களை வரும் இதழில் பார்ப்போம்.

(தொடரும்!)

தொகுப்பு: எஸ்.விஜயகிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்