SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கை +வங்கி =வளம்!

2021-12-15@ 17:53:38

நன்றி குங்குமம் தோழி

வங்கிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்லும்போது வங்கிகளின் அனைத்துச் சேவைகள் குறித்த விவரங்களின் தேடல்களில் நமது பயணம் மகிழ்வூட்டுகின்றது. சேமிப்புக் கணக்கு, குறித்தகால நிலைவைப்பு (FD), தொடர்வைப்பு (RD), வாரிசுதாரர் நியமன வசதி (Nomination Facility), இணையதள வங்கிச் சேவை (Net Banking), வாசலில் வங்கிச் சேவை (Door Step Banking), டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் உழவர் கடன் அட்டை (Kissan Credit Card) ஆகியவை குறித்துச் சென்ற இதழ்களில் விரிவாகப் பேசினோம்.

கைபேசி வங்கியியல் (Mobile Banking), பாதுகாப்புப் பெட்டக வசதி (Safe Deposit Lockers), ஆவணப் பாதுகாப்பு வசதி (Safe Custody), காசோலை மாற்றம் (Cheque Clearance), நடப்புக் கணக்கு (Current Account), அயலக வங்கிக்  கணக்கு (Non-Resident Account), கே ஒய் சி (KYC), என்.இ.எஃப்.டி  (NEFT ), ஆர்.டி.ஜி.எஸ் (RTGS ),  இ.சி.எஸ் (ECS ), ஐ.எஃப்.எஸ்.சி (IFSC ),  எம்.ஐ.சி.ஆர் (MICR ), நாணய பரிமாற்றம் (Currency Exchange), வரைவோலை (Draft ) வழங்கல், நிதி ஆலோசனைகள் (Financial Consultation), காப்பீடு வசதி (Insurance )  இதர பரிவர்த்தனைகள் (Other Transactions ) என்று மிகப்பெரிய பட்டியலிடும் அளவிற்குப்  பயன்படும் வங்கிச் சேவைகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம்.

கைபேசி வங்கிச் சேவை (Mobile Banking)

‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளபோது, ‘ஆளுக்கொரு கைபேசி வைத்திருப்போம்’ என்பதே மூச்சளவில் உயிர்ப்பானது! ‘‘அலுவலகத்தை வீட்டின் சமையலறை வரையும் வீட்டை அலுவலகத்தின் இருக்கை வரையும் நீட்டிக்கிறது கைபேசி”  என்னும் கவிதை வரிகள் கைபேசிகளின் வீச்சைத் தெரிவிக்கின்றன. 1946ம் ஆண்டில்தான் தொலைபேசி வலைப்பின்னலுடன் (Network) இணைக்கப்பட்ட முதல் கைபேசி சுவீடன் நாட்டில் அறிமுகமானது. அங்கு எரிக்சன் நிறுவனம் 1956ல் வெளியிட்ட கைத்தொலைபேசியின் எடை 40 கிலோ. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கைபேசி 1990ல் அமெரிக்காவில் அறிமுகமானது. அபரிமிதமான வளர்ச்சியடைந்த கைபேசிகள் இன்று ஒரு கணினியைவிட மிக அதிக வழிகளில் பயன் தருகின்றன.

வங்கியோடு நாம் பயணிக்கும்போது அனைத்து நிலைகளிலும் பயனளிப்பது கைபேசியாகும். கைபேசியின்றி ஒருவர் வங்கியில் வைப்புக் கணக்கைத் துவக்கிச் செயல்படுத்துவதும். கடன் பெறுவதும் இயலாது என்பதே இன்று ஒலிக்கும் தகவல். பணப்பரிமாற்றம் செய்யவேண்டும், அதாவது நம் வங்கிக்கணக்கிலிருந்து வேறு ஒருவரின் வங்கிக்கணக்கிற்கோ, வேறு நிறுவனத்திற்கோ, நமது இன்னொரு கணக்கிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ பணம் செலுத்த வேண்டுமென்றால் நாம் நேரிடையாக வங்கிக்குச் செல்லாமலேயே இணையதள வங்கிச் சேவையின்  மூலம் பணம் செலுத்தலாம் என்பதைப் பற்றி முன் அத்தியாயங்களில் பார்த்திருந்தோம்.

அந்த சேவைகளை நாம் நமது கைபேசி மூலமாகவும் செய்யமுடியும். அதுதான் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியாகும். ஒரு ஸ்மார்ட் போன், அதில் இணைய வசதி இருந்தால் போதும், வங்கிகளுக்குச் செல்லாமல் எளிதில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். இந்த வசதியை வங்கிகளும், தனியார் இ-வாலட் நிறுவனங்களும் செய்து வந்த நிலையில், இதனை அனைவருக்கும் ஏற்றபடி பாதுகாப்பானதாக  மாற்றியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

செயல்படுத்துதலும் பயன்பாடும்

வங்கியில் நம் கணக்கைத் துவக்கும்போதே கைபேசி மூலம் வங்கிச்சேவையை நாம் பெறவேண்டும் என்ற விருப்பத்தை வங்கி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.  இதற்கான நிபந்தனைகள்:

* கைபேசித் தொடர்பு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் இருக்க வேண்டும்.

* வங்கியின் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதி கைபேசியில் இருக்க வேண்டும்.

* இப்பயன்பாட்டிற்காக வழங்கப்படும் மொபைல் வங்கியியல் குறியீட்டெண்ணை (Mobile PIN - (Mobile-Personal Identification Number) கணக்கைத் துவக்குபவர் தனது கைபேசியுடன் வழங்கக்கூடாது.

* கைபேசியில் வரும் OTP என்னும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ரகசிய எண்ணை பிறருக்குத் தெரியாமல் உபயோகிக்க வேண்டும்.  

* வசதி வழங்கும் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு மொபைல் பாங்கிங் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

வங்கியில் நம் கணக்கைத் துவக்கியபின் வாடிக்கையாளர் எண் (Customer Identification Number - CIN / Customer  Information File - CIF) மற்றும் கணக்கு எண் (Account  Number) வழங்கப்படும். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வாடிக்கையாளர் எண் வழங்கப்படும் என்பதால், எத்தனைக் கணக்கு வைத்திருக்கின்றோமோ அத்தனைக் கணக்குகளுக்கும் தனித்தனியாக எண் வழங்கப்படும். மொபைல் பாங்கிங்கில் வாடிக்கையாளர் எண்தான் நமது கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். மொபைல் மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்த அதற்குரிய குறியீட்டெண்ணை வங்கி உடனே வழங்கும். நாம் நமது கைபேசியில் Play Storeல் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலியை தரவிறக்கம் செய்து வங்கி வழங்கியுள்ள குறியீட்டெண்ணைப் பதிவு செய்து பரிவர்த்தனை செய்யலாம்.

பயன்கள்

* கணக்கில் உள்ள பண இருப்பைத் தெரிந்து கொள்ளலாம்

* நம் வங்கிக் கணக்கில் இருந்து, நம்முடைய மற்ற கணக்கிற்கோ அல்லது வேறு கணக்கிற்கோ பணப்பரிமாற்றம் செய்யலாம்.

*  மின்சாரக்கட்டணம் / தொலைபேசிக்கட்டணம்/ வீட்டுவரி / வாடகை / குடிநீர் வரி / வடிகால் வரி / எரிவாயு சிலிண்டர் கட்டணம் /  பள்ளி-கல்லூரிக் கட்டணம்/  காப்பீடு பிரீமியம் (Insurance Premium) / கடன் அட்டைத் தவணை ஆகியவற்றைச் செலுத்தலாம்.

* கடன்களின் தவணைத் தொகையைச் செலுத்தலாம்.

* நிலைவைப்பு (Fixed  Deposit) / தொடர்வைப்பு (Recurring  Deposit) கணக்குகள் துவக்கலாம்

*  மொபைல் இணைப்புக் கட்டணத்தைப் புதுப்பிக்கலாம் (Mobile echarge)

* காசோலைப் புத்தகம் பெற வங்கியிடம் விண்ணப்பிக்கலாம்

* வாடிக்கையாளர் விவரங்களை புதுப்பிக்க (Re-KYC), மின்னஞ்சல் முகவரி, நமது இருப்பிடச் சான்று, அடையாளச் சான்று, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றலாம்.

* பிறருக்கு வழங்கிய காசோலையை - அதன் பரிவர்த்தனை மூலம் வங்கி நம் கணக்கில் பற்று வைத்து பணம் வழங்காமல் நிறுத்தலாம்.

* பாதுகாப்புப் பெட்டகம் (Safe Deposit Locker) பெறுவதற்குப் பதிவு செய்யலாம்.

* பொது வருங்கால வைப்பு நிதிக்கணக்கைத் (Public  Provident  Fund) துவக்கலாம்     

* பரஸ்பர நிதியில் (Mutual  Fund) முதலீடு செய்யலாம்.

* கணக்கின் அறிக்கை (Statement) பெறலாம்

* Unified Payment Interface - UPI என்னும் ஒருமித்த பணம் வழங்கல் இணைப்பிடைமுகம் மூலம் பணமாற்றம் செய்யலாம்.

* வாட்சப் (WhatsApp) இணைக்கப்பட்டு பணப்பரிவர்த்தனை செய்யலாம் - சில வங்கிகளின் செயலிகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

* வங்கி அலுவலரோடு எழுத்துமூலம் (Chat) தொடர்புகொண்டு பேசும் வசதியும் ஒருசில வங்கிகளின் மொபைல் செயலியில் உள்ளது.

* அயல்நாட்டில் உள்ள கணக்கிற்கு வங்கியின் விதிமுறைகளின்படி பணம் அனுப்பலாம்.

மேற்குறிப்பிட்ட வசதிகள் மட்டுமல்லாமல் ஒவ்வொருநாளும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி வேர்விடும் வேகத்தில் புதிய வசதிகள் இந்தச் செயலியில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு

மொபைல் வங்கியியலின் குறியீட்டெண்ணை (M -PIN) நினைவில் வைத்திருக்க வேண்டும். மூன்று முறைகளுக்கு மேல் நமக்கு வழங்கப்பட்ட குறியீட்டெண்ணை  தவறாகப் பயன்படுத்தினால் வங்கி மொபைல் வங்கிச் சேவையை நிறுத்திவிடும். நமது கைபேசியை மற்றவர்களும் நமது அனுமதியின்றி பயன்படுத்தாதவாறு அதனை ரகசிய எண் அல்லது கைவிரல் ரேகைப்பதிவின் மூலம் பாதுகாத்து வைக்கலாம். இதுவே முதல்நிலைப் பாதுகாப்பு. மொபைல் வங்கிச்சேவைக்கான ரகசிய எண்ணை பிறருக்கு தெரிவிக்காமல் இருக்கவேண்டும். இதுதான் முக்கிய பாதுகாப்பு. வங்கிச் சேவையைப் பயன்படுத்தியவுடன் அதற்குரிய செயலியின் இயக்கத்தை நிறுத்த அதிலிருந்து லாக்கவுட் செய்து உடனே வெளியே வந்திட வேண்டும்.

கைபேசியையோ அல்லது சிம் அட்டையையோ தொலைத்துவிட்டால் வங்கியுடன் தொடர்புகொண்டு மொபைல் வங்கிச் சேவையை உடனே ரத்து செய்ய வேண்டும். ரகசிய குறியீட்டெண்ணை (M-PIN) அவ்வப்போது மாற்றுவது நல்லது. மாற்றுவதற்கான வழிமுறைகள் அந்த செயலியிலேயே உள்ளது. மாற்றிய பிறகு புதிய எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எக்காரணம் கொண்டும் மொபைல் எண்ணை மாற்றாமல் இருப்பது நல்லது.  மேலும் மொபைலில் தேவையற்ற செயலிகளைத் தரவிறக்கம் செய்ய வேண்டாம். குறிப்பாக விளையாட்டுச் செயலிகளைத் தவிர்க்கவும். சிலர் மொபைல் பாங்கிங்காகவே தனி எண்ணும் கைபேசியும் பயன்படுத்துகின்றனர்.

உங்களுக்கு பரிச்சயமில்லாத எண்ணிலிருந்து வரும் இணைப்பினைத் (Link) திறக்காதீர்கள். குறிப்பாக உங்கள் மொபைல் எண் பரிசுக்குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், நீங்கள் எங்கு கணக்கு வைத்துள்ளீர்களோ அந்த வங்கியின் பெயர், உங்கள் கணக்கு எண், அதற்குரிய வாடிக்கையாளர் எண், ரகசியக் குறியீட்டெண் ஆகியவற்றை அனுப்பினால் உங்கள் கணக்கிற்குப் பெருந்தொகை அனுப்பிவைக்கப்படும் என்னும் பணத் தூண்டில்களில் சிக்காதீர்கள். உங்கள் மொபைல் பழுதாகிவிட்டால், பழுதினை நீக்க அங்கீகரிக்கப்பட்ட கடையில் தருவதற்குமுன் மொபைல் செயலியை நீக்கிவிடவும். வங்கியிலும் இந்தக் கைபேசி சேவையை நிறுத்திவிட்டேன் என்பதைத் தெரிவிக்கவும்.

குறிப்பாக இணையத் தேடல் வரலாற்றினையும் (Browsing History) தற்காலிக சேமிப்புத் தரவுகளையும் (Cached Data) அழித்துவிடவும். மிகவும் முக்கியமான தகவல்களாக ஏ டி எம் / கடன் அட்டையின் எண் , அதன் குறியீட்டெண்கள் (ATM PIN / CVV), வங்கிக்  கணக்கு எண்கள், மொபைல் சேவை குறியீட்டெண் (M-PIN) முதலியவற்றை மொபைலில் சேமிக்காதீர்கள். உங்கள் மொபைல் வைரஸ் எதிர்ப்பாற்றலுடன் இருப்பது அவசியம். மொபைலில் உள்ள செயலிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ளவும். நாம் அடிக்கடி கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது, கடவுச்சொல்லை மொபைலில் பதியாமல் இருப்பது.

விமான நிலையம், ஷாப்பிங் மால்... பொது இடங்களில் இயங்கும் WiFi இணைப்புகளை பயன்படுத்தக்கூடாது. யாராவது உங்களுக்கு போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்கள் கேட்கும் தகவலை வழங்கிவிடாதீர்கள். மாறாக நீங்களே வங்கி அலுவலரை தொலைபேசியில் அழைத்துப் பேசுங்கள். டிஜிட்டல் வங்கியானது உலகளாவிய வங்கித்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன் இரட்டைக் குழந்தைகள்தான் இணையதள வங்கிச் சேவையும் (Internet Banking), கைபேசி வங்கிச் சேவையும் (Mobile  Banking). இரண்டையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்வது அவசியம்.

(தொடரும்!)

தொகுப்பு: எஸ்.விஜயகிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்