SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A - Z

2021-12-14@ 17:39:10

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

கவர்ச்சி மட்டுமில்லாமல் பளபளப்பு, அழகு, நேர்த்தி என அனைத்துக்கும் உட்பட்டது தான் ஃபேஷன். இந்த ஒரு துறை தான் அவ்வப்போது டிரண்டுக்கு ஏற்ப பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. துணி, அணிகலன், ஆபரணம் இவை எல்லாம் ஃபேஷன் என்றாலும், இதைத்தாண்டி மேக்கப் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மத்தியில் முக்கிய ஃபேஷனாக கருதப்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு, என்னதான் கவர்ச்சிகரமான உடைகள் அணிந்தாலும், கடைசியாக மேக்கப் போட்டுக் கொண்டால் தான் அவர்களின் அழகு முழுமையடைகிறது. மேக்கப் தனி ஒருவரின் அழகினை எடுத்துக்காட்டுவது மட்டுமில்லாமல் மற்றவர்களை ஈர்க்கவும் செய்கிறது.

ஆண், பெண் என்னதான் டிரண்டியாக உடை, அணிகலன் கொண்டு தங்களை அலங்கரித்து கொண்டாலும், அவர்களின் ஃபேஷன் உலகில் மிக முக்கிய பங்காக மேக்கப் வகிக்கிறது. ஒருவரை தன்னம்பிக்கையோடும் அவர்களை மேலும் அழகாக எடுத்துக் காட்டும் சக்திவாய்ந்த கருவி என்றால் அது மேக்கப் தான். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள். ஒருவரின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி அவர்களை மற்றவரின் பார்வைக்கும் அழகாக எடுத்துக்காட்ட மேக்கப் மிகவும் உதவியாக இருக்கிறது. மேட்சிங்காக உடை, அணிகலன் மற்றும் காலணிகள் அணிந்தபிறகு, உடைக்கு ஏற்ப லிப்ஸ்டிக் மற்றும் கண்அலங்காரம் செய்து கொண்டால் தான் உங்களின் தோற்றம் முழுமையடையும்.

பெரும்பாலான ஃபேஷன் ஷோக்கள் ஏதாவது ஒரு கருவினை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும். ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்ள வரும் மாடல்களின் உடை மட்டுமில்லாமல், அவர்களின் தலை முதல் பாதம் வரை அந்த கருவினை சார்ந்த விஷயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கும். குறிப்பாக அவர்களின் முகத்தில் போடப்படும் மேக்கப், கருவிற்கு ஏற்ப இருக்க வேண்டும். உடைக்கு ஏற்ப மேக்கப் போடும் போது தான் ஒரு டிசைனர் தன் உடையினை குறித்து என்ன சொல்ல வருகிறார் என்பதற்கான முழு அர்த்தத்தினை புரிந்து கொண்டால் தான் அந்த ஃபேஷன் நிகழ்ச்சி சக்சஸாகும்.

நம்முடைய பழங்காலத்தில் இருந்தே அழகை மேம்படுத்துவதற்காகவே மேக்கப் பயன்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு எகிப்தியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஈயம் மற்றும் தாமிரத்தின் தாதுக்கள் கொண்டு மேக்கப் செய்து கொண்டனர். இப்போது தான் பல பிராண்ட்களில் மேக்கப் பொருட்கள் இருக்கின்றன. பண்டைய காலத்து பெண்கள் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு தங்களை அழகுப்படுத்திக் கொண்டனர். உதாரணத்திற்கு பெரி பழங்களின் சாற்றை உதட்டு சாயமாகவும், மரக்கட்டைகளை எரிப்பதால் உருவாகும் சாம்பலை கண்களுக்கு மையாக பயன் படுத்தினர்.

ஆனால் இன்று நம் முகத்தில் ஒவ்வொரு பகுதியினை அழகாக்கும் வகையில் பல விதமான மேக்கப் சாதனங்கள் மார்க்கெட்டில் உள்ளன. விரும்பிய வண்ணங்கள் மற்றும் டிசைன்களைக் கொண்டு கண்களை அழகாகவும், நேர்த்தியாக வும் எடுத்துக்காட்டும் ஐ ஷேடோ முதல் சருமத்தில் உள்ள தழும்பினை மறைக்கும் வரை என பலவிதமான மேக்கப் உபகரணங்கள் உள்ளன. அன்று முதல் இன்று வரை மேக்கப் எவ்வாறு மாறுப்பட்டுள்ளது மற்றும் அதன் வரலாறு குறித்து அலசலாம்.

மேக்கப்பின் பூர்வீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி பயணிக்க வேண்டும். எகிப்தியர்கள் தான் முதன் முதலில் மேக்கப் என்பதை அறிமுகம் செய்தனர். மேலும் மேக்கப் அணிபவர்கள் வசதியானவர்கள் மற்றும் கடவுளின் பார்வை அவர்கள் மேல் நேரடியாக படும் என்று நம்பினார்கள். 4000 பிசிஇ ஆண்டில் எகிப்தியர்களில் ஆண், பெண் இருவரும் ஐலைனர் போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். கண்களுக்கு மை அணிவது, கண்ணத்தில் ரூஜ் தடவிக் கொள்வது, சருமம் பளிச்சென்று தெரிய வைட் பவுடர்கள் மற்றும் ஐஷேடோக்கள் அனைத்தும் பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.

ஆனால் ரோமானியர்கள் மேக்கப் போட்டுக் கொள்வதில் பெரிய விருப்பம் காட்டவில்லை. அதனை மிகவும் அலட்சியமாக பார்த்தார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுகாதாரப் பொருட்களான குளியல் சோப் , டியோடரன்ட் மற்றும் மாய்சரைசிங் கிரீம்களை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்தி வந்தனர். மேலும் பெண்கள் தங்கள் உடம்பில் இருக்கும் ரோமங்களை நீக்கி அவர்களின் இயற்கையான தோற்றத்திற்கு மாறினர்.

பழங்கால பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கல்வி இல்லை. அதனால் அவர்கள் அழகான தேற்றத்துடன் காட்சியளிக்க எந்த கட்டத்திற்கு வேண்டும் என்றாலும் செல்ல தயாராக இருந்தனர். பெரி பழத்தின் சாற்றினை உதட்டு சாயமாக போடுவது மிகவும் பாதுகாப்பானது. ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்களில் பாதரசம், ஈயம், ஆர்சனிக் மற்றும் லீச்கள் போன்றவை ஒருவரின் தோற்றத்திற்கு வெளிறிய தோற்றத்தினை கொடுத்தது. இவற்றைப் பார்க்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை, பாதுகாப்பான முறையில் தயாரிப்பதை மட்டுமே அங்கீகரித்து வருகிறோம்.

அதன் பிறகு விக்டோரியா காலக்கட்டத்தில் ஐரோப்பியாவில் பெண்கள் ஒப்பனை செய்து கொள்வது மற்றும் அழகுசாதனப் பொருட்களை வரவேற்க ஆரம்பித்தனர். சருமத்தில் ஏற்படும் சிகப்பு தழும்புகள், கருமை மற்றும் தழும்புகளை அரிசி மாவுக் கொண்டு மறைத்து வந்தனர். அதன் பிறகு சிங்க் ஆக்சைட் மற்றும் முத்து துகள்கள் இரண்டையும் பயன்படுத்தி அழகு சாதனப் பவுடர்கள் தயாரிக்கப்பட்டன. இது வசதி படைத்த பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

உதட்டை பாதுகாக்கவும் மற்றும் உதட்டிற்கு பளபளப்பு தோற்றத்தை கொடுக்கவும் தேன் கூடு மெழுகினை கொண்டு லிப் பாம் தயாரிக்கப்பட்டது. லிப் பாமினைத் தொடர்ந்து விக்டோரியா காலத்து பெண்கள் மத்தியில் ஐஷேடோ மிகவும் பிரபலமானது. எல்லா காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய மெல்லிய நிறங்களை கொண்ட ஐஷேடோக்களை பெண்கள் பயன்படுத்த
ஆரம்பித்தனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பண்டைய எகிப்தியர்கள் தான் ஐஷேடோக்களை அறிமுகம் செய்துள்ளனர்.

ஸ்டிப்நைட் என்ற கனிமத்தைக் கொண்டு கண்களுக்கு மேல் தீட்டக்கூடிய மையினை கண்டறிந்தனர். வெளிர் கருப்பு நிறத்தில் இந்த மை அரச குடும்பத்தில் உள்ள பெண்களின் கண்களை அழகாக எடுத்துக்காட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. காரணம் அவர்களின் கலாச்சாரத்தில் கடவுளின் தோற்றத்தினை பின்பற்றுவதற்காகவே பெண்கள் கண்களின் இமைகளுக்கு மேல் மையினை தீட்டிக் கொண்டனர். அதன் பிறகு ஐஷேடோ பயன்பாடு ரோமானியா மற்றும் கிரேக்க நாட்டிற்கு பரவியது. அங்கு பெண்கள் ஐஷேடோக்களை அழகிற்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். இறுதியில் இந்தியா மற்றும் பார்சிலோனியாவிற்கு பரவியது. இங்கு அதன் அதிக விலை காரணமாக உயர்தட்டில் வாழும் பெண்கள் மட்டுமே ஐஷேடோக்களை பயன்படுத்தி வந்தனர்.

இன்றுள்ள மார்டர்ன் உலகில் ஐஷேடோக்கள் பலவித மாற்றங்களை சந்தித்துள்ளது. 30களில் அமெரிக்க பெண்கள் பலவண்ண நிறங்களான பச்சை... பிங்க் போன்ற நிறங்களை ஐஷேடோவில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்களை தொடர்ந்து 70களில் ரெயின்போ நிறங்கள் பிரபலமானது. தற்போது 20ம் நூற்றாண்டில் ஸ்மோகி எஃபெக்ட் ஐஷேடோக்கள் பிரபலமாகி வருகிறது. மேலும் தற்போது உடைகளின் நிறங்கள் மற்றும் நாம் செல்லும் இடங்களுக்கு ஏற்ப ஐஷேடோ வண்ணங்களை பெண்கள் தேர்வு செய்து அணிந்து கொள்கிறார்கள்.

மேக்கப் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான பங்கினை வகித்து வருகிறது. திருமணம், பார்ட்டி, பிறந்தநாள், நண்பர்களுடன் கொண்டாட்டம் என ஒவ்வொரு விழாக்களுக்கு ஏற்ப மேக்கப் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு பார்ட்டிகளுக்கு என்றால் ஸ்மோகி மேக்கப்பினை தான் பலர் விரும்புகிறார்கள். மேலும் மேக்கப் பொருட்கள் தரமானதாகவும் அதே சமயம் விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்க பெண்கள் இப்போது முன்வந்துள்ளனர். மேலும் பல ஃபேஷன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க பல விதமான மேக்கப் சாதனங்கள் மற்றும் பொருட்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதேபோல் மக்களும் தங்களின் தோற்றத்தினை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் எந்த வித பாதிப்பும் தராத பிராண்ட்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். இதனால் தரமான எந்த பிராண்டாக இருந்தாலும் அதுமக்களின் பேவரெட் பிராண்டாக மாறிவிடுகிறது என்பதில் சந்தேகமில்லை.

தொழில்நுட்பம் வளர்வது போல் மேக்கப் துறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறுபடுவதால், மேக்கப் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் பலதரப்பட்ட மேக்கப் முறைகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். முன்பு ஃபேஷன் துறையில் உள்ளவர்கள் மட்டுமே பல வித்தியாசமான மேக்கப்களை அறிமுகம் செய்து வந்தனர். ஆனால் இப்போது அதனை சாதாரண மக்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தங்களின் வலைப்பக்கங்களில் அளிக்கும் டிப்ஸ் மற்றும் மேக்கப் முறைகளை தெரிந்து கொண்டு, பெண்கள் அவர்களே அதனை முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

தங்களுக்கு என்று ஒரு மேக்கப் தோற்றத்தினை பெண்கள் பிக்ஸ் செய்து கொள்கிறார்கள். முன்பு உடைக்கு ஏற்ப மேக்கப் செய்வது மாறி தற்போது பெண்கள் தங்களின் தோற்றம் மற்றும் மேக்கப்பிற்கு ஏற்ப உடைகளை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். பொதுவாகவே மேக்கப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் தனிப்பட்ட விருப்பம் உண்டு. இப்போது பெண்கள் தான் இதனை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் ஃபேஷன் துறையில் மேக்கப் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவு லாபத்தினை பார்த்து வருகிறது.

மேக்கப் என்பது ஒரு கடல். அதில் எல்லாவற்றையும் பயன்படுத்தவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. குறையற்ற மற்றும் புதுமையான மேக்கப்பினை தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இது ஒரு அற்புதமான கலை. இதன் மேல் ஈடுபாடு மற்றும் பற்றுள்ளவர்களால் மட்டுமே இதனை கைத்தேர்வு செய்ய முடியும். அதற்கான சிறப்பு படிப்புகள் மற்றும் புதிய ெடக்னிக் முறைகளை அவ்வப்போது அப்டேட் செய்தால் தான் அந்த துறையினை அவர்களால் ஆள முடியும். இந்தியாவில் மேக்கப் குறித்த பல பயிற்சி முறைகள் உள்ளன. இதில் மேக்கப் செய்வது குறித்த டெக்னிக் எல்லாம் கற்றுத்தரப்படுகிறது. சரியான முறையில் இந்த கலையினை கற்று அதனை பயன்படுத்துபவர்கள் இதில் நல்ல முறையில் சம்பாதிக்கலாம். காரணம் உலகம் முழுதும் மேக்கப் கலைஞருக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எல்லாருக்கும் ெமழுகு போல் வழவழப்பான சருமம் இருக்கும் என்று சொல்லிட முடியாது. சிலருக்கு பருக்கள் பிரச்னை, கரும்புள்ளிகள்போன்ற பிரச்னைகள் இருக்கும். இவர்கள் அனைவருக்கும் மேக்கப் ஒரு வரப்பிரசாதம். மேக்கப் கொண்டு இவர்களின் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காண முடியும். இதனால் தங்களின் முகத்தில் குறைகளால் மிகவும் வருத்தப்பட்டவர்கள் இனி பெருமையாக, பயமில்லாமல் ஒரு தன்னம்பிக்கையோடு வலம் வரலாம். மேலும் ஃபேஷன் துறையில் பல சிறந்த மேக்கப் கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். இவர்கள் தங்களின் திறமையால் மேக்கப் மற்றும் ஃபேஷன் துறைக்கு பெருமையை சேர்த்து வருகிறார்கள்.

‘மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது எல்லா பெண்களும் அழுகு தான்... அதே சமயம் மேக்கப் கொண்டு பார்க்கும் போது அவர்கள் அழகாக மட்டுமில்லாமல் மிடுக்காகவும் தெரிவார்கள்’ - பாபி பிரவுன்.அமெரிக்க மேக்கப் கலைஞர் பாபி பிரவுன் கூற்றுப்படி பெண்கள் மேக்கப் போட்டு இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் அழகானவர்கள் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேக்ப் என்பது பெண்களின் முக்கிய கருவியாக மாறிவருகிறது. மேக்கப் போட்டுக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் அதை பெருமையாகவும் கருதுகிறார்கள்.

பொதுவாகவே பெண்கள் எவ்வளவு தான் முன்னேறி வந்தாலும் வீக்கர் செக்ஸ் என்று கூறி இன்றும் ஒரு சிலர்கள்  அவர்களை குறைவாகத்தான் பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் மேக்கப் போட்டுக்கொள்வதிலும் பல தரமாக பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் மேக்கப் போட்டால் என்ன இவ்வளவு மேக்கப் என்றும் போடாமல் சாதாரணமாக இருந்தால்... உடம்பு சரியில்லையா என்று ஏளனப் பேச்சு இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் பெண்கள் இவற்றை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தங்களுக்கு பிடித்த மேக்கப்களை போட்டாலும்... போடாமல் இருந்தாலும் பெருமையாக தலை நிமிர்ந்து வலம் வருகிறார்கள்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்