SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளை மயக்கிய காதலன்

2021-12-08@ 17:45:38

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?  

அன்புடன் தோழிக்கு,

எனக்கு வயது 38. பள்ளி ஆசிரியை. என் கணவரும் அரசு ஊழியர். இருவரும் எங்கள் நகருக்கு பக்கத்தில் உள்ள ஊர்களில் வேலை செய்கிறோம். எங்களுக்கு ஒரு மகள். அவள் இப்போது 11ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள்தான். அதற்கு வசதியாக  9ம் வகுப்பு படிக்கும் போதே லேப் டாப்பும், செல்போனும் வாங்கி தந்து இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் மகள்தான் முக்கியம். எங்களுக்குள் இணக்கமாக இல்லாவிட்டாலும் மகள் விஷயத்தில் ஒற்றுமையாகத்தான் முடிவு எடுப்போம்.

ஆம். என்னைப் பற்றி கவலைப்படாவிட்டாலும், மகளுக்கு அவர் ரொம்ப முக்கியத்துவம் தருவார். ஆனால் எனக்கு ஏதாவது தேவை என்றால், ‘பார்க்கலாம்..... விசாரிக்கலாம்.... யோசிக்கணும்’ என்ற வார்த்தைகள் தான் வரும். எல்லா விஷயங்களிலும் அப்படியே இருக்க எங்களுக்குள் இடைவெளி இயல்பாகவே ஏற்பட்டு விட்டது. எங்கள் திருமணம் பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம். அவர் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவர்கள் வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் பெற்றோரின் மனதை சங்கடப்படுத்த வேண்டாம் என்பதால், அவர்கள் காட்டிய என்னை திருமணம் செய்ததும் பின்னர் தெரிந்தது.

நானும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை விரும்பினேன். அவரும் என்னை விரும்பினார். நாங்கள் எங்கள் காதலை சொல்வதற்குள் எனக்கு திருமணம் நடந்தது எனக்கு ஏமாற்றம் தான். எனினும், பெற்றோர் எனக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள் என்று நம்பினேன். அதற்கு ஏற்றார் போல் திருமணம் ஆன புதிதில் கணவரும் என்னிடம் அன்பாகவும், நெருக்கமாகவும் இருந்தார்.

எல்லாம் நான்கைந்து ஆண்டுகள்தான். அதன்பிறகு படிப்படியாக இடைவெளி ஏற்பட்டு விட்டது. இடையில் கணவருக்கு பழைய காதலியிடம் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பதாகவும் சொல்வார்கள். அந்த தகவல்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. நெருக்கம் இல்லாவிட்டாலும் குடும்பம் இருக்கிறது. அதனால் மற்றவர்களிடையே மதிப்பு மரியாதை உள்ளது.

இப்போது அதுவும் இல்லாமல் போய் விடுமோ என்று அவரிடம் சண்டை போட்டேன். அவரோ அலட்டிக் கொள்ளாமல், ‘உனக்கு யாரோ தப்பான தகவல் சொல்லியிருக்காங்க. நம்பிக்கை இல்லைன்னா தாராளமாக விவாகரத்து வாங்கிட்டு போயிடு.... எங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லி என்ன அசிங்கப்படுத்தாதே.... முக்கியமாக என் மகளிடம் இந்த பொய்களை சொல்லிடாதே.... குழந்தையை என்கிட்ட விட்டுட்டு... நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அப்பா, அம்மாவிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். காரணம், எங்கள் வீட்டில் அவரை ‘ஜென்டில்மேன்’ என்று சொல்வார்கள். பத்தாண்டுகளில் வாழ்க்கை பறிபோய் விட்டதே என்று நிம்மதியில்லாமல் பரிதவித்தேன். அப்போது தான், என் முன்னாள் காதலர் நான் வேலை செய்யும் அதே பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். அவரை பார்த்ததும் என்னை அறியாமல் மனதுக்குள் உற்சாகம் பிறந்தது.

வீட்டில் கட்டாயம் செய்து திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், 2 பிள்ளைகள் என்றும் சொன்னார். தினமும் பள்ளியில் சந்தித்து பேசிக்கொள்வோம். தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்தாலும் எப்போதும் என் நினைப்பில் இருந்ததாக அடிக்கடி சொல்வார். அதை கேட்கும் போது எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கும். மெல்ல, மெல்ல நெருக்கமானோம். கணவரிடம் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் அவரிடம் கிடைத்தன. அவர் மனைவியும் டார்ச்சர் பேர்வழி என்பதால், துணையால் பாதிக்கப்பட்ட நாங்கள் இணைவது தவறில்லை என்று தோன்றியது.

அந்த உற்சாகத்துக்கு கொரோனா வந்து திடீர் ‘பிரேக்’ போட்டது. வீட்டில் இருந்ததால் செல்போனில் பேசிக் கொள்வது அரிதாகிப் போனது. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் மகள், கொரோனாவால் ‘ஆல் பாஸ்’ என்று அறிவித்தார்கள். அடுத்து 10ம் வகுப்பு என்பதாலும், கணக்கு பாடத்தில் திணறுவது தெரிந்தது. அதனால் டியூஷனுக்கு அனுப்பலாம் என்று சொன்ன போது, என் கணவர் கொரோனா பரவல் இருப்பதால் வேண்டாம் என்றுவிட்டார்.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் காதலர் கணக்கு வாத்தியார் என்பதால் வீட்டுக்கு வந்து சொல்லித் தரும்படி கேட்கலாம் என்று நினைத்தேன். கணவரிடம் சொன்னேன். அவரும், ‘சரி’ என்றார். என் காதலரிடம் சொன்னேன். அவர் உற்சாகமாகி விட்டார். அவர் வீட்டுக்கு வந்து எனது மகளுக்கு பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார். என் கணவர் அரசு ஊழியர் என்பதால் பழையபடி வேலைக்கு போக ஆரம்பித்தார். அது எங்களுக்கு வசதியாக போனது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவள் ‘ஆல் பாசாகி’ 11ம் வகுப்பு சேர்ந்து விட்டாள். என் காதலரின் ‘டியூஷனும்’ தொடர்ந்தது. ஆனால் முன்பை விட என் மகளிடம் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தார். என்னிடம் அரிதாக வருவார். உடனே பாடம் எடுக்கணும் என்று போய் விடுவார். எனக்கு அது கொஞ்சம் ஏமாற்றமாகவும் நெருடலாகவும் இருந்தது.

ஒருநாள் யதேச்சையாக என் மகளின் செல்போனை பார்த்து அதிர்ந்து போனேன். அவள் ஆபாச வெப் சைட்களை அதிகம் பார்ப்பது தெரிந்தது. அதை விட என்னை அதிர வைத்த விஷயம் என் காதலரிடம் அவள் பகிர்ந்து கொண்ட வாட்ஸ் ஆப் மெசேஜ்கள். ஒரு நிமிடம் அதிர்ச்சியானேன். அதன் பிறகு இதை இப்படியே விட்டால் பிரச்னை என என் காதலரிடம் சண்டை போட்டேன்.

அவரோ, ‘இதையெல்லாம் பெரிதுப்படுத்தாதே... வெளியில் தெரிந்தா உனக்குதான் அசிங்கம்.... அவ ஒன்றும் சின்னப் பொண்ணு இல்ல... உன்னை விட அவளுக்கு நிறைய விஷயம் தெரியுது’ என்று நக்கலாக சிரித்தார். ‘என் பிள்ளையின் வாழ்க்கையை வீணாக்கி விடாதே’ என்று கெஞ்சினேன். அதற்கு அவர் ‘நீ பயப்படாதே உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன். உன் வீட்டுக்காரருக்கு தெரியாமல் பார்த்துக்கோ. கூடவே வெளியில் சொன்னால், உன் பொண்ணு  படங்கள் வெளியே பரவ ஆரம்பித்து  விடும். அதனால் நீயும் என்னை விட்டு விலகிப் போய் விடலாம் என்று நினைக்காதே’ என்றார். நான் செய்த தவறுக்கு என் மகள் பலியாகிக் கொண்டிருப்பது தெரிந்தது.

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மகளிடம் பேசுவது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அவளுக்கு புரிய வைக்க முயன்றேன். அதற்கு அவள், ‘அவ்ளோ மோசமான ஆள் கூட நீ ஏம்மா பழகற... இனிமே அந்த ஆளுகிட்டே பேசாதேமா’ என்றாள். லேசான நிம்மதி ஏற்பட ‘அதனாலதான் சொல்றேன் நீயும் அவரிடம் பேசாதே’ என்றேன். ‘அதெல்லாம் எனக்கு தெரியும் நான் பாத்துக்குறேன்’ என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டாள். அதன் பிறகு வெளிப்படையாகவே பேசினேன்.

அதற்கு அவள் ‘நீ முதல்ல ஒழுங்கா இருமா... அந்த சாரை நீ எப்படி மயக்கினேனு எனக்குத் தெரியும். பாவம் அவரு...’ என்கிறாள். எத்தனை முறை சொல்லியும் கேட்கவில்லை. காரணம் என்னைப் பற்றி தப்புத் தப்பாக என் மகளிடம் சொல்லிவைத்துள்ளார். இப்போது என் கணவரிடம் சொல்லிவிடுவேன் என்று இரண்டு பேரும் மிரட்டுகிறார்கள். என் மகளை எப்படி மீட்பது என்று தெரியவில்லை.

என் கணவருக்கு தெரியாமல் அதை செய்ய முடியுமா? என் கணவருக்கு போட்டியாக தவறு செய்ய ஆரம்பித்து இப்போது  என் மகளை ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறேன். அவருக்கு தெரிந்தால் என்னவாகுமோ என்று வேறு பயமாக இருக்கிறது. அவளுக்கு புரிய வைக்க என்ன செய்ய வேண்டும்? மனரீதியான ஆலோசனைகள் பலன் தருமா? இல்லை போலீசில் புகார் தெரிவிக்கலாமா? அப்படிச் செய்தால் விஷயம் வெளியில் தெரியாமல் இருக்குமா? என்ன செய்வது? எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் தோழி....

இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத  வாசகி.

நட்புடன் தோழிக்கு,

இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறீர்கள். இந்த வேதனையான நேரத்தில் பிரச்னையில் இருந்து விடபட, தெளிவான தீர்வு என்ன? நீங்கள் கண்டுபிடிக்க உதவியாக, சில வாய்ப்புகளை சொல்கிறேன். அதற்கு முன்பு பழைய சம்பவங்களையே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும். முதல் வாய்ப்பாக , ‘சைபர் கிரைம் போலீசில்’ புகார் தெரிவிக்கலாம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் மகளை, உங்கள் காதலனிடம் இருந்து மீட்டுத் தருவார்கள். காதலன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி செய்தால் வெளியில் தெரிந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம்.

அப்படி பயம் இருந்தால், 2வது  வாய்ப்பாக உங்கள் கணவரிடம் உண்மைகளை சொல்லி உதவி கேட்கலாம். மகள் மீது பாசம் வைத்திருக்கும் அவர், மகளை மீட்க கட்டாயம் உரிய நடவடிக்கை எடுப்பார். அதுவும் சரியாக வராது என்று தோன்றினால், 3வதாக உங்கள் அம்மா வீட்டில் இருப்பவர்களிடம் விஷயத்தை சொல்லி ஆதரவும், உதவியும் கேட்கலாம். அதற்காக
மன்றாட வேண்டிக் கூட இருக்கும்.

இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட கட்டாயம் இன்னொருவரின் உதவி தேவை. அது காவல்துறையாக இருக்கலாம் அல்லது உறவாக இருக்கலாம். அப்போதுதான் உங்கள் காதலனின் மிரட்டலில் இருந்து தப்பிக்க முடியும். கூடவே உங்களுக்கு தீர்வு வேண்டுமா, உங்கள் மகளுக்கு தீர்வு வேண்டுமா என்பதையும் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கே தெரியும் உங்கள் மகள் வாழ்க்கைதான் முக்கியம். உங்கள் இடத்தில் நான் இருந்தால் என் மகளின் வாழ்க்கையை காப்பாற்றதான் நினைப்பேன். எனவே கணவரிடம் பேசி தீர்வை நோக்கி நகரலாம், உங்கள் கணவரிடம் உண்மையை சொல்வதால் உங்களுக்கு பிரச்னை வரலாம். சண்டை வர வாய்ப்பு உள்ளது. பிரிய கூட நேரலாம். உங்களை கணவர் ஒதுக்கி வைக்கலாம். ஆனால்
மகளின் வாழ்க்கை முக்கியம்.

உங்கள் கணவருக்கும் உங்கள் விஷயத்தை விட மகளை காப்பாற்றுவது தான் முக்கியமாக தெரியும். பல சம்பவங்களில், இப்படி பிள்ளைகளுக்கு பிரச்னை வரும்போது பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்ந்ததை பார்த்து இருக்கிறேன். முன்பை விட நெருக்கமாக வாய்ப்பு கூட உள்ளது. எனவே நம்பிக்கை இழக்க வேண்டாம். இதையெல்லாம் செய்வதற்கு முன்பு உங்கள் மகளுக்கும், உங்கள் காதலனுக்கும் இடையில் நடந்த செய்தி, படங்கள் பரிமாற்றங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். புகார் தெரிவிக்கவும், உங்கள் கணவரிடம் உதவி கேட்கவும் ஆதாரங்கள் தேவை.  மகள் மேல் பாசமாக இருக்கும் உங்கள் கணவர், நீங்கள் சொல்வதை  நம்பாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. கூடவே உங்கள் மகளே தனது அப்பாவிடம் உங்களைப் பற்றி தவறாக புகார் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதனால் ஆதாரங்களை திரட்டிக் கொள்ளுங்கள். அதையெல்லாம் செய்து விட்டு உங்கள் காதலனிடம் கடைசியாக பேசி தன் மகளை விட்டுவிடும்படி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். நாசுக்காக பேசுங்கள். உங்கள் மகளிடமும் பேசி பாருங்கள். காதலனிடம் இருக்கும் கெட்ட குணங்களை சொல்லி மகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு மூன்று யோசனைகளில் எதையாவது ஒன்றை செய்ய தொடங்குங்கள். அதற்கு முன்பு ஒரு மனநல ஆலோசகரிடம் பேசி பிரச்னையை எப்படி கையாளுவது என்று யோசனை கேளுங்கள். முடிந்தால் உங்கள் மகளையும் அழைத்துச் செல்லலாம். கூடவே ஒரு வழக்கறிஞரிடமும் இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்றும் ஆலோசனை பெறலாம்.

உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக மட்டுமல்ல , என் அனுபவத்தில் இருந்தும் சொல்கிறேன் தோழி. இதன் பிறகும் உங்கள் கணவர் மனமுவந்து ஏற்றுக் கொண்டால் நன்றியோடு புது வாழ்வை தொடங்குங்கள். இனி இருவருக்கும் மற்றவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் தெரிய ஆரம்பிக்கும். இது போன்ற சம்பவங்களில் சில தம்பதிகளுக்கு முன்பைவிட உறவு அதிகம் பலப்படுவதை பார்த்து இருக்கிறேன். உங்களுக்கும் இது நிகழலாம். முதலில் உங்கள் மகளது வாழ்க்கை. அதற்கான முயற்சிகளை தொடங்குங்கள். தவறை உணர்ந்துவிட்டதால் உங்கள் வாழ்க்கை கட்டாயம் நிம்மதியாக அமையும். கவலை வேண்டாம்.  

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்