SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்!

2021-12-08@ 17:41:24

நன்றி குங்குமம் தோழி

முன்பெல்லாம் சாதி மாறி காதலிக்கிற பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமே கொல்லப்படுவார்கள். இப்போது அந்த இளைஞர்களை காதலிக்கிற பெண்களை பெற்றோர்களே கொன்றுவிடுகின்றனர் எனப் பேசத் தொடங்கினார் சமூக செயற்பாட்டாளரும், சாதி ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளருமான ரமணி. ஆணவக் கொலைகளைப் பொறுத்தவரை சாதியைத் தாண்டி வர்க்கம் தீர்மானிக்கிறது என்றவர், பொருளாதாரம், வசதி, அந்தஸ்து என வளர்ந்த மத்தியதர வர்க்கம் கூடுதலாக கொலைகளில் ஈடுபடுகின்றனர் என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. ஆணவக் கொலையை பொறுத்தவரை தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களே முதலிடத்தில் உள்ளன என்கிறார் உண்மை அறியும் குழுவில் கள ஆய்வு செய்த தனது அனுபவத்தை பகிர்ந்தவாறே.

2016ல் உச்சநீதி மன்றம் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்துள்ளது என அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னபோது, 22 மாநிலங்கள் தானாக முன்வந்து, தங்கள் மாநிலத்தில் ஆணவக் கொலை நடைபெறுகிறது அதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், அப்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக கட்சியினர், பலர் பார்க்க பட்டப் பகலில் படுகொலைக்கு உள்ளான உடுமலை சங்கரை மட்டும் குறிப்பிட்டு  ஒரே ஒரு ஆணவக்கொலை மட்டுமே தமிழகத்தில் நடந்திருப்பதாகப் பதிவு செய்துள்ளது.

சில குடும்பங்கள் ஜனநாயகத்தை ஏற்று சாதியக் கட்டமைப்புகளில் இருந்து விடுபட்டு மாறுவோம் என முன்வந்தாலும், சாதிய அரசியல் செய்யும் சங்கங்களும், சாதிய பஞ்சாயத்துகள் செய்யும் கட்சிகளின் தூண்டலில் இரண்டு சாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்கி குளிர்காயும் போக்கு இங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு விழுப்புரத்தில் சரஸ்வதியும், விருதாச்சலத்தில் திலகவதியும் ஆணவக்கொலைக்கு உள்ளாகி கொல்லப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த திவ்யா என்கிற பெண் எரித்துக் கொல்லப்பட்டார். அதேபோல் முத்தரையர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையனை விரும்பியதற்காக யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் எரித்துக் கொல்லப்பட்டார். விழுப்புரம் சரஸ்வதி வழக்கில், மகளை அப்பாவே கொன்றுவிட்டு, காதலித்த பையன், அவன் தம்பி, அவன் நண்பன் மூவரையும் பெண் காதலிக்க மறுத்ததால் கொலை என பதிவு செய்து குண்டாஸில் போடப்பட்டுள்ளார்கள். மேலும் சாதி மாறி பெண்ணைத் திருமணம் செய்ததற்காக ஆரணியில் ஆணவக் கொலைக்கு உள்ளான கௌதம், கரூரில் பெண்வீட்டாரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட ஹரிஹரன் என சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தொடர்கிறது.

2016ல் மதுரை கிளையில் நீதிபதி ராம சுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பில் சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனை, பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமூக நலத்துறை அமைச்சர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசை நியமிக்க சொல்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள், அச்சுறுத்தல் நீங்கும் வரை பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உதவ ஹெல்ப் லைன் எண்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அப்படியும் அவர்களைப் பாதுகாக்க கடமை தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், தண்டித்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018ல் சக்தி வாகிணி என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் போட்ட வழக்கில் வந்த தீர்ப்பில், உடனடியாக அந்தந்த மாநிலங்கள் சாதி ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். ஆணவக் கொலைக்கு எதிரான நெறி முறைகளை மாநில அரசும், வழிமுறைகளை காவல்துறையும் கடைபிடிக்க வேண்டும் என்றபோதும், முன்பு ஆட்சியில் இருந்த தமிழக அரசு இதனைச் சரியாகச் செய்யவில்லை.

நீதிபதி ராமசுப்ரமணியம் கொடுத்த 2016 தீர்ப்பும், உச்சநீதிமன்றம் கொடுத்த 2018 தீர்ப்பும், இதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் வெளியான லதா சிங், பகவான்தாஸ், ஆறுமுகம் சேர்வை தீர்ப்புகளும் சாதி ஆணவக் கொலைகளை மையமிட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகளே. இந்திய சட்ட ஆணையமும், இந்திய மகளிர் ஆணையமும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அவற்றை தடுக்க மாநில அரசு மட்டுமின்றி மைய அரசும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்கிறது. ஆனால் இரு அரசுகளும் இது தொடர்பாக இதுவரை எந்தவொரு சட்டமும் இயற்றவில்லை என்பதே இங்கு வேதனை.

2018 தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இதனை சட்ட ஒழுங்கு பிரச்சனையாகப் பார்ப்பதால், அந்தந்த மாநில அரசுகளே ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்று இருக்கிறது. இந்தியாவில் ஆணவக் கொலையை தடுப்பதற்காக முதன் முதலாக சட்டம் இயற்றிய ஒரே மாநிலம் ராஜஸ்தான் மட்டுமே. ராஜஸ்தான் மாநில அரசைப் போல தமிழக அரசும் ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தியவர், ஆணவக்கொலை செய்யப்பட்டவர்களில் கண்ணகி-முருகேசன் வழக்கில் மட்டுமே 18 ஆண்டுகள் கழித்து, காவல்துறையால் முதல்முறையாக தண்டிக்கப்பட்டு மிகச் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெண்ணுரிமை, சொத்துரிமை, சாதி மறுப்புத் திருமண ஊக்கத் தொகை, சமூக நீதி போன்ற விஷயங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அதேபோல் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆணவக் கொலையை தடுக்கவும் தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி ஆணவக் கொலை தொடர்பாக கிடப்பில் கிடக்கும் வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல், கல்வி வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, 5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குதல், பாதுகாப்பு இல்லங்களை மாவட்டம் தோறும் உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இயக்கமாகப் பரப்புரை செய்து வருவதுடன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநிலங்களவை உறுப்பினர் அ.ராசா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் சுப. வீரபாண்டியன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முத்தரசன், சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன், நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார்.

பெண்கள் அதிகம் படித்து, வேலைக்கு செல்லும் நிலையில் தற்போது சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. அதே நேரம் ஆணவக் கொலைகளும் அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பின்னால் இருந்து இயங்கும் சாதி பஞ்சாயத்துகள், அவற்றை வழிநடத்தும் சாதி சங்கங்கள் மீது நடிவடிக்கை தேவை என்றவர், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஜனநாயக உரிமையில், ஆணும் பெண்ணும் தான் விரும்பியவர்களை திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கும்போது, சாதி மாறிக் காதலிப்பவர்கள், தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவும், மதம்மாறி திருமணம் செய்பவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான கால அவகாசமான 30 நாட்களை நீக்கவும் வேண்டும் என்கிற கோரிக்கையையும் மிகவும் ஆழமாக முன்வைக்கிறார்.

சாதி கௌரவம், கட்டுப்பாடுகளை பெண்கள் தாண்டும்போது  அவர்களுக்கான பாதுகாப்பு, சட்ட உரிமை, பெண்ணுரிமை மீது இங்கே கேள்வி எழுகிறது. சாதி மாறிய திருமணத்தில் தன் சொந்தப் பெண்ணையே கொல்லும் போக்கு குடும்பத்தில் நடக்கும் கொலையாகவே இங்கு பதியப்படுகிறது. இதுவும் சாதிக்காக நடந்த கொலையே. குடும்பக் கொலையாக இதனைச் சுருக்காமல், ஆணவக் கொலையாக, காதலுக்காக நிகழ்ந்த கொலையாகப் பார்க்க வேண்டுமென முடித்தார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்