SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A - Z

2021-12-01@ 17:47:51

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

ஒருவரின் அடையாளம் மற்றும் ஆளுமையை சுட்டிக்காட்டுவது அவர்கள் அணியும் ஆடை. அதனால்தான் ஒரு ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் அவர்கள் அணியும் உடையை வைத்து எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். சரியான உடையினை தேர்வு செய்து அணியும் போது ஒருவர் தன் வாழ்வில் வெற்றிப் படியினை எளிதாக அடைய முடியும். அதே சமயம் உங்கள் அலமாரியில் இருக்கும் ஏதாவது ஒரு உடையினை அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள் பார்ட்டிக்கு செல்லக்கூடிய உடையினை அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக்கூடாது. அது எவ்வளவு விலை அதிகமான உடையாக இருந்தாலும் தவிர்த்துவிடுவது நல்லது. அதேபோல் ஐந்து வருடம் முன்பு நீங்கள் அணிந்திருந்த சட்டை இப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்லிட முடியாது. அதனால் எப்போதுமே நாம் என்ன உடை அணிகிறோம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் அலுவலகத்திற்கு என்ன உடை அணிய வேண்டும் என்று தெரிவதில்லை. இந்த இதழில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் என்ன மாதிரியான உடையினை அணிய வேண்டும், அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் கார்ப்பரேட் உலகத்திற்கு என தனிப்பட்ட உடை அணியும் முறையுள்ளது, அதையும் கண்டறியலாம்.

கார்ப்பரேட் உடை அலங்காரம் என்பது முறையாகவும் சரியாகவும் ஆடை அணிவது. கார்ப்பரேட் டிரஸ்சிங் என்பது ஒரு நபர் பணி செய்யும் சூழல் மற்றும் அலுவலகத்திற்கு என்று இருக்கும் குறிப்பிட்ட கலாச்சாரத்தினை குறிக்கும். ஒருவர் முறையாக உடையினை அணியும் போது, அவர்கள் கொஞ்சம் சீரியசானவர்கள் என்று தான் கருதுவார்கள்.

ஒருவரை அவர் அணியும் உடையினைக் கொண்டு மதிப்பிடுவது சரியில்லை. ஆனால் அதே சமயம் ஒருவர் உடையினை சரியான முறையில் அணியவில்லை என்றால் அவர்களுடன் மற்றவர்கள் பேசவோ அல்லது பழகவோ தயங்குவார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அலுவலகத்திற்கு முறையாக உடை அணியும் போது அது உங்களுக்கு என்று தனிப்பட்ட அடையாளத்தை கொடுக்கும். மேலும் நீங்கள் தனித்து தெரிவீர்கள், மற்றவர்களுக்கு உங்கள் மேல் மரியாதை ஏற்படுவது மட்டுமில்லாமல், நீங்கள் அவர்களின் முன்மாதிரியாகவும் திகழ்வீர்கள்.

முறையாக உடையினை தேர்வு செய்து அணியும் போது, உங்கள் மேல் மட்டுமில்லாமல் நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தின் மேலும் ஒரு மரியாதை ஏற்படும். காரணம் ஒவ்வொருவரும் அவர்கள் வேலை பார்க்கும் இடத்தின் பிரதிநிதி என்பதை மனதில் கொள்வது அவசியம். அதனாலேயே அலுவலகம் செல்லும் போது, குறிப்பிட்ட ஒரு உடையினை கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகம் சார்ந்த முக்கியமான சந்திப்புகளுக்கு டி ஷர்ட் ஜீன்ஸ் பேன்ட் போன்ற சாதாரணமான உடைகளை அணிந்து செல்லக்கூடாது. ஏன் என்றால், நீங்கள் உங்கள் அலுவலகம் சார்பாக அந்த சந்திப்பிற்கு செல்வதால், நீங்கள் அணியும் உடையும் உங்க அலுவலகத்தின் மதிப்பினை கூட்டும் படி இருக்க வேண்டும். மேலும் முறையாக உடை அணியும் போது நம்முடைய வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்க முடியும்.

பொதுவாகவே கார்ப்பரேட் உடையினை சரியாக அணியும் போது, காந்தம் போல் மற்றவர்களை ஈர்க்கக் கூடிய சக்தி அதற்குண்டு. அதனால் தான் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கு வேலை செய்பவர்களின் உடையின் மேல் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் நீங்கள் அதை சரிவர பின்பற்றவில்லை என்றால் நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும் உங்களின் உயரதிகாரியிடம் இருந்து மரியாதை மற்றும் பாராட்டினை பெறுவது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். அதுவே உங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தடங்கலாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் முறையாக உடையினை அணிந்து செல்லும் போது அவருக்குள் ஒரு தன்னம்பிக்கை மற்றும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். மேலும் தன்னுடைய வேலையில் கவனம் சிதறாமல் ஈடுபட முடியும். இந்த சட்டத்திட்டத்திற்கு உட்படாதவர்களை சக ஊழியர்கள் மட்டுமில்லாமல் அந்த நிர்வாகம் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் அவர்களை புறம் தள்ளிவிடுவார்கள். அவர்கள் முக்கியமான அலுவலக சந்திப்புகள், கருத்தரங்குகள் மற்றும் அலுவலகம் சார்ந்த நிகழ்விற்கு அழைக்கப்படமாட்டார்கள். ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உடை அணியும் நெறிமுறைகள் இருக்கும்.

அதை கடைப்பிடிக்காமல் வாரத்தின் முதல் நாளான திங்களன்று அழுக்கான கசங்கிய டீ ஷர்ட் அணிந்து வந்தால் அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதை தடுப்பதில் ஆச்சரியமில்லை. உங்கள் அலுவலகத்திற்கு இருக்கும் உடை நெறிகளை கடைப்பிடிக்காமல் வருபவர்கள் மேல்  பொறுப்பற்றவர்கள் மற்றும் கவனக்குறைவானவர்கள் என்று முத்திரை பதிந்துவிடும்.

ஒவ்வொரு ஊழியருக்கும் அவரின் அடையாளத்தினை ஏற்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். அதற்கு நீங்கள் அணியும் உடை பெரிய பங்களிக்கும். இந்த போட்டி நிறைந்த உலகில் உங்களின் திறமையைக் காட்டிலும் நீங்கள் அணியும் உடையாலும் உங்களுக்கு என்று தனிப்பட்ட ஸ்டைலினை நீங்கள் பதிவு செய்வது அவசியம். அப்போது தான் நீங்கள் உங்களின் சக ஊழியர்களை காட்டிலும் தனித்து தெரிவீர்கள். இல்லை என்றால் நீங்கள் காலத்திற்கும் மற்ற ஊழியர்கள் போல் தான் கருதப்படுவீர்கள். கேட்பதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஒரு நிர்வாகியாக நீங்கள் பொறுப்பேற்று செயல்படும் போது, நீங்கள் மற்றவர்களுக்கு எல்லா விஷயத்திலும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர உங்களுக்கான மரியாதையினை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது.

பொதுவாக ஆண், பெண் யாராக இருந்தாலும் அலுவலகத்திற்கு உடை மட்டுமில்லை அதற்குரிய ஆபரணங்களும் சரியான முறையில் தேர்வு செய்து அணிய வேண்டும். திங்களன்று ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்தால், அந்த வாரம் முழுக்க வேலையில் கவனம் இருக்காது. ஆண்கள் கிழிந்த ஜீன்ஸ், ஸ்னீக்கர் ஷூக்கள், தொப்பி, கழுத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட செயின்கள் போன்றவற்றை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் காதில் பெரிய கம்மல்கள், கை நிறைய வளையல்கள், நெக்லெஸ்கள், கண்களை பறிக்கும் வேலைப்பாடு கொண்ட புடவைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அங்கு நம்முடைய நகைகளை மற்றவர்களுக்கு காட்டி பெருமைக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நினைவில் கொள்ளுங்கள் உங்களிடம் எவ்வளவு நகை பொருள் உள்ளது என்பதை நீங்கள் வேலைப் பார்க்கும் இடத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. எளிமையாகவும் அதே சமயம் பார்க்க நேர்த்தியாகவும் உங்களின் உடை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை குறித்த முதல் பதிவு மிகவும் முக்கியம். அது தான் உங்களின் வாழ்நாள் முழுக்க தொடரும். வாழ்க்கையில் எல்லாருக்கும் இரண்டாம் வாய்ப்பு என்பது கிடைப்பது மிகவும் அரிது.

சாதாரண ஒரு வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணியும் போது ஏற்படும் தன்னம்பிக்கை மற்ற உடைகள் அணியும் போதும் ஏற்பட வேண்டும். அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.மிகவும் அடர்த்தியான மற்றும் கண்களை பறிக்கக் கூடிய நிறங்கள் கொண்ட உடைகளை தவிர்க்க வேண்டும். நீலம், கிரே, கருப்பு, வெள்ளை மற்றும் காக்கி நிற உடைகள் கண்டிப்பாக உங்களின் அலமாரியில் இருக்க வேண்டும். அதேபோல் நடுநிலையான நிறங்களும் அலுவலகம் அணிந்து செல்ல ஏற்றது.

பெண்கள் பெரிய காதணிகள், கை நிறைய வளையல்களை அணிவதை தவிர்க்க வேண்டும். இரண்டு மூன்று கைவளையல்கள் அணியும் போது, அவை ஒவ்வொரு  முறை உரசும் போது சலசலப்பு ஏற்படும். குறிப்பாக அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் டைப் செய்யும் போது இந்த சத்தம் உங்களை மட்டுமல்ல அருகில் வேலை பார்ப்பவர்களின் கவனத்தையும் சிதற செய்யும். மற்றவர்கள் அணிவதை போல் நீங்களும் அணிய வேண்டும் என்று அவர்களை அப்படியே பின்பற்றக் கூடாது. உங்களுக்கு என்று தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் அடையாளத்தினை ஏற்படுத்துவது அவசியம்.

உடை எவ்வாறு முக்கியமோ அதேபோல் உங்கள் சரும பாதுகாப்பும் அவசியம். சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் அவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வியர்வை வாடை இருக்கும். அது மற்றவர்களின் முகத்தை சுளிக்க செய்யும். அதை தவிர்க்க பாடிஸ்ப்ரே அல்லது பர்ஃப்யூம் பயன்படுத்தலாம். இதனை ஆண், பெண் இருவருமே பயன்படுத்த வேண்டும்.

நன்றாக ஐயர்ன் செய்யப்பட்ட உடையினை அணிய வேண்டும். அதேபோல் காலில் அணியும் ஷூக்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்க வேண்டும். பெண்கள் சத்தம் எழுப்பாத சாதாரண காலணிகளை அணியலாம். அதிக ஹீல்ஸ் கொண்ட காலணிகளை தவிர்ப்பது நல்லது. சில சமயம் நாம் பயணிக்க வேண்டி இருக்கும் சமயத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு ஜோடி நன்கு பாலிஷ் செய்யப்பட்ட ஷூ அல்லது செருப்புகளை கையில் எடுத்துச் செல்லலாம். லாப்டாப் மற்றும் முக்கியமான டாக்குமென்ட்களை எடுத்து செல்வதற்காகவே தனிப்பட்ட பைகள் உள்ளன. அதை பயன்படுத்த வேண்டும். பார்க்கவும் நேர்த்தியாக இருக்கும்.

உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளை அணியக்கூடாது. அதேபோல் லூசான உடைகளையும் தவிர்க்க வேண்டும். சரியான அளவுள்ள உடையினை தேர்வு செய்யலாம். அல்லது தைத்தும் பயன்படுத்தலாம். பெண்கள் தங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் காட்டக்கூடிய உடையினை தவிர்க்க வேண்டும். அகண்ட கழுத்துப்பகுதி கொண்ட உடையினை அணியக்கூடாது. சில நிறுவனங்கள் பெண்கள் ஸ்கர்ட் அணிய அணுமதிப்பார்கள். அந்த சமயத்தில் முட்டிக்கு கீழ் ஸ்கர்ட்டின் நீளம் இருக்க வேண்டும். தலைமுடியினை காற்றில் பறக்க விடாமல், அழகான குதிரைவால் கொண்டை போட்டுக் கொள்ளலாம்.

ஆண்கள் எப்போதும் தங்களின் சட்டையை பேன்டிற்குள் சொருகி இருக்க வேண்டும். அவ்வாறு அணியும் போது, சட்டை சுத்தமாகவும், மிடுக்காகவும் இருப்பது அவசியம். பேன்டிற்குள் சட்டை சொருகும் போது கசங்காமல் இருக்க வேண்டும். எப்போதும் முழுக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். மடித்து விடக்கூடாது. சட்டையின் காலர் பட்டன் அணியலாம், விருப்பம் இல்லாதவர்கள் அதை மட்டும் தவிர்த்து மற்ற பட்டன்களை கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும். பெல்ட் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் எம்பிராய்டரி டிசைன் மற்றும் மணி வேலைப்பாடுகள் பெரிய பக்கில் கொண்ட டிசைன் இருக்கக்கூடாது.

சட்டை மேல் அணியப்படும் டை உங்கள் சட்டையின் நிறம் மற்றும் டிசைனுக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். டையின் நுனி பெல்ட் பக்கில் மேல் விளிம்பினை தொடும் அளவு நீளத்தில் இருக்க வேண்டும். அதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. அதே போல் ஷூ அணியும் போது கண்டிப்பாக சாக்ஸ் அணிவதை தவிர்க்கக்கூடாது. அந்த சாக்சினையும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சலவை செய்ய வேண்டும். இல்லை என்றால், கால் பாதங்களில் உள்ள வியர்வையினால் வெளியாகும் ஒரு வித நாற்றம் அருகில் இருப்பவர்களின் முகம் சுளிக்க செய்யும்.

ஒரு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் ஆண், பெண் யாராக இருந்தாலும், உடை அணியும் வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். இதனால் உங்கள் அலுவலகத்தில் மட்டுமில்லாமல் அலுவலகத்திற்கு வெளியேவும் உங்களுக்கு என்று தனி மதிப்பு ஏற்படும். இதற்கு அதிகம் செலவாகும் என்று நினைக்க வேண்டாம். உங்களின் நேர்த்தியான தோற்றத்திற்கும் ஆடையின் விலைக்கும் சம்பந்தமில்லை. குறைந்த விலையில் உடைகளை அணிந்தாலும், அது உங்களுக்கு சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

கடைசியாக எவ்வளவு நேர்த்தியான உடை அணிந்தாலும், முகத்தில் புன்சிரிப்பு இல்லை என்றால், உங்களை மற்றவர்கள் சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திடுவார்கள். உடை எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் முகத்தில் புன்னகையும் அவசியம் என்பதை அலுவலகம் மட்டுமில்லை, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்