SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களால் பெண்களுக்கான முதல் பைக் ரேசிங் க்ளப்

2021-11-30@ 17:45:23

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக பெண்கள் பைக் ஓட்டுவதை பார்ப்பதே அதிசயம். அதிலும் ஒரு பெண் பைக் ரேசிங்கில் பங்கு பெற்று இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியனாக வலம் வருவது மாபெரும் சாதனைதான். இந்த சாதனையுடன் இப்போது பெண்களுக்காக இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் ரேசிங் க்ளப்பை ஆரம்பித்துள்ளார் நிவேதா ஜெசிகா.

 “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். நான் எட்டாவது படிக்கும் போது என் நண்பர்கள் பைக் ஓட்ட கத்துக்கிட்டாங்க. நானும் மற்ற பெண்களைப் போல முதலில் ஸ்கூட்டி ஓட்டக் கத்துக்கிட்டாலும் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களிடம் நானே பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன். அடுத்து 18 வயதானதும் பைக்குக்கும் லைசென்ஸ் வாங்கி அதில் பயணம் செய்யத் தொடங்கினேன். நண்பர்கள் சிலர் குழுவாக இணைந்து இந்தியா முழுவதும் பல இடங்களுக்கு பைக் பயணம் சென்றோம். அது வரை பயணம் செய்ய மட்டுமே பைக்கை பயன்படுத்தி வந்தேன். ஆனால், பொதுவாகத் தெருவில் வேகமாகச் செல்ல முடியாது.

எனக்கு பைக்கை வேகமாக ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை ஒரு நாள் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது, அவர்களிடம் தெரிவித்தேன். அப்போதுதான் பைக் ரேசிங் பற்றி தெரிய வந்தது. அங்கு பாதுகாப்பான உடையில், யாருக்கும் இடையூறாக இல்லாமல் வேகமாக பைக் ஓட்டலாம் என்றனர். சமூக வலைத்தளத்திலும், பெண் ரேசர்கள் சென்னையிலேயே இருப்பதும் தெரிந்தது.

முதல் முறையாக பைக் ரேசிங்கில் கலந்து கொள்ளயிருந்த சமயம், ஒரு விபத்து ஏற்பட்டு தோள்பட்டை எலும்பில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போட்டியில் சரியாக பங்கு பெறவில்லை. ஆனால் அந்த இடத்தில்தான் நான் பல பெண் பைக் ரேசர்களை பார்த்தேன். அவர்கள் எல்லாம் முறையான பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள். எனக்கு அந்த போட்டியில் பங்குபெறுவதற்கு முன் வரை பைக் ஓட்டத் தெரியுமே தவிர, போட்டிகளில் பங்குபெறும் அளவிற்கு பயிற்சி இல்லை.

அதன் பிறகு முழுவீச்சில் பைக் ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டேன். அடுத்து வந்த போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் வென்றுள்ளேன். இன்று நான் இல்லாத பைக் ரேசிங் போட்டிகளே இருக்காது எனும் அளவு வளர்ந்துள்ளேன். ஆனால் இந்த வளர்ச்சிக்கு பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது. ஊக்குவிப்பவர்களைத் தாண்டி பயமுறுத்துபவர்களே அதிகம் இருந்தனர். இன்னும் கொஞ்சம் ஆதரவு கிடைத்திருந்தால் விரைவில் இந்தவெற்றியின் இடத்தை அடைந்திருப்பேன் என தோன்றும். அதனால் என்னைப் போல பைக் ரேசில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளிக்க பிரத்யேகமான பெண்கள் ரேசிங் க்ளப் உருவாக்கினேன். இது இந்தியாவிலேயே, பெண்களுக்குப் பெண்ணால் ஆரம்பிக்கப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் க்ளப் ஆகும்.

இதை ஆரம்பிக்கும் யோசனையைத் தெரிவித்த போது பல நெகடிவ் கருத்துக்கள்தான் கிடைத்தது. பெண்கள் இதில் முழு ஆர்வத்துடன் ஈடுபடமாட்டார்கள் என்றும், அவர்களது குடும்பத்தினர் இதை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் நான் கொரோனா காலத்தில் இந்த பெண்கள் க்ளப்பை உருவாக்கினேன். சமூக வலைத்தளத்தில் இதற்கான ஒரு பக்கம் ஆரம்பித்ததுமே இரண்டே வாரத்திற்குள் இந்தியா முழுவதிலுமிருந்து 200 பெண்கள் குழுவில் இணைய ஆர்வம் தெரிவித்தனர். இந்த குழுவில் பைக் ஓட்டத்தெரியாத பெண்கள், பைக் வைத்திருக்காத பெண்களும் இணையலாம். அவர்களுக்கு நாங்களே பைக் ஓட்ட பயிற்சி அளித்து, எந்த பைக் வாங்கலாம் என்ற ஆலோசனையும் கொடுப்போம்.

இது தவிர, ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பைக் பயணமும் செய்துவருகிறோம். சமீபத்தில் சென்னையில் பிங்க் பைக்கில்தான் 2021 என்ற பெயரில் பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் கிருத்திகா உதயநிதி தலைமைத் தாங்கினார்.

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி அல்லது ஆண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பைக் ரேசிங்கில் பங்குகொள்ள தயங்குவதற்கான காரணம், இது அதிகம் செலவாகும் என்ற எண்ணமும், விபத்துகள் ஏற்படும் என்ற பயமும்தான். இது வரை நான் பைக் ரேசிங் செய்யும் போது அறுபதுமுறைக்கு மேல் கீழே விழுந்து மோதியிருக்கிறேன். ஆனால் சரியான தலைக்கவசமும், ரேசிங் உடையும் அணியும் போது நமக்கு எந்த பாதிப்புமே ஏற்படாது.

ரேசிங் உடை வாங்குவதற்கான செலவு அதிகம் என்றாலும், தரமான ரேசிங் உடை அணிந்தால் மட்டுமே விபத்துக்களையும், அதனால் ஏற்படக்கூடிய செலவுகளையும் தவிர்க்க முடியும். இது பணக்காரர்கள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடியது என்ற எண்ணமும் தவறானதுதான். பணமிருப்பவர்கள், இதற்கு தேவையான பொருட்களை எளிதில் வாங்க முடியும் என்றாலும், உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்களும் கொஞ்சம் கடின உழைப்பை செலுத்தினால் நிச்சயம் சாதிக்க முடியும்.

மோட்டார் சைக்கிள் ரேசிங் இப்போது தான் இந்தியாவில் பொழுதுபோக்கு வகையிலிருந்து, ஸ்போர்ட்ஸ் விளையாட்டாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு முதல்முறையாக முதலமைச்சர் ஸ்டாலினிடமிருந்து இளம் சாதனையாளர் விருது கிடைத்தபோது, அது எங்கள் ஒட்டுமொத்த பைக் ரேசிங் வீரர்களுக்குமான அங்கீகாரமாகவே பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது பைக் ரேசிங் குறித்த விழிப்புணர்வும் அதற்கான அங்கீகாரமும் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் கிடைத்து வருகிறது” என முடிக்கிறார். இந்த ரேசிங் குழுவில் இணைய நினைக்கும் பெண்கள் @wmc.india எனும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாகவும் அல்லது nsports.org எனும் இணையதளம் மூலமாகவும் சேர்ந்து, இலவச பயிற்சி பெறலாம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்