SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு வேலைக்கான கலங்கரை விளக்கம்!

2021-11-30@ 17:41:24

நன்றி குங்குமம் தோழி

“சார் நீங்க என்ன படிச்சிருக்கீங்க..?” என்ற கேள்வியை தாண்டி “நீங்க என்ன வேலை செய்யிறீங்க..?” என்கிற கேள்விதான் இந்தியாவில் படித்த கோடிக்கணக்கான இளைஞர்களை பதைபதைக்க  வைக்கிற கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் 70 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்துக்கொண்டும், அரசு நடத்துகின்ற TNPSC போன்ற தேர்வுகளை எழுதிக்கொண்டும் தமிழக இளைஞர்கள் எடுக்கும் முயற்சிகள் ஏராளம். ஆனால் வேலை என்னவோ சொற்ப நபர்களுக்குத்தான் கிடைக்கிறது. படித்து முடித்த ஒரு இளைஞன் அரசு வேலை பெறுவதற்காக படிப்பையும் தாண்டி அரசு நடத்துகின்ற தேர்வுகளை சந்திக்கும் சவால்களுக்கு தள்ளப்படுகிறார்.

அரசு தேர்வு எழுதுவதற்காக நிறைய தனியார் நிறுவனங்கள் பயிற்சிகள் நடத்துகின்றனர். ஆனால் அதற்கான கட்டணம் அதிகம். இதை எல்லாராலும் பெற முடியாது என்ற சூழல் உள்ளது. நிலமை இப்படி இருக்க  நாகப்பட்டினத்தில் ‘கலங்கரை’ எனும் பெயரில் படித்த ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக TNPSC கோச்சிங் சென்டர் நடத்தி அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றி வருகிறார் கமல். நான்கு வருடமாக இந்த பயிற்சி மையத்தினை நிர்வகித்து வரும் கமல், தான் கடந்து வந்த பாதையினை பற்றி விவரித்தார்.
 
‘‘நாகையில் கடுவையாறு கடலில் சங்கமிக்கும் இயற்கை துறைமுகம் கொண்ட அழகிய ஊரான அக்கரைப்பேட்டைதான் நான் பிறந்த ஊரு.  எங்க வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். தலைமுறை தலைமுறையாக மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வுக்கான ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் குடும்பம் எங்களுடையது. நானும் அந்த தொழிலில் ஈடுபடாமல், அரசு அலுவலர் ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தோடு பயணிக்க தொடங்கினேன். பட்டப்படிப்பை எல்லாம் முடித்துவிட்டு, சென்னைக்கு அரசு தேர்வு எழுதுவதற்காக பயிற்சி எடுக்க கிளம்பினேன். ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்தி சேர்ந்தேன்.

கட்டணம் செலுத்தி இருக்கிறோம், கண்டிப்பாக நானும் ஒரு அரசு ஊழியராயிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தருணத்தில் என் அப்பா இறந்துவிட்டார்.  குடும்பத்தை காப்பாற்றக் கூடிய பொறுப்பு என் மேல் விழுந்தது. அதனால் என்னால் பயிற்சிக்காக முழு நேரத்தை செலவிட முடியவில்லை. கால ஓட்டத்தில்  அரசு வேலைக்கான வயது வரம்பும் கடந்துவிடவே அரசு பணியாளர் ஆகவேண்டும் என்ற கனவை அடியோடு மறந்தேன்.

இந்த தோல்வி என் மனதில் நீங்காத வடுவாக மாறி இருந்தது. ஆனால் அதை நினைத்து வருந்தினால் என்னால் வாழ முடியாது என்பது மட்டும் புரிந்தது. என்னுடைய வலி என்னோடு போகட்டும் என்று என் மனதை மாற்றிக் கொண்டேன்’’ என்றவர் தான் கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் நிகழ்கால தலைமுறையினருக்கு பயன்பாடாக அமையட்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிற்சி மையத்தினை துவங்கியுள்ளார்.

‘‘2018ல் இந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பித்த போது, என் கையில் பெரிய அளவில் சேமிப்பு எல்லாம் இல்லை. என்னிடம் இருந்த சொற்ப பணத்தைக் கொண்டு தான் ஆரம்பித்தேன். அப்பாவிற்கு பிறகு குடும்ப பாரத்தை நான் சுமக்க வேண்டும். ஆனால் என் சேவையை புரிந்து கொண்டு அம்மா அந்த பாரத்தை ஏற்றுக் கொண்டார். அவர் தன் தலையில் மீன் கூடையை சுமந்து குடும்பத்தை பார்த்துக் கொண்டார்.

முதலில் எங்க ஊரில் அரசு தேர்வு எழுத விருப்பமுள்ள ஏழை எளிய மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். இதுவரை, பதினெட்டு பேர் அரசு ஊழியர்களாக தேர்வாகியுள்ளனர். இவர்களை ெதாடர்ந்து நாகை மட்டுமில்லாமல் திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து பல்வேறு ஏழை எளிய படித்த இளைஞர்களை கலங்கரையை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது.

தற்போது 18 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். அவர்களில் 16 பேர் சென்னையிலிருந்து வருகை தந்து சிறப்பாக பயிற்சி அளிக்கின்றனர். மேலும், ஒரு வரவேற்பாளர், ஒரு துப்புரவு பணியாளர் என 20-க்கும் மேற்பட்டவர்களை கொண்ட எல்லா கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு நவீன பயிற்சி கூடமாக இதை நடத்தி வருகிறோம். எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கான புத்தகம் மற்றும் பயிற்சி நூல்களை பிரதி எடுப்பதற்கும் குறைந்த கட்டணமே பெறுகிறோம்’’ என்றவர் இப்
பயிற்சி மையத்தினை தொடர்ந்து நடத்த பொருளாதார ரீதியான பல சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

 ‘‘பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயிலும் வசதி கொண்ட பயிற்சி மைய கட்டிட வாடகை , மாணவர்கள் பயிலுவதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகளை பராமரிப்பதற்கு போதுமான நிதி வசதி இல்லை. நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலர் தற்போது மையத்திற்கு தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் இல்லை என்றால் என்னால் இந்த பயிற்சி மையத்தினை சிறப்பாக செயல்படுத்த முடியாது.

தற்போது பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேநீர் மட்டுமே வழங்க முடிகிறது. எதிர்காலத்தில் மதிய உணவு மற்றும் தங்கும் வசதி, பயிற்சி ஆசிரியர்களை அதிகப்படுத்துதல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறேன்’’ என்றார் துடிப்போடு கமல்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்