SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைவு நல்லது வேண்டும்!

2021-11-29@ 17:42:47

நன்றி குங்குமம் தோழி

சிறுகதை

நள்ளிரவு 12.00 மணி கடிகாரம் ‘‘டிக் டிக்” என அடித்துக் கொண்டிருந்தது. பேய் வரும் நேரம் என நம் மனதில் தமிழ் சினிமாக்களால் அழுந்த பதிய வைக்கப்பட்டுள்ள அதே இரவு 12.00 மணி தான். என் கைபேசி ஒலிக்க திரையில் அசோக்...  
என் பால்ய கால நண்பன்... தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் வசிக்கிறான்.

  ‘‘என்னடா? இந்த நேரத்துல” என்றேன் தூக்க கலக்கத்துடன்.
  ‘‘சாரிடா!  டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” என்றான் குற்றவுணர்வுடன்.
  ‘‘இல்லை சொல்லுடா...” என்றேன் தூக்கத்தை கலைத்த எரிச்சலை அடக்கிக் கொண்டு...”
‘‘இல்லைடா..! எனக்கு உன்னை விட்டா வேற யாருடா இருக்கா?” என தயங்கியவன்...  ‘‘என்னன்னு தெரியலைடா  அப்பா இரண்டு  நாளா போனையே எடுக்கலை, அதான்” என்றான் பயத்துடன்.  ‘‘காலைல நீ போய் கொஞ்சம் பாத்திட்டு வரமுடியுமாடா?” என இழுத்தவனை...

‘‘என்னடா இப்படி கேக்குற!.. காலையில் முதல் வேலையா போய் பாத்துட்டு தகவல் சொல்றேன்...” என்றேன். லாஸ்டா எப்படா பேசின அவரோட..போனவாரம் சண்டே! இதோ இன்னைக்கு சண்டே... கூப்டா பதிலேயில்லைடா என்றான் கவலையுடன்.பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க போனேன்.தூக்கம் வரவில்லை... மனதில் என்னென்னவோ எண்ண அலைகள்... பழைய ஞாபகங்கள் நினைவின் அடுக்குகளில்..அரசு ஊழியராக இருந்த பரமேஸ்வரன் அங்கிள் அசோக்கை கண்ணும் கருத்துமாக வளர்த்து எம்எஸ் வரை படிக்கவைத்து அவனுக்கு பிடித்த பெண்ணையே திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர்.

அசோக்கும் நானும் முதல் வகுப்பிலிருந்தே ஒரே பள்ளி. பக்கத்து தெருவில் வீடு என பல பால்யகால துள்ளித் திரிந்த காலங்கள் நினைவுக்கு வந்து போனது. பல நேரங்களில் அசோக்கின் அம்மா கையால் சாப்பிட்டிருக்கிறேன். அசோக்கின் அப்பா என்னையும் அசோக்கையும் வேறுவேறாக பார்த்தவரில்லை. சொந்த மகனை போல் வாஞ்சையுடன் பழகியவர். அசோக்கின் அம்மா இறந்து இரண்டு வருடங்களாகிறது.

அம்மா இறந்தவுடன் கையோடு அப்பாவை அமெரிக்காவிற்கு கூட்டிப் போனான் அசோக். நான்கு மாதங்கள் கூட அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை பரமேஸ்வரனால். எப்போதும் வாரநாட்களில் வீட்டுக்குள்ளும், சனி, ஞாயிறுகளில் மட்டும் வெளியே சுற்றும் வெளிநாட்டு பழக்கவழக்கம் இவருக்கும் ஒத்துப் போகவில்லை. குளிர் இன்னொரு பெரிய பிரச்சனை. சொந்த ஊர், சொந்த மனிதர்கள், பழகிய இடம், பழகிய மனிதர்கள் என தாய்நாட்டுக்கு திரும்ப வந்துவிட்டார். எழுபது வயதில் தனி குடித்தனம்..உதவிக்கு ஒரு வேலைக்கார பெண்மணி வந்து போகிறார்.

கவலையாக இருந்தது.. என்ன பிரச்னையோ.. இந்த தள்ளாத வயதில் , யாருமற்ற தனிமையில்...காலையில் முதல் வேலையாக சென்று பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இதே சிந்தனையுடன் இரவெல்லாம் படுக்கையில் நெடுநேரம் புரண்டவாறு தூங்கி போனேன்.காலையில் சீக்கிரமே முழிப்பு வந்து விட்டது. காலைக்கடன்களை முடித்து வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இப்போது அசோக்கின் அப்பா இருப்பது மடிப்பாக்கம் லேக் வ்யூ அவென்யூவில். அதை நோக்கி வண்டியில் பறந்தேன். ‘‘கிரின்வேஸ் அபார்ட்மென்ட்” என்று மின்னிய போர்டை பார்த்தபடி உள்ளே நுழைந்தேன். வாசலிலேயே கொரோனா பாதித்த பகுதி என்று எச்சரிக்கை ஒட்டியிருந்தது. செக்யூரிட்டி கை அசைக்க வண்டியை நிறுத்தி விட்டு அவரிடம்   ‘‘A”பிளாக் ‘‘12” என்றேன்.

‘‘இப்ப யாருக்கும் உள்ளே அனுமதியில்லை சார்!. 12ல பரமேஸ்வரன் சார் தானே இப்ப இல்லையே. உங்களுக்கு தெரியாதா? ஒரு வாரம் முன்ன ஜொரம் வந்து நேத்து மூச்சுத் திணறல் அதிகமாகி கார்பரேஷன்ல சொல்லி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிட்டாங்க”.
பதறியபடி... ‘‘எந்த ஆஸ்பத்திரி?”  

என்றேன் கவலையுடன்.
‘‘அது தெரியுல சார்..! வேணும்னா
செகரட்டரி சாராண்ட கேளுங்களேன்...”
அவர் எந்த ப்ளாக்..?
‘‘சார்! இப்ப யாருக்குமே உள்ள போக அனுமதியில்லை.. நம்பர் தரேன்.. போன்ல பேசிக்குங்க” என்றார்.நம்பர் வாங்கி பார்க்கிங்கிலேயே நின்று பேசினேன்.
‘‘ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைன்னு சொன்னாங்க.. கிளியரா தெரியலை. இப்ப யாருக்கும் அவசரத்துக்கு கூட உதவமுடியாத சூழ்நிலை” என்றார் நிஜமான வருத்தத்துடன்...
நன்றி சொல்லி வண்டியை கிளப்பி வீடு வந்தேன்.மனது பாரமாக இருந்தது. அசோக்கை தொடர்பு கொண்டேன்..

‘‘சொல்லுடா”...என்றான் விஷயத்தை சொன்னேன்.. அப்பாடா! உயிரோட இருக்காருங்குறதே பெரிய ஆறுதல். இரண்டு நாளா பெரிய கன்ப்யூஸா இருந்ததுடா என்றான் சாதாரணமாக.அவன் அப்படித்தான் எப்பவுமே விட்டேத்தியாகவே இருப்பான். எனக்கொன்றும் அவன் குணம் புதுசாக தோன்றவில்லை. இருப்பினும் பதறுவான் என நினைத்தேன்.. அப்படியெல்லாம் ஏதும் இல்லை. ‘‘சாயங்காலமா ஆஸ்பத்திரியில் விசாரிச்சுட்டு சொல்றேன்டா”... என்றேன்... அவன் கேட்கவேயில்லை நானாக தான் சொன்னேன்.ரொம்ப தேங்ஸ்டா!...  ‘‘நானே கேக்கணும்னு இருந்தேன். உனக்கு ரொம்ப சிரமம் குடுக்குறேனோன்னு தோணிச்சு”.. என தயங்கினான்.

‘‘டேய்! எனக்கும் அவர் அப்பா மாதிரி தாண்டா!... நமக்குள்ள என்னடா பார்மாலிட்டி. நான் பாத்துட்டு வந்து நிலமையை சொல்றேன்” என போனை வைத்தேன். இதற்காக நிறைய பேரை தொடர்பு கொண்டேன். இப்போதிருக்கும் சூழலில் பணமாவது செல்வாக்காவது எல்லாமே தூசு மாதிரி தோன்றியது. இருப்பினும் நிறைய முயன்று வாலண்டியர்களின் உதவியோடு ஒருவழியாக அசோக்கின் அப்பாவை கண்டுபிடித்து விட்டேன்.

நான் அனுப்பிய வாலண்டியர் போன் செய்தார்.சார்!..  ‘‘அவர் இப்ப நல்லாயிருக்கார். இன்னமும் இரண்டொரு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவார்” என்றார். தேங்க் காட்!..என்றேன் என்னை மறந்து.‘‘ஆனா சார்! விசாரிக்க போனப்ப அந்த நர்ஸம்மா என்னை நல்லா காய்ச்சி எடுத்துருச்சி”.... ஏன்? என்றேன் தயங்கியவாறு..‘‘என்னை அவர் பையன்னு நினைச்சி.. இப்படியா வயசானவரை கவனிக்காம தனியா விடுவீங்க... என்ன மனுஷன்யா நீன்னு கத்திடுச்சி”....நான் என்ன பேசுவதென தெரியாமல் தவித்தேன்..

‘‘அப்புறம் நிலமையை விளக்கி சொன்னதும்... என்ன வெளிநாடோ என்ன பணமோ...பெத்தவங்களை கண்டுக்காமன்னு புலம்பி கிட்டே போய்ட்டாங்க” என்று சொல்லி கொண்டிருந்தான்.அவனுக்கு நன்றி தெரிவித்து போனை வைத்தேன்.மனதிலிருந்த பெரிய பாரம் நீங்கியது. இரவு அசோக் போன் செய்தால் விஷயத்தை தெரிவிக்க வேண்டும்.. ரொம்பவும் மகிழ்ச்சியடைவான் என நினைத்து வேலையை தொடர்ந்தேன்.இரவு அசோக் போன் செய்யவேயில்லை. இந்த நல்ல சேதியை சொல்லும் ஆர்வத்துடன். நானே போன் செய்தேன்.

‘‘சொல்லுடா”.. என்றான்.
‘‘அப்பா நல்லாயிட்டாருடா... இரண்டு
நாள்ல டிஸ்சார்ஜ் செய்துடுவாங்க...”
தாங்ஸ்டா!... நீ அக்கறையா
விசாரிச்சதுக்கு... என்றான்..

‘‘பரவாயில்லை டா”...
‘‘நான் எவ்வளவோ சொன்னேன் இங்க இருங்கன்னு. என்ன இருக்கோ அப்படி அந்த ஊர்ல... அங்க எல்லாத்துலையும் ஒழுங்கீனம் இதுல பாலிடிக்ஸ் வேற... இங்கேயிருந்தா எவ்வளவு அட்வான்ஸ் ட்ரிட்மெண்ட் தெரியுமா? இன்ஷூரன்ஸ் கூட கிளைம் பண்ணியிருக்கலாம்” என்றான் மனசாட்சியேயில்லாமல்.என்னடா இப்படி சொல்றே?‘‘பின்னே!.. என்னடா இருக்கு அந்த ஊர்ல” என்றான் அலுப்புடன்‘‘டேய்! உங்கப்பா தனியா இருந்தப்ப இங்கேயுள்ள ஆளுங்க தானேடா உதவியிருக்காங்க. உடம்புக்கு முடியாதப்ப டெஸ்ட் எடுத்திருங்காங்க. ஆஸ்பெட்டல்ல சேத்திருக்காங்க. அங்க உள்ள முகந்தெரியாத பணியாளர்கள், நர்ஸ்கள் தானே அப்பாவை கண்ணும் கருத்துமா கவனித்து காப்பாத்தி தந்திருக்காங்க...” இவருக்கென்னடா தலையெழுத்தா!..சொன்னா கேட்டா தானே.. தேவை தான் இவருக்கு இதெல்லாம் என்றவனிடம் அதற்கு மேல் ஏதும் பேச தோன்றவில்லை.

அவனே..  ‘‘சரி விடுடா நல்லாயிட்டாருல்ல..தேங்க் காட். மொதல்ல அவர் பேருல ஊர்ல இருக்குற சொத்தை எல்லாம் எம்பேருக்கு மாத்திடணும். மோசமான ஊர்.. எவனா ஏமாத்தி கையெழுத்து வாங்கி ஆட்டைய போடுறதுக்குள்ள ஏதாவது செய்யணும்டா. சும்மா இல்லைடா இரண்டு கோடி ரூபா” என பேசிக் கொண்டே போனவனை நினைத்து வருத்தமாக இருந்தது. அவன் போனை வைத்துவிட்டு போனதை கூட கவனிக்காமல் கொஞ்ச நேரம் சிலையாக நின்றேன். வாழ்க்கையில் முதல்முறையாக என் பால்ய சினேகிதனை நினைத்து மனதுக்குள் வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. மனது பூராக ஏதோ ஒருவித வெறுப்பு கசந்து வழிந்தது.

தொகுப்பு : தனுஜா ஜெயராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்