SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளித்தெரியா வேர்கள்

2021-11-29@ 17:39:46

நன்றி குங்குமம் தோழி

‘‘நாளை என்பது நமதாகவும், மிகச் சிறந்ததாகவும் அமைய வேண்டுமென்றால், சமுதாயத்தில் ஒவ்வொரு பெண்ணும், ஆண்களுக்கு இணையாக நிற்பதுடன், அவர்களுக்கு நிகராக நடக்கவும் வேண்டும்.''
- டாக்டர் பானு ஜஹாங்கிர் கோயாஜி

நாடு நலமாய் வாழ ஒரு அரசு இன்று போடும் திட்டங்களை.. அன்றே, தான் வாழ்ந்த கிராமத்தில் செய்து பார்த்திருக்கிறார் ஒரு பெண் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் நிகழ்ந்தது!விரிவான, ஒருங்கிணைந்த, முழுமையான சுகாதார சேவை என்பது அனைத்து தரப்பின மக்களுக்கும் கிடைக்கும் மருத்துவ சேவை. மகளிர் நலம், குழந்தை நலம், தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்பூசிகள்.. இவற்றுடன் சுகாதார சுற்றுச்சூழல், ஆரோக்கிய வாழ்க்கைமுறை, சுத்தமான குடிநீர், ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் பாலின சமத்துவம் மக்களுக்குக் கிடைக்கச் செய்தல்” என்கிறது தேசிய நலவாழ்வு அமைச்சகம். ஆனால், அதற்கு வெகுமுன்பே இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான், தனது கடமையாகக் கருதி வாழ்ந்தவர் தான் பானுபாய் என அனைவராலும் அழைக்கப்பட்ட பானு ஜஹாங்கிர் கோயாஜி.

பானு பஸ்தோன்ஜி மும்பையில் செப்டம்பர் 7, 1917ல், பஸ்தோன்ஜி கபாடியா மற்றும் பபைமாய் மிஸ்ட்ரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். கட்டிடப் பொறியாளரான பஸ்தோன்ஜி, தனது ஒரே மகள் தங்களுடன் தனியாக வளர்வதைவிட, பல குழந்தைகளுடன் வளர்ந்தால் உலகத்தைக் கற்றுக் கொள்வாள் என்று கருதியதால், பூனேயிலுள்ள தாத்தா, பாட்டி வீட்டிற்கு அனுப்புகிறார். அந்தக் குடும்பத்தில் எப்போதும் குறைந்தது 25 பேராவது இருப்பார்கள் என்பதால், அங்கு மற்ற குழந்தைகளுடன் வளர்ந்த பானுவின் பிள்ளைப்பிராயம் கற்றலுடன் பகிர்தலும், நேசித்தலும் கலந்து இனிமையாகவே வளர்ந்தது.

ஒவ்வொரு முறை உணவருந்தும் போதும், வீட்டில் திருவிழா நடப்பது போலிருக்கும் என்றாலும், அந்த இல்லத்தில் கண்டிப்பும், ஒழுக்கமும் மிகுதியாகவே நிறைந்திருந்தது என்கிறார் பானு. அதிலும் பெண்கள் அதிகாலையில் விழித்தெழுவது அங்கு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தனது வாழ்நாள் முழுவதிலும் அதிகாலையிலேயே கண்விழித்து, தனது பணிகளை குறித்த காலத்தில் செய்ய அது பெரிதும் உதவியது என்கிறார் பானு...

அதுமட்டுமல்ல வசதியான குடும்பம் என்றாலும், வாழ்வின் சிரமங்களை மகள் அறியவேண்டும் என்று கருதிய பானுவின் பெற்றோர், தினமும் வெகுதூரம் நடந்து செல்லும்படியான பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். கண்டிப்பு மிக்க செயின்ட் வின்சென்ட் ஆண்கள் பள்ளியில் படித்த ஒரே பெண் மாணவியான பானு, தந்தையின் அறிவுரைப்படி கேம்ப்ரிட்ஜ் ஆங்கிலத்துடன், பியானோ, பாலே நடனம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

பள்ளிப்படிப்பில் அனைத்திலும் முன்னிலை பெற்ற பானு, பூனேவின் பிரபல பொது மருத்துவரும், தங்களது குடும்ப மருத்துவருமான எடுல்ஜி கோயாஜியிடம் தனது மேற்படிப்பைக் குறித்து ஆலோசனை கேட்க அவர், ‘‘பானு... நீ மகப்பேறு மருத்துவராக வேண்டும்.” என்று சொன்னதால் பானு மருத்துவராக முடிவு செய்தார்.  

‘‘எடுல்ஜி எங்கள் ஃபேமிலி டாக்டர் மட்டுமல்ல, மிகச்சிறந்த வழிகாட்டியும் கூட” என்று கூறும் பானு, அவர் அறிவுறுத்தலின்படி மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரி மற்றும் க்ராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றதுடன், டாக்டர் வி.என். ஷிரோட்கர் எனும் முன்னோடி மருத்துவரிடம் மகப்பேறு மருத்துவமும் பயின்று, 1943ம் ஆண்டு எம்டி பட்டத்துடன் புனேவுக்குத் திரும்பினார். கல்வி பயிலும்போதே டாக்டர் எடுல்ஜியின் சகோதரரும் பொறியாளருமான ஜஹாங்கிர் கோயாஜியுடன் காதல், 1941ல் திருமணம், அதன் பிறகு குழந்தை என படித்துக் கொண்டே குடும்ப வாழ்க்கையிலும் இயல்பாக தன்னைப் பொருத்திக் கொண்டிருந்தார் பானு.

‘‘படித்தது மகப்பேறு மருத்துவம் என்றாலும், எனது விருப்பம் அனைவருக்குமான மருத்துவ சிகிச்சையாகத்தான்” என்று கூறும் பானு, எடுல்ஜியின் உதவி மருத்துவராக தனது பணியைத் துவக்கினார். ஒருநாள், வெளிநோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பானுவை அழைத்த டாக்டர் எடுல்ஜி, ‘‘கே.ஈ.எம் மருத்துவமனை இயக்குநர் சர்தார் முதலியார் அங்கு பெண் மருத்துவர் யாரும் இல்லை என்பதால் உன்னை அங்கு பணிக்கு வரச் சொல்லிக் கேட்கிறார். நாளை முதல் நீ அங்கு போய்விடு” என்று சொல்ல, எப்போதும் போல அவரது உத்தரவை ஏற்றுக் கொண்டு, மறுநாளே கே.ஈ.எம் மருத்துவமனையில் பணியில் இணைந்தார் பானு கோயாஜி. அதன்பின் நிகழ்ந்தவைகள்தான் பானுவின் வாழ்வில் வேறு பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

1912ல் அறக்கட்டளை நிறுவனமாக பூனேவில் துவங்கப்பட்ட அந்த கே.ஈ.எம் மகப்பேறு மருத்துவமனை, 40 படுக்கை வசதிகளுடன் சுற்றியிருந்த ஏழைப் பெண்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வந்தது. அதன் மருத்துவர் உடல்நிலை காரணமாக பணியை விட்டு விலக, ஒரு உதவி மருத்துவர், மூன்று செவிலியர்களுடன் அங்கு பணியைத் துவங்கினார் பானு. தினமும் நடந்தும், மாட்டு வண்டியிலும் வெகு தூரத்திலிருந்து வந்த நோயாளிகளுக்கு கால்முறிவு முதல், கடினமான பிரசவம் வரை எல்லாவித நோய்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது அவருக்கு. ஏற்கனவே பெற்ற பயிற்சியில் பொது மருத்துவமும், கற்றுத் தேர்ந்த மகப்பேறு மருத்துவமும் பானுவிற்கு கைகொடுக்க சீக்கிரமே அவர் பெயர் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. கூடவே மருத்துவமனையின் விடுதியிலேயே குடும்பத்துடன் தங்கி விட்டதால், எந்த நேரம் சென்றாலும் மருத்துவ உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து, பூனே அரசு அலுவலகங்களில் பிரிட்டிஷ் கொடி இறங்கி, இந்தியக் கொடி பறந்ததை கண்ணீருடன் கண்ட டாக்டர் பானு, அந்த சுதந்திரத்தை கே.ஈ.எம் மருத்துவமனைக்கும் கொண்டு வந்து பல மாற்றங்களை ஏற்படுத்தினார். பெண்களின் பல பிரச்னைகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் அவர்கள் அதிகப்படியான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே என்பதை உணர்ந்த டாக்டர் பானு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த விரும்பினார்.

அதற்காக அருகாமை ஊரில் இருந்து சகுந்தலா ப்ராங்க்பே எனும் சமூக சேவகியை பணியிலமர்த்திய அவர், அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்த ஏழைப் பெண்களுக்கு கருத்தடை குறித்த அறிவுரைகளுடன் சேவைகளையும் வழங்க ஆரம்பித்தார். அதேநேரத்தில், மருத்துவமனை முன்னேற்றத்திற்கான நிதியுதவியை தொடர்ந்து ஏற்படுத்தியவர், ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு புதிய மருத்துவ உபகரணம் அல்லது தொழில்நுட்பத்தை மருத்துவமனைக்குள் புகுத்திக் கொண்டே இருந்தார். இதனால், ஒருகாலத்தில் 40 படுக்கை வசதியுடன் இயங்கி வந்த கே.ஈ.எம் மருத்துவமனை படிப்படியாக வளர்ந்து, 500 படுக்கை வசதி கொண்ட பல்வேறு துறைகள் கொண்ட ஒரு முழுமையான மருத்துவமனையாக, பி.ஜே. மருத்துவக் கல்லூரியுடன் இணைந்தது.

மருத்துவத்துறையில் தனது முத்திரை களைப் பதித்துக் கொண்டிருந்த அதேவேளை, கணவருடன் விருந்து விழாக்கள், மகனின் கல்வி, தனக்குப் பிரியமான ரேஸ் குதிரை வளர்ப்பு, ‘‘சகால்” எனும் மராத்திய பத்திரிகையை நடத்துதல் என எல்லாத் துறைகளிலும் தொடர்ந்து தனது முத்திரையை பதித்துக் கொண்டிருந்தவர்,  ‘‘அந்தச் சிறுமி வந்து எனது கதவுகளைத் தட்டும் வரை நான் பணிபுரியும் முறையே தவறு என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை.!” என்கிறார்.

ஆம், அன்று அதிகாலையில் அவர் கதவைத் தட்டிய சிறுமிக்கு ஒரு பத்து வயது இருக்கலாம். பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தன் தாயைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள் அவள், தாயின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று வரும் வழியில் மாட்டு வண்டியிலேயே பிரசவித்திருக்க, மற்றொரு குழந்தை பிரசவிக்க முடியாமல் குறுக்காக இருந்ததால் தாய் திணறிக் கொண்டிருந்தாள். பயத்துடன் பதறிக் கொண்டிருந்த அச்சிறுமியின் தாய்க்கு சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே, வயிற்றிலிருந்த குழந்தை இறந்திருக்க, அதிக ரத்தப்போக்கு ஆகியிருந்ததால் தீவிர சிகிச்சைக்குப்பின் தாயும் மரணமடைந்தாள்.

தன் கண்முன்னே ஒரு பத்து வயதுச் சிறுமி, அப்போதுதான் பிறந்த குழந்தையை ஏந்தியபடி கையறு நிலையில் நின்றதைக் கண்ட டாக்டர் பானு கோயாஜி, தான் பணி செய்யும் முறையின் மீதே கோபம் கொண்டார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்ப்பது மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தீர்க்கமாக உணர்ந்த அவர், வாடு கிராமத்தில் மட்டுமாவது தன்னால் இயன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினார். 1972ல், அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தாங்கள் எடுத்து நடத்துகிறோம் என்று மகாராஷ்டிர அரசிடம் அனுமதி கோரியபோது, அதிகாரிகளே ஆச்சரியத்துடன்தான் அவரைப் பார்த்தனராம்..!

ஆரம்ப சுகாதார நிலையத்தை நடத்த அனுமதி கிடைத்ததும், அங்கே தாய் சேய் நல மருத்துவத்தை துவங்கிய பானு, முதலில் கையிலெடுத்தது ஊட்டச்சத்து, குடிநீர் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களை. முதலில் கிராமத்திலிருந்தே சுகாதார தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்தவர், அவர்களுக்குத் தானே நேரடியாக சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு கிராம செவிலியர் சான்றிதழும், மாதாந்திர சம்பளமும் பெற்றுக்கொடுத்தார். ஏற்கனவே கிராமத்து மக்களுடன் இயைந்திருந்த அவர்கள், தங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்ய படிப்படியாக வாடு கிராமத்தின் சுகாதார நிலை மேம்பட ஆரம்பித்தது. இப்படியாக கிராமத்தின் கடைசி குடிசையும் நகரின் மிகப்பெரிய மருத்துவமனையும் இணைந்ததும், அதன்பிறகு எல்லாமே எளிதாக இருக்க, திட்டத்தை அருகாமை கிராமங்களுக்கும் விரிவுபடுத்த ஆரம்பித்தார் பானு.

கிட்டத்தட்ட 600 பெண் செவிலியர்களை பயிற்றுவித்து,  அவர்கள் உதவியுடன் நான்கு மாவட்டங்கள், 19 கிராமங்களுக்கு அவரின் சேவை விரிவடைந்தபோது, ஃபோர்ட் நிறுவனம், ராக்பெல்லர் பவுண்டேசன் உட்பட பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் உதவிக்கு வந்தன.30 படுக்கை வசதிகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனையை வாடு கிராமத்தில் அவர் ஆரம்பித்தபோது, அருகாமை கிராமங்களிலும் மகப்பேறு மரணங்கள், குழந்தைகள் இறப்பு குறைந்திருந்ததோடு, வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து விகிதமும் கூடத் தொடங்கி இருந்தது. தனியொரு மருத்துவராய் செய்த இந்த மாற்றங்கள் குறித்து ‘டாக்டர் பானுவின் சுகாதார பிரமிட்’ என்று பத்திரிகைகள் பாராட்ட ஆரம்பிக்க, பிற்பாடு மகாராஷ்டிர அரசும் அங்கீகரித்தது, மாநிலத்தின் மற்ற கிராமங்களிலும் இதையே செயல்படுத்தத் தொடங்கியது.

வாடு கிராமத்து மக்களின் ஆரோக்கியம் நீடித்திருக்க வேண்டுமென்றால் அவர்களின் வாழ்வாதாரம் சிறந்திருக்க வேண்டும் என்று எண்ணிய டாக்டர் பானு, தனது மருத்துவப் பணிகளைத் தாண்டி கிராம மக்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பெண் கல்வி, குழந்தை திருமண மறுப்பு என அடுத்தடுத்து பாய்ந்து கொண்டிருந்தார். கூடவே, கே.ஈ.எம் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சிகளையும் ஊக்குவித்தார். ‘‘செம்பு பாத்திரங்களை உபயோகிப்பதால் ஏற்பட்ட கல்லீரல் பிரச்சினைகள்” குறித்து அவர் சமர்ப்பித்த ஆய்வு சர்வதேச
அங்கீகாரமும் பெற்றது.

உலக சுகாதார அமைப்பின் மனித இனப்பெருக்க கட்டுப்பாடு மையத்தின் நிரந்தர உறுப்பினர், ஐ.நா சபை உறுப்பினர், மாநிலத்தின் சுகாதார ஆலோசனையாளர், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களுக்கு கவுரவப் பேராசிரியர் என பல பதவிகளால் அவர் கவுரவிக்கப்பட்டபோது, இந்திய அரசு பத்மபூஷன், புண்ணிய பூஷன் விருதுகளையும், பிலிப்பைன்ஸ் அரசு மக்சேசே விருதுகளைக் கொடுத்து டாக்டர் பானுவை பெருமைப்படுத்தின.

‘‘நம்பிக்கை என்ற ஒன்றிருந்தால் எப்போதும் எதுவும் சாத்தியம்” என்ற அவரது வரிகள், எப்போதும் மிளிரும் அவரது வாழ்வைப் போலவே அவரின் மருத்துவமனையில் இப்போதும் மிளிர்ந்து கொண்டிருக்க.. தான் வாழ்ந்த காலம் வரை தன் வாழ்க்கையை எல்லோருக்குமாகவும் வாழ்ந்த டாக்டர் பானு கோயாஜி தனது 86ம் வயதில் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்