SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது பேச்சிலர்களுக்கான மெஸ்!

2021-11-25@ 17:50:23

நன்றி குங்குமம் தோழி

அக்கா கடை

‘‘எங்க ஏரியாவில் நிறைய பேச்சிலர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 50 ரூபாயாகத்தான் இருக்கும். வேலை தேடி வரும் பெரும்பாலான பேச்சிலர்கள் ஒரு வேளை சாப்பாட்டைக் கூட கையில் இருக்கும் காசைப் பொருத்துதான் சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவே தான் நாங்க இரவு நேர உணவினை 50 ரூபாய்க்கு கொடுக்க திட்டமிட்டோம்’’ என்கிறார்கள் சுதா மற்றும் செந்தில்குமார் தம்பதியினர். இவர்கள் சென்னை அரும்பாக்கத்தில்  தேவர் மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்கள்.

‘‘எங்க இருவருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர். ஆனால் என் கணவர் சென்னையில் செட்டிலாயிட்டார். நான் படிச்சது எல்லாம் தஞ்சாவூர் தான். திருமணமாகி நான் சென்னைக்கு வந்துட்டேன். என் கணவர் ஆரம்பத்தில் மரச் சாமான்கள் குறித்த தொழில் செய்து வந்தார். பிசினசும் நல்லா தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு ரொம்ப நாட்களாகவே உணவுப்சார்ந்த தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. காரணம் அவர் உணவுப் பிரியர். எங்கு புதிதாக ஓட்டலோ அல்லது புதிய வகை உணவு திறந்திருந்தால், அங்கு சென்று சுவைத்திடுவார். சாப்பிடுவது மட்டுமில்லாமல் அந்த உணவில் உப்பு காரம் சரியாக உள்ளதா என்றும் பார்ப்பார்.

நான் அவரைப்போல் உணவுப் பிரியை இல்லை என்றாலும், அவரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் என் மனதில் இருந்தது. அதனால் தான் அவர் இந்த மெஸ் ஆரம்பிச்ச போது கூட நான் அவருக்கு பக்கபலமாக இருக்க விரும்பினேன்’’ என்றவர் இந்த உணவகத்தை 11 வருடமாக தன் கணவருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

‘‘நான் பலதரப்பட்ட உணவுகளை சுவைத்திருக்கேன். அதில் சுவை, உப்பு, காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன். ஆனால் எனக்கு சமைக்க தெரியாது’’ என்று பேசத் துவங்கினார் செந்தில்குமார். ஒவ்வொரு முறை ஏதாவது ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது, நாமும் இது போன்ற ஒரு உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக நம்ம வீட்டு சமையலை எந்த வித கலப்படம் இல்லாமல் தரமான மெஸ் போல் கொடுக்கணும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.

அதை என் மனைவியிடம் சொல்ல அவங்களும் உடன் இருப்பதாக எனக்கு ஒரு தைரியம் கொடுத்தார். அதன் பிறகு தான் முழு மூச்சாக இந்த மெஸ் ஆரம்பிக்கும் திட்டத்தில் இறங்கினோம். நாங்க இருவரும் மட்டுமே எல்லா வேலையும் செய்ய முடியாது என்பதால், சமைக்க ஒரு மாஸ்டரை நியமிச்சோம். முதலில் அவரின் கைப்பக்குவத்திற்கு ஏற்ப அவர் சமைத்தார். ஆனால் நானும் என் மனைவியும், ஒவ்வொரு உணவையும் சுவைத்து அதை எங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுவையாக மாற்றி அமைத்தோம்.

இன்றும் அதே டெம்ப்ளேட்டை தான் நாங்க பின்பற்றி வருகிறோம். அது மட்டுமில்லாமல் அவர் சமைப்பதைப் பார்த்து ஒவ்வொரு உணவையும் எப்படி சமைக்கணும்ன்னு நான் கத்துக்கிட்டேன். மாஸ்டரால் வர முடியாத நாட்களில் எங்களால் இந்த உணவகத்தை சமாளிக்க முடியும் என்ற தைரியம் நான் சமைக்க கற்றுக் கொண்ட பிறகு தான் ஏற்பட்டது’’ என்றவர் ஆரம்பத்தில் பல பிரச்னைகளை சந்தித்துள்ளார்.

‘‘வீட்டில் ஒரு குடும்பத்தின் அளவிற்கு தான் சமைப்போம். அதனால் அந்த அளவு என்ன என்று தெரியும். ஓட்டல் என்றால், பெரிய அளவில் சமைக்கணும். அதுமட்டுமில்லாமல் இன்று வரும் வாடிக்கையாளர்கள் நாளை வருவார்களா என்று தெரியாது. அதனால் அதற்கு ஏற்ப அளவாக தான் செய்யணும். முதலில் எங்களுக்கு இந்த அளவு தெரியல. அதனால நிறைய உணவினை சமைத்து வேஸ்ட் செய்திருக்கிறோம். அதன் பிறகு தான் படிப்படியாக எவ்வளவு அளவு போடணும்ன்னு கணக்கு தெரிந்தது. இது ஒரு பக்கம் இருக்க போட்ட முதலீடு எடுக்கணும். ஆரம்பித்த போது சிறிய இடத்தில் தான் நடத்தி வந்தோம். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க கொஞ்சம் பெரிய இடமா பார்த்தோம். இடம் மாறிய சில மாதங்களில் லாக்டவுன் வந்துடுச்சு. கடையும் திறக்க முடியல. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்தது.

கடை வாடகை, வேலை செய்பவர்களுக்கு சம்பளம்   எல்லாவற்றையும்  சமாளிக்கணும். அதனால் பார்சல் மட்டும் அந்த சமயத்தில் கொடுத்து வந்தோம். பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. அந்த சமயத்தில் தான் பலர் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பது தெரிந்தது. எங்க வீட்டில் வாடகைக்கு ஒரு பையன் இருந்தான். அவன் நல்லா சாப்பிடுவான். பண்டிகை நாட்களில் எங்க வீட்டில் தான் அவனுக்கு சாப்பாடு.

இந்த லாக்டவுன் போது, அவனுக்கு சரியான வருமானம் இல்லை. அதனால் இரவு நேரம் 20 ரூபாய்க்கு ஒரு தோசை மட்டுமே சாப்பிட்டு வருவான். போதுமா என்று கேட்கும் போது... இருக்கற காசுக்கு அவ்வளவு தான் கிடைக்கும்ன்னு சொல்வான். அது தான் எங்களை இரவு உணவினை ரூ.50க்கு கொடுத்தால் என்ன என்று யோசிக்க வைத்தது’’ என்ற சுதாவை தொடர்ந்தார் செந்தில்குமார்.

‘‘நாங்க மதியம் மற்றும் இரவு நேர உணவு மட்டும் தான் வழங்கி வருகிறோம். மதியம் ஒரு சாப்பாடு 90 ரூபாய். அன்லிமிடெட் மீல்ஸ் உடன் சாம்பார், கூட்டுப் பொரியல், ரசம், மட்டன் குழும்பு, சிக்கன் குழும்பு, மீன் குழம்பு இருக்கும். அதைத் தவிர மட்டன் சுக்கா, மீன் வறுவல், சிக்கன் கிரேவி, ரத்தப்பொரியல், போட்டி, இறால் தொக்கு போன்ற வகைகளும் உண்டு. இதற்கு தனி கட்டணம். சைனீஸ் உணவும் உண்டு.

இரவு ஆறு வகையான சைட் டிஷுடன் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா கொடுக்கிறோம். இதவும் அன்லிமிடெட் தான். எவ்ளவு தோசை வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். இதற்கு மட்டன் குழம்பு, சிக்கன் குழும்பு, மீன் குழும்பு, வெஜிடபிள் குருமா, காரச்சட்னி, தேங்காய் சட்னி அனைத்தும் 50 ரூபாய் தான். பெரும்பாலும் பேச்சிலர்கள் தான் வராங்க. சில சமயம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவங்க குடும்பமா வந்து சாப்பிடுறாங்க. அவங்களால பெரிய ஓட்டலில் இது போன்ற உணவினை சாப்பிட முடியாது, என்பதால் இங்க விரும்பி வராங்க. மேலும் வீட்டு உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் அளவிற்கு அளவான காரம் சேர்த்து தரோம். இந்த விலையினை மாற்றும் எண்ணம் இல்லை. நிறைய பேர்

கட்டுப்படியாகுமான்னு கேட்டாங்க. 70 ரூபாய்க்கு ஒருத்தர் வந்து சாப்பிடுவதற்கு, பதில் 50 ரூபாய் என்றால் நிறைய பேர் சாப்பிட வருவாங்க. அதனால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும். இந்த தரம் என்றும் மாறாமல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நானும் என் மனைவியும் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறோம்.

பொதுவாகவே எங்களைப் போல் சிறிய அளவில் உணவகம் ஆரம்பிக்கும் ஒவ்வொருக்கும் உணவு குறித்து அடிப்படை விஷயம் தெரிந்திருக்கணும். அப்பதான் சமாளிக்க முடியும். நான் கடை ஓனர்ன்னு கால் மேல கால் போட்டு உட்கார முடியாது. காரணம் உணவுப் பொறுத்தவரை தரமானதாகவும் சுவையாகவும் கொடுக்கணும். நான் ஆரம்பிச்ச போது என் நண்பரின் அப்பா தான் மாஸ்டரா இருந்தார். அவர் தான் ஓட்டலுக்கு தேவையான பாத்திரம் முதல் ஒவ்வொரு உணவும் எப்படி சமைக்கணும்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

அதிலேயும் நானும் என் மனைவியும் சில மாற்றம் செய்தோம். அவருக்கு பிறகு வேறு ஒரு மாஸ்டர் வந்த போது அவருக்கு எங்களுக்கு என்ன தேவை என்பதை சொல்லி புரிய வைத்தோம். காரணம் அவருக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கும். அதை நம்முடைய தேவைக்கு ஏற்ப மாற்றணும். உணவு தொழிலில் அது ரொம்பவே முக்கியம். இன்றும் கூட அவர் சமைத்த பிறகு ஒவ்வொரு உணவையும் என் மனைவி சுவைத்து காரம் சுவை எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்த பிறகு தான் அந்த உணவு வாடிக்கையாளர்களின் இலையில் பரிமாறப்படும். எங்க உணவகத்தில் உணவு என்றுமே வேஸ்டாகாது.

சில சமயம் மீதம் இருந்தால் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்திடுவோம். மேலும் அன்று கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி ஃப்ரெஷ்ஷாக தான் சமைக்கிறோம். இதில் நானோ என் மனைவியோ காம்பிரமைஸ் செய்வதில்லை. உணவகம் பொறுத்தவரை நம்முடைய அத்தியாவசிய செலவுகள் அதாவது கடை வாடகை, சம்பளம் எல்லாம் போக 50% லாபம் பார்த்தால் தான் நம் கடை உணவு நல்லா இருக்குன்னு அர்த்தம்.

அதனால் ஒவ்வொரு பொருளையும் நானும் என் மனைவியும் பார்த்து பார்த்து தான் வாங்குவோம். அதனால் எங்களால் இந்த கொரோனா காலத்தில் சமாளிக்க முடிந்தது. இப்ப நிலமை கொஞ்சம் கட்டுக்குள் இருக்கு. நிறைய பேர் 50 ரூபாய் என்று தெரிந்து சாப்பிட வராங்க. இந்த நிலை மாறியதும் வேறு ஒரு கிளை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கு’’ என்றனர் தன்னம்பிக்கையுடன் சுதா, செந்தில்குமார் தம்பதியினர்.

செய்தி: ப்ரியா

படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ambedkar

  சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • AIADMK

  பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

 • animal-snake-6

  சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

 • trichy 06

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

 • sandart-18----

  ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்