SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லுலாய்ட் பெண்கள்-87

2021-11-25@ 17:42:12

நன்றி குங்குமம் தோழி

தமிழ் சினிமாவின் ஆரம்பகால அதிரடி நாயகி கே.டி.ருக்மணி

சினிமா பேச ஆரம்பிப்பதற்கு முன் மௌனப் படங்கள் வெளியான காலத்திலேயே நடிக்கத் தொடங்கியவர். ஒரு நடிகையாக, அதிரடி சண்டைக் காட்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் நடித்த வீர தீரப் பெண்மணியாக, அன்றைய இளம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக, அதிரடி நாயகியாக,‘பாரிஸ் பியூட்டி’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட கே.டி.ருக்மணி ஒரு அசல் தமிழ்ப் பெண். 1947 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பின்னரும் கூட ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்காமல் நிலைத்தவர்.

அன்றைய தென் ஆற்காடு மாவட்டம் கடலூரில் 1914ல் பிறந்தவர். தந்தையார் தங்கவேலு, தாயார் தனபாக்கியம் அம்மாள். பிறந்த ஊரின் பெயரின் முதலெழுத்தையும் தந்தையின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து கடலூர் தங்கவேலு ருக்மணி கே.டி.ருக்மணி ஆனார். பெற்றோருக்கு ஒற்றைச் செல்லப் பெண்ணும் கூட. தந்தையார் தங்கவேலு மிக இளம் வயதிலேயே உயிரிழந்ததால் குடும்பம் வறுமையின் பிடிக்குள் சிக்கியது.

தமிழ் நாடக உலகின் ஆரம்பகால நடிகை அம்மாவுடன் சென்று நாடகங்கள் பார்ப்பது, நாடகங்களில் பார்த்து ரசித்த நடனங்களையும் காட்சிகளையும் அச்சு அசலாக அப்படியே ஆடிப் பாடிக் காண்பிப்பது என சிறு வயதிலேயே தன்னையறியாமல் கலைப்பித்து ருக்மணிக்குள் படிந்து போனது. வேறு வழியின்றி 6 வயதில் குடும்ப நிலை கருதியும் பிழைப்புக்காகவும் அதையே தொழிலாக ஏற்க வேண்டிய நிலை உருவானது. மிகச் சிறு வயதிலேயே நடிப்புத் தொழிலுக்குள் தள்ளப்பட்டதால் பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்புடன் நின்று போனது.

நாடக மேடை ருக்மணியை ஏற்றுக்கொண்டது ஒருபுறம் என்றால், ருக்மணியும் நாடகத்தையும் நடிப்பையும் முழுமனதுடன் தேர்வு செய்து கொண்டார். நாடகத்துறை நல்ல நடிகையாகவும் அவரை மெருகேற்றியது. தாயாரின் உற்ற துணையுடன் நாடக வாழ்க்கை அவருக்கு மற்றோர் துணையானது. ராஜாம்பாள் குழு, சச்சிதானந்தம் பிள்ளை நாடகக் கம்பெனி, பாலாம்பாள் நாடகக் கம்பெனி, சிந்தாதிரிப்பேட்டை கந்தசாமி முதலியார் கம்பெனி, டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடகக் குழு போன்ற புகழ் பெற்ற குழுக்களின் பிரதான நடிகையாக மாறினார். தமிழ் நாடக உலகின் ஆரம்பகால  நடிகைகளில்  கே.டி.ருக்மணியும் ஒருவர்.

கண்டி ராஜா, குலேபகாவலி, லலிதாங்கி, கோவலன், நளவெண்பா, அரிச்சந்திரன், வள்ளித் திருமணம், ராஜாம்பாள், தூக்குத்தூக்கி, சிந்தாமணி, பார்வதி கல்யாணம், கிருஷ்ணலீலா, சதி சுலோசனா, அனுசுயா, பாரிஜாத புஷ்பகரணம், சவுக்கடி சந்திரகாந்தா, மனோகரா உள்ளிட்ட 80 நாடகங்களுக்கும் மேலாக நடித்துப் புகழ் பெற்றவர். பினாங்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவர் நடித்த நாடகங்கள் மூலம் அக்காலத்தில் பெரும் புகழை அறுவடை செய்தவர்.

பேசாப் படங்களும் பேசிய படங்களும்

நாடக மேடைகள் மூலம் கிடைத்த புகழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாசலைத் திறந்து விட்டது.  ‘பேயும் பெண்ணும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானதுடன், ‘பாரிஜாத புஷ்பகரணம்’ என்ற மற்றொரு பேசாப் படத்திலும் நடித்ததன் மூலம் பரவலாகப் பேசப்பட்டவர். இந்த இரு படங்களைத் தவிர, 22 பேசும் படங்களிலும் நடித்தவர். அதுவரை புராண, இதிகாசங்களும் கர்ண பரம்பரைக் கதைகளும், மாயாஜாலங்களுமே திரையில் எதிரொலித்துக் கொண்டிருந்த காலத்தில், . 1935ல் தமிழின் முதல் சமூகப் படம் ‘மேனகா’ வெளியானது. இப்படத்தில் கே.டி. ருக்மணியும் ஒரு நாயகி.

1937 ல் வெளிவந்த ‘மின்னல்கொடி’ யில் அதிரடி நாயகியாக அறிமுகமானார். வசதி படைத்தவர்களிடமிருந்து அதிரடியாகப் பணம் மற்றும் பொருளைப் பறித்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவும் லேடி ராபின்ஹூட் வேடமேற்றுப் படம் பார்த்தவர்கள் இதயங்களை எல்லாம் தடதடக்க வைத்திருக்கிறார். தமிழின் முதல் முழுநீளச் சண்டைப் படம் இது. பழக்கமில்லாமல் குதிரைச்சவாரி, சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் நடித்ததால், கீழே விழுந்து பலத்த அடிபட்டு, பல மாதங்கள் படுக்கையில் கிடந்து, உடல் தேறிய பின்னரே ‘மின்னல்கொடி’ படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

பின்னர் அடுத்தடுத்த படங்களிலும் ருக்மணிக்கு ஸ்டண்ட் நாயகி வாய்ப்பே தொடர்ந்துள்ளது. நம் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு முத்திரை விழுந்து விட்டால், பின் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. வேண்டாமென்று மறுத்தாலும், இவர் மீது விழுந்து விட்ட அதிரடி நாயகி முத்திரை அவ்வளவு எளிதில் மாறவில்லை. பெண்கள் இப்படியெல்லாம் வேடமேற்று நடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விதைத்து, தமிழ்த் திரையில் சாகசங்கள் பல செய்த நடிகை கே.டி.ருக்மணி.

ஸ்டண்ட் நடிப்பின் முடிசூடா ராணி

வீரமாக நடிப்பதில் அப்போதைய நடிகைகள் பலர் முழுமையான ஈடுபாடு காண்பிக்கவில்லை. வேகமாக குதிரைச்சவாரி செய்வது, மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியபடி சண்டையிடுவது, ‘அட்டைக்கத்தி’ இல்லாமல் அசல் கத்தியைக் கையிலேந்திப் போர் செய்யும் காட்சிகள் என்று அனல் பறக்க நடித்துள்ளார். பெண் உடையில் மோகினி என்ற இளம் பெண்ணாகவும், ஆண் வேடத்தில் மின்னல் கொடியாகவும் உருமாறி அக்கால ரசிகர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறார்.

டூப் போடுவது என்ற பேச்சுக்கெல்லாம் அப்போது இடமேயில்லை. எல்லாம் அசல்தான். ருக்மணி ஸ்டண்ட் நடிகையாக வேண்டும் என்று விரும்பி நடிக்கவில்லை. வாழ்க்கைச்சூழல் அவரை அவ்வாறு தள்ளி விட்டது. பின் நாளில் இத்தகைய வீரப் பெண்மணிகளாக, ‘ரிவால்வார் ரீட்டா’க்களும் ‘கன் ஃபைட் காஞ்சனா’க்களும், ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ களுமாக நடித்த அதிரடிக் கதாநாயகிகள் பெரும்பாலும் டூப் நடிகைகளின் புண்ணியத்தாலேயே பேரும் புகழும் பெற்றார்கள்.

அப்படி திரையில் அவர்கள் அனைவரும் அதிரடி நாயகிகளாக வலம் வர முடிந்தது என்றால் அதற்கெல்லாம் மூல வித்து, திரையில் தோன்றிய முதல் ஸ்டண்ட் நடிகை கே.டி.ருக்மணி மட்டும்தான். அது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் கதாநாயகி ஒருவர், முதன்முறையாக இரட்டைப் பின்னல் போட்டுக்கொண்டு நடித்ததும் கூட மிகப் பெரிய அதிசயமாகப் பார்க்கப்பட்டது;

பரபரப்பாகப் பேசப்பட்டது. 1939ல் ‘வீர ரமணி’ படம் வெளியானபோது எழுந்த பரபரப்புக்கு அளவில்லை. பெண் ஒருவர், ஆண் உடையில் வாயில் புகையும் சிகரெட்டுடன் தோன்றும் போஸ்டர் ஊரெங்கும் ஒட்டப்பட்டது. ‘ஒரு பொம்பளை வாயில் சிகரெட்டை வெச்சு இப்படி ஊதறாளே’ என்பது பெரும் பேச்சாக அன்றைக்கு மாறியது. 3.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பைக்கில் அநாயாசமாக ஏறி அமர்ந்து கே.டி.ருக்மணி சவாரி செய்தது பற்றி மாய்ந்து மாய்ந்து பேசியும் ரசித்தும் இருக்கிறார்கள் அக்கால ரசிகர்கள்.

ருக்மணியின் நடிப்பில் சிறப்பாகப் பேசப்பட்ட படம் ‘வீர ரமணி’. பம்பாயில் நடைபெற்ற அதன் படப்பிடிப்பின்போது, ஐம்பது அடி உயர பாலத்தின் மீது வெறும் ஏணியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஏறி, தன்னைத் துரத்தி வரும் காவலர்களை ஓங்கி உதைப்பது போல் நடிக்க வேண்டும். பிரமாதமாக நடித்து, வரிசையாக ஒருவர் பின் ஒருவராகத் துரத்தி வந்த நான்கு நபர்களையும் ஒவ்வொருவராக ஓங்கி ஓங்கி எட்டி உதைத்த வேகத்தில் நால்வரும் கடல் நீருக்குள் மூழ்கினர். அதனால், ருக்மணி மிகவும் பயந்து போய் விட்டார். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரை மயக்க நிலையிலேயே, தூங்காமல் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். எட்டி உதைத்தவருக்கே இந்த அச்ச நிலை என்றால், இவரிடம் உதைபட்டுக் கடலுக்குள் மூழ்கியவர்களின் நிலை பற்றி என்ன சொல்ல…? !

பிற்காலத்தில் வில்லன் நடிப்பால் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த புகழ் மிக்க ஒரு நடிகர் பணமும் புகழும் பெற்ற காலத்தில், கே.டி.ருக்மணி நடித்த பழைய படங்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கி அழித்து விட்டதாகச் செவி வழிக் கதைகள் ஏராளம் உலவியிருக்கின்றன. இக்கதைகள் உண்மையோ புரளியோ, ஆனால் பேசப்பட்டதென்னவோ உண்மை. அந்த அளவுக்கு ஒரு நடிகை உடன் நடித்த நடிகர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சமூகத்தின் பெரும் அழுக்காகவும் இழிவாகவும் இன்றளவும் புரையோடிப் போய் நாறிக் கொண்டிருக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக மட்டுமல்லாமல் பால்ய விவாகத்துக்கு எதிராகவும் குரலெழுப்பிய படம் ‘ஜயக்கொடி’. இப்படம் 1940ல் வெளியானது. எங்கெங்கெல்லாம் வரதட்சணை வலிந்து கேட்கப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் உள்ள மாப்பிள்ளைகள் ஜயக்கொடியால் கடத்தப்படுகிறார்கள். அத்துடன் வரதட்சணைப் பணமும் கொள்ளை போகிறது. இதையெல்லாம் செயல்படுத்துபவள் ஜயக்கொடி என்ற பெயரில் ஆண் வேடமிட்டு வரும் ராஜம் என்று தெரிய வருகிறது.

இந்த வேடத்தை ஏற்று நடித்தவர் ருக்மணியே. 75 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வரதட்சணையின் தீராக் கொடுமை பற்றி இப்படம் பேசியிருப்பது புரட்சிகரமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதிரடி மட்டுமல்ல, அடங்கி நடிக்கவும் தெரிந்தவர் இதே ஆண்டிலேயே மற்றொரு படம் ‘திருமங்கை ஆழ்வார்’; இதில் திருமங்கை ஆழ்வாரின் இணை குமுதவல்லியாகத் தோன்றியவர் கே.டி.ருக்மணி. அதிரடி நாயகியாகவே இவரைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த ‘அடக்க ஒடுக்கமான பெண்’ வேடங்கள் எந்த மாதிரியான உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கும்.

இதோ மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் கே.டி.ருக்மணி பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: ‘நான் நினைவு தெரிந்து முதன்முதலாகப் பார்த்த படம் ‘மின்னல் கொடி’. எனக்கு நான்கு வயது இருக்கும். எனக்கு படத்தின் கதை, அதில் பேசப்பட்ட வசனங்கள் ஏதும் புரியவில்லை. ஆனால் நிமிஷத்துக்கு நிமிஷம் நான் பெஞ்சு மீது ஏறிக் குதித்துக் கைத்தட்டிக் கொட்டகையிலேயே அமளி செய்து விட்டேன்.

அதற்கடுத்த படம் ‘வீர ரமணி’. இந்தப் படத்தில் ஏதோ கடற்படை அதிகாரி போலத் தொப்பி அணிந்து கொண்டு கே.டி.ருக்மணி 3.5 ஹார்ஸ் பவர் மோட்டார் சைக்கிளில் பாய்ந்து போவாள். ருக்மணிக்கு சைக்கிளாவது ஒழுங்காக விடத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாளில் ஸ்டண்ட் படம் என்றால் உடனே, தமிழ் சினிமா வரை முதலில் கே.டி.ருக்மணியின் நினைவுதான் வரும்.

எந்தவித ஸ்டண்ட்டும் இல்லாமல் ஒரு மகா தேசபக்திப் படத்திலும் கே.டி.ருக்மணி நடித்திருக்கிறாள். ‘பாக்கிய லீலா’ என்ற அந்தப் படத்தைப் பார்க்க நான் எவ்வளவு ஆவலுடன் கொட்டகைக்குச் சென்றேன்? ஆனால், துப்பாக்கியோ, சாட்டையோ பிடிக்காமல் அதில் கே.டி.ருக்மணி சர்க்கா சுழற்றினாள். எனக்குப் பெருத்த ஏமாற்றம். அதன் பிறகு ‘திருமங்கை ஆழ்வார்’ என்ற படம். ஒரு பக்திப் படத்தில் கே.டி.ருக்மணி. அதன் பிறகு எனக்கு கே.டி.ருக்மணியைச் சுத்தமாகப் பிடிக்காமல் போய் விட்டது.என்று தன் ஆற்றாமையை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். இதுதான் பொது மக்களின் பார்வையாகவும் பொதுப்புத்தியாகவும் இருந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இறுதிப் படமும் விட்டுக் கொடுக்காத தன்மையும்  பல நேரங்களில் கே.டி.ருக்மணி தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவராகவும் இருந்ததால் நிறைய இழப்புகளையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சி.வி.இராமன் இயக்கத்தில் ‘பொன்னுருவி’ என்றோர் திரைப்படம்; 1947ல் வெளியான இப்படம்தான் கே.டி.ருக்மணி நடித்த இறுதிப் படம். அப்படி இறுதிப்படமாக அமைந்து போனதன் பின்னணியில் சொல்லப்படும் சம்பவம் வருத்தத்துக்கும் வேதனைக்கும் உரியது. இப்படத்தின் சில காட்சிகளில் மார்புத்துணியை விலக்கி நடிக்கும்படி இயக்குநர் வைத்த வேண்டுகோளை கே.டி.ருக்மணி ஏற்க மறுத்ததே அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல மற்றோர் படத்தில் குளியல் காட்சியிலும் நடிக்க மறுத்துள்ளார்.

தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருந்தது, சமரசம் செய்து கொள்ள மறுத்தது போன்றவை ருக்மணியின் திரையுலக வாழ்க்கைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. இம்மாதிரியாக நடிப்பதற்கு நடிகைகள் பலரும் அப்போது தயாராக இருந்ததும், கே.டி.ருக்மணி போன்ற நடிகைகளுக்கு இறுதி அத்தியாயம் எழுதப்படக் காரணமாய் அமைந்தது. ஆனாலும் என்ன? தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் அதிரடி நாயகி கே.டி. ருக்மணியே என்ற பெயரை அழிக்க முடியாதபடி இன்றுவரை தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதித்துச் சென்றிருக்கிறார்.

லட்சுமி காந்தனை அறிந்து கொள்ளாத நடிகை!  ‘தீ’ என்ற பத்திரிகையின் ஆசிரியரும், ‘பம்பாய் மெயில்’ திரைப்படத்தின் கதாசிரியருமான பத்மன் செல்லப்பன் என்பவர் முன்னதாகவே கே.டி. ருக்மணிக்கு அறிமுகமானவர். இவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் ஒருமுறை கே.டி.ருக்மணியைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். ‘லட்சுமி காந்தன்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க விரும்புவதாகவும் அதில் ருக்மணி நடிக்க வேண்டுமென்றும், பணம் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாமென்றும், பத்மன் செல்லப்பனுடன் வந்த நபர் கூறியுள்ளார்.  

அந்தச் சமயத்தில்தான், ‘இந்து நேசன்’ பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமி காந்தன் பெயரில், ஒற்றைவாடை தியேட்டரில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டு வந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. திரைப்பட நடிக, நடிகையர் பற்றி ஆபாசமான முறையில் எழுதப்பட்டு வந்த மஞ்சள் பத்திரிகை ‘இந்து நேசன்’ பத்திரிகை. அதன் ஆசிரியர் லட்சுமிகாந்தன் மீது கொண்ட ஆத்திரத்தில், அவரை விமர்சித்தே அந்த நாடகத்தைச் சிலர் நடத்தி வந்தனர். பல மாதங்களாக அந்த நாடகம் வெற்றிகரமாக நடைபெற்று வந்ததையும் கே.டி.ருக்மணி நன்கு அறிவார்.

‘ஒருவர் உயிருடன் இருக்கும்போது, அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அந்த நபர் எப்படிப்பட்டவரென்று தெரியாமல், அவரைப் பற்றி நல்லவர், கெட்டவர் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? நான் இதுவரை லட்சுமிகாந்தனை நேரில் சந்தித்ததில்லை. அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால், ‘லட்சுமிகாந்தன்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட இருக்கும் திரைப்படத்திலும் என்னால் நடிக்க முடியாது’ என்று கே.டி.ருக்மணி உறுதியாக மறுத்து விட்டார். இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த அவர்கள் இருவரும் ஏமாற்றத்துடன் வெளியேறிச் சென்றனர்.

‘இந்து நேசனும்’ ருக்மணியும் அடுத்த நாள் மீண்டும் பத்மன் செல்லப்பன் மட்டும் தனியாக கே.டி.ருக்மணியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்தவர், மிகவும் ஆர்ப்பாட்டமாக, ‘உங்களுக்குப் பெரிய இடத்து நற்சான்றிதழ் கிடைத்து விட்டது’ என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். கே.டி.ருக்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. அது பற்றி வற்புறுத்திக் கேட்ட பிறகுதான் முதல் நாள் பத்மன் செல்லப்பனுடன் தன்னைச் சந்திக்க வந்த நபர், ‘இந்து நேசன்’ பத்திரிகையின் ஆசிரியரான சாட்சாத் லட்சுமி காந்தன் என்பது தெரிய வந்தது.

தன்னுடைய ‘இந்து நேசன்’ பத்திரிகையில் பல நடிகர், நடிகையரைப் பற்றி மிக மோசமாக எழுதி வந்தவர் அவர். பின்னாளில் அத்தகைய அவதூறு எழுத்துக்காகவே கொலையும் செய்யப்பட்டார். பல ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுச் சிறைத்தண்டனை பெற்றார்கள் என்பது வரலாறு. கே.டி.ருக்மணிக்கு ஒருவிதத்தில் கோபமும் மகிழ்ச்சியும் ஒரு சேரத் தோன்றியது. கோபத்துக்குக் காரணம், தான் முட்டாளாக்கப்பட்டது. மகிழ்ச்சிக்குக் காரணம், ‘இந்து நேசன்’ பத்திரிகையை இறுதி வரை விமர்சித்து எழுதாத அப்போதைய ஒரே நடிகை கே.டி.ருக்மணி மட்டுமே!

அசல் வாழ்க்கையிலும் அதிரடியாக…
கே.டி.ருக்மணி தன் கணவர் கணேசனுடன் ஒருமுறை காசிக்குச் சென்றிருக்கிறார். கங்கையின் மறுகரையில் உள்ள அரிச்சந்திர கட் என்ற மயானம் மிகப் பேர் பெற்றது. அதைக் காண்பதற்காகத் தம்பதிகள் இருவரும் தனிப் படகு ஒன்றினை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு போயிருக்கிறார்கள். இருவரும் அரிச்சந்திர மயானத்தைப் பார்த்து விட்டு அதே படகில் மீண்டும் திரும்பியிருக்கிறார்கள். கே.டி.ருக்மணி கழுத்து, கைகளில் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டிருந்திருக்கிறார். படகோட்டி, அந்த நகைகளைக் குறி வைத்து, படகைத் தாறுமாறாகச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கங்கையாற்றின் வெள்ளத்தில் அச்செயல் பெரும் அச்சத்தை அளிப்பதாக இருந்துள்ளது.

கே.டி.ருக்மணியின் கணவர் கணேசன் எவ்வளவு இதமாக எடுத்துச் சொல்லியும் படகோட்டி அதைக் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. படகோட்டியின் பின்னால் அமர்ந்திருந்த நம் அதிரடி நாயகி கே.டி. ருக்மணி, சாப்பாடு எடுத்து வந்திருந்த ஐந்தடுக்கு பெரிய டிபன் கேரியரை, அடாவடியாக நடந்துகொண்ட படகோட்டியின் தலையில் ஓங்கி அடித்து அந்த நபரை நிலைகுலையச் செய்து விட்டார்.

அவர் அடித்த அடியின் வேகத்தில் படகோட்டி மயங்கிச் சாய்ந்து விட, பின்னால் வந்துகொண்டிருந்த படகோட்டிகள் விரைந்து வந்து கே.டி.ருக்மணியும் அவர் கணவரும் இருந்த படகைக் கைப்பற்றி, பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். அத்துடன் அந்தப் படகோட்டி பலமுறை இப்படி பயணிகளிடம் பணம், நகைகளைப் பறித்துக் கொண்டதாகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும் கூறி, கே.டி.ருக்மணியின் சமயோசித அறிவையும் துணிவையும் பாராட்டி இருக்கிறார்கள்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அசல் வாழ்க்கையிலும் கூட அவர் சமயோசிதத்துடனும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாகவும் நடந்து கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கும் செய்தியாகவே இருக்கிறது.நல்லதொரு வாழ்க்கையையும் துணிவுடன் நெஞ்சுரத்தையும் தன்மான உணர்வையும் மனதார ஏற்றுக் கொண்டதுடன், பணத்துக்காக எவருக்கும் அடிமைப்பட்டு விடாமல் பண்புக்கும் பாராட்டுக்கும் தலை வணங்கியவர். நாடகம் மற்றும் திரையுலகில் தன்னிகரில்லா நடிகையாகத் திகழ்ந்தவர். தன் இறுதிக் காலத்தில் மிகுந்த துன்பங்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலையில்தான் இருந்திருக்கிறார். 1986ல் கே.டி.ருக்மணி உடல்நலக் கோளாறு காரணமாகத் தன் 72 ஆம் வயதில் காலமானார்.

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

 • christmas-30

  நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்