SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 K கிட்ஸ் நல்ல விஷயம் சொன்னா கேட்கக் கூடியவர்கள்..!

2021-11-22@ 17:29:29

நன்றி குங்குமம் தோழி

‘‘இன்று செய்தி வாசிப்பாளர்கள் என்று மட்டும் பார்த்தால் நிறைய விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால், அன்று போல் இல்லாமல் இன்று லைவ் போன்ற சூழல் உருவாகி இருப்பதால் பல விஷயங்களை சாதுர்யமாக எதிர்கொள்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக நல்ல உச்சரிப்பு மட்டுமல்லாமல், களத்திலிருந்து நிருபர்கள் சொல்வதை கேட்டு அதற்கு சில கேள்விகளும் முன் வைத்து அதற்கான பதிலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

மைக் எடுத்துக் கொண்டு ரிப்போர்ட்டிங்கும் போகிறார்கள். திடீரென பிரபலங்கள் வந்தால் அவர்களை நேர்காணலும் செய்கிறார்கள். இதை எல்லாம் செய்வதற்கு நிறைய தெரிந்து வைத்திருக்கணும். இப்படி இருக்கும் போது ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் மாதிரி படிக்கவில்லையே என்று ஒப்பிடவே முடியாது. எங்களை போன்ற செய்தி வாசிப்பாளர்களுக்கு ஒரு மணி நேரம் நேர்காணல் செய்ய சொன்னால் கண்டிப்பா முடியாது தான். ஆனால் அதற்கான திறனையும் வளர்த்துக் கொள்கிறோம். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப நாங்க எங்களின் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் செய்தி வாசிப்பு துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பேபி சாய்ராம்.

‘‘சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்தில் கற்குளம் என்கிற கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில்தான் படித்தேன். படிப்பு முடித்து சென்னையில் செட்டில் ஆனோம். அங்கு தெரிந்தவர் ஒருவர் ராஜ் டி.வியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘எதுக்குமா சும்மா இருக்க பார்ட் டைம் மாதிரி இங்க வந்து வேலை பார்க்கலாம்ல’னு என்கரேஜ் செய்து ஆடிசனுக்கு வரச் சொன்னார். நானும் ஆடிசனுக்கு போனேன். நிகழ்ச்சி தொகுப்பாளினிக்குதான் ஆடிசன் வைத்தார்கள். அதில் சிரித்துக் கொண்டே இனிமையாக பேச சொன்னார்கள்.

எனக்கா சிரிப்பே சுத்தமா வரல. அதே போல் நிகழ்ச்சி தொகுப்பாளர் போல் பேசவும் தெரியல. ஆனால் என்னுடைய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு நன்றாக இருந்ததால், செய்தி வாசிப்பாளருக்கான ஆடிஷன் கொடுக்க சொன்னாங்க. ஒரு வேளை நமக்கு இது சரியா வரல... அதனால் தேர்வாகவில்லை என்பதை சொல்ல தயங்கித்தான் செய்தி வாசிக்க சொல்ல சொல்றாங்கன்னு நினைச்சேன்.

அங்கு  ஆடிஷனுக்காக  காத்திருந்த நேரம், அங்கிருந்த ஒருவர், ‘ஒரு சின்ன வாய்ஸ் ஓவர் கொடுக்க முடியுமா’னு கேட்டார். ‘சரி’னு நானும் போனேன். பாலச்சந்தர் சாரின் ‘ஜாதிமல்லி’ திரைப்படம். அந்த படத்தின் பெயரை சொல்லி, ‘இத்திரைப்படத்தின் இப்பகுதியை வழங்குவோர்…’ என நான்கைந்து பிராண்டு பெயர்கள் சொல்லச் சொல்லி பேச சொன்னாங்க. நானும் சும்மா டெஸ்ட்டுக்கு எடுக்குறாங்கன்னு பேசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

அடுத்த நாள் அந்த சானலில் என்னுடைய குரல் கொண்ட விளம்பரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. டி.வியில் என் குரலை நானே கேட்ட போது எனக்கே ஆச்சரியமா இருந்தது. ஒரு பக்கம் சொல்ல முடியாத சந்தோஷம் வேற. ஊடகத்துறையில் இப்படித்தான் நான் முதல் முறையாக அடி எடுத்து வைத்தேன். அதன் பிறகு அதே சேனலில் எனக்கு செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைச்சது. பயிற்சியினை எடுத்துக் கொண்டு, செய்திகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

எங்க குடும்பத்தில் யாரும் ஊடகத்துறையில் கிடையாது. நான் தான் முதல் நபர். இங்கு வந்த பிறகு பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது. இங்கு வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, ஆல் இந்தியா ரேடியோவில் லைவ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைச்சது. ‘சினிமா நேரம்’ என்ற நிகழ்ச்சியை எம்.பி.ஞானபிரகாசம் சாருடன் இணைந்து செய்தேன். அதே நேரத்தில் தூர்தர்ஷனில் ‘புத்தம் புது காலை’ லைவ் நிகழ்ச்சி மூலம் நிறைய கவிஞர்களுடன் கலந்துரையாடினேன். அங்குதான் பா.விஜய், சினேகன், விவேகா, யுகபாரதி என எல்லோரும் நண்பர்கள் ஆனார்கள். நான் டி.டியில் நிகழ்ச்சி பண்ணும் போது தான் ஷோபனா ரவி மேம் நியூஸ் வாசிப்பதை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது” என்கிற பேபி சாய்ராம், வெளிநாட்டு சேனல்களுக்கும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார்.    

‘‘ஊடகம் சார்ந்த துறையில் எனக்கான ஒரு கால்தடம் பதித்துக் கொண்டு இருந்த நேரத்தில் தான் எனக்கு திருமணமானது. என் கணவர் சாய்ராம் லண்டனில்
எம்.எஸ் படித்துக்கொண்டிருந்தார். திருமணமானதால் நானும் லண்டனுக்கு சென்றேன். இங்கு நான் சேனலில் அது குறித்து சொன்ன போது, சேனலின் உரிமையாளர், லண்டனில் என்ன செய்றதுன்னு சும்மா இருக்காத, உனக்கு பேசும் திறமை இருக்கு. அதனால் அங்கு தீபம்னு இலங்கை தமிழ் சேனல் இயங்கி வருகிறது. நான் அவர்களிடம் பேசி இருக்கேன். போய் பார் என்றார். லண்டன் போனதும் முதல் வேலையா தீபம் டி.வி.யில் சேர்ந்தேன்.

அங்கு செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல், புரோகிராம் புரொடிசராகவும் வேலைப் பார்த்தேன். என்னுடைய ஆர்வத்தை பார்த்த என் கணவர் மேலும் என்கரேஜ் செய்ய... அது என்னை மேலும் உற்சாகமாக இயங்க வைத்தது. அதன் பிறகு அவரின் படிப்பு முடிந்தவுடன் நாங்க சென்னையில் செட்டிலாயிட்டோம். இங்கு வந்த பிறகு குடும்பம், குழந்தைன்னு என்னால் பெரிய அளவில் காம்பையரிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை.

திரை விமர்சனம், சினிமா நேரம் போன்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மட்டும் செய்தேன். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு என்னால் முழுமையாக ஊடகத்துறையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் போதும் நின்றுவிடலாம்ன்னு நினைக்கும் நேரத்தில் மீண்டும் செய்தி வாசிப்பாளராக மற்ெறாரு வாய்ப்பு சன் டி.வி மூலமாக கிடைத்தது’’ என்ற பேபி ஊடகத்துறையில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத  அனுபவங்களை பகிர்ந்தார்.

‘‘கலைஞர் ஐயா அவர்களின் நிறைய நிகழ்வுகளை  தொகுப்புரை செய்திருக்கிறேன். அதில் குறிப்பாக அவரது 90-வது பிறந்த நாள்  நிகழ்வை தொகுத்தது மறக்கவே முடியாது. அதே போல் அப்துல் கலாம் ஐயா தலைமையில்  நடந்த நிகழ்வையும் தொகுத்து வழங்கியது என் வாழ் நாள் சாதனையாக  பார்க்கிறேன். தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ஒரு  படத்தை நேர்காணல் செய்யும் போது, டெம்பிளேட்டாக நான்கு கேள்விகள் தான் கேட்போம். பிறகு படம் பார்க்கும் போது, படம் நல்லா இருந்தா... மேலும் படத்தை பற்றிய விஷயங்களை நிகழ்ச்சியில் ஷேர் செய்திருக்கலாமேன்னு தோணும். அதன் பிறகு என்ன படம் குறித்து விமர்சனம் சொல்கிறேனோ அந்த படத்தை பார்த்த பிறகு தான் நிகழ்ச்சி செய்யணும்ன்னு முடிவு செய்தேன். அப்பதான் ஒரு இன்வால்மென்டோட செய்ய முடியும்.

முன்பு ஒரு படம் ரிலீசானா சன் டி.வியில் அந்த படம் குறித்து என்ன விமர்சனம் சொல்றாங்கன்னு ஆவலா கேட்பாங்க. இப்ப அப்படி இல்லை. சோஷியல் மீடியா வந்த பிறகு தடுக்கி விழுந்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி விமர்சனம் செய்கிறார்கள். தனிப்பட்ட நபருக்கு ஒரு ஹீரோவை பிடித்திருந்தால், அவரின் படத்திற்கு ‘ஆஹா… ஓஹோ’னு கமெண்ட் போடுறாங்க. பிடிக்காதவங்க அவர்களை டார்கெட் செய்து மிகவும் மோசமாக  நடந்து கொள்கிறார்கள். இதில் ஒரு சிலரே விதிவிலக்கு. இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், உங்களுக்கு அந்த படம் பிடித்திருந்தால், ரசியுங்கள்” என்கிற பேபி சாய்ராம், 2K  கிட்ஸ் குறித்து பேசினார்.

“எதற்கும் பயப்படாத; நமக்கு என்ன உண்டோ;  நம்ம என்ன செய்யணும்னு நினைக்கிறமோ; நம் ஆத்ம திருப்திக்காக மட்டும்  வாழ்கிற பாரதி கண்ட ‘புதுமை பெண்கள்’ இவர்கள். அந்த அளவுக்கு தைரியமாக  எதையும் துணிந்து வளர்ந்து நிற்கிறார்கள். இன்று பெண்கள் இல்லாத துறையே  இல்லை. எதிர்மறையான கருத்துக்களை ஓரங்கட்டிவிட்டு, நேர்மறையாக  அவர்களை வளர விடுவோம். அதற்கு முக்கியமாக  பெற்றோர்கள் தான் அவர்களை என்கரேஜ் செய்வது மட்டுமில்லாமல் நம்பவும் செய்யணும்.

வலைத்தளம் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்பதால் அதை பயன்படுத்துவதற்கான நேரம் கொடுப்போம். அதை மீறும் போது சொல்லிக் கொடுப்போம்.  பெற்றோரின் வழிகாட்டுதலில் தான் இருக்கிறது. நல்ல விஷயம் சொன்னால் கேட்கக்  கூடியவர்கள் தான்’’ என்று கூறும் பேபி சாய்ராம், ‘வி கிங் ஸ்நேக்ஸ்’ என்ற பெயரில் தின்பண்டங்கள் வகைகளை விற்பனை செய்து வருகிறார்.

‘‘சமீபத்தில் தான் இந்த பிசினஸ் ஆரம்பித்தோம். 150 கிராம் அளவுள்ள 12 வகையான தின்பண்டங்கள் ரூ.45-க்கு கொடுத்து வருகிறோம். அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இந்தியாவில், நம் தமிழ் நாட்டில் எந்தெந்த ஊரில் என்னென்ன ஸ்நாக்ஸ் பிரபலமோ அது அமெரிக்காவில் கிடைக்கும் போது அதையே நம் சென்னை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஆரம்பித்தோம். இதுவரை நன்றாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் இதனை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது” என்றார் பேபி சாய்ராம்.

தொகுப்பு: அன்னம் அரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்