SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2021-11-17@ 17:43:32

நன்றி குங்குமம் தோழி

* எந்த வகையான அல்வா செய்யும் போதும் கொஞ்சம் பதம் தவறி விட்டால் சோள மாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறினால் அல்வா சீக்கிரமாக பதமாகி சுவை அதிகரிக்கும்.

- எம்.வசந்தா, சென்னை.

* பலகாரம் செய்ய எண்ணெய் வைக்கும்போது சிறிதளவு இஞ்சி துண்டு, வாழைப்பட்டை சிறிய துண்டு நசுக்கி எண்ணெயில் போட்டு பொரித்து விட்டு எடுத்த பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது, எண்ணெயும் பொங்கி வழியாது.

* பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து அத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் கலந்து மசித்து உருண்டைகளாக்கி, மைதா மாவு கரைசலில் உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சுகியம் தயார்.

* முறுக்கு அல்லது தேன்குழல் செய்யும் போது ஏலக்காயை தோல் நீக்கி, தண்ணீர் தெளித்து மையாக அரைத்து மாவில் கலந்து கொண்டால் கமகமவென்ற மணத்துடன், சுவையாக இருக்கும்.

- எஸ்.சுஜிதா, மதுரை.

* கோதுமை ஒரு கப், மைதா ஒரு கப் மற்றும் கடலை மாவு ஒரு கப், இவற்றை நன்றாக கலந்து ஒரு துணியில் கட்டி ஆவியில் வேக வைத்த பிறகு கட்டியாக இருக்கும் மாவை நன்றாக உடைத்து பிறகு உப்பு, சீரகம் அல்லது எள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு எடுக்கவும். இதற்கு நெய்யோ, வெண்ணையோ சேர்க்கத் தேவையில்லை.

*  ரவா உருண்டை  மற்றும் எந்த உருண்டை செய்தாலும் அதை ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் கெட்டியாக இருக்கும். உடையாது.

- ஜி.இந்திரா, திருச்சி.

* ஐஸ் வாட்டரில் தயிர் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரமாக வருவதுடன் கெட்டியாகவும் இருக்கும்.

* அடை சுடும்போது உருளைக்கிழங்கை வேக வைத்துச் சேர்த்தாலும், பருப்பை வறுத்துப் பொடி செய்து சேர்த்தாலும் அடை ருசியாக இருக்கும்.

* ரசம் மீந்துவிட்டால், துவரம்பருப்பை வேக வைத்துக் கடைந்து சேர்த்தால் சாம்பார் ஆகிவிடும்.

* உளுந்து வடைக்கு அதிகமாக எண்ணெய் குடிக்காமல் இருக்க, ஒரு கிலோவிற்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து வடை செய்தால் எண்ணெய் குடிக்காது.

- ஆர்.எம்.பிரதிக்‌ஷா, அசூர்.

* கோதுமை சாதம் செய்யும்போது கோதுமை ரவையை வெறு வாணலியில் போட்டு லேசாக வாசனை வரும் வரை வறுத்துவிட்டு சாதம் செய்தால் சாதம் உதிரி, உதிரியாகவும், நல்ல ருசியுடனும் இருக்கும்.

* மாங்காயைத் துருவி பொரித்த குழம்பு, கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவை கூடும்.

* போண்டா, வடை முதலியவற்றுக்கு உளுத்தம்பருப்பு அரைக்கும்போது, வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து, அந்த மாவில் போண்டா, வடை செய்தால் சுவை கூடுதலாக
இருக்கும்.

- எஸ்.ஸ்ருதி, சென்னை.

* ஆப்பம் செய்யும்போது, 1 டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊற வைத்துச் சேர்த்து அரைத்துச் செய்தால், ஆப்பம் மிருதுவாக இருக்கும்.

* கிச்சன் மற்றும் வீட்டிலுள்ள மற்ற இடங்களில் ஈத்தொல்லை அதிகமாக இருந்தால் தண்ணீருடன் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு, மண்ணெண்ணெய் மூன்றையும் கலந்து ஈக்கள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால் ஈக்கள் வராது.

* தக்காளிப் பழங்களை கொஞ்சம் உப்பு கரைத்த தண்ணீரில் போட்டு வைத்தால், பழம் கெடாது, சுவையும் கெடாது.

- ஆர்.கீதா ரவி, சென்னை.

* ரவை உருண்டையோ, பயத்தம் மாவு உருண்டையோ செய்வதற்குப் பதில் பாதி ரவையும், பாதி பயத்தம் மாவும் சேர்த்து உருண்டை பிடிக்க சுவையாக இருக்கும்.

* பச்சை மிளகாய்களை எலுமிச்சம் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவையான பொழுது எடுத்து சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

* புதினா, தேங்காய், புளி, உப்பு, மிளகாய் போன்றவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்து தோசையின் மேல் கொஞ்சமாகத் தடவி ரோல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமலிருக்கும்.

* கீரையை பொடியாக நறுக்கி, தண்ணீர் தெளித்து மைக்ரோ அவனில் ஒரு நிமிடம் வைத்து, ஆறியபின், தோசை மாவில் சேர்க்க சத்தான தோசை மட்டுமல்ல மிகவும் ருசியாகவும் இருக்கும்.

* பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* உளுந்த வடைக்கு சிறிதளவு துவரம்பருப்பு சேர்த்தால் வடை மெதுவாக இருக்கும். ருசி மாறாது.

* பாகற்காயை வட்ட வட்டாக அரிந்து வெயிலில் காய வைத்து வைக்கவும். வத்தக்குழம்பு செய்யும்போது இதை பயன்படுத்தினால், குழம்பு வாசனையாக இருக்கும்.

* கீரையைத் தவிர எதை சமைத்தாலும் பாத்திரத்தை மூடியே வைத்திருங்கள். எரிபொருள் கணிசமாக மிச்சமாகும்.

- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* அடுப்பில் ஏற்றும் பாத்திரத்தின் வெளி அடிப்புறத்தில் அரிசி மாவு, தவிடு, சாம்பல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைப் பூசி வைத்தால், அதில் கரி பிடிக்காது. கழுவினால் எளிதாக அகன்றுவிடும்.

- ஆர்.ஹேமமாலினி, மணப்பாறை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்